தி கிரேட் இந்தியன் கிச்சன் - கண்ணுக்கு புலப்படாத சங்கிலிகள்

எனக்கு சாப்பிடுவது ரொம்பப் பிடிக்கும். அம்மா ரொம்ப நன்றாக சமைப்பார். புளிக்குழம்பு, சந்தவை, ஆப்பம், புளிச்சக்கீரை கடைசல் தொடங்கி அசைவ உணவுகள் அனைத்தையும் மிக நன்றாக செய்வார். ஒரு வெண்பொங்கலும் தேங்காய்த் தொக்கும் செய்தாலே அமிர்தமாக இருக்கும். எனக்கும் சமைப்பது பிடிக்கும். ருசியான வெரைட்டியான உணவுககளை செய்வது என் விருப்பமான ஸ்டிரெஸ் பஸ்டர். ஆனால், சமைப்பது என்பதும் வீட்டின் வேலைகளும் எத்தனை உடல் உழைப்பைக் கோருபவை எனபதை உணரத் தொடங்கிய பின்னர் அம்மா சமையலை சிலாகிப்பது குறித்த என் பார்வை பெரிதும் மாறியது. 

கிராம வாழ்வில் சமத்துவம் இருக்கும், பால்யம் அழகானது, இப்பல்லாம் யாரு சாதி பாக்கறா என்பது போன்ற ஒரு மகத்தான பொய் தான் சமைப்பதும் வீட்டுவேலைகளும் நல்ல பெண்ணுக்கான கடமை என்பதும். ஆதிகால தாய் வழி சமூகத்தில் இருந்து தந்தை வழி சமூகமாக நாம் மாறும் போது வீட்டின் பொறுப்பு பெண்ணுக்கானதாக மாறியது. எளிமையாக இருந்த வீடு மாறியதைப் போல  காலம் மாற மாற உணவின் வகைகளிலும் வீட்டு பராமரிப்பிலும் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன. நீண்டு போகும் வேலைகளை முடித்துவிட்டு, பத்து மணிக்கு மேல் காலை உணவை வேகமாக விழுங்கும் என் அம்மாவைப் போல பலரை நான் பார்த்திருக்கிறேன். அதேபோல உண்ண நேரமின்றி காலை உணவை ரயிலிலும் அலுவலக வராண்டாவிலும் அமர்ந்து சாப்பிடும் பெண்களையும் தினமும் பார்க்கிறேன். 

காலை எழுந்ததில் இருந்து இரவு உறங்கச் செல்லும் வரை சங்கிலித் தொடர்போல வீட்டின் வேலைகள் நீடித்தபடிதான் இருக்கின்றன. வீட்டில் இருக்கும் பெண்கள், வேலைக்குச் செல்லும் பெண்கள் என்ற பாகுபாடே இதில் தேவை இல்லை என்பது என் கருத்து. வேலைக்கு செல்லும் பெண்களுக்கு இருக்கும் அழுத்தத்திற்கு சற்றும் குறைவற்ற அழுத்தம் வீட்டில் இருக்கும் பெண்களுக்கும் இருக்கிறது. சமைப்பது, வீடு கூட்டித் துடைப்பது, பாத்திரம் கழுவுவது, துணி துவைத்து காயப்போட்டு, மடித்து வைப்பது, வாரம் ஒருமுறை வீடு முழுமையும் ஒழுங்கு படுத்துவது, விருந்தினர் வருகை, மத ரீதியான கடமைகள், குழந்தைகளின் ஸ்பெஷல் கிளாஸ், படிப்பு சொல்லித்தருவது போன்ற வேலைகள் அனைத்து பெண்களுக்கும் பொதுவானவை. இப்போதைய ஆண்கள் வீட்டு வேலைகளை ஓரளவு பகிர்ந்து கொள்கின்றனர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லைதான். ஆனாலும் ஒருநாளைப் போல் தினமும் இந்த வேலைகளை செய்வது எப்படி இருக்கும்?? இதை முகத்தில் அறைந்தது போல வெளிப்படுத்திய திரைப்படம் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்'. 

