தேய்பிறை

பிறைச்சந்திரன் வடிவில் இருந்த மேஜைக்குபின்னே நாங்கள் - கமலி மேடம் நடுவிலும் நானும் பேச்சியும் இடது வலதாக அமர்ந்திருந்தோம். முக்கியமான வேலைகளை எங்கள் முவருக்கும் தனித்தனியாகவோ கூட்டாகவோ தருவது எங்கள் ஆட்சியரின் வழக்கம்.  மாவட்டத்துக்கு பல திட்டங்களின் கீழ் வரப்பெறும் தையல் மெஷின்களை ஒருங்கே  தகுதியான நபர்களுக்கு தருவதற்காக ஒரு நேர்காணல் குழுவை அமைத்து எங்களை நியமித்திருந்தார அவர். கமலி மேடத்தின் அறையிலேயே அந்த தேர்ந்தெடுக்கும் வேலையை வைத்துக்கொள்ளலாம் என்று நாங்கள் முடிவு செய்ததன் விளைவாக இப்போது இங்கே அமர்ந்திருக்கிறோம். ஒரு நேர்காணல் அறையை போலத்தான் இப்போது இந்த அமைப்பு இருக்கிறதா என்று எனக்கு நினைக்கத் தோன்றியது.  அறைக்கு இந்த ஹாப் ஒயிட் கலர் மிகவும் பாந்தமாக பொருந்தி இருந்தது.  அதேபோல ஆழ்ந்த பச்சை திரைச்சீலையும். 

தகுதியான நபர்கள் என்பது தையல் மெசின்களை பெறுவதற்குத் தகுதியான பெண்களைக் குறிக்கிறது. வாழ்வில் போதுமான தகுதிகளை பெறவில்லை என்று சமூகமும் குடும்பமும் கைகழுவிவிட்ட பெண்கள் இவர்கள். கணவனால் கைவிடப்பட்டு, கைம்பெண்ணாகி,எதேனும் நோயால் பாதிக்கப்பட்டு, பொருளாதார ரீதியில் சிரமப்படும் பெண்களுக்கு ஒரு கைத்தொழில் மூலம் வாழ்வின் நம்பிக்கையை மீட்டுருவாக்கும் முக்கிய பொறுப்பில் இருக்கிறோம் என்ற நினைவில் நாங்கள் மூவரும் சற்று சீரியசாகவே இருந்தோம்.காலையில் இருந்து இதுவரை பத்து பெண்களிடம் நேர்காணல் நடத்திவிட்டோம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை. நோய்மை,தனிமை,இயலாமை,வறுமை எல்லாம் இந்த பெண்களின் வாழ்வில்  எத்தனை இழப்புகளை ஏற்படுத்துகின்றன என்று நெஞ்சம் பதற நினைத்துக்கொண்டு இருந்தேன் நான்.

“ஜானகி, உள்ள வாங்க” உதவியாளரின் குரலை அடுத்து அறையினுள் நுழைந்தாள் ஜானகி.  ஏதோ கோப்பில் தலை கவிழ்ந்து  யோசனையில் இருந்த நான்,நிமிர்ந்து பார்த்த மாத்திரத்தில் உறைந்து போனேன். மரத்தால் ஆன கதவைத் தள்ளித்திறந்த படி அவள் உள்ளே வந்தாள். பளிச்சென்ற முகமும்,அணிந்திருந்த சிவப்பு சேலையும்,அவள் வந்து நின்ற பாங்கும் ஒரு அரசியை பார்த்தது போல தோன்றியது. அந்த வெள்ளை பிண்ணனியில் அவள் ஜொலித்தாள். இதுவரை நாங்கள் நேர்காணல் செய்த பெண்கள் அனைவரும் கணவனை இழந்தவர்கள். முப்பதுகளில் இருந்தவர்கள்.  ஜானகிக்கு அதிகமாக மதிப்பிட்டால் கூட இருவத்தி இரண்டு வயதுக்கு மேல் இருக்காது. அவளுடைய கோப்பை பார்த்ததும் மனதை திகைப்பும் சோகமும் கப்பியது. இருவது வயதே ஆன ஜானகி கணவனை இரண்டு வருடங்கள் முன்பே எய்ட்ஸ் நோய்க்கு பறிகொடுத்தவள். அவளும் இப்போது நோயுடன் போராடிக்கொண்டு இருக்கிறாள். அவளை பார்த்த திகைப்பு மறைவதற்குள்  அடுக்கடுக்காக இத்தனை தகவல்களும் என்னை நிலைகுலையச் செய்தன. அவள் சலனமற்று எங்கள் முன் நின்று இருந்தாள். 

