பிங்க்- நோ மீன்ஸ் நோ- வேண்டாம் என்றால் வேண்டாம்தான்
கொஞ்ச நாட்களுக்கு முன்னதாக உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தேன். எஸ்.ரா எழுதுவதுபோல ஒரு உலர்ந்த துணியைப் போலத் துவண்டு கிடந்த ஒரு மதியத்தில், என்னால் கையாள முடியாத அளவில் ஒரு ஓய்வு கிடைத்தது. எதேதோ எண்ணியபடி இருந்த நேரத்தில் திடீரென ரொம்ப நாட்களாக பார்க்க நினைத்துக் கொண்டிருந்த "பிங்க்" திரைப்படத்தைப் பார்க்கத் தொடங்கினேன். அதன் தொடர்ச்சியாக மருத்துவமனையில் இருந்த மூன்று நாட்களும் கிட்டத்தட்ட ஒரே ஜானரில் அமைந்த "தப்பட்", மிஸஸ், மீள் பார்வையாக த கிரேட் இந்தியன் கிச்சன் படங்களைப் பார்த்து முடித்தேன். அப்போது மனதில் தோன்றிய கேள்விதான் இது.
'வேண்டாம்', நோ .. இந்த சொற்களின் நிஜ அர்த்தம் என்ன? சொற்களுக்கு பொருளும் பயன்பாடும்தானே உண்டு? பாலினம் உண்டா? " நோ மீன்ஸ் நோ" என்பதை ஒரு தாரக மந்திரமென நாம் சொல்ல வேண்டிய கட்டாயத்தை சொல்லும் திரைப்படம். பெண்களை பின் தொடர்ந்து அவளை ஸ்டாக்கிங் செய்யும் ஆணின் நடத்தையை காதல் என்று நம் திரைப்படங்கள் மூலம் நினைத்துக் கொண்டிருக்கும் நமக்கு, "வேண்டாம்" என்று ஒரு பெண் சொல்வது "வேண்டும்" என்பதன் நாண மொழி என்ற புரிதலே இருக்கிறது. அதன் காரணமாகவே,ஒரு பெண்ணின் வேண்டாம் என்னும் சொல்லில் பொதிந்திருக்கும் அர்த்தம் நமக்குப் புரிவதில்லை .
பிங்க் திரைப்படம் 2016ல் வெளியானபோது சமூகத்தின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. அனிருத்தா ராய் சௌத்ரியால் இயக்கப்பட்ட இந்தப் படத்தில் வக்கீல் வேடத்தில் அமிதாப் பச்சன் மிக ஆழமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். தமிழின் மூத்த நடிகர்கள் எப்போது ஆக்ஷன் தவிர்த்த இப்படிப்பட்ட படங்களில் நடிப்பார்கள் என்று எண்ணத்தோன்றும். டெல்லியில் ஒன்றாக வசிக்கும் மினல், ஃபலக், ஆன்றியா ஆகிய மூன்று பெண்களைச் சுற்றும் கதை இது. அதிகார மையத்துக்கு நெருக்கமான ராஜ்வீர், தலையில் அடிபட்ட காயத்துடன் அவன் நண்பர்களுடன் மருத்துவமனைக்கு செல்வதில் படம் தொடங்கும். மூன்று பெண்களும் பெரும் கலக்கத்தோடு தங்கள் அறைக்குத் திரும்புவார்கள். விரும்பத்தகாத நிகழ்வொன்று நடந்திருப்பதன் பதட்டத்தை நம்முள் இந்த அறிமுகக் காட்சிகளே கடத்திவிடும்.
அடுத்தடுத்த நாட்களில் மூன்று பெண்களின் நடத்தை கேள்விக்குள்ளாக்கப்படும். மினல் மிரட்டப்படுவாள். அவளது காலை ஓட்டத்தின்போது காரில் கடத்தப்பட்டு தாக்கப்பட்டு, வன்கொடுமை செய்யப்படுவாள். அவள் குறித்த சமூக வலைத்தள போஸ்டுகளால் அவளது வேலை பறிபோகும். கடைசியாக, அவள் ஒரு விலைமகள் என முத்திரை குத்தப்பட்டு, ராஜ்வீரை கொலை செய்ய முயன்ற குற்றத்துக்காக கைது செய்யப்படுவாள். முதல் காட்சியின் விரிவு இதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக சொல்லப்படும். ஒரு பொதுவான நண்பனின் மூலம் ராஜ்வீருக்கு அறிமுகமாகும் பெண்கள் மூவரும் அவனுடனும் அவனது மற்ற இரு நண்பர்களுடனும் டின்னருக்கு செல்வார்கள். அங்கு மது அருந்துவார்கள். அதன் பின்னர் திட்டமிட்டு மினலை ராஜ்வீர் தனிமைப்படுத்தி அவளிடம் தவறாக நடக்க முயற்சி செய்வான். மினல் தடுத்தும் அவன் அதை சட்டை செய்யாமல் அத்துமீறத் துவங்க, மினல் மது பாட்டிலை எடுத்து அவன் தலையில் அடித்துவிடுவாள். ராஜ்வீரின் அலறல் சத்தத்தில் வெளியே வரும் மற்ற இரண்டு ஆண்களிடம் இருந்தும் தப்பி மூவரும் வீடு வந்து சேர்வார்கள்.
