சில்ரன் ஆஃப் ஹெவன் - பால்யத்தின் தீரா ஓட்டம்
உலக அளவில் மிக முக்கியமான திரைப்படங்கள் குறித்து எழுதப்படும் எந்த பட்டியலிலும் "சில்ரன் ஆஃப் ஹெவன்" நிச்சயம் இருக்கும். எனக்கு ஒரு இருவது ஆண்டுகளுக்கு முன்பு வரை உலக சினிமாக்கள் குறித்தும், வாழ்வைப் பேசும் அற்புதமான திரைப்படங்கள் குறித்தும் எதுவும் தெரியாது. இத்தனைக்கும் மிக அதிகமாக திரைப்படங்கள் பார்ப்பவர்களாகவே நாங்கள் இருந்தோம். கிட்டத்தட்ட வெளியாகும் எல்லாப் படங்களையும் தியேட்டரிலோ, வீட்டில் கேசட் அல்லது சிடியிலோ பார்த்து விடுவோம். குழந்தைகள் பார்க்கலாமா கூடாதா என்னும் அளவிலான சிந்தனைகள் இன்றியே "வெகுஜன படங்கள்" என்று சொல்லப்படும் பல கதாநாயக மையத் திரைப்படங்களைப் பார்த்து இருக்கிறோம். 'தண்ணீர் தண்ணீர்', 'வீடு', 'ஏர்முனை' போன்ற படங்கள் இயல்பிலேயே மாறுபட்ட கதையோட்டம் கொண்டு இருந்ததை என்னால் உணர முடிந்தது. அப்போது அதில் பெரிய வித்தியாசம் எதுவும் தோன்றவில்லை. அந்தக் காட்சியமைப்பே மனதில் பாரத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.
மிகத் தீவிரமாக புத்தக வாசிப்பைக் கைக்கொண்டிருந்த எனக்கு, திரைப்படங்கள் குடும்பத்தோடும், நண்பர்களோடும் பொழுது போக்கத் தேவைப்பட்ட ஊடகமாகவே இருந்தது. என் திரைப்படம் பார்க்கும் முறையை மாற்றிபோட்டவை இரண்டு படங்கள். கல்லூரிக்காலத்தில் பார்த்த "அன்பே சிவம்", 2008ல் தொலைக்காட்சியில் பார்த்த " லைஃப் ஈஸ் பியூட்டிஃபுல் ". அன்பே சிவம் படத்தின் ஏதோ ஒரு கூறு என் மனதைத் தொட்டது. என் எண்ணப்போக்கை ஏதோ ஒரு வகையில் உலுக்கியது என்று சொல்லலாம். இதுவரை நான் பார்த்ததெல்லாம் தப்போ என்று என்னை எண்ண வைத்த படம் 'லைஃப் ஈஸ் பியூட்டிஃபுல்'. படம் முடிந்ததும் ஒரு அரை மணி நேரம் அழுதபடியே இருந்தேன். என்னை சமாதானம் செய்ய முயன்றபடி இருந்தார் என் கணவர். அதன் பிறகு அஜயன் பாலா விகடனில் எழுதிய 'உலக சினிமா' தொடர் வழியே, நிறைய திரைப்படங்கள் குறித்து தெரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் அவற்றைப் பார்ப்பதற்கான அவகாசமும் வசதியும் அப்போது இல்லை.
2012 பெரம்பலூர் புத்தகத் திருவிழாவில், உலக சினிமா அரங்கம் அமைக்கப்பட்டு, அந்த அரங்கின் பொறுப்பாளர்களாக இருந்த திரு.செல்வபாண்டியன் மற்றும் நண்பர் மணிவாசகம் மூலம், நான் பார்க்க நினைத்த திரைப்படங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்போது புகழ் பெற்ற கவிஞராக இருக்கும் ஆண்டன் பெனி, தினமும் தன் அழகான கையெழுத்தில் அன்றைய திரைப்படத்துக்கான சார்ட்டை எழுதி அரங்குக்கு முன்னே வைப்பார். அதில் தான் நான் " சில்ரன் ஆஃப் ஹெவன்" திரைப்படத்தை முதலில் பார்த்தேன். மிக அழகான திரைப்படம். ஈரானின் புகழ்பெற்ற இயக்குனர் மஜீத் மஜீதி இயக்கிய இந்தப் படம், 1997ல் வெளியாகி, உலகெங்கும் மிக நல்ல விமர்சனங்களைப் பெற்றது. வெறும் 88 நிமிடங்களே ஓடக்கூடிய திரைப்படத்தில், தெஹ்ரானில் வாழும் ஒரு எளிய குடும்பத்தின் கதையை மிக அழகாகச் சொல்லி இருப்பார் இயக்குனர் மஜீத் மஜீதி.
