மனதை உறுத்தும் மோகமுள் - தி ஜானகிராமன்

தஞ்சாவூர்....இந்தப் பெயரைக் கேட்கும்போதெல்லாம் மனதில் அடுக்கடுக்காக நினைவலைகள் எழும்பும். பெரிய கோவில், பரந்து கிடக்கும் கோவில் வளாகம், பிரமிக்க வைக்கும் சிற்பங்கள், சோழர் வரலாறு, சரஸ்வதி மஹால் நூலகம், சித்திரா பௌர்ணமி, புராதனமான பல கட்டுமானங்கள், பொன்னியின் செல்வன், குந்தவை, நந்தினி, மிக மிக விஸ்தாரமான ஆலயங்கள்...சிறு வயதில் இருந்தே தஞ்சை மனதுக்கு மிகவும் நெருக்கமான ஊர். பயணம் செய்ய ஒரு நல்ல வாகனம் கிடைத்துவிட்டால் போதும். தஞ்சை, கும்பகோணம், தாராசுரம், தரங்கம்பாடி, பூம்புகார், வேளாங்கண்ணி என மனம் போன போக்கில் சென்றுகொண்டே இருக்கலாம். கோயில்கள், கோட்டைகள், கடற்கரைகள், நெல்வயல்கள் என கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தளிக்கும் அற்புதமான நிலப்பரப்பு. 

எல்லாவற்றுக்கும் மேலாக காவிரி...கல்லணையில் ஐந்தாகப் பிரிந்து டெல்டா பகுதிகளை வளப்படுத்தும் காவிரியும், துணை ஆறுகளும். நினைவு தெரிந்து, என் ஐந்தாம் வகுப்பில் இருந்தே அடிக்கடி பயணம் செய்த பிரதேசம் தஞ்சைப் பகுதிதான். கன்னியாகுமரிக்குப் போன பிறகு, தஞ்சை செல்லும் வாய்ப்பு ஏனோ ஏற்படவில்லை. கிடைத்த ஒரு இடைவெளியில், ஒரு குட்டிப் பயணம் கிளம்பினோம். மேலே சொன்ன எல்லாவற்றையும் போல தஞ்சை என்றவுடன் மனதில் வருவது, பாபுவும், யமுனாவும், துக்காம்பாளையத் தெருவும்....தி.ஜானகிராமனின் மிகவும் பேசப்பட்ட அழகான கதை 'மோகமுள்'. திஜாவின் அம்மா வந்தாள், மரப்பசு, அவருடைய சில சிறுகதைகளையும் நான் வாசித்து இருந்தாலும், மோகமுள் மனதில் ஏற்படுத்திய தாக்கம் மிகவும் ஆழமானது. சிறிய வயதில் தூர்தர்ஷனில் மோகமுள் திரைப்படத்தை அங்கே கொஞ்சம் இங்கே கொஞ்சம் என பார்த்த நினைவு மங்கலாக இருக்கிறது. ஞானராஜசேகரன் என்ற ஆட்சிப்பணி அலுவலர் எடுத்த திரைப்படம் என்பது மிகவும் புதிய தகவலாக இருந்தது. அதன்பின்னர் அவர் எடுத்த பாரதி, பெரியார் போன்ற திரைப்படங்களும் அவரது எழுத்துக்களும் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் ஏனோ மோகமுள் நாவலைத் திரும்பத் திரும்பப் படித்த அளவில், திரைப்படத்தை நான் பார்க்கவில்லை. 

எத்தனை முறை படித்தேன் என்றே தெரியாத அளவில் மிகச்சில நூல்களையே நான் படிப்பேன். அவற்றில் ஒன்று மோகமுள். சற்றே பிசகினாலும் தவறான வகையில் பாலுணர்வை வெளிப்படுத்தி விடக்கூடிய சாத்தியம் இருக்கும் கதையை, மிக அழகான இசையாகவோ, பாடலாகவோ வெளியிட்ட நாவல் இது. தஞ்சைக்கு அருகில் இருக்கும் கிராமத்தில் வாழும் பாபுவின் பக்கத்து வீட்டில் அவன் சின்னப் பையனாக இருக்கும்போது இருந்தவர்கள் யமுனாவும் அவள் அம்மாவும். யமுனாவின் அம்மா பார்வதி மராத்திக்காரர். தஞ்சை பிராமணரான சுப்பிரமணிய அய்யருடன் சேர்ந்து வாழ்ந்ததால், அவருடைய சொந்தத்தில் ஆட்கள் இன்றி, பாபு குடும்பத்தோடு நட்புடன் இருந்தவர்கள். யமுனா பாபுவை விட பத்து வயது மூத்தவள். பாபுவைத்தூக்கி வளர்த்தவள். ஆனால் அவள் மீது மிக ஆழமான ஆகர்ஷிப்பை பாபு கொண்டிருப்பான். காமம் என்றோ காதல் என்றோ வகைபடுத்த முடியாத ஆழமான ஆகர்ஷிப்பு. ஒரு கட்டத்தில் தஞ்சைக்கு யமுனா குடிபெயர்ந்தாலும், ஏதோ ஒரு வகையில் குடும்பங்களுக்கிடையே நட்பு தொடரும். 

