கொசு
நகரத்தின் மையத்தில் இருந்த அந்த அபார்ட்மென்ட்டின் இரண்டாவது மாடி ஒற்றை படுக்கை அறை ப்ளாட்டின் கதவருகே நின்றுகொண்டு இருந்தாள் சுமதி. இதமான வெயில் வெளியே காய்ந்து கொண்டு இருந்தது. வெளிர் பச்சைப் பெயிண்ட் அடிக்கப்பட்டு சுத்தமாக இருந்தன சுவர்கள். மிகச்சிறிய வீடானாலும் தூசு இன்றி வைத்துக்கொள்ளும் ப்ரயத்தனம் வீட்டின் மூலைமுடுக்கெங்கும் தெரிந்தது. சுமதி கொசு அடிக்கும் பாட்டை கையில் வைத்துக்கொண்டு வீட்டின் மூலைகளில் சுற்றியபடி இருந்தாள். ஹாலுக்கும் படுக்கை அறைக்கும் இடையில் இருக்கும் நடையில்,துணிகள் போடும் அழுக்குக்கூடைக்கு அருகே கொசுக்கள் பறப்பதைக்கண்டவள், “எங்கே இருந்துதான் வருதோ இத்தனை கொசு!?எவ்ளோ க்ளீன் பண்ணினாலும் அடஞ்சுக்க ஒரு சின்ன இடம் கிடச்சாலும் கூட்டமா வருதுங்க” என்று முணுமுணுத்தபடியே வேகமாக அங்கே சென்று ஒரு பாட்மிட்டன் வீராங்கனை யின் லாவகத்தோடு கொசு பாட்டை வீசினாள்.நூறு கொசுக்கள் மாட்டிக்கொண்டதுபோல படபடவென்ற சத்தத்துடன் ஒரே ஒரு கொசு மாட்டியிருந்தது. சத்தம் கேட்டோ என்னவோ உள்ளறையில் கட்டிலில் படுத்திருந்த தீபன் லேசாக சிணுங்கியபடி திரும்பிப்படுத்தான். அவன் நெற்றியில் ஈரத்துணியால் போட்டிருந்த பத்து கீழே சரிந்தது.
ஒரே எட்டில் படுக்கை அறையை அடைந்தாள் சுமதி. கொசு பாட்டைக்கீழே வைத்து விட்டு துவண்டிருந்த மகனின் அருகே அமர்ந்தாள். நெற்றிச்சூடு கொஞ்சம் குறைந்திருப்பதாகப்பட்டது. நேற்றிலிருந்து கொதிக்கும் காய்ச்சல் பாடாய்படுத்துகிறது பிள்ளையை. கையில் தூக்கும்போதே சூடு தாக்கும் அளவுக்கு நல்ல காய்ச்சல். நேற்று மதியம் ப்ளே ஸ்கூலில் இருந்து அவனை அழைத்து வந்த போது லேசான களைப்பு மட்டுமே அவன் முகத்தில் தெரிந்தது. அவளும் அவனை பின் கேரியரில் உட்கார வைத்து சைக்கிளை தள்ளியபடியே அவனோடு பேசிக்கொண்டு வந்தாள். சுமதி கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் மெதுவான குரலில் தீபன் பதில் சொன்னபோதே அவளுக்கு சந்தேகம் வந்து விட்டது. இரண்டு மாடிகள் அவனை தூக்கிக்கொண்டு வந்து உடை மாற்றி உணவு கொடுத்ததுமே உறங்கிப்போனான் தீபன்