குழந்தைகளின் உலகம் மிக அழகானது என்று நாம் அடிக்கடி சொன்னாலும் அவர்களின் உலகில் குழந்தைகள் வாழ பெரியவர்களும் உலகும் விடுவதில்லை என்பதே உண்மை. எல்லா குழந்தைகளுக்கும் தம் பால்யத்தை கொண்டாடும் வாய்ப்பு அமைவதில்லை. வறுமை, நோய்மை, போர்ச்சூழல் போன்ற இன்னல்களில் சிக்கும் பிள்ளைகள் அதே வயதில் இருக்கும் சக குழந்தையின் வாழ்வை வாழ்வதில்லை. பால்யத்தின் கொண்டாட்டமும் ஒருவகை ரொமாண்டிசிசம்தான் என்று எனக்குத் தோன்றுவதுண்டு. சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகள் மிகக் கடுமையாக பாதிப்பது குழந்தைகளைத்தான். ஆனால் வறுமையின் கொடுங்கரங்கள் இறுக்கும் நிலையிலும் நேர்மையோடும் வைராக்கியத்தோடும் வாழும் குழந்தைககள் தான் 'சில்ரன் ஆப் ஹெவன்'இன் அலியும் சாராவும்.
ஒன்பது வயது அலி, தன் ஆறு வயது தங்கை சாராவின் ஷூக்களை பண்படுத்திக் கொண்டு வருவதிலிருந்து கதை தொடங்கும். பிங்க் நிறத்தில் ஏற்கனவே பல தையல்கள் போட்ட ஷூவை பழுது பார்த்துவிட்டு எடுத்து வருவான் அலி. வரும் வழியில் வீட்டுக்கு ரொட்டியும், காய்கறிகளும் வாங்கும்போது, காலணி உள்ள பையை பழைய பொருட்கள் சேகரிக்கும் ஒருவர் தவறுதலாக எடுத்துச் சென்று விடுவார். காலணி தொலைந்ததை அறியும் அலி, அதனைப் பல இடங்களில் தேடுவான். அது எங்கும் கிடைக்காது. மிகுந்த வருத்தத்தோடு வீட்டுக்கு வருவான். வாடகை கொடுக்கவில்லை என்று தன் அம்மாவுடன் சண்டையிடும் வீட்டின் உரிமையாளரைக் கண்ட படி அவன் வீட்டுக்குள் சென்றபின், காலணி எங்கே என்று சாரா கேட்பாள். மிகுந்த குற்ற உணர்வோடு அதைத் தான் தொலைத்து விட்டதாக அலி சொல்லும்போதே அவர்களின் குட்டித்தங்கை அழ ஆரம்பிக்க, அதை கவனிக்க சாரா சென்று விடுவாள்.
குழந்தைகளின் அம்மா நோய்வாய்ப்பட்டவராகவும், அப்பா, வழிபாட்டுத் தளத்தில், எளிய பணி செய்பவராகவும் இருப்பார்கள். பெற்றோருக்குத் தொல்லை கொடுக்கக் கூடாது என்று முடிவு செய்யும் சாராவும் அலியும், அப்பாவுக்கு பணம் கிடைக்கும் வரை, அலியின் காலணியையே, இருவருமாக மாற்றி மாற்றி பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்வார்கள். சாராவின் பெண்கள் பள்ளி காலைப் பள்ளியாகவும், அலியின் ஆண்கள் பள்ளி மாலை பள்ளியாகவும் இயங்கும். சாராவின் பள்ளி நேரம் முடிந்ததும், அவள் வேக வேகமாக ஓடி வந்து தெருவில் காத்திருக்கும் அலியிடம் ஷூக்களைத் தருவாள். அதைப் போட்டுக்கொண்ட அலி, அவன் பள்ளிக்கு வேக வேகமாக ஓடுவான். இருவருமாக இப்படி ஓடி ஓடி செல்கையில், சாராவின் கால் அளவுக்கு சற்றே பெரியதான அலியின் செருப்பு சாக்கடைக்குள் விழுந்து விடும். அதை பதை பதைப்போடு தேடி எடுத்து சாரா கொண்டுபோய் அலியிடம் தரும் நாளில், மிகவும் தாமதமாகி, அவன் தலைமை ஆசிரியரிடம் மாட்டிக்கொள்வான். எச்சரிக்கப்படுவான். ஆனாலும் இந்த ஓட்டம் தினமும் தொடரும்.