தஞ்சைக்குப் படிக்கப்போகும் பாபு அங்கேயே ஒரு பாட்டி வீட்டில் தங்கி இருக்கையில், யமுனாவோடு நட்பு பலப்படும். தன் பெற்றோரின் கூடா ஒழுக்கம் காரணமாக முதிர்கன்னியாக தங்கிப்போவாள் யமுனா. அவளையும், அவளுடைய அம்மாவையும் உன்னதமானவர்களாகக் கருதும் பாபுவுக்கு,இந்தப் புறக்கணிப்பு நியாயமற்றதாகத் தோன்றும். அவர்களுக்கு ஆதரவாக இருக்கத்தொடங்குவான். இசையில் ஏற்படும் ஆழமான விருப்பம் காரணமாக இசைக்கலையில் சிம்மமென விளங்கும் ரங்கண்ணாவிடம் பாட்டு கற்றுக் கொள்வான் பாபு. ஆனால் யமுனாவின் மீதான ஏக்கம் அவனை நிம்மதியிழக்கச்  செய்து அலைக்கழிக்கும்.யமுனாவின் பெற்றோர் இறந்துபோக, பாபுவுக்கும் மதராஸபட்டினத்தில் வேலை கிடைக்க, ஆதரவற்ற நிலையில் இருக்கும் யமுனாவுடன் அவன் வாழ விரும்புவான். யமுனாவும் அதை ஒப்புக்கொண்டு ஒருநாளில் அவனுடையவள் ஆவாள்.  அவனை நன்றாக உணரும் அவன் தந்தை, அவர்களின் திருமணத்துக்கு இசைவார். பாபு இன்னும் ஆழமாக, ஒரு மனதாக இசையைக் கற்றுக்கொள்ள வடநாட்டுக்குச் செல்வதாக கதை முடியும். இது நேரான கதைச் சுருக்கம்.

ரங்கண்ணா, மிக நல்ல நண்பனாக இருக்கும் ராஜம், பாபுவின் மேல் அளவற்ற அன்பு கொண்ட பக்கத்து வீட்டுப்பெண் தங்கம்மா, மதராஸில் அவன் வசிக்கும் வீட்டார், ரங்கண்ணாவின் சீடர் என்று கதை முழுவதும் தஞ்சை மண்ணின் நிறை குறைகளை வெளிப்படுத்தும் மனிதர்கள் நிறைந்து நிற்பார்கள். அவர்கள் அனைவருக்கும் இடையிலான உரையாடல்களும் ஆழமானவையே. சங்கீதத்தின் மேன்மையை, குரு சிஷ்ய பாவத்தை ரங்கண்ணா பேசும் இடங்கள் சிலிர்ப்பானவை. ஜாதிய அடுக்குகள், சமுதாயம் உருவாக்கும் பொதுக்கருத்துகள், உளவியல் ரீதியான அழுத்தங்கள், பெண்கள் எதிர் கொள்ளும் சிறுமைகள் என பல நிலைகளில் கதை பயணிக்கும்.  யமுனாவின் மேல் பாபுக்கு இருக்கும் நேசத்தை, ஆழமான விருப்பத்தை, அதன் அலைக்கழிப்பை, குழப்பத்தை, வயதைக் காரணம் காட்டும் யமுனாவின் நிராகரிப்பை, அவளுடைய கவுரவமான, மனதை நிறைக்கும் தேஜசை,  தேர்ந்தெடுத்த வார்த்தைகளால், மிக மிக அழகாக எழுதி இருப்பார் திஜா. "தன்னைப் பற்றிய நினைவே ஒழிந்தது போன்ற ஒரு தூய்மையின் பிரகாசம் அந்த சாய்விலும் கம்பீர வடிவத்திலும் ஒளிர்வது போலிருந்தது", இப்படி ஒளிரும் யமுனாவின் மேலான நேசத்தை எந்த வார்த்தையில் சொன்னால் என்ன.. சொல்லாவிட்டாலும்தான் என்ன !!