மினல் ராஜ்வீரை அடித்தது அவளது தற்காப்புக்காகத்தான் என்பதை உணர மறுக்கும் ராஜ்வீர், அவள் தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றே அவளை துன்புறுத்துவான். இந்த நிலையில், வக்கீலான அமிதாபை, ஃபலக்கும் ஆன்றியாவும் நாடுவார்கள். பிற்பாதி முழுவதும் ஒரு கோர்ட்ரூம் டிராமாவாக கதை நகரும். விசாரணையின் போது இவர்கள் மூவரையும் பாலியல் தொழிலாளிகள் என்று நிறுவுவதிலேயே ராஜ்வீர் தரப்பு தெளிவாக இருக்கும். எங்களோடு இரவு நேரத்தில் மது அருந்த வந்தார்கள், அப்போது அவர்கள் 'எதற்கும்' துணிந்தவர்கள்தானே? உடன் வரப் பணம் பெற்றுக்கொண்டு, அங்கே வந்து பேரம் பேசி, அந்தத் தகராறில்தான் மினல் ராஜ்வீரை அடித்துவிட்டாள் என்பது அவன் தரப்பு வாதமாக இருக்கும். தொடர்ச்சியான அழுத்தத்தில் ஒரு கட்டத்தில், ஃபலக், "ஆமாம், நாங்கள் பணம் பெற்றுக்கொண்டோம். அதற்காக எங்கள் விருப்பம் இல்லாமல் எங்களிடம் அத்துமீற அவனுக்கு யார் உரிமை கொடுத்தது" என்று நீதிமன்றத்தில் உடைந்து அழுவாள். அவள் அப்படி சொன்னதற்காக மினலும் ஆன்றியாவும் கோபப்பட்டாலும், அதனால் ஒன்றும் மாறிவிடப்போவதில்லை என்றும் உணர்வார்கள். ஒரு கட்டத்தில் விசாரணையின் போது,அறியாத ஆண்களுடன் மது அருந்த வந்த பெண்களின் ஒழுக்ககேட்டுக்கான தண்டனை இது என்பதாக மூவரைப் பற்றியும் மிகக் கேவலமாக ராஜ்வீர் பேச, அமிதாப், சமூகம் இது போன்ற ஸ்டீரியோடைப்புகள், பொதுமைப்படுத்தல்கள் மூலம் பெண்களைக் கேவலப்படுத்துகிறது என்று வேதனையுடன் வாதிடுவார். கொந்தளிப்பான சட்டப்போராட்டத்தின் பின்னே, ஒரு பெண், அவள் யாராக இருந்தபோதும், அவள் விருப்பமின்றி அவளிடம் அத்துமீறுவது தவறு, ' நோ மீன்ஸ் நோ' என்று மினலை விடுதலை செய்வதோடு படம் முடியும். இந்தக் கதை உண்மையில் நடந்த ஒரு கதை என்ற குறிப்புடன் படம் முடியும்போது, என்னையும் அறியாமல், எத்தனை முறை நானும் இதுபோல சமூகத்தின் பொதுமை வியாதிக்கு அடிமையாகி சிந்தித்து இருப்பேன் என்று நினைத்துக்கொண்டேன்
விக்டிம் பிளேமிங் என்றொரு சொற்றொடர் ஆங்கிலத்தில் உண்டு. பாதிக்கப்பட்டவரையே குற்றத்தின் காரணமாக்கிக் காட்டுவது. நிர்பயா வழக்கு இதற்கு ஒரு உதாரணம். இரவில் தனியாக ஒரு ஆணோடு பயணிக்கும் பெண் ஒழுக்கமற்றவள்,
அவளை ஒரு ஆண் வன்புணர்வு செய்தால் அதன் காரணம் அவளே. இந்த விக்டிம் பிளேமிங் பொது சமூகத்தில் புரையோடிப்போன ஒன்று. உடை, உடனிருந்த ஆண், நேரம், ஏன் அங்கே போனாய், ஏன் இதை உடுத்தினாய் என்று சமூகத்தின் விரல்கள் பாதிக்கப்பட்டவரை நோக்கியே நீளுகின்றன. சமீபத்தில் மறைந்த இந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலக்குழு உறுப்பினரும் வழக்கறிஞருமான தோழர் நிர்மலாராணி, அவரது முனைவர் பட்ட ஆய்வுக்குத் எடுத்துக்கொண்ட தலைப்பு இதுதான். செகண்டரி விக்டிமைசேசன்- இரண்டாம் நிலையில் மறுபடி குற்றவாளியாக்கப்படுதல் என்று மொழி பெயர்க்கலாம். ஏற்கனவே பாதிக்கப்பட்டவரை நோக்கியே குற்றத்தின் காரணத்தை திருப்புவது. அவர் எடுத்துக்கொண்ட பல வழக்கு ஆய்வுகள், சமூகத்தின் ஒடுக்கப்பட்ட அடுக்குகளில் உள்ளவர்கள் இந்த செகண்டரி விக்டிமைசேசனுக்கு தொடர்ந்து ஆளாவதை உறுதிப்படுத்துகின்றன.