எப்போதும் போல மாலை அவன் உண்பதற்காக சுண்டல் ஊறவைத்துவிட்டு, படிக்க உட்கார்ந்தாள் சுமதி. அவளும் அவள் கணவனும் சர்வீஸ் கமிஷன் தேர்வுகளுக்கு படித்துகொண்டிருந்தார்கள். தாங்களாகவே முடிவெடுத்து செய்துகொண்ட திருமணம். ஆரம்ப வறுமை,நண்பர்களின் உதவிக்கரம், அவர்களின் இருப்பை அழகாக்கிய ஒரு குழந்தையின் வருகை என நல்லதொரு நாவலுக்கான கதை அவர்களுடையது.அவர்கள் வாழ்வின் ஒளி என்னும் அர்த்தத்தில் தீபனின் பெயர். அவன் தவழத் தொடங்கியபோது தொடங்கியது வீட்டை தூய்மையாக வைக்கும் பழக்கம். நாளடைவில் சுமதிக்கு அது ஒரு வியாதியாகவே மாறிவிட்டது என்று வேடிக்கையாக சொல்வான் அவள் கணவன் ரகு. அவர்களை போலவே படிக்கும் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுத்துக்கொண்டு இருந்தான் ரகு. அந்த வருமானம் அந்த சிறு குடும்பத்துக்கு போதுமானதாகத்தான் இருந்தது. அன்று மாலை ரகு வந்து தீபனை தூக்கியபோது லேசான உடல் சூடுதான் இருந்தது. உடனே பாரசிட்டமால் மருந்தை கொடுத்துவிட்டு ரசம் வைக்க போனாள் சுமதி . கொஞ்ச நேரம் கழித்து சிணுங்கிய பிள்ளையை தூக்கியபடி ரகு சமையலறைக்குள் வந்தான்.இயல்பாக தீபனை தொட்ட கையை உடனே இழுத்துக்கொண்டாள். அப்படியொரு சூடு. “ரொம்பவுமே சுடுதுங்க…ஒரு தடவை டெம்ப்பரேச்சர் செக் பன்னிடலாம்” என்றபடி மருந்துகள் வைத்திருக்கும் டப்பாவை எடுத்து வந்து தெர்மாமீட்டரை அவன் வாயில் வைத்தாள். ஜிவ்வென்று அளவீடு 103ல் போய் நின்றதும் “ அய்யோ 103 இருக்குதுங்க..இதுவரைக்கும் இவ்வளவு சூடு போனதே இல்ல…பயமா இருக்குங்க…புள்ள சோர்ந்து போய்ட்டான்” என்று படபடக்கத் தொடங்கினாள். பயத்தில் அவளுக்கு கண்ணீர் வரத்தொடங்கியது. ரகுவுக்கும் அவளின் பதட்டம் தொற்றிக்கொண்டது. பையனை படுக்கையில் கிடத்தி கிட்டு சட்டையைப்போட்டபடி,“டாக்டர் இருக்காரான்னு போன் பண்ணி கேளு. நான் போய் ராஜாவ கூட்டிட்டு வரேன்.வண்டில போய் உடனே டாக்டர்ட்ட காட்டிட்டு வந்திடலாம்” என்று வேகமாக அவனுடைய நண்பனை பார்க்க வெளியேறிப் போனான். அவர்கள் வசிக்கும் அதே அடுக்ககத்தில் அவர்களைப்போலவே சர்வீஸ் கமிஷன் பரிட்சைகளுக்கு படிக்கும் ரகுவின் ஆறு நண்பர்கள் ஒரு வீடு எடுத்து தங்கி இருந்தனர். இவர்களுக்கு திருமணம் செய்து வைத்ததில் இருந்து, சுமதிக்கும் ரகுவுக்கும் அனைத்துமாக இருப்பது நண்பர்கள்தான். அவள் டாக்டரின் எண்ணுக்கு முயன்றபடி தீபனை தட்டிக்கொடுத்துக்கொண்டு அவன் அருகிலேயே அமர்ந்திருந்தாள். கதவைத்திறந்து கொண்டு ரகு வரவும் அவன் பின்னோடு ராஜாவும் மற்ற ஐந்து நண்பர்களும் உள்ளே வந்தனர்.