பொதுவாக இந்தப்பகுதியில் குழந்தை திருமணங்கள் அதிகம் என்பது நாங்கள் அறிந்த உண்மைதான். இளவயது திருமணங்களை தடுக்க மாவட்ட நிர்வாகம் தீவிர முயற்சி எடுத்து வருவதும் எல்லோருக்கும் தெரிந்ததே. முகூர்த்த நாட்களில் நாங்கள் அனைவரும் மாவட்டம் முழுவதும் நடக்கும் திருமணங்களை கண்காணித்த படி இருப்பது வழக்கம். சிறு பிள்ளைகளுக்கு மணம் முடிப்பது தெரியவந்தால், உடனே அவர்களை மீட்டு வருவதும் உண்டு. “நம்ம பாத்தா பிள்ள பிடிக்கற பூச்சாண்டின்னு நினக்கப்போறாங்க மேடம்” என்று பேச்சி மேடம் அடிக்கடி ஜோக்கடிப்பார். பெரும்பாலும் சொத்து விட்டு போகக்கூடாது,சொந்தம் விட்டு போகக்கூடாது ,மகள் வேறு சாதியில் காதலித்துவிடக்கூடாது,வறுமை போன்ற காரணங்களால் பெற்றோர் திருமணம் செய்து விடுவது இங்குள்ள பழக்கம். அதோடு ஒரு ஆணை நம்பி திருமண வயதுக்கு முன்னரே ஏமாந்து போகும் பெண்களும் இருக்கவே செய்கின்றனர்.  வெறும் எஸ் எம் எஸ் களை நம்பி முன்பின் அறியாத ஒருவனால் பாதிக்கப்பட்ட பெண்களையும் நாங்கள் அறிவோம். இவள் எந்த வகையாக இருக்ககூடும் என்ற எண்ணம் எனக்கு எழுந்தது. 

முதலில் சுதாரித்துக்கொண்ட கமலி மேடம் “உக்காரும்மா….என்ன படிச்சிருக்கே” என்று ஜானகியிடம் கேட்டார். 

“பத்தாவது மேடம்” என ஜானகி சொன்னதும் எனக்கு மறுபடியும் திகைப்பு ஏற்பட்டது. பார்த்தால் மிக நன்றாக படிக்கக்கூடியவள் என்று தோன்றியது.  

“எப்பம்மா கல்யாணம் ஆச்சு?”

கமலி மேடத்தின் கேள்விக்கு, லேசாக தயங்கியவள்,"டென்த் பாதியிலேயே கல்யாணம் ஆகிடுச்சு மேடம்” என்றாள் நடுங்கிய கைகளை கோர்த்துக்கொண்டபடி. 

‘ஓ இது ரெண்டாவது வகை !!யாரையாவது நம்பி ஏமாந்து போய்டுச்சி போல' சட்டென்று அவள் மேலிருந்த பரிதாபம் போய் மெல்லியதாக ஒரு கோபம் ஏற்பட்டது. ‘இந்த மாதிரி கஷடப்படற பெண்கள பார்க்கும்போது அவங்களோட மொராலிட்டி பத்தி நாம யோசிக்கவே கூடாது. அவங்கள ஒரு முன் முடிவோட அணுகினா நாம அவங்களுக்கு நியாயம் செய்ய முடியாது. எப்பவும் இத நினைவில் வச்சுக்கணும்' நான் மதிக்கும் என் வழிகாட்டி சொன்னது நினைவில் வந்தது. ஆனாலும் பொதுபுத்தி உந்தித்தள்ள, “ என்னம்மா லவ் ஆ” என்று கேட்டேவிட்டேன். 

