புத்தாயிரத்தின் ஒரு புதிய முயற்சி- 'சினேகிதியே'

மில்லினியம் எனப்படும் இரண்டாயிரம் ஆண்டு வரலாற்றில் முக்கியமான ஒரு புள்ளியாகக் கருதப்பட்டது. தொழில்நுட்பம், இசை, உலகமயமாதலின் விளைவுகள், அதன் காரணமாக ஏற்பட்ட தகவல் புரட்சி என நேரடியான மாறுதலை உலகம் எதிர் நோக்கிய வருடம் அது. அப்போதைய தமிழ்த் திரைப்படங்களுக்கு என்றொரு தனி 'டோன்' இருந்தது என்றே நான் நினைக்கிறேன். புதிய முயற்சிகள், பரிசோதனைகள், துள்ளலான இசை, உலகளாவிய கூறுகளின் தழுவல், எடிட்டிங், கலை என நாயகர்கள் தாண்டிய தொழில்நுட்பம் மீதான கவனம் என மாறுபட்ட ஒரு பரிமாணத்தை பார்க்க முடிந்தது என்பது என் அவதானிப்பு. 

இந்த காலகட்டத்தில் நாங்களும் நிறைய திரைப்படங்கள் பார்த்தோம். பத்தாம் வகுப்பு விடுமுறையில், பல படங்களை இரண்டாம் காட்சியில் பார்த்திருக்கிறோம். அப்படிப் பார்த்த ஒரு படம் 'சினேகிதியே'. மிக நல்ல இயக்குநர்களின் ஒருவரான பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளிவந்த படம். முழுக்க முழுக்க பெண் கதாபாத்திரங்களே நடிக்க, பிரதான மைய நாயகிகளாக ஜோதிகாவும், சப்ராணி முகர்ஜியும், முரட்டு போலீஸ் அதிகாரியாக தபுவும்  நடித்த இந்தத் திரைப்படத்தில், சில நிமிடங்களே வரக்கூடிய ஒரு ஆண் பாத்திரம் உண்டு. பெண்கள் மட்டுமே நடித்தாலும், அனைவரும் எதிர்பார்த்தது போல குடும்பக்கதையோ, கல்லூரிக் கதையோ அல்ல. முழு நீள மர்டர் மிஸ்டரி வகையைச் சேர்ந்த திரில்லர் படம் சினேகிதியே.

 வாணியும் (ஜோதிகா), ராதிகாவும்( சப்ராணி முகர்ஜி) நகரின் புகழ்பெற்ற பெண்கள் கல்லூரியின் குறும்புக்கார மாணவிகள். அவர்களின் குழுவுக்கும் கல்லூரியின் இன்னொரு பெண்கள் கேங்கான கீதாவின் குழுவுக்கும் எப்போதும் சச்சரவு நிலவுகிறது. விடுதி வார்டனும், கல்லூரியின் முதல்வரும் எப்போதும் கூப்பிட்டு எச்சரிக்கும் படியான சேட்டைக்காரிகள் வாணியும் ராதிகாவும் அவர்களின் தோழிகளும். தாய் தந்தை இல்லாத ராதிகா பெரும் பணக்காரி. தன் அத்தை லட்சுமியின் அரவணைப்பில் வளர்பவள். அவளுக்கு விரைவில் திருமணம் செய்ய ஆசைகொண்டவராக லட்சுமி இருப்பார். திருமணம் செய்து கொண்டால் தோழிகள் பிரிய நேரும் என்பதால், ராதிகா, ரமேஷ் என்பவரைக் காதலிப்பதாகவும், ரமேஷ் நேவியில் இருப்பதால் ஆறு மாதங்களுக்குப் பிறகே அவரை சந்திக்க முடியும் என்றும் லட்சுமியிடம் கதை கட்டுவார்கள் தோழிகள். அதன் பின்னர் ரமேஷ் என்னும் பெயருடன் ராதிகாவுக்கு டெலிபோன் கால்களும், கடிதங்களும் வரத்தொடங்கும். அந்த நபர் யார் என்று தெரியாமல் இருவரும் தவிக்கும் போது, அவர் ராதிகாவை சந்திக்க வருவதாக சொல்வார். 