“என்னாச்சு,இப்போ எப்படி இருக்கான்” என்று கேட்ட்படி உள்ளே வந்த ராஜா பிள்ளையை தொட்டுப்பார்க்க கையை நீட்டினான். “நல்ல காய்ச்சல்” தனக்குள் சொல்லிக்கொண்டு திரும்பும்போது ரகுவிடம் சுமதி சொன்னாள் , “டாக்டர் இருக்காராங்க.உடனே கூட்டிட்டு வரச்சொன்னாரு”. “சரி கிளம்பு உடனே” என்று ரகு சொன்னதும், “ரகு ,இப்போ ஆட்டோ கிடைக்கிறது கஷ்டம்.என் டூவீலர்ல நீயும் நானும் தீபனை கூட்டிட்டு போய்ட்டு வரலாம். அட்மிட் எதுவும் பண்ணினா வந்து சுமதிய கூப்பிட்டுக்கலாம்”என்று சொன்ன ராஜாவை பின்பற்றி ரகு தீபனை தூக்கிக்கொண்டு கிளம்பினான். சுமதிக்கு மிகுந்த படபடப்பாக இருந்தது. அவள் கைகளில் தீபனின் உடல் சூடு படர்ந்திருந்தது. அதற்குள் கையில் கொஞ்சம் பணத்தோடு வந்த ஸ்டீபன், “இந்தாப்பா, எதுக்கும் வச்சிக்கோ” என்று ரகுவின் சட்டை பாக்கெட்டில் வைத்தான். நன்றியோடு அவனை பார்த்துவிட்டு, “வந்திடறோம் சுமதி, டென்ஷன் ஆகாம இரு” என்றபடி ராஜாவோடு மருத்துவமனைக்கு விரைந்தான் ரகு.
வீட்டில் சுமதிக்கு இருப்பு கொள்ளவில்லை. கண்கள் கலங்கியபடி இருந்தன..காதல் திருமணத்தின் வலிகளுக்கும் புறக்கணிப்புகளுக்கும் இடையே இறைவன் கொடுத்த வரமாகத்தான் தீபனை அவர்கள் நினைத்தனர். சுமதிக்கும் ரகுவுக்கும் தீபன் யாதுமானவனாக இருந்தான்.அவனது அறிவும்,மழலை பேச்சும்,அழகும் அவர்களை அவனிடத்தே லயித்துப்போக செய்தன. மலைமொங்கான் பறவைகளின் கூடென மூவருக்குமான அன்பின் கண்ணிகளால் நெய்யப்பட்ட வீடு அது. தீபனின் உடல்நல குறைவுகள் வீட்டின் சமனிலையை வெகுவாக குலைத்துவிடுபவை. வாசலுக்கும் உள்ளுக்குமாக நடந்தபடி இருந்த சுமதியை, “ஒன்னும் இருக்காது ம்மா. பிள்ளைகளுக்கு சின்ன வயசில காய்ச்சல் வரது எல்லாம் சகஜம்தானே? நீ டென்ஷன் ஆகி உன் உடம்புக்கு எதையும் இழுத்துக்காதே” என்றார் செல்வன். அவள் அவர்களுக்காக மனதை இறுக்கியபடி உட்கார்ந்திருந்தாள்.
நீண்டு காணப்பட்ட அரைமணி நேரத்திற்குப்பின் ரகு போன் செய்தான், “ சுமதி, டாக்டர் பாத்துட்டாரு. ஊசி போட்டு இருக்காரு. எதுக்கும் ஒரு ப்ளட் டெஸ்ட் எடுக்க சொல்லி இருக்காரு. நாங்க டெஸ்ட் எடுத்திட்டே வரோம். ரிசல்ட் கு எப்படியும் ஒரு நாள் ஆக இல்லயா? நீ கொஞ்சம் கஞ்சி வச்சிட்டு பெட்ரூம ரெடி பண்ணு.வந்தவுடனே தூங்கிடுவான்னு நினைக்கறேன்” தகவலை நண்பர்களுக்கும் சொல்லி விட்டு கஞ்சி வைக்க போனாள் சுமதி.” "சரிம்மா,ரகு வரட்டும்.ஒண்ணும் இருக்காது பயப்படாத.எதுவும் வேணும்னா கூப்பிடு” என்றுவிட்டு அவர்கள் வீட்டுக்கு திரும்பினர்
கஞ்சியை அடுப்பிலிருந்து இறக்கும்போது காலிங்பெல் சத்தம் கேட்டு வேகமாக வாசலை நோக்கி போனவள் கதவை திறந்ததும் கணவன் தோளில் இருந்த பிள்ளையை வாங்கிகொண்டாள். “சூடு இன்னமுமே குறையலைங்க” என்றபடி பிள்ளையை வாங்கியபடி உள்ளே சென்றாள். இரவெல்லாம் நான்கு மணி நேரத்துக்கு ஒருமுறை பாரசிட்டமால் கொடுத்தபடியும் காய்ச்சல் அளவை பார்த்தபடியும் இருந்த இருவருக்கும் உறக்கமே இல்லை. இதில் ரகுவுக்கு ஒரு முக்கியமான வகுப்பு என்று அவனும் சென்றபின் தீபனை பார்த்தபடியே வேலைகளை முடித்தாள் சுமதி.