அவள் தீர்க்கமாக என்னைப்பார்த்தாள். சொல்ல முடியாத ஏமாற்றத்தை அவள் கண்கள் காட்டின..பெருமூச்செடுத்து தன்னை சமனிலைக்கு கொண்டுவந்தவளாக அவள் சொல்லத்தொடங்கினாள். 

“ மேடம் எனக்கு சின்ன வயசிலேயே அப்பா இல்ல. இறந்து போய்ட்டாங்க. அம்மாதான் கூலிவேலைக்குப்போய் என்னை வளத்தாங்க. நான் ஒரே பொண்ணுதான். நல்லா படிப்பேன் மேடம். நல்லா படிச்சு வக்கீலாகி அம்மாவ நல்லா காப்பாத்தணும்னு ஆசைப்பட்டேன். நான் ஒம்போது படிக்கும்போது அம்மாவுக்கு அப்பப்போ லேசா தலை சுத்தல் வர ஆரம்பிச்சது. பெரியாஸ்பத்திரிக்கு எல்லாம் கூட்டிட்டு போய் காட்டினேன். பெருசா ஒண்ணும் இல்ல,பலகீனம் தான்னு எல்லா டாக்டரும் சொன்னாங்க.. ஆனா, என்னை தனியா விட்டுட்டு செத்துடுவோமோ'ன்னு அம்மாவுக்கு ரொம்ப பயம் வர ஆரம்பிச்சுடுச்சு மேடம்” 

கலங்கத்தொடங்கிய கண்களை என்னால் பார்க்கமுடிந்தது. மிகுந்த பிரயாசையோடு விழ இருந்த துளிகளை இமைகளை மூடி உள்ளுக்கிழுத்தாள். அவள் தண்ணீருக்குத் தவிப்பதுபோல எனக்குத்தோன்றியது. என் முன்பாக இருந்த தண்ணீர் டம்ளரை அவள் அருகே நகர்த்தியதும் நன்றியுடன் என்னைப்பார்த்தாலும் அந்த டம்ளரை எடுக்கவில்லை. அவளே கொண்டு வந்திருந்த பாட்டில் நீரை அவள் பையில் இருந்து எடுத்து குடித்துவிட்டு என்னைப்பார்த்து சிரித்தாள். அபத்தமான கேள்வியை கேட்டதற்கு எனக்குள் ஏற்பட்டிருந்த குற்ற உணர்ச்சி அவளின் புன்னகையில் கரையத்தொடங்கியது. தண்ணீர் குடித்து முடித்ததும் கொஞ்சம் தெளிவாக அவள் முகம் காணப்பட்டது. 

“அம்மாவுக்குதான் உடம்புக்கு பெருசா ஒண்ணும் இல்லையே ம்மா. அப்புறம் எப்படி இப்படி ஆச்சு?” பேச்சி மேடம் கேட்டதும்,ஜானகி மறுபடியும் சொல்லத்தொடங்கினாள். வெளியே புலப்படாத ஒரு பாவம் அவள் குரலில் இருந்ததை நான் உணர்ந்தேன். 

“ அம்மா தனக்கு ஏதோ பெருசா ஆயிடுச்சு னு நினைச்சு பயந்துபோய்ட்டாங்க. எவ்வளவு சமாதானம் சொல்லியும் அவங்க மனசு ஆறல.. கவல அதிகமாக ஆக அவங்க பல்வீனமும் அதிகமாச்சு. அம்மா கண்ண மூடறதுக்குள்ள எனக்கு கல்யாணம் பண்ணிடனும்னு சொல்லிட்டே இருக்க ஆரம்பிச்சாங்க. பத்தாவது முடிச்சிட்டா அப்புறம் ப்ளஸ் டூ வுக்கு ஹாஸ்டல் தான் போகணும். எப்படியும் சமாளிச்சடலாம்னு நினைச்சிட்டு இருந்தேன் மேடம்.” 