பாபுவுக்கும் அவன் அப்பாவுக்குமான பிணைப்பு அற்புதமாக இருக்கும். "அவன் தலையைத் தன் பரந்த உள்ளங்கையினால் தடவிக்கொடுத்தார் அப்பா. தந்தையின் அன்பு அனைத்தையும் வெளிப்படுத்தும் உள்ளங்கை" என்றொரு வர்ணனை கதையில் வரும். நம் மேல் பேரன்பு கொண்ட தந்தையின் வெம்மையான பரந்த உள்ளங்கையால் நம் தலையை வருடி கொடுப்பது போன்ற உணர்வு இந்த வரிகளைப் படிக்கும்போதே வரும். நாவலில் எனக்கு மிகவும் பிடித்த வரி இது.  அப்பாவுக்கும் பாபுவுக்குமான உரையாடல்களும் நிகழ்ச்சிகளும் ஆழமானவை. அவனது மேதமையையும் நேசத்தையும் யமுனாவின் மேன்மையையும் உணர்ந்தவராகவே அவர் இருப்பார். இந்தக் கதை 1950களில் எழுதப்பட்டது என்பதை நாம் இந்த சமயம் கவனத்தில் கொள்ள வேண்டும். 

கதை நாயகனாக இருக்கும் பாபு, உதாரண புருஷன் அல்ல. எப்போதும் குழப்பமும் குற்ற உணர்ச்சியும், அலைக்கழிப்புமாக, எதிலும் பொருந்தி இருக்க முடியாமல் நிறைகளும் குறைகளுமாக நம்மிடையே உலவும் ஒருவன். அதேபோல பாபுவின் மீதான தங்கம்மாவின் காதலும், அதன் நியாயமும் கூட விரசமில்லாமல் சொல்லப்பட்டு இருப்பது, தனி மனிதர்களின் அக உணர்வுகளை சரியான முறையில் பிரதிபலிக்கும் விஷயமாகவே எனக்குத் தோன்றுகிறது. கதையில் யமுனா வரும் இடங்கள் எல்லாமே, மெல்ல வருடும் காவிரிக்காற்றென மிளிரும். பாபு தன் காதலைச் சொல்லும்போது, அதை மறுப்பாள் யமுனா. அதற்கு மேல் பேச மனமின்றி, "சொல்லாமலே புரியாதது, சொல்லியா புரியப்போகுது?" என்பான் பாபு. எத்தனை அர்த்தம் மிகுந்த வரிகள் இவை. நாம் நேசிப்போரின், நம்மை நேசிப்போரின் மனங்கள், எவ்வித விவரணைகளும் இன்றி நமக்குப் புரியக்கூடியவை. சொல்லாமல் உணரக்கூடிய நேசம்தான் தனக்கு யமுனாவின் மேல் என்பதை, இதைவிட சுருக்கமாகவும், விரிவாகவும் சொல்லிவிட முடியுமா என்ன? 

மிக மெலிதானதும் அந்தரங்கமானதுமான ஒரு உண்ர்வை கவனமாகக் கையாண்டு எழுதப்பட்ட நாவல் மோகமுள். தனி மனிதர்களின் அன்பை, காதலை, காமத்தை, விழைவை, குற்ற உணர்ச்சியை ஆராய்ந்து தீர்ப்பெழுதாமல் இயல்பாக ஏற்கும் கதை இது. திஜாவின் மற்ற கதைகளிலும் பிறழ்வும், அதன் இயல்பும் கவனமாகவே கையாளப்பட்டு இருக்கும். கிளாசிக் வரிசை கதைகளில் மிக முக்கியமான ஒரு புதினம். "உள்ளே எப்போதும் நிலவிக்கொண்டிருக்கும் ஆதார சுருதிக்கு உலகத்து ஒலியெல்லாம் ஸ்தாயிகளாகவும் ஸ்வரங்களாகவும் கேட்கின்றன". அவற்றின் நீட்சியே எழுத்தாகவும் பரிமளிக்கிறது போலும். மனித உணர்வை விகாரப்படுத்தாத வெளிப்பாடுகள் எல்லாம் உன்னதமானவைதான் இல்லையா?

Comments

  1. மிகவும் சிறப்பு 💐💐💐💐💐💐

    ReplyDelete
  2. மோக முள் நாவலின் உள்ளார்ந்த உணர்வுகளையும், கதாபாத்திரங்களின் மனப்போராட்டங்களையும் மிக நுட்பமாக நீங்கள் வெளிப்படுத்தியுள்ளீர்கள். வாசகனை மீண்டும் நாவலுக்குள் அழைத்துச் செல்லும் ஒரு ஆழமான பதிவு. அருமையான வாசிப்புப் பகிர்வு.

    ReplyDelete
  3. மீண்டும் ஒருமுறை முழுமையாக நாவலை படித்தது போன்ற உணர்வை உங்களது எழுத்து உருவாக்கி இருக்கிறது. தி.ஜாவினுடைய மொத்த படைப்புகளும் பிரதிபலிக்க முயலும் உணர்வலைகளை துல்லியமாக கண்டு கொண்டிருக்கிறீர்கள் என்பதை உங்கள் எழுத்து பிரதிபலிக்கிறது

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

எனக்குப் பிடித்த குமரி உணவுகள்

வாசந்தி- குரலற்றவர்களின் குரல்

'வெயிலோடு போய்' - ச.தமிழ்ச்செல்வன்