மினல், ஃபலக்,ஆன்றியா ஆகிய முவரில் வட கிழக்கு மாநிலத்தை சேர்ந்தவர் என்னும் காரணத்தால், ஆன்றியா நுட்பமாக அவமதிக்கப்படுவது, பெண்களின் ஒழுக்கத்தை திரும்பத் திரும்ப ஆய்வுக்கு உட்படுத்துவது , பெற்றோர் டெல்லியில் இருந்தும் மினல் தனியாக இருப்பது, ஃபலக்கின் முந்தைய உறவை கேள்விக்கு உள்ளாக்குவது போன்ற மிக நுணுக்கமான வெளிப்பாடுகளும் நிறைய உண்டு. "ஒரு பெண்ணின் தைரியத்தை உடைக்கவேண்டுமா? அவள் ஒழுக்கத்தை குலைத்துவிடு" என்னும் ராஜம் கிருஷ்ணனின் அவதானிப்பை இந்தத் திரைப்படத்தில் நாம் காட்சியாகக் காணலாம். மினலாக நடித்திருக்கும் தாப்ஸி பன்னு முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அனைத்து பாத்திரங்களின் நடிகர்களுமே தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்கள். மூன்று பெண்களின் நட்பு, இக்கட்டான சூழ்நிலையிலும் அவர்கள் ஒருவருக்கொருவர் துணையாக இருப்பது, வக்கீலாகவும் வழிகாட்டியாகவும் அமிதாப் செயல்படுவது, ஆண் என்ற அப்பட்டமான திமிரை வெளிப்படுத்தும் ராஜ்வீர், தங்கள் அத்துமீறல் குறித்த குற்ற உணர்வே இல்லாமல் இருப்பது என்று கதையின் அத்தனை பாத்திரங்களின் படைப்பும் மிகவும் தெளிவானது.
தேசிய குற்ற ஆவணக்காப்பகத்தின் அறிக்கைப்படி தினமும் 86 பாலியல் வன்கொடுமை வழக்குகள் நம் நாட்டில் பதிவாகின்றன. பதிவாவது மட்டுமே இத்தனை. பாதிக்கப்பட்ட பெண்ணோ குழந்தையோ இறந்துபோனால் அந்த வழக்குக்கு கிடைக்கும் கவனம், உயிரோடு இருப்பவருக்குக் கிடைப்பதில்லை. அவர்களில் பெரும்பாலானோர் இந்த செசண்டரி விக்டிமைசேசனுக்கும், சமூகத்தின் குறை காணும் விக்டிம் பிளேமிங்குக்கும் மறுபடியும் ஆளாகின்றனர். பாலியல் ரீதியான அத்துமீறல்கள் பாதிக்கப்பட்டவர் மனதில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. அதன் தீவிரத்தை பிறரால் அறிய முடியாது. காலித் ஹுசைனி எழுதிய "பட்ட விரட்டி" புத்தகத்தைப் படித்தபின் ஆண்களுக்கும் சிறுவர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அறிய முடிந்தது.
மினலும் ராஜ்வீரும் சமூகத்தின் முகங்கள். தன்மானத்துக்கும் ஆதிக்கத்துக்குமான போராட்டம் தினமும் நடந்துகொண்டேதான் இருக்கிறது. தன்மானத்தை தக்கவைத்துக் கொள்ள, யுகம் யுகமாக நடந்துகொண்டிருக்கும் போராட்டம், எப்போதும் இல்லையென்றாலும், எப்போதேனும் நிச்சயம் வெல்லும். சமூகத்தின் மனப்பான்மையை குற்ற உணர்ச்சிக்கு உள்ளாக்கும் இது போன்ற திரைப்படங்கள் இன்னும் அதிகமாக வரவேண்டும். சமூகமும் சமத்துவத்தை நோக்கி செல்ல வேண்டும். கலையின் நோக்கமும், மானுடத்தின் நோக்கமும் அதுவே அல்லவா?
இப்படத்தின் ரீமேக் (என எண்ணுகிறேன்) நேர் கொண்ட பார்வை பார்த்து ரசித்திருக்கிறேன் மேடம்.
ReplyDelete