அவள் கொஞ்சம் இடைவெளி விட்டதும்தான் நான் மூச்சைப்பிடித்துக்கொண்டு அவளையே பார்த்தபடி இருந்தது தெரிந்தது. சற்றே சுதாரித்துக்கொண்டு இருக்கையில் சாய்ந்து கொண்டேன். கண்ணுக்குத் தெரியாத எத்தனையோ தளைகள் எப்படி பெண்களை பிணைக்கின்றன என்று நினைக்கும்போது ஆயாசமாக இருந்தது. ஜானகியின் குரல் என்னை என் சிந்தனைச்சுழல்களில் இருந்து மீட்டு வந்தது. 

“ஒருநாள் ஸ்கூல் விட்டு வரும்போதே அத்தை மாமா எல்லாம் வீட்டிலே இருந்தாங்க. எனக்கு அப்போவே பகீர்னு ஆயிடுச்சு. அத்தை பையனை எனக்கு கல்யாணம் பண்ணனும் அப்படினு அத்தைக்கு ரொம்ப ஆசை மேடம்.அவர் சரியா படிக்கல, நடவடிக்கையும் சரி இல்லாததால அம்மா பிடி கொடுக்கல.ஆனா என் நேரம், அம்மாவுக்கு உடம்பு சரி இல்லாத நேரமா பாத்து அத்தை அம்மா மனச மாத்திட்டாங்க. நான் எவ்வளவோ கெஞ்சியும் கல்யாணத்த தடுக்க முடியல.”

தையல் மெஷின் பெறுவதற்காக அவள் இவ்வளவு விரிவாக தன் கதையை சொல்லவில்லை என்பதையும் அதற்காக மட்டுமே நாங்களும் அவள் கதையை கேட்கவில்லை என்பதையும் நான் சொல்ல வேண்டி இருக்கிறது. என்னை பொறுத்தவரை வறுமை ஒழிப்பு, சாதி ஒழிப்பு,பெண் விடுதலை எல்லாம் தனிப்பட்ட நிகழ்வுகள் இல்லை.அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய சமூக காரணிகளால் பிணைக்கப்பட்ட விஷயங்கள் . எனவே ஒரு தையல் மெஷின் கொடுக்கும் திட்டத்திலும் தொடர்புடையவர்களின் பின்புலம் தெரிவது அவர்களுக்கான ஒட்டுமொத்த முன்னேற்றத்துக்கு திட்டமிட வசதியாக இருக்கும். ஜானகிக்கும் நிறைய பேசத்தோன்றியது என்பதும் உண்மைதான்.

“அவசரமா கல்யாணம் வச்சாங்க மேடம். நான் கல்யாணம் வேணாம்,படிக்கனும்னு சொன்னப்போ கல்யாணத்துக்கு அப்புறம் படிக்க விடுவோம்னு சொன்னாங்க. ஆனா கல்யாணம் ஆன பின்னால படிக்க அனுப்பல.ஸ்கூலுக்குப்போக முடியலன்னு எவ்ளோ அழுது அடம்பிடிச்சேன் மேடம். கொஞ்சம்கூட கேக்கவே இல்ல. அதுக்குமேல என் வீட்டுக்காரரும் சேந்து அடிக்க ஆரம்பிச்சிட்டாரு. ஒண்ணும் பண்ண முடியல. நரகம் மேடம் அது. இத்தனைக்கும் கல்யாணம் ஆகி ஒரு மாசத்தில அவரு லாரில தொழிலுக்கு போய்ட்டாரு. மாசத்துக்கு ஒருவாட்டிதான் வருவாரு. அதனால வீட்டு வேலைய முடிச்சிட்டு படிக்க போறேன்னு சொன்னா கூட அத்தை ஒத்துக்கல. “அவனே பத்தாவது பெயில் தான்.நீ புருசனுக்கு மேலப்படிச்சு என்ன பண்ணபோறே”ன்னு கண்டிப்பா சொல்லிட்டாங்க. ரொம்ப க‌ஷ்டப்பட்டேன்” விழிகளில் முட்டிய நீரை உள்ளிழுத்தபடியே ஜான்கி சொன்னாள். 