தீபன் ரொம்பவுமே துறுதுறுப்பான பிள்ளை. அந்த வயதுக்கு மீறிய அறிவு. பெற்றோர் சொல்லாமலேயே எதையும் மிக அழகாக புரிந்துகொள்ளும் பையன். அவன் வாடிப்போய் படுத்திருப்பதைப்பார்த்த சுமதிக்கு நெஞம் விம்மியது. அவனை தடவியபடியே அமர்ந்திருந்தாள். இடையில் பசிக்கு கொடுத்த கஞ்சியையும் தீபன் வாயிலெடுத்து விடவே அவளுக்கு பதட்டம் அதிகமாகிப்போனது. மதியம் ப்ளட் டெஸ்ட் முடிவுகள் வந்ததும் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்துவிடுவதாக சொல்லியிருந்தான் ரகு. அவனுக்கும் வேலையில் இருப்பு கொள்ளாது என்று சுமதிக்கு தோன்றியது. மகனை மடியில் வைத்து தட்டிக்கொடுத்த படி இருந்தவள் தானும் லேசாகக் கண்ணயர்ந்த நொடியில் அழைப்பு மணி ஒலித்தது. திடுக்கிட்டு விழித்தவள் பூப்போல மகனை தூக்கிக்கொண்டு கதவை திறக்க விரைந்தாள். டெஸ்ட் ரிப்போட்டுடன் நின்ற ரகு, “டாக்டர்கிட்ட பேசிட்டேன் மா. இந்த ரிப்போர்ட் நல்லாதான் இருக்கு. வைரல் பீவர்னா மூணு நாள் காய்ச்சல் இருக்கும்..பாத்துட்டு மறுபடியும் செக் பண்ணலாம் .அதுவரை பாரசிட்டமாலே கொடுக்க சொல்றாரு. தண்ணி நிறைய தரணுமாம். இப்போ எப்படி இருக்கான்” என்றபடி பிள்ளையை வாங்கிக்கொண்டான். “காய்ச்சல் விடாம இருக்கத்தான் செய்யுது. இடையில ஒருமுறை வாமிட் பண்ணிட்டான். அதுக்கும் மருந்து கொடுத்தேன்” என்ற சுமதி, “காய்ச்சல் விடறவரைக்கும் வீட்டிலேயே இருங்களேன், எனக்கு ரொம்ப பயமா இருக்கு” என்றாள். ஒண்ணும் இருக்காதுமா. பயப்படாத. நான் சொல்லிட்டு தான் வந்தேன் ,ரெண்டு நாள் வரமாட்டேன்னு. பாத்துக்கலாம்.”
அடுத்த மூன்று நாட்களும் எப்படி போயின என்று இருவருக்குமே தெரியாது. தொடர் காய்ச்சலில் தீபன் ரொம்பவுமே துவண்டு போனான்.அவ்வப்போது வாந்தி வேறு. அதன்பிறகு தொடர்ச்சியாக வேறு வேறு ப்ளட் டெஸ்டுகள், எக்ஸ் ரே என்று எதேதோ எடுத்தும், காய்ச்சல் குறையவில்லை. எதிலும் எந்த குறிப்பிட்ட காய்ச்சலுக்கான கிருமிகள் இல்லை என்ற டாக்டர். “ எல்லா டெஸ்டும் நெகடிவ்தான்.சிலசமயம்.இப்படி ஆகும் சில கொசுக்கடில, மலேரியா மாதிரி இருக்கும் ஆன டெஸ்ட் பண்ணும்போது தெரியாது. கிளினிகல் மலேரியான்னு சொல்லுவோம்.அதுக்கு வேணா மருந்து கொடுத்து பாக்கலாம்” என்றார். தீபன் பிறந்த்ததில் இருந்தே இந்த டாக்டர் தான். சின்ன குழந்தையை தனியாக வளர்க்க தவித்த அவர்களுக்கு நல்ல ஆலோசகராக அவர் இருந்தார். அவனுக்கு ஆறு மாதங்கள் வரைத்தாய்ப்பால் மட்டுமே கொடுக்கவேண்டும், பிறகு எப்படி மெதுவாக உணவுக்குப்பழக்க வேண்டும் என்று பெரியவர்கள் இல்லாத வீட்டுக்கு பெரியவராக ஆலோசனை சொல்லி வருபவர். எனவே அவர் சொன்னபடி மருந்து எடுக்கவேண்டியதுதான். “ தினமும் சரியா 12 மணிக்கு ஒரு அஞ்சு நாளைக்கு ஊசி போடனும். கூட்டிட்டு வந்துடுங்க. பெரும்பாலும் சரி ஆகிடும் பயப்படவேணாம்” என்றபடி அன்றைக்கான ஊசியை போட்டு அனுப்பினார்.