இந்த சந்தர்ப்பத்தில் கல்லூரியில் ஒரு கலைவிழா நடக்கும். ஆகவே அந்த சமயம், ரமேஷை கல்லூரி விடுதிக்கு வரவழைத்து அவர் யார் என்பதை அறிய திட்டமிடுவார்கள் தோழிகள். கல்லூரி விழாவுக்கு பழைய மாணவி என்னும் வகையில் தபுவும் வருவார். ராதிகாவைப் பார்க்க கல்லூரி விடுதிக்கு வரும் ரமேஷ், அங்கே சுட்டுக்கொல்லப்பட, கொலைப்பழி வாணி, ராதிகாவின் மேல் விழும். அதே நேரத்தில் கீதாவும் காணாமல் போய் விடுவாள். போலீஸ் காவலில் இருந்து தப்பிக்கும் ராதிகாவும் வாணியும் உண்மைக் கொலையாளியைத் தேடிப் போவார்கள். ரமேஷ் யார், அவரைக் கொலை செய்தது யார், கீதாவுக்கு என்ன ஆனது, இதில் லட்சுமியின் பங்கு என்ன என்பது போன்ற பல முடிச்சுக்களை திகிலோடும் பரபரப்போடும் காட்சிப்படுத்தி இருப்பார் இயக்குனர் பிரியதர்ஷன்.

தமிழகத்தில் நடைமுறையில் இருக்கும் முக்கியமான சட்டங்களில் ஒன்று 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு பெண்களை கேலி செய்தல் தடைச் சட்டம். 2002 ஆம் ஆண்டு,தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடைச் சட்டமாக திருத்தப்பட்டது. ஈவ் டீசிங் கொடுமையால் கொலை செய்யப்பட்ட சரிகா ஷா என்னும் மாணவியின் மரணத்துக்குப் பிறகு மேற்படி சட்டம் இயற்றப்பட்டது. இது குறித்த ஹீரோயிசம் இல்லாத ஒரு காட்சிப்படுத்துதல் இத்திரைப்படத்தில் உண்டு. திரைப்படத்தின் முக்கியமான ஒரு கண்ணியாக இந்தக் காட்சி இருக்கும். இந்த சட்டம் வருவதற்கு முன்னர் பெண்களை கேலி செய்வது, ஆணின் ஒரு குறும்புக்கார பழக்கமாகவே கருதப்பட்டதே ஒழிய குற்றமாகக் கருதப்படவில்லை. பெண்களுக்கு எதிரான குற்றம் புரிபவர்களை ஆக்ரோஷத்தோடு தண்டிக்கும் போலீஸ் அதிகாரியாக வரும் தபு மிக நன்றாக நடித்திருப்பார். அவருக்கு இதில் சண்டைக்காட்சிகள் எல்லாம் பெரிய அளவில் கிடையாது. ஆனால் பெண்களுக்கெதிரான கொடுமைகளை செய்பவர்களை அவர் சட்டத்தைத் தன் கையில் எடுத்துக்கொண்டு தண்டிக்கும் விதம் மிகவும் நியாயமானதாகவே தோன்றும். 

வாணியின் தாயாக வரும் மனோரமா ஆச்சி, தன் பெண்ணை நம்பி அவள் செய்யும் குறும்புகளை நியாயப்படுத்தி அவருக்கே உரிய நடையில் பேசுவார். நான் கல்லூரியில் படிக்கும்போது நன்றாக இருந்த அந்த வசனங்கள், எனக்கு கல்லூரியில் படிக்கும் மகன் இருக்கும் இந்த காலத்தின் அரைவேக்காட்டுத்தனமாக தோன்றுகின்றன. பிள்ளைகளைப் பற்றி குறைகூறும் ஆசிரியர்களின் நடை, உடை, பாவனைகளை குறிப்பிட்டு பேசுவது இன்றைய நோக்கில் சரியாகப் படவில்லை. ஆனால் நம் பிள்ளைகளை நாம் நம்பவும், ஆற்றுப்படுத்தவும் வேண்டும் என்னும் அளவில் அந்த உரையாடலைப் புரிந்துகொள்ளலாம். 