பள்ளிக்கு போக அவள் மேற்கொண்டு இருக்கக்கூடிய போராட்டங்கள் எங்களுக்கு புரியவே செய்தன. படிக்கற பொண்ணுக்கு கல்யாணம் பண்ணலாம். அவளை வேலைக்காரியாக வைத்துக்கொள்ளலாம். அவளைவிட வயதில் பெரிய ஆணை திருத்தி வழிக்குக்கொண்டு வரும் பொறுப்பை அவளுக்கு தரலாம். ஆனால் அவள் விருப்பப்படும் படிப்பையோ தொழில்கல்வியையோ தந்தால் அவள் தங்களை மிஞ்சி விடுவாளோ என்ற அச்சம். படித்திருந்தால் இப்போது எங்கள் முன் அவள் நிற்க வேண்டியிராதே என்று எனக்கு விசனமாக இருந்தது. 

“ ஒரு வருஷம்தான் மேடம். அவருக்கு தொடர்ச்சியா உடம்புக்கு முடியாம போய்ட்டு இருந்தது. செக் அப்புக்கு வரவே மாட்டேன்னு அடம்பிடிச்சவங்கல வற்புறுத்தி டாக்டர்கிட்ட கூட்டிட்டு போனேன். நிறைய டெஸ்ட் எடுத்தாங்க. கடைசியா எய்ட்ஸ்ன்னு தெரிஞ்ச உடனே ரொம்ப மனசொடிஞ்சு போனேன். எனக்கும் டெஸ்ட் பண்ணி பாசிடிவ் நு சொல்லிட்டாங்க. உலகமே இருண்டு போய்டுச்சு. ஒரு நாளு பிராந்தியில பூச்சிமருந்த கலக்கி குடிச்சிட்டு அந்த மனுஷன் போய்சேந்தாரு. சொத்தில நான் பங்கு கேப்பேன்னு எங்க அத்தை நினைச்சாங்க போலருக்கு. நான் கல்யானத்துக்கு முன்னாடியே நடத்த சரி இல்லாம போனதால தான் எங்கம்மா எனக்கு அவசர அவசரமா கல்யாணம் பண்ணினாங்கன்னும், என்னாலதான் அவருக்கு வியாதி வந்ததுன்னும் சொல்லி என்னை அடிச்சி தொறத்திட்டாங்க. இப்போ அம்மா வீட்டில தான் உக்காந்து இருக்கேன். டான்சாக்ஸ் உதவியால தையல் படிச்சேன். இந்த மெசின் கிடைச்சா யார் கையவும் எதிர்பாக்காம இருக்கற காலம் வரை வாழ்ந்து முடிச்சிடுவேன் மேடம்”. 

கோரிக்கையாக ஜானகி சொல்லி முடித்ததும் மனம் கனத்துப்போனது. அவளுக்கு வாழ்வதற்கான உரிமையை பறித்துக்கொண்ட அவளது சூழலை எண்ணிப்பார்க்க வேதனையாக இருந்தது.

“சரிம்மா ..லிஸ்ட் போட்டுட்டு வொர்க்கர் கிட்ட சொல்லி அனுப்பறோம். கவலபடாம போய்ட்டு வா. மருந்து எல்லாம் ஒழுங்கா சாப்பிடு .என்ன ?" என்று அனுதாபத்தை கலக்காத கவனத்தோடு கமலி மேடம் சொன்னார்கள். அனுதாபத்துடன் கூடிய ஒற்றை வார்த்தை அவளை ஒரு கண்ணடிப்பாத்திரமென உடைத்துவிடும் என்பதை நாங்கள் உணர்ந்தே இருந்தோம். அவள் தைரியமாக இருப்பது அவள் வாழ்நாளை நிச்சயம் கூட்டும்.

“தாங்கஸ் மேடம்,”, பொதுவாக எல்லாரையும் பார்த்து சொன்னவள், எழுந்து நின்றாள். சொல்வதற்கு இன்னும் என்னவோ இருக்கிறது என்ற பாவனையில் எங்களைப்பார்த்தாள். “எங்க அம்மா இன்னும் உயிரோடு இருக்காங்க மேடம். அதே பலகீனம்தான். உடம்புக்கு ஒன்னும் இல்ல” என்று சொன்னவள் கைகூப்பியபடி வெளியேறினாள். 


Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த குமரி உணவுகள்

வாசந்தி- குரலற்றவர்களின் குரல்

'வெயிலோடு போய்' - ச.தமிழ்ச்செல்வன்