“மலேரியா எப்படிங்க வரும்? ப்ளே ஸ்கூல்லயும் ரொம்ப சுத்தமா வச்சி இருக்காங்க. நாம எங்கயும் கூட்டிட்டும் போகல. நம்ம வீட்டில மலேரியா கொசு இருக்குமா? நான் சுத்தமா தான வச்சிருக்கேன் வீட்ட?” வாய்விட்டு புலம்பியபடி வந்தாள் சுமதி. அவளுக்குள் தான் வீட்டை கொசுக்கள் இல்லாமல் தூய்மையாக வைத்துக்கொள்ளவில்லையோ என்ற குற்ற உணர்ச்சி தலைதூக்கத் தொடங்கியது. வீட்டுக்கு போனதும் தீபனை தூஙக வைத்த பிறகு,வீட்டின் மூலைகளில் எல்லாம் கொசு பாட்டோடு சுற்றத்தொடங்கினாள். தன்னால் தான் தீபனுக்கு காய்ச்சல் வந்ததோ, அதனால்தான் இத்தனை கஷ்டப்பட்டுவிட்டானோ என்று சுமதி உள்ளுக்குள் தவிக்கத்தொடங்கினாள்.
சொல்லிவைத்தது போல,ஊசி போட்டதுமே தீபனுக்கு காய்ச்சல் குறைய ஆரம்பித்தது. அவனும் உடல் சோர்வு நீங்கி விளையாடத் தொடங்கி இருந்தான். ஆனால், சுமதிக்குள் வீடெங்கும் கொசுக்கள் பறப்பதான அவதானிப்பு அதிகரிக்க தொடங்கியது. மழைக்காலம் வேறு வந்துவிட்டதால்,இயல்பாகவே வீட்டினுள் கொசுக்கள் அண்டின. அவள் சுத்தமாக மாப் போடு துடைத்துவிட்டு, ரூம் கதவை திறந்தால் சுருட்டி வைத்த பாய்களுக்கு பின்னால் கொசுக்கள் ஒளிந்துகொண்டன. அவளும் விடாமல் அவை ஒளியக்கூடிய மூலைகளில் இருக்கும் பொருட்களை எல்லாம் ஆட்டி கொசுக்களை வெளியேற்றுவாள். அப்பாடா என்று அமரும்போது, உறங்கும் பையனின் கையில் ஒரு கொசு வந்து அமரும். அவளுக்கு ஆத்திரம் பொத்துக்கொண்டு வரும். ஓடிச்சென்று கொசுவை அடித்துவிட்டு வருவாள். இப்படியாக அவளின் மனவெளியெங்கும் கொசுக்கள் பறக்கத்தொடங்கின.
ரகு எவ்வளவோ சொல்லியும் சுமதியால் இயல்புக்கு வரமுடியவில்லை. அன்றாட வேலைகளோடு கொசுக்களை தேடி அடிப்பதே அவளது வேலையாகிபோனது. அவைகளும் அவள் கண்டு பிடிக்க பிடிக்க,தங்களுக்கென்று புதுப்புது ஒளிவிடங்களை த் தேடிக் கண்டுபிடிக்கத்தொடங்கின. தனக்கும் கொசுக்களுக்குமாக ஒரு சமர் நடப்பதாக உணரத்தொடங்கினாள் சுமதி. அவளது தொல்லை தாங்காமல் ஜன்னல்களுக்கெல்லாம் நெட் அடித்தான் ரகு. அப்போதும் அங்கும் இங்குமாக கொசுக்கள் இருக்கவே செய்தன.
