ஒளிரும் இயற்கை

ஒளி என்பது எப்போதுமே நமக்கு மிகுந்த மலர்ச்சியைத் தருவது. ஆதி மனிதனின் காலம் சூரியனால் வரையறுக்கப்பட்ட ஒன்றாக இருந்திருக்கும். இரவு என்பது நிலவும் நட்சத்திரங்களும். கால சுழற்சியில் நெருப்பைக் கண்டறிந்த போது, அதன் சுடும் தன்மையோடு ஒளிரும் தன்மையும் மனிதருக்கு பெரும் உதவியாகவே இருந்திருக்கலாம். காலப்போக்கில் ஒளியை நாமே கையாளத் தெரிந்துகொண்டாலும், தீபமோ மெழுகுவத்தியோ ஏற்றி எங்கும் நிறைந்திருக்கும் இறையை ஒளி வடிவமாக வணங்குவதும் நம் வழக்கமாக இருக்கிறது. அதன் காரணமாகவே, எத்தனையோ காரணங்கள் இருந்தும், ஒளியை பல நிறங்களில் அள்ளி வீசும் பட்டாசுகள் இன்று வரை நமக்கு தேவைப்படுகின்றன போலும். 

தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதை நான் நிறுத்தி 22 வருடங்கள் ஆகி விட்டன. எட்டாம் வகுப்பு படிக்கும்போது, குழந்தைத் தொழிலாளர்கள் குறித்து நான் எழுதிய ஒரு கவிதை (!) கவிஞர் பொன்மணி வைரமுத்து அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பெண்மணி இன்னும் இதழில் பிரசுரமானது. தார்மீக ரீதியாக அதன்பிறகு பட்டாசு வெடிப்பது தவறு என்று எனக்குத் தோன்றியதால், அப்போதே அதில் விருப்பம் அற்றுப்போனது. பிள்ளைகள் வளரும்போது இருவருமே, சூழல் குறித்தும், பட்டாசுகள் உருவாக்கும் சமூகப் பொருளாதார அழுத்தங்கள் குறித்தும் ஆழமான கருத்துக்களை உருவாக்கி கொண்டதால், பட்டாசு என்னும் விஷயமே வீட்டில் இல்லை. 

எப்படி வந்தது என்று தெரியாமல் நாம் தீபாவளிக்குப் பட்டாசு வெடிக்கப் பழகி விட்டோம். அறியப்படாத தமிழகம் நூலில் தொ.பரமசிவன் அவர்கள் சொல்வதுபோல தமிழகத்தின் பண்பாட்டுக் கூறுகளுக்கு சற்றும் தொடர்பில்லாத பண்டிகை இது. 15ம் நூற்றாண்டுக்குப் பிறகே பட்டாசு வெடிக்கும் வழக்கம் வந்திருக்ககூடும் என்ற  ஆதாரங்களுடன் நிறுவுகிறார் அவர்.பூச்சிகளை விரட்ட, பட்டாசுத் தொழில் செய்பவர்களை பாதுகாக்க என்று ஏதேதோ காரணங்கள் சொல்லி நம் நிலைப்பாட்டை நாம் இப்போது நியாயப்படுத்தவும் செய்கிறோம். 

மழைக்காலம் தொடங்கும் நேரத்தில் மழைத்துளிகளோடு கலக்கும் புகையும் ரசாயனக் கலவைகளும் சூழலுக்கு மிகுந்த கேடு விளைவிப்பவை. நகரங்களில் அர்பன் ஹீட் என்னும் தன்மையால் கூடியிருக்கும் வெப்ப நிலை பட்டாசு வெடிப்பதால் மேலும் கூடுகிறது. தீபாவளியன்றும் அதன் மறுநாளும் காற்றின் மாசு பெருமளவு அதிகரிப்பதை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிடும் காற்றின் தரக்குறியீடு (Air a quality Index) மூலம் நாம் அறியலாம்.புவி வெப்பமடைதலுக்கும் இந்தப் புகை மண்டலம் காரணமாகிறது. தீபாவளிக்கு மறுநாள் காலையில், பனியும் புகையும் சேர்ந்து அடர்த்தியான ஸ்மாக் எனப்படும் கரும்புகையாக எங்கும் காணப்படுவதை நாம் கண்டிருப்போம். என்னையும் என் மகளையும் போல சுவாசக்கோளாறு உள்ளவர்களுக்கு பட்டாசுப்புகை பெரும் கஷ்டம். மேலும் காற்று மாசு குறித்து பேசும் அளவு ஒலி மாசு குறித்து நாம் கவலைகொள்வதில்லை. மாறாக ஒலி மாசு உடலுக்கு மிகுந்த உளைச்சல் தரக்கூடியது. நோய்வாய்ப்பட்டவர்கள், முதியோர், குழந்தைகள், அதிக ஒலிக்கு ஒவ்வாமை உடையோர் ஆகியோருக்கு வருடா வருடம் அதிகரித்து வரும் பட்டாசுச்சத்தம் மிகுந்த தொல்லை தரக்கூடியது. அதிலிருந்து தப்பிக்கவும் நாங்கள் புகையில்லாத ஒலி மாசில்லாத இடங்களைத் தேடிச் செல்ல வேண்டிய நிலை இருக்கிறது