மலையாளம், தமிழ், இந்தி இந்த மூன்று மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்ட திரைப்படங்களில், மலையாள மூலம் உண்மைக்கு மிக நெருக்கமானதாகவும் உணர்வுப் பூர்வமானதாகவும் எனக்குப்பட்டது. நிமிஷா சஜயனின் நடிப்போ அல்லது சமரசமில்லாத காட்சியமைப்போ, மலையாள வெர்ஷனுக்குத் தான் என் முதல் ஓட்டு. நடனம் கற்றுக்கொண்டு முகம் நிறைய சிரிப்போடு நிமிஷா ஆடும்போது இடையிடையே அவளை பெண் பார்க்க வரும் சுராஜ் வெஞ்சாரமூடுவுக்காக வீட்டின் பலகாரங்கள் செய்வதுமான் காட்சிகளோடு திரைப்படம் தொடங்கும். திருமணமாகி கணவனின் பெரிய தரவாடு வீட்டுக்குள் நிமிஷா  சென்ற இரண்டாம் நாள் காலையில், தோசை சுடத்தொடங்கும் மனைவியும், மாமியாரும் என அந்த சிறிய, வசதிகள் எதுவுமற்ற சமையல் அறையும், வீட்டின் அடுத்தடுத்த வேலைகளை அவர்கள் செய்வதுமே படம் முழுவதும் வரும். 

விறகு வைத்து சோறு பொங்குவது, அம்மியில் சட்னி அரைப்பது, சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து செய்தித்தாள் படிக்கும் கணவன் பல் துலக்குவதற்காக, சமையல் வேலைக்கு இடையே ஓடோடி வந்து  பேஸ்டும் பிரஷும் எடுத்துத் தருவது, வெளியே புறப்படும் போது, காலுக்கு செருப்பு எடுத்துப் போடுவது, கணவனும் மகனும் சாப்பிட்டபின் அசுத்தமாக இருக்கும் மேஜையில் எந்த அருவருப்பும் இல்லாமல் சாப்பிடுவது என்று இருக்கும் மாமியாருடன் அந்த வீட்டின் வழக்கங்களைப் பழகுத்தொடங்குகிறாள் புது மனைவி.   தன் மகளின் பிரசவத்தில் உதவ மாமியார் வெளிநாடு சென்றுவிட, அதன் பின், பாரம்பரிய குடும்ப வழக்கங்களைப் பின்பற்றும் வீட்டை தனியாக நிர்வகிக்கத் தொடங்குகிறாள் மனைவி. 

கணவனுக்கும் மாமனாருக்கும் மூன்று வேளையும் சமைத்து, வீட்டை சுத்தம் செய்து, பாத்திரம் கழுவி, துணி துவைத்து என்று இரவு வரை அவளது நேரம் முழுமையாக ஆக்கிரமிக்கப்படுகிறது. புதுத் திருமண வாழ்வில், தனிப்பட்ட உறவும் அவளுக்குக் கடமையாகவே தோன்றி விடுகிறது. இதனிடையே, கையில்தான் துணி துவைக்க வேண்டும், மதியம் மீந்த உணவை இரவுக்கு வைக்கக்கூடாது, மாதவிலக்கு நாட்களில் தனியே இருக்க வேண்டும், தரையில் படுக்க வேண்டும் என்று அடுக்கடுக்காக சொல்லப்படும் விதிமுறைகள் அவள் தன்மானத்தை மிகவும் பாதிக்கின்றன. அவள் அம்மாவோ, அந்த வீடு அப்படி இருந்தால் அதற்கு ஏற்றபடி நீ மாறிக்கொள்ளத்தான் வேண்டும் என்கிறார், எல்லா அம்மாக்களையும் போல. 