நன்கு படித்ததால் அலிக்குப் பரிசாகக் கிடைக்கும் பேனாவை அவன் சாராவுக்கு பரிசாகத் தருவான். இந்த ஓட்டத்தினூடே, அவர்களின் அப்பா நகரத்தில் தோட்ட வேலை செய்து கூடுதல் வருமானம் ஈட்ட முயல்வார். ஆனால் ஒரு சிறிய விபத்தில் சிக்கி வருத்தத்துடன் வீடு வருவார்கள். எப்படியாவது தங்கைக்கு ஒரு காலணியை வாங்கித் தரும் முனைப்போடு இருப்பான் அலி. அவன் அப்பாவிடமும், சாராவுக்கு ஒரு காலணி வாங்க வேண்டும் என்று சொல்வான். ஆனால் குழந்தைகள் இருவரும் தாங்கள் ஓடும் ஓட்டத்தைப் பற்றி யாரிடமும் சொல்லாமலே சமாளிப்பார்கள். இடையே அலியின் பள்ளியில், மாநில அளவிலான ஓட்டப்பந்தயம் குறித்த அறிவிப்பு வெளியாகும். முதலில் அதைக் கண்டுகொள்ளாத அலி, அந்தப் போட்டியில் மூன்றாம் பரிசாக காலணிகள் கிடைக்கும் என்று தெரிந்ததும் அந்தப் போட்டியில் கலந்து கொள்வான். சாராவிடம், போட்டியில் மூன்றாம் பரிசு பெற்று அவளுக்கு ஷீ வாங்கித் தருவதாக உறுதி கூறுவான். வசதியான பிள்ளைகள் கலந்து கொள்ளும் போட்டியில், கிழிந்த ஷூவோடு மூன்றாம் இடத்தைக் குறி வைத்து ஓடுவான் அலி. தங்கையும் அவனும் ஓடும் ஓட்டம் அவன் மனதில் வந்தபடி இருக்கும். வெற்றிக்கோட்டைத் தொட்டு கீழே விழும் அவனை எல்லோரும் தூக்கிக் கொண்டாடுவார்கள். அவன் உடனே கேட்பான் 'மூன்றாம் பரிசுதானே'?. உற்சாகமாக அவன் ஆசிரியர் அவன் முதல் பரிசு பெற்றதாக சொல்லும்போது அவன் மிகுந்த வேதனைக்கும் குற்ற உணர்வுக்கும் உள்ளாவான்.
சோர்வோடு வீட்டுக்கு வரும் அவனை ஆவலோடு எதிர்பார்த்து நிற்கும் சாரா அவன் ஷூ கொண்டு வராத ஏமாற்றத்தோடு விட்டுக்குள் செல்வாள். வீட்டின் முன்னே உள்ள செய்குளத்தில், ஓடியதால் கிழிந்து விட்ட தன் ஷூவை கழற்றி விட்டு பாதங்களை நீருக்குள் வைப்பான் அலி. சிவந்து பொத்துப்போன பாதங்களை மீன்கள் மென்மையாகக் கொத்தும் காட்சியோடு திரைப்படம் நிறைவு பெறும். படம் முழுவதும் குழந்தைகள் இருவரும் மாற்றி மாற்றி ஓடுவார்கள். அம்மாவும் அப்பாவும் வறுமையில் கஷ்டப்படும்போது, தாங்கள் அவர்களை துன்பத்துக்கு உள்ளாக்கக்கூடாது என்று இருவரும் செய்யும் திட்டங்கள் பார்க்கவே மிகவும் நெகிழ்ச்சியைத் தரும்.
சாரா பள்ளியில் தன்னோடு பயிலும் பிள்ளைகளின் கால்களைப் பார்த்தபடி இருப்பாள். ஒரு நாள் ஏக்கத்தோடு அப்படி பார்க்கும் போது, தன் செருப்பை வேறொரு சிறுமியான ரோயா அணிந்திருப்பதைப் பார்ப்பாள். ரோயாவைப் பின்தொடர்ந்து சென்று அவள் வீட்டைக் கண்டுபிடித்த பின், அலியும் சாராவுமாக காலணியைக் கேட்கலாம் என்று செல்வார்கள். ரோயாவின் அப்பா பார்வையற்றவர் என்பதை பார்த்ததும், இருவரும் எதுவும் பேசாமலே வந்து விடுவார்கள். அந்தக் காட்சி ஒரு கவிதையைப் போல எடுக்கப்பட்டு இருக்கும். பின்னர் ரோயா, சாராவுடன் பேசத் தொடங்குவாள். அவளது தந்தை அவளுக்கு ஒரு புதிய செருப்பை வாங்கி வந்ததும், சாராவின் பிங்க் காலணியை ரோயா குப்பையில் போட்டு விடுவாள். பள்ளி விட்டு வரும்போது அவள் கால்களில் புதிய காலணியைப் பார்த்துவிட்டு சாரா, பழைய காலணி எங்கே என்று கேட்பாள். அதைத் தூக்கிப் போட்டு விட்டதாக ரோயா சொல்லும்போது, சாரா அடையும் அதிர்ச்சி நம் முகத்தில் அறைவது போல இருக்கும். கோவிட் காலத்தில், புலம் பெயர் தொழிலாளர்களை அவரவர் மாநிலங்களுக்கு ரயில்களில் அனுப்பி வைத்த போது, ஒரு துருதுருப்பான குழந்தையைப் பார்த்தேன். கண்ணைக் கவரும் வண்ணம் விளையாடியபடி இருந்த் அவள் மீது வறுமையின் அடையாளங்கள் ஆழமாக இருந்தன. அந்தக் குழந்தையின் செருப்பற்ற கால்கள், வெகுநாட்களுக்கு என்னைக் குற்ற உணர்ச்சியில் ஆழ்த்தின. அன்று காலை தான் என் மகளின் பழைய செருப்புகளை தூக்கி வீசி இருந்தேன் நான். அந்தக் குற்ற உணர்ச்சியின் எச்சத்தை சாராவை பார்க்கும் போதும் உணர்ந்தேன்.