பட்டாசு புகைக்கும் சத்ததுக்கும் பயந்தே ஒவ்வொரு வருடமும் தீபாவளி சமயத்தில் புது உடைகளும் இனிப்புகளும் வாங்கி, வழங்கிய பின், அருகில் உள்ள கானகப் பகுதிகளுக்கு சென்று விடுவது வழக்கம். தென்மலை, காளிகேசம், கோதையாறு உள்ளிட்ட தங்குமிடத்தோடு கூடிய எகோ பார்க்குகளில்,சிறிய அளவில் டிரெக்கிங் செய்து, மனதையும் உடலையும் புதுப்பித்துக்கொண்டு வருவது மனதுக்கு அமைதியை அளிக்கிறது. செயற்கையான பட்டாசுகள் இல்லாவிட்டாலும், தீபாவளிக்கு ஒளியும் நிறமும் இயற்கையிலேயே அபரிமிதமாகக் கிடைக்கத்தான் செய்கின்றன. 

அற்புதமான உலகின் படைப்பில், இயல்பிலேயே ஒளிரும் தன்மை கொண்ட உயிரினங்கள் நிறைய இருக்கின்றன. ஆழ்கடல் உயிர்கள், சில வகை ஆல்காக்கள் போன்றவற்றில் பயோலூமினசன்ஸ் எனப்படும் உயிர் ஒளிர்வு காணப்படுகிறது. சில வகை செடிகளும்  ஒளி உமிழும் என்று படித்திருக்கிறேன். நமக்கு நன்றாகத் தெரிந்த மின்மினிப்பூச்சிகளைப் போல, மேற்குத்தொடர்ச்சி மலைகளில் ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையும், ஈரப்பதமும் இருக்கக்கூடிய வனங்களில் ஒளிரும் தன்மையுள்ள காளான் வகைகள் கண்டறியப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 150 வகையான ஒளிரும் வகை காளான்களுள் மைசீனா குளோரோபிஸ் என்னும் வகைக் காளான், வனப்பகுதியில், அக்டோபர் நவம்பர் மாதங்களில் மழைக்குப் பின் காணக்கிடைக்கிறது. இது பற்றிய விரிவான ஆராய்ச்சிக் கட்டுரையின் சுட்டியை இக்கட்டுரையோடு இணைக்கிறேன்.கோவாவின் சில பகுதிகளில் இந்த காளான்களை சுற்றுலா பயணிகள் காணும் வண்ணம் பாதுகாப்பாக அழைத்து செல்வதாக கேள்விப்பட்டு இருக்கிறேன். அறிவியல் கூறுகளைக் காட்டிலும் என்னை மிகவும் ஈர்ப்பது இருளில் ஒளிரும் இந்த அற்புதத்தை காணும் தருணமே.

