சுஜாதாவிடம் கற்றதும் பெற்றதும்
தமிழ் எழுத்துலகின் முக்கியமான ஒரு ஆளுமை சுஜாதா. அவரைக் கடந்து வராமல் நம் வாசிப்புப் பயணம் இருந்திருக்க வாய்ப்பில்லை. எல்லைகள் கடந்து அவர் எழுதினார் என்றே சொல்லலாம். அறிவியல் ரீதியான எழுத்தை தமிழில் முதலில் அறிமுகப்படுத்தியவர். அடிப்படையில் ஒரு பொறியியல் ஆய்வாளர் என்பதால் அவருக்கு அறிவியல் புனைவுகள் எழுதுவது இயல்பாகவே வந்திருக்கக்கூடும். ஶீரங்கத்தில் படித்து பெங்களூரில் பணியாற்றியவர். நாம் இப்போது தேர்தல்களில் பயன்படுத்தும் வோட்டர் மெஷின்களை உருவாக்கும் குழுவில் பங்கு வகித்தவர். அறிவியல் கருத்துக்களை மக்களுக்கு சுலப வழியில் எடுத்து சென்றதற்காக 1993ஆம் ஆண்டு மத்திய அரசின் தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் விருதைப் பெற்றவர். ஆழ்வார் பாசுரங்கள் தொடங்கி, நவீன இலக்கியம் வரை தொடர்ந்து வாசித்து வந்தவர். காலத்துக்கேற்ப தன்னை மேம்படுத்திக் கொண்டு பத்திரிகை ஆசிரியர், ஆராய்ச்சியாளர், திரைப்பட வசனகர்த்தா, கவிஞர், பேச்சாளர், இளைய படைப்பாளர்களை ஊக்குவிப்பவர் என்று பல்வேறு பரிமாணங்களைக் கொண்டிருந்தவர். ஒரு தலைமுறைக்கான எழுத்தை எழுதிச் சென்ற சுஜாதா, எப்போதுமே எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்.
விகடனில் "ஏன் எதற்கு எப்படி" தொடர் வெளி வந்து கொண்டிருந்த நேரம் தான் சுஜாதாவுடன் என் முதல் அறிமுகம். தொடராக வெளிவந்த நூல் பின்னாளில் விகடன் பிரசுரத்தில் புத்தகமாக கிடைத்தது. என் கற்பனைக்கு அப்பாற்பட்ட அறிவியல் உலகை எனக்கு திறந்து காட்டிய நூல் இது. கேள்வி பதில் வடிவில், மிகவும் எளிய முறையில் பிளாக் ஹோல் முதல் கொட்டாவி வரை அவருக்கே உரித்தான நகைச்சுவையோடு, அறிவியலை இப்படியும் சொல்லிக்கொடுக்க முடியுமா என்னும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தது, 'ஏன் எதற்கு எப்படி'. எந்த ஒரு குழு உரையாடலிலும் தொய்வின்றி இணைந்து கொள்ள இந்த அறிவியல் அறிவு எனக்கு பேருதவியாக இருந்தது. சுனாமி, எல் நினோ, லா நினா, பஃப்பின் போன்ற பறவைகளின் வாழிடங்கள், மனித குலத்தின் பரிணாமம், அரசியல் என்று இந்த தொகுப்பில் அவர் தொடாத துறையே இல்லை என்று தோன்றுகிறது. எத்தனை முறை படித்தேன் என்று தெரியாத அளவுக்கு இந்தப் புத்தகம் எனக்குப் பிடிக்கும்.
சுஜாதாவின் சிறுகதைகளும், அபுனைவுகளும் படித்த பிறகுதான், நான் அவரது புனைவுகளைப் படிக்கத் தொடங்கினேன். பிரிவோம் சந்திப்போம் தான் நான் படித்த சுஜாதாவின் முதல் புனைவு. விகடனைத் தொடர்ச்சியாக படிக்கும் வழக்கம் இருந்ததால், கற்றதும் பெற்றதும் தொடரையும் மிகவும் விரும்பிப் படிப்பேன். கனவுத் தொழிற்சாலை, என் இனிய இயந்திரா, மீண்டும் ஜீனோ, கரையெல்லாம் செண்பகப்பூ, காயத்திரி போன்ற நாவல்களை அடுத்தடுத்து படித்தேன். அவரது அத்தனை சிறுகதைத் தொகுப்புகளையும் எண்ண முடியாத முறைகள் படித்திருப்பேன். ஶீரங்கத்து தேவதைகள், கற்றதும் பெற்றதும் மூன்று பாகங்கள், சின்னச்சின்னக் கட்டுரைகள், சுஜாதாட்ஸ், தலைமைச் செயலகம், ஆழ்வார்கள் ஒரு எளிய அறிமுகம், ஏன் எதற்கு எப்படி இரண்டு பாகங்கள் என்று சுஜாதாவின் அபுனைவின் தீவிரமான ரசிகை நான்.
