ச. தமிழ்ச்செல்வனின் முதல் ஐம்பது ஆண்டுகள் தமிழ்ச்சிறுகதையின் தடங்கள் - ஒரு இன்றியமையா ஆவணம்

சிறுகதைகள் எனக்கு மிகவும் பிடித்த இலக்கிய வடிவங்கள். இந்த நூற்றாண்டின் சிறந்த சிறுகதைகள், புதுமைப்பித்தன், கு.ப.ரா, ஜெயகாந்தன், ல.ச.ரா.,அசோகமித்திரன் தொடங்கி, அழகிய பெரியவன், நாஞ்சில் நாடன், அம்பை, சுஜாதா, எஸ்.ராமகிருஷ்ணன், பாமா ஆகியோரின் வழியே மலர்வதி,ராம்தங்கம், பெண்ணிய சிறுகதைகள், தாகூரின் சிறுகதைத் தொகுப்பு வரை சிறுகதைகளை, எழுத்தாளர் வாரியாக, வட்டார வழக்கு வாரியாக தேடிப்பிடித்து படித்திருக்கிறேன். மிகச்சிறிய வயதில் எனக்குப் படிக்க எளிதாக இருந்தவை சிறுகதை வடிவங்களே.  ஒரு சிறுகதை என்பது படித்து முடித்ததும் வாசகரை ஒரு நிமிடம் சிந்திக்கவோ சிரிக்கவோ வைப்பதாக இருக்க வேண்டும் என்பார் சுஜாதா. அவரது நாவல்களை விட என்னை ஈர்த்தவை சிறுகதைகளே. குமுதத்தில் தீராநதி ஒரு இலக்கிய இதழாக வந்த நேரத்தில் அதில் வெளியான கதைகளைப் படிக்க நான் பட்ட சிரமம் நினைவில் வருகிறது. தாமரையில் வெளியான "தாலியில் பூச்சூடியவர்கள்" இன்றளவும் என்னை பாதிக்கும் ஒரு கதை. 

சாகித்திய அகாடமி விருது பெற்றுள்ள "முதல் ஐம்பது ஆண்டுகள் தமிழ்ச்சிறுகதையின் தடங்கள்", ச.தமிழ்ச்செல்வன் அவர்கள் எழுதியது. ஒரு விரிவான சமூக வாழ்வோடு இணைந்த இலக்கியத்தின் பாதையை ஆய்வு நூலென விரிக்கிறது இந்த நூல். மிகக்கடுமையான உழைப்பைக் கோரி இருக்கக்கூடிய நூல் என்பது முதல் பக்கத்தில் இருந்தே புலனாகிறது. தமிழின் முதல் சிறுகதை என்று சொல்லப்படும் வ.வே.சு அய்யர் எழுதிய "குளத்தங்கரை அரசமரம்" கதையில் தொடங்கி கரிசல் எழுத்தின் பிதாமகரான கி.ராஜ நாராயணன், கந்தர்வனில், இந்தத் தொகுப்பு முடிவடைகிறது. எழுத்துக்களின் வழி சமூகத்தின் வளர்ச்சியையும் மன நிலையையும் புரிந்து கொள்ளும் யத்தனத்துடன் எழுதப்பட்ட இந்த நூல், 18ம் நூற்றாண்டின் இறுதியில் நிலவி இருக்கக்கூடிய சாதி நிலை, அடிமைப்பட்ட சமூகத்தின் இலக்கிய வெளிப்பாடு என்பதில் தொடங்கி காலக்கோட்டின் வழியிலான சிறுகதைகளின் பரிணாமத்தை மிக நேர்மையான மொழியில் விவரிக்கிறது. 

இடதுசாரி செயல்பாட்டாளாரான ச.தமிழ்ச்செல்வன் அவர்கள், மிகவும் நடுநிலையோடே இந்தப் புத்தகத்தை வடித்திருக்கிறார். நிறைய ஆய்வுக்கட்டுரைகள், எடுத்துக்காட்டுகளைக் கூறுவதன் மூலம், இந்தக் கதைகளின் ஆசிரியர்களுக்கு இருந்திருக்ககூடிய சமூகப் பார்வையை மிகத் தெளிவாக ஆராய்ந்து முன் வைக்கிறார். தன்னோடு முரண்படும் கருத்துக்களை கொண்ட எழுத்தாளர்களையும் நேர்மையுடன் எதிர்கொண்டு எழுதியிருக்கிறார் ச.தமிழ்ச்செல்வன். "நேற்றைய மனிதர்களை நேற்றைய சூழலில் வைத்தே பார்க்க வேண்டுமல்லவா?" என்று அவர் சொல்வதில் இருந்தே அவரது நிலைப்பாட்டை நம்மால் புரிந்துகொள்ள முடியும். தமிழ் இலக்கிய சூழலுக்கு, சிறுகதை என்பது மிக நவீனமானதொரு வடிவம். ஆங்கில இலக்கியத்தில் இருந்து நாம் எடுத்துக்கொண்ட வடிவம். 