சின்ன இலையையும் தொட்டு விடாமல், விலகி நின்று, வழிகாட்டி சொல்வதை அட்சரம் பிசகாமல் கேட்டு நடப்பது கானகம் செல்வதன் முதல் விதி.அதன்படியே நடந்து செல்ல வேண்டும். இருளில் இந்தக் காளான்கள் இருக்கக்கூடிய இடத்தில் நாம் இருந்தோம் என்றால், கண்கள் இருட்டுக்குப் பழகிய பிறகு இவை நம் கண்ணுக்குப் புலப்படத் தொடங்கும். மின்மினிப்பூச்சிகள் ஆங்காங்கே பறந்து செல்ல, சின்னச் சின்ன நட்சத்திரங்கள் போல ஒளிப்பொட்டுகள் நமக்குத் தெரியத் தொடங்கும். புளோரசண்ட் பச்சையில் சுற்றுப்புறமெங்கும் மினுங்கும் ஒளியில் நம்மை நாமே பறி கொடுக்கையில் தரையிலும் படர்ந்திருக்கும் மைசீலியங்களும் ஒளிர்வதைக் காண முடியும். கூர்ந்து கவனித்தால், காளான்களின் அடிப்பகுதியில் உள்ள "கில்ஸ்" போன்ற வடிவங்கள் கூட தெளிவாக கண்ணுக்குப் புலப்படும். தேவதைக் கதைகளில் வருவது போல நம்மைச் சுற்றிலும் சொல்லில் விளக்க முடியா பேரழகோடு இயற்கை தரிசனம் கொடுக்கும். ஒளிவடிவமாக இறைவன் இருந்தால், அந்தப் வெளிப்பாடு இப்படித்தான் இருக்கக்கூடும் என்று தோன்றியது. என்னையறியாமல் கண்கள் கசிந்தன. எத்தனை கருணைமிக்கது இந்த புவி? இயற்கையின் வண்ணமிகு கொண்டாட்டம் இது. மிக அரியதும் அழகானதும் ஆன இந்த அனுபவம் எனக்கு மிகப்பெரும் ஆன்மத்திறப்பு. 

மிகச்சிறிய இந்த உயிரினம் எதற்காக இவ்வாறு ஒளிகிறது, அதன் அறிவியல் என்ன என்பது எல்லாம் இப்போதும் ஆராய்ச்சியில் உள்ள விஷயங்கள். இந்த இடத்தின் மைக்ரோ கிளைமேட் தாண்டி சில நூறு மீட்டர் தாண்டிபோனால்,இந்தக் காளான்கள் வருவதில்லை. உலகில் நாம் அறியாத எத்தனையோ அற்புதங்கள் கொட்டிக் கிடக்கின்றன. மனிதன் மட்டுமே உயர்ந்தவன் என்னும் அகங்காரத்தை அகற்றி விட்டுப் பார்த்தால், நாம் எத்தனை சிறியவர்கள் என்பது விளங்கும். சூழலியல் ஆராய்ச்சியாளர்கள் உலகின் எந்த மூலையில் நடக்கும் செயலும் இன்னொரு மூலையில் இருக்கும் ஒரு உயிரின் சமநிலையை பாதிக்கும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றனர். மிக மூத்த சூழலியலாளர் சர். டேவிட் அட்டன்பரோ தன் அத்தனை சொற்பொழிவுகளிலும் புவியின் சமநிலையை நாம் எவ்வாறெல்லாம் குலைக்கிறோம் என்று தொடர்ந்து பேசி வருகிறார். மினுங்கிக்கொண்டு இருக்கும் இந்தக் காளான்களின் வசிப்பிடத்தில் இருந்து நாம் பல நூறு கிலோமீட்டர்கள் தள்ளி இருக்கலாம். ஆனால் நம் கையில் இருக்கும் வண்ணப் பொறி பறக்கும் ரசாயன பட்டாசுகளால் ஏற்படும் வெப்ப நிலை மாற்றம் இந்தக் காளான்களின் இருப்பையே அழிக்கும் சாத்தியம் கொண்டவை. நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் கவனித்து செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் தலைமுறை நாம். கையில் இருக்கும் இந்த பூமியில், கொட்டிக்கிடக்கும் அழகை எப்போதும் நேசிப்போம். அதை பாதுகாப்போம். அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.

உயிர் ஒளிர்வுக் காளான்கள் குறித்த ஆராய்ச்சிக்கட்டுரை :https://threatenedtaxa.org/index.php/JoTT/article/view/8795/9781

Comments

  1. யாழினி-தமிழினி20 October 2025 at 20:57

    அரிய தகவல் சிறிய கட்டுரையில்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

எனக்குப் பிடித்த குமரி உணவுகள்

வாசந்தி- குரலற்றவர்களின் குரல்

'வெயிலோடு போய்' - ச.தமிழ்ச்செல்வன்