கணவனும் மாமனாரும் சபரிமலைக்கு மாலை போடும் சமயத்தில் மனைவியின் நெருக்கடி இன்னும் அதிகமாகிறது. உதவிக்கு வரும் சுற்றமும் பெருமை பெற்ற குடும்பத்திற்கு அவள் பொருந்தாதவள் என்னும் வகையிலேயே அவளை சிறுமைப்படுத்துகின்றது. சம்பிரதாயங்களை பின்பற்றத் தெரியாதவள் என்று அவள் மீதும் அவள் கணவனுக்கு எரிச்சலும் கோபமும் உருவாகிறது. அவர்களுக்குள் உரசலும் விலகலும் அதிகமாகிறது.  மிகுந்த தைரியசாலியாக நாயகியின் பாத்திரம் படைக்கப்பட்டு இருக்கும். கணவன் மீது அன்பாக இருக்கவும் குடும்பத்தின் வழக்கங்களை பின்பற்றவும் தன்னால் இயன்ற வரை அவள் முயற்சி செய்வாள். ஆனால் ஒரு வழிப்பாதையாகவே ஆகிப்போகும் உறவு ஒரு கட்டத்தில் கண்ணடிப்பாத்திரமென நொறுங்கிப்போகும். தாங்க முடியாத ஒரு தருணத்தில் வீட்டில் இருந்து வெளியேறும் முடிவை மனைவி எடுக்கிறாள். அவள் தன் விருப்பமான நடனத்தை தொடர்வதோடும், கணவன் அதே சமையலறையில் தோசை சுடும் தன் இரண்டாம்  மனைவியோடு பேசிக்கொண்டு இருப்பதுமாக திரைப்படம் முடியும். 

திரைப்படத்தில் யாருக்குமே பெயர் கிடையாது, எல்லாருக்கும் பொருந்தக்கூடிய கதை என்பதன் குறியீடு போல. படத்தின் பெரும்பான்மை நேரம் டாப் ஆங்கிளில் அடுப்பு, பாதிரம் கழுவும் சிங்க், சாப்பாட்டு மேஜை தான் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும் அதன் பின்னர் எல்லா ஃப்ரேமிலும் வரும் வேலை செய்யும் பெண்கள் - மாமியார், வீட்டுக்கு வரும் மூத்த அத்தை, வீட்டு வேலை செய்யும் பெண், விருந்துக்காக செல்லும் வீட்டின் பெண், அவளுடைய மகள் , இந்தப் புது மணப்பெண், ஏன்,  கணவன் இரண்டாவதாக மணக்கும் பெண்ணும் சமையல் செய்தபடி இருக்கும் காட்சிகள்தான். ஒலிப்பதிவும் அப்படித்தான். வீட்டில் வேலைகளை செய்யும்போது எழும் இயல்பான ஒலிகள் மட்டுமே. சமயத்தில் அதுவே நம்மைத் தாள முடியாத அழுத்தத்தில் தள்ளி விடும். மிக மிக நுணுக்கமான விவரிப்புகள் படம் முழுக்க விரவி இருக்கும். விருந்தினர் வீட்டில் மகளைப் பரிமாறச் சொல்லும் தாய், வெளிநாட்டுக்குப் போகும் முன் நகைகளைக் கணவனிடம் ஒப்படைக்கும் மாமியார், மாதவிடாய் காலத்தில் தான் வேலைக்குப் போகவேண்டிய கட்டாயத்தைச் சொல்லும் பணிப்பெண், மென்மையாகவே ஆனாலும் தன் விருப்பங்களை சாதித்துக் கொள்ளும் மாமனார், அவள் வேலைக்குச் செல்வதை தடுப்பதைக்கூட மிகவும் சாதூர்யமாக, வீட்டில் ஒரு பெண் இருப்பது வீட்டுக்கே ஐஸ்வர்யம், பிள்ளைகளை வளர்ப்பது மிகப் பெரிய காரியம் என்று பேசும் மனிதர், தன்னை கொஞ்சம் கூட மாற்றிக்கொள்ள விரும்பாத, மனைவிக்கென்று விருப்பங்கள் இருப்பதை உணராத கணவன், தனிப்பட்ட உறவின் போதும் அழுக்கான சமையலறை சிங்க்கை மனதில் காணும் மனைவி, ஹாட் பேக்கில் இருக்கும் தோசையை அவள் பரிமாறும் போது, 'ஒரு சூடான தோசை' கிடைக்குமா என்று மாமனார் கேட்பது என மிக ஆழமான காட்சி மொழியைக் கொண்ட படம் இது. 