கடைசி வாய்ப்பாக,ஒரு கொசுமருந்து கம்பெனியில் சொல்லி வீட்டின் மூலைமுடுக்கெங்கும் மருந்து அடித்துப் பார்க்கலாம் என்று முடிவு செய்தார்கள். கொசு முட்டை இருக்கும் இடத்தைகூட கண்டறிந்து அழித்திவிடலாம் என்று அந்த கொசு ஒழிப்பு மருந்து கம்பெனி ஏஜெண்ட் சொன்னபோது சுமதிக்கு திரும்பவும் பழைய உற்சாகம் வந்தது. 15 நாள் காய்ச்சலில் பிள்ளை பட்ட பாட்டிற்கெல்லாம் கொசுதான் காரணம் என்ற உள்ளார்ந்த பயம், இந்த முயற்சியினால் கரையக்கூடும் என்று ரகு நினைத்தான்.
மருந்து அடிக்கும்போது குழந்தை அங்கே இருந்தால் அவனுக்கு சுவாச பிரச்சினை வருமோ என்று யோசித்து இருவரையும் நண்பர் ஒருவர் வீட்டுக்கு இரண்டு நாட்கள் அனுப்பி வைத்தான் ரகு. சுமதிக்கும் அது ஒரு மாறுதலாகத் தோன்றவே,அவளும் தீபனோடு கிளம்பினாள். “ நல்லா கூடவே இருந்து பாத்துக்கோங்க. கதவு இடுக்கு, பாய் வைக்கற இடம், சாமி ஷெல்பிலே சாமி படத்துக்கு பின்னாடி, இங்கேதான் கொசு ஒளியுது. நல்லா பாத்து அடிக்க சொல்லுங்க. சமையல் பாத்திரமெல்லாம் எடுத்து அட்டைபெட்டில வச்சிட்டேன். அதுல மருந்து பட்டுடாம பாத்துக்கோங்க” என்பதாக ஒரு நீண்ட கட்டளையை இட்டுவிட்டு, நண்பன் வீட்டுக்கு கிளம்பினாள் சுமதி.
“ ம்மா, எல்லா எடத்திலேயும் மருந்து அடிச்சாச்சு. நெட்டும் இருக்கறதால கொசு வராது னு சொல்லிட்டு போனாங்க. நீ சொன்ன எல்லா எடத்திலேயும் பாத்து பாத்து அடிச்சிருக்கு. நீ பயப்படாம வா. மருந்து வாசனையும் போயிடுச்சு” ஆறுதலாக சொன்னபடி சுமதியை தீபனோடு வீட்டுக்கு அழைத்துவந்தான் ரகு. வீடு திரும்பிய சந்தோஷத்தில் குதித்து ஆடியபடி உள்ள போய் அவனுக்கான பொம்மையை எடுத்து விளையாடலானான் தீபன். மருத்துவமனை பரிசோதனைகள், நெட் அடித்தது ,மருந்து அடித்தது என கைக்கு மீறி ஆன செலவுகளை கணக்கு நோட்டில் எழுத உட்கார்ந்தான் ரகு. உள்ளே நுழைந்ததும் ஆராய்ச்சிக்கண்களோடு ஒவ்வொரு அறையாக சென்று பார்க்கத்தொடங்கினாள் சுமதி. சுருட்டியபடி நின்ற பாயை ஆட்டிப்பார்த்தாள். தீபனின் பொம்மைகளை போட்டு வைக்கும் கூடையை ஆராய்ந்தாள். குப்பைக்கூடை வைக்கும் மூலையை பார்த்தாள். சாமி அறைக்கு சென்று, சாமி படத்தை விலக்கிபார்த்தாள். அவள் சாமிப்படத்தைத் தொட்டு விலக்கியதும், பத்து கொசுக்கள் அடையாகக் கிளம்பி அவளைத்தாண்டிக்கொண்டு அவளைக் கேலி செய்வதுபோல ரீங்காரமிட்டபடி பறக்கத் தொடங்கின. திகைத்துப்போன சுமதி அணை உடைத்தது போல முகத்தைபொத்தியபடி அழத்தொடங்கினாள்.
தாய்மையின் உணர்வுகளை விவரித்த விதம் என் மனதில் ரீங்காரமிட்டு பறக்கிறது. நவீன வாஸந்தி அவர்களுக்கு பாராட்டுகள்.
ReplyDelete