ஆங்கிலேய அரசை மிக வன்மையாக தமிழ்ச்சமூகம் எதிர்த்து வந்த சூழலில், சுதந்திரப்போராட்டம் உச்சத்தில் இருந்த நேரத்தில், வெள்ளையரைக் கடுமையாக எதிர்த்த வ.வே.சு அய்யர், வெள்ளையரின் கலை வடிவமான சிறுகதைகளை எழுத முற்பட்டது சமூகக் காரணிகளுக்கு உட்பட்ட விஷயம்.  இது குறித்து, இலக்கிய விமர்சகரான என்.ஆர்.தாசன், "அடிமைப்பட்ட தேசம் ஆதிக்க தேசத்தை எதிர்க்கிற அதே நேரத்தில், அதன் உன்னதங்களையும் ஸ்வீகரித்துக்கொண்டு அதற்கு மேல் நிற்கவும், இல்லாவிட்டால் அதற்கு சமதையாக நிற்க முயல்வதும் இயற்கை. அடிமைப்பட்ட தேசத்தின் தவிர்க்க முடியாத தவிப்பு இது" என்று கூறியதை ச.தமிழ்ச்செல்வன் இந்த நூலில் எடுத்துக்காட்டுகிறார். சமூகவியலாளர் எம்.என் சிரீநிவாஸ் சொல்லும் " ஆரியமயமாதலோடு" இந்தக் கருத்தை ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றுகிறது எனக்கு. இப்படி சிறுகதைகள் எவ்வாறு உருவாயின என்பது தொடங்கி, ஒவ்வொரு எழுத்தாளரையும் நூல் அணுகும் விதம் தனித்துவமான அழகோடும் ஆழத்தோடும் விளங்குகிறது. 

வ.வே.சு அய்யரில் தொடங்கி, ஆ.மாதவைய்யா, பாரதி, மவுனி, கு.ப.ரா என கால வரிசையில் எழுத்தாளர்களின் வாழ்க்கைக்குறிப்புகள், அவர்களின் கதை சொல்லும் பாணி, அவர்களின் மேலும் அவர்களின் எழுத்துக்களின் மேலுமான அந்த காலகட்ட ஆய்வாளர்களின் விமர்சனங்கள், அவர்கள் சார்ந்திருக்கும் கருத்தியல், முக்கியமான படைப்புகளின் சில பகுதிகள், படைப்பாளர்கள் மேல் தனக்குள்ள ஆழமான நேர்மையான பார்வை என மிகத் தெளிவான கட்டமைப்பில் ஒவ்வொரு கட்டுரையும் இருக்கிறது. ஒரு கட்டுரையை முடிப்பதற்குள், ச.தமிழ்செல்வன் எடுத்துக்காட்டும் கதைகளை உடனடியாக படித்து விடவேண்டும் என்னும் ஆர்வம் மேலிடுகிறது. அவ்வப்போது நூலை வைத்துவிட்டு,அந்தக் கதையைப் படித்தபின்னரே மீண்டும் தடங்களுக்குள் புக வேண்டியிருக்கிறது. இது புத்தகத்துக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி. எந்தக் கருத்தையும் மேலோட்டமாக சொல்லாமல் அதற்கான ஆதார வேர்களை குறிப்பிட்டு எழுதுவது நம்பகத்தன்மையை அதிகரிக்கிறது. (பெரும்பாலான கதைகள் "அழியாச்சுடர்" இணையதளத்தில் கிடைக்கின்றன)