தன் வேலைகளை சுலபமாக செய்துகொள்ளும் வழிமுறைகளை வீட்டின் மூத்த ஆண் விரும்புவதில்லை என்பதை பல காட்சிகளில் காண்கிறோம். ஜெயகாந்தனின் "யுக சந்தி" சிறுகதையில், கவுரிப்பாட்டி நினைப்பது போல தன் பாரம்பர்யத்தை காப்பதன் மூலமே தன் ஆதிக்கத்தை தக்க வைத்துக்கொள்ள முடியும் என்று அந்த மாமனார் அறிந்திருக்கக்கூடும். அவள் வேலைக்கு செல்வதையோ, தன் பாலியல் தேவைகளை வெளிப்படுத்துவதையோ, குறைந்தபட்சமாக சாப்பிட்ட உணவின் மிச்சங்களை அப்படியே மேஜையில் போடாமல் தனியே எடுத்துவைக்க சொல்வதையோ கூட ஏற்றுக்கொள்ளாத ஆணாதிக்கம் கொண்ட வீடாக அது இருக்கிறது. ஆனால் நம் மனதில், காலகாலமாக இருக்கும் கொடுமைக்காரக் கணவனின் பிம்பத்தோடு இந்தக் கணவனின் இயல்பு சற்றும் ஒத்துபோவதில்லை. நாம் இது போன்ற நடப்புகளை கொடுமையாகவே கருதுவதில்லை என்பதே காரணம். அட்ஜஸ்ட் பண்ணிப் போகிற, காலப்போக்கில் பழகிவிடும் வகையான சிரமங்களாகவே இந்த அழுத்தங்கள் பார்க்கப்படுகின்றன. அது அப்படி அல்ல என்று காட்டியதற்காகவே, இந்தப் படம் எனக்கு மிகவும் பிடித்தது. பெண்ணுக்குப் பெண் எதிரி, மாமியார் மருமகள் உறவு குறித்த ஸ்டீரியோடைப்பையும் இந்தப் படம் உடைக்கிறது. தி கிரேட் இந்தியன் கிச்சனின் மாமியார், மருமகளின் கஷ்டம் தெரிந்தவர். அவளை ஆதரிக்கவும் செய்கிறார்.சில காட்சிகள் மட்டுமே என்றாலும், மாமியார் மருமகள் இடையிலான ஸ்நேகம் மிக அழகாக சித்தரிக்கப்பட்டு இருக்கும்.

சமையல் அறை சிங்க் குழாயில் கழிவுநீர் கசியத்தொடங்கும். அதை சரிசெய்யச் சொல்லி அவள் கேட்பதைக் கணவன் பெரிதாக எண்ண மாட்டான். கைதொட்டு கழிவுநீரையும் சாப்பிட்ட எச்சிலையும் அகற்ற மிகுந்த அருவருப்பு அடைவாள் மனைவி. ஆனால் அதைப் பெரிய விஷயமாகவே யாரும் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். ஒரு கட்டத்தில் அவர்களின் உறவைப் போலவே, கழிவு நீர்க் குழாய் கசிவும் மோசமாகிக் கொண்டே வரும். அவர்கள் உறவின் நிலையை அந்தக் குழாய் கசிவோடு ஒப்பிடத் தோன்றியது எனக்கு.கடைசியில் நிமிஷா தனித்து சென்று தன் சுயத்தை மீட்கிறாள். குடும்ப அமைப்பின் உள்ளிருந்தே தன் சுயத்தைத் தக்க வைக்கும்படியாக  நம் குடும்ப அமைப்புகள் மேம்பட வேண்டும். அப்போதுதான் அந்த அமைப்பையே தக்க வைக்க முடியும். நிச்சயம் பார்க்க வேண்டிய ஒரு திரைப்படம். 

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த குமரி உணவுகள்

வாசந்தி- குரலற்றவர்களின் குரல்

'வெயிலோடு போய்' - ச.தமிழ்ச்செல்வன்