உலகெங்கும் பெரியவர்களின் உலகில் தங்களை வலுக்கட்டாயமாக குழந்தைகள் தங்களை புகுத்திக் கொள்ளவேண்டி உள்ளது. வறுமையின் பிடியில், தங்கள் பால்யத்தை இழக்க வேண்டி உள்ளது. ஆனால் அந்த இறுக்கத்திலும் குழந்தைகள் நேர்மையாகவும், மகிழ்வாகவும் இருப்பதை சாரா, அலியின் மூலமாக நாம் காணலாம். இருவரும் மூச்சு வாங்க ஓடும்போதும், சாக்கடையில் விழுந்து அழுக்காகிவிட்ட காலணிகளை துவைக்கும் போது, சோப்பு நுரையில் குமிழிகளை விட்டு விளையாடுவதும், அப்பாவுக்குத் தெரியாமல் நோட்டு புத்தகத்தில் எழுதி உரையாடிக் கொள்வதும், ரோயாவின் நிலை தெரிந்ததும் அவளிடன் செருப்பைத் திருப்பிக் கேட்காமல் வருவதும் காட்சியாகப் பார்க்கும் போது மனதை நெகிழச் செய்யும். மிக மிக சோகமான ஒரு பின்புலத்தைக் கொண்ட கதையில் வலிந்து திணிக்கப்பட்ட சோகக்காட்சி ஒன்றுகூட இருக்காது. செருப்பு காணாமல் போன முதல் கணத்தில் சாரா ஒருமுறையும், ஓட்டப்பந்தயத்தில் சேர்க்கக் கேட்டு அலி ஒரு முறையும் மட்டுமே அழுவார்கள். மற்றபடி பிள்ளைகள் தங்கள் பொறுப்போடும் தன்மானத்தோடும் மகிழ்வோடும் வாழ்வதான இயல்போடு கதை நகரும். இந்தத் திரைமொழிதான் எனக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கிறது.
சமீபத்தில் மறுபடி சில்ரன் ஆஃப் ஹெவன் பார்த்தேன். அதனோடு கூட "பதேர் பாஞ்சாலியும்" "பைசைக்கிள் தீவ்ஸ்" படத்தையும் அடுத்தடுத்த நாட்களில் பார்க்கும் வாய்ப்பு கிடத்தது. 1940 களில் வங்காளத்தைக் கதைக்களமாகக் கொண்ட பதேர் பாஞ்சாலியும் அதே காலகட்டத்தில் இத்தாலியில் நடப்பதாக இருக்கும் பைசைக்கிள் தீவ்ஸும், மத்திய கிழக்கு நாடுகளின் கலாச்சாரப் பின்னணியில் 1997ல் எடுக்கப்பட்ட சில்ரன் ஆஃப் ஹெவன் படத்தோடு பெருமளவில் ஒத்துப் போவதாக இருக்கின்றன. வறுமை, பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமான நெருக்கமான புரிதல், வறுமையின் காரணமாக ஏற்படும் நோய்மையும் அலைச்சலும் என இந்த மூன்று திரைப்படங்களும் திசைகளைக் கடந்த ஒற்றைப் புள்ளியில் இணைவதாக எனக்குத் தோன்றுகிறது. மிக அழகான காட்சியமைப்பு, மனதை வருடும் மெல்லிய இசை, அற்புதமான நடிப்பை மிக இயல்பாக வழங்கி இருக்கும் நடிகர்கள், குறிப்பாக குழந்தைகள், உணமைக்கு வெகு நெருக்கமான திரை மொழி என்று நிச்சயம் பார்க்க வேண்டிய ஒரு திரைப்படம், மஜித் மஜிதியின் 'சில்ரன் ஆஃப் ஹெவன்'.
மிகவும் அருமை மேடம். By VMS
ReplyDelete