ஒரு எழுத்தாளர் குறித்து எழுதுவதற்கு, அவர் தொடர்புடைய பல செய்திகளைத் திரட்டியிருக்கிறார். ஆனால் சுவைபட எழுதப்பட்ட விதம் ஆர்வத்தோடு நம்மை படிக்கத்தூண்டுகிறது. ஒரு ஆய்வுக்கட்டுரையின் வறட்சிக்குள் போகக்கூடிய சாத்தியக்கூறுகள் இருந்தும் அவை மிகக் கவனமாக தவிர்க்கப்பட்டுள்ளன. நாஞ்சில் நாடன், புதுமைப்பித்தன், பிரபஞ்சன், கி.ரா, அம்பை போன்றோரின் சிறுகதைகள் குறித்த திறனாய்வில் ஆசிரியர் குறிப்பிடும் கதைகள் என் மனதுக்கும் மிகவும் நெருக்கமானவை.  குறிப்பாக புதுமைப்பித்தனின் "செல்லம்மாள்", அண்ணாவின் " செவ்வாழை", கிருஷ்ணன் நம்பியின் "மருமகள் வாக்கு",ஜெயகாந்தனின் " அக்கினிப்பிரவேசம்", பிரபஞ்சனின் "பாதுகை", நாஞ்சில் நாடனின் 'சில வைராக்கியங்கள்',அம்பையின் 'சிறகுகள் முறியும்" கி.ராஜநாராயணனின் " நிலை நிறுத்தல்" என சொல்லிக்கொண்டே போகலாம். 

திராவிட இயக்க எழுத்தாளர்கள், மணிக்கொடி காலம், பெண் எழுத்துக்கள் என தமிழ் இலக்கிய வரலாற்றில், முதல் சிறுகதை தொடங்கி, எழுவதுகள் வரையான சிறுகதை எழுத்தாளர்கள் குறித்த இந்த முதல் பாகம் 880 பக்கங்களுக்கு மேல் கொண்டது. வாசகரின் கவனத்தை முழுமையாகக் கோருவதுடன் மிக ஆழ்மான சமூக, உளவியல் சார்ந்த கருத்துக்களை முன்வைப்பதாகவும் இந்த நூல் விரிகிறது. பரவலான வாசிப்புப் பழக்கம் உள்ளது என நினைத்துக் கொண்டிருந்த எனக்கு நூலில் குறிப்பிடப்பட்டுள்ள ஐம்பத்தி இரண்டு சிறுகதை ஆசிரியர்களின் படைப்புகளில் பாதிக்குமேல் தெரியவில்லை. இனி நான் இன்னும் விரிவாக படிக்கவேண்டும் என்பதன் அவசியத்தையும், ஜி.நாகராஜனையும், தஞ்சை பிரகாஷையும், அம்பை தவிர்த்த பிற பெண் எழுத்தாளர்களை படிக்காததன் குற்ற உணர்ச்சியையும் ஒருங்கே இந்த நூல் ஏற்படுத்தி இருக்கிறது. 

இயக்க செயல்பாடுகள், புத்தகக் கண்காட்சிகள், வாசிப்பு என பல தளங்களில் தொடர்ந்து இயங்கி வரும் ச.தமிழ்செல்வன் அவர்கள் தன் மிகக் கடுமையான் உழைப்பை, ஆழமான நேர்மையான சிந்தனையின் வீச்சை இந்த நூலில் முழுவதுமாக வெளிப்படுத்தி இருக்கிறார். ஒரு முறை படிப்பதல்ல..பலமுறை படிக்க வேண்டிய நூல். குறிப்பிட்ட கதைகளை தேடி வாசிக்க வைக்கும் ஆர்வத்தை தூண்டுவதாகவும், சமூகவியல் சார்ந்து தமிழ்நாட்டு பண்பாட்டுக் கூறுகளைப் பல நிலைகளின் விவரிப்பதாகவும் ஒவ்வொரு கட்டுரையும் அமைந்துள்ளன. நீண்ட காலம் நான் திரும்பத் திரும்ப வாசிக்கப்போகும் நூல், முதல் ஐம்பது ஆண்டுகள் தமிழ்ச்சிறுகதையின் தடங்கள்.

இப்போது எனக்கு இன்னும் ஒரு ஐயம் எழுகிறது. இலக்கிய வடிவங்கள் பலவற்றில் ஒரு வடிவமான சிறுகதைகளின், முதல் ஐம்பது ஆண்டுகளின், மிக முக்கியமான எழுத்தாளர்களின் கதைகளிலேயே நாம் இன்னும் இத்தனை படைப்புகளைப் படிக்க வேண்டி இருக்கிறதே? இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இலக்கியங்களையும், சமூகத்தின் கூறுகளையும் தாங்கி நிற்கும் நம் தாய்த்தமிழின் படைப்புகளின் தலைப்புகளையேனும் நம் வாழ்நாளில் நாம் படித்துவிட முடியுமா??


Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த குமரி உணவுகள்

வாசந்தி- குரலற்றவர்களின் குரல்

சற்றே நீளும் வேலை நேரம்- ஒரு நீண்ட கட்டுரை