இறுதிக்காட்சியில் கொலையாளி யார் என்று தெரிந்த பின் மன நிலை பாதிக்கப்பட்டவராக தபு மாறுவார். பல என்கவுண்டர் போலீஸ் திரைப்படங்களை நாம் பார்த்திருக்கிறோம். அத்தனையும் ஆண் மையப் படங்கள். ஹீரோயிசத்தின் உச்சமாகக் கருதப்படும் படங்கள். இப்போது வெளியான 'போர்த்தொழில் பழகு' திரைப்படத்தில் கூட, மைய ஆண் கதாபாத்திரம் தன் செயல்களுக்கான வேர், தன் குழந்தைப்பருவத்தின் காயங்களில் இருப்பதாக சொல்வார். அவருக்கு அதில் எந்தவித குற்ற உணர்ச்சியும் இருக்காது. அப்படிப் பார்க்கப்போனால், த.ச
 ஞானவேலின் 'வேட்டையன்' திரைப்படத்தில் மட்டும்தான் நாயக பாத்திரம், தன் செயல்களை மறு ஆய்வு செய்யும் ஒரு படிமம் வருகிறது. ஆனால் 'சினேகிதியே' திரைப்படத்தில், தன் தங்கையை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிய ஒருவனைக் கொலை செய்யும் தபு மன நோயாளியாக மாறிப்போகிறார். ஆணின் பழிவாங்குதலை அவன் ஆண்மைக்கு அடையாளமாக வரிக்கும் திரைமொழி, பெண்ணின் பழிவாங்குதல் அவளை ஒரு விக்டிமாக மாற்றுகிறது என்பது மட்டுமே இந்தப் படத்தில் எனக்குள்ள ஒரே நெருடல். மற்ற படி, கதையின் மையப்புள்ளி, கதை நகரும் விதம், அதன் பரபரப்பு, பெண்களை மட்டுமே வைத்து, ஒரு முழுநீள திரில்லர் படம் எடுக்க முடியும் என்று நினைத்ததற்காகவே இந்தப் படத்துக்கு ஒரு பூங்கொத்து. 

மிக நல்ல பாடல்கள், (வழிப்பயணத்தில் வரும் கவர்ச்சிப்பாடல் ஒரு தேவையற்ற திணிப்பு), தெளிவான காட்சியமைப்பு, கொலையாளி யார் என்பதை கடைசி வரை கண்டுபிடிக்க முடியாத வண்ணம் பின்னப்பட்ட திரைக்கதை என பொதுவாக 'சினேகிதியே' ஒரு நல்ல திரைப்படம் என்றுதான் இத்தனை வருடங்களுக்குப் பிறகு இந்தப் படத்தை பார்க்கும்போது எனக்குத் தோன்றுகிறது. மிகச் சில காட்சிகளை அந்த கால கட்டத்து எண்ணவோட்டத்தோடு ஒப்பிட்டு ஏற்று கொள்ளத்தான் வேண்டும். 'அவள் அப்படித்தான்' தொடங்கி பெண்ணியப் பார்வையில் எடுக்கப்பட்ட பல படங்களில் பெண்கள் என்ன செய்வார்கள் என்பதான ஆண்களின் கண்ணோட்டம் பெண்ணின் பார்வையாகவும் முன்வைக்கப்பட்டது. அந்த வரிசையில், பெரிதாக கவனத்தில் கொள்ளப்படாத, ஆனால் என் பார்வையில் ஒரு குறிப்பிடத்தக்க திரைப்படமாகவே இருக்கிறது 'சினேகிதியே'. 

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த குமரி உணவுகள்

வாசந்தி- குரலற்றவர்களின் குரல்

'வெயிலோடு போய்' - ச.தமிழ்ச்செல்வன்