2008 புத்தகக் கண்காட்சியில் ஒரு ஆசையில் சுஜாதாவின் கிரைம் நாவல்கள் 20 புத்தகங்கள் ஒரே செட்டாக வாங்கினோம். வாங்கிய உடனே ஒவ்வொன்றாகப் படித்தேன். சுஜாதாவின் மேதைமைக்கும் அவர் எழுதி அதுவரை நான் படித்திருந்த அற்புதமான சிறுகதைகளையும் படைப்புகளையும் ஒப்பிடுகையில், என்னை அவரின் கிரைம் நாவல்கள் அவ்வளவாக ஈர்க்கவில்லை என்றே சொல்ல வேண்டும். இது என் தனிப்பட்ட கருத்து. அவரைப் போல சிறுகதைகளை அற்புதமாக எழுதுபவர்களை விரல் எண்ணிவிடலாம். அவரே சொல்வதுபோல ஒரு சிறுகதையை படித்த முடிக்கும்போது ஒரு நிமிடம் நம்மை சிந்திக்க வைத்தால் அது ஒரு நல்ல சிறுகதை. சுஜாதாவின் அத்தனை சிறுகதைகளும் அவ்வாறானவைதான். மனிதமனத்தின் இருண்மைகள், ஏமாற்றங்கள், பேராசைகள், தனிமை, வறுமையின் அலைக்கழிப்புகள் என அனைத்தையும் பேசும் படைப்புகள் அவருடையவை. முக்கியமாக சொல்ல வேண்டும் என்றால் மஹாபலி, தேனிலவு, முதல் மனைவி, ஒரு லட்சம் புத்தகங்கள், கறுப்புக் குதிரை, நகரம், அரிசி, சேச்சா, மறு, நிபந்தனை ஆகிய கதைகளின் இறுதி வரி நம்மை ஒரு நிமிடம் பதறவோ,கண்ணீர் விடவோ வைக்கும். அவருக்கேயான பிரத்யேக நடையில் செல்லும் இந்தக் கதைகள் வாழ்வை நேரடியாகக் காட்டுபவை. இவை இப்படி மனதைத் தொடும் என்றால் குதிரை, வாட்டர் கார் விவகாரம், ஆஸ்டின் கார், பேப்பரில் பேர், ஶீரங்கத்து தேவதைகளின் சில அத்தியாயங்கள் வரிக்கு வரி நம்மை சிரிக்க வைக்கும். ஒரு மென்சிரிப்பு இல்லாமல் இந்தக் கதைகளைப் படிக்கவே முடியாது. இன்னொரு புறம் தலை கீழ் ராணி, திமலா, கரைகண்ட ராமன், வழி தெரியவில்லை, சூரியன் போன்ற கதைகள் முற்றிலும் வேறு மாதிரியானவை.
ஒரு நாவலின் கதாபாத்திரங்கள் நமக்கு நினைவில் இருப்பது போல சுஜாதாவின் சிறுகதைகளின் பாத்திரங்கள் எனக்கு நினைவில் இருக்கும். கதை பெயர் வேண்டுமானால் மறந்து போகலாம். அந்த அளவில் வெறும் ஆறு முதல் எட்டு பக்கங்கள் மட்டுமே இருக்கக்கூடிய சிறுகதையை வாசிப்பவர் மனதில் ஆழமாகக் கொண்டு சேர்க்கும் எழுத்து அவருடையது. காவிரியில் மூழ்கும் ஆத்மாவும் இந்துமதியும்,மகனுக்கு வேலை கிடைக்க வேண்டி லஞ்சம் வாங்கும் ராமதுரையும், "நான் என் முயற்சியால்தான் வேலை வாங்கனும்னு நினைக்கிறேன் அப்பா" என்று அதை மறுதலிக்கும் மகனும், நண்பனின் துரோகத்தை உணராத சம்பத்தும், கடலில் மறைந்து போகும் மட்டக்களப்பின் அனாமிகாவும், தேனிலவில் பாத் ரூம் தரையில் அமர்ந்து அழும் சோபனாவும், கடற்கரை கோயிலில் நிலவொளியில் சுடப்பட்டு இறக்கும் டோனுவும், ஒரு பால் திருமணம் செய்யும் அருணாவும் அவரது அறிவியல் புனைவுகளின் நாயகன் ஆத்மாவும் மறக்க முடியாதவர்கள். அதிகமான விவரணைகள் இல்லாமல், கதாபாத்திரங்களின் உரையாடல்கள் வழியாகவே கதையைக் கொண்டு செல்வது சுஜாதாவின் உத்தி. அதிலேயே கதையின் மொத்த சாரத்தையும் நமக்குள் இறக்கி விடுவார். நிறைய கட்டுரைகளில் தன் சொந்த வாழ்வின் விவரக் குறிப்புகளை ஒரு சுய எள்ளலோடு வெளிப்படுத்துவது அவரது இயல்பு. அவருக்கும் அவரது தந்தைக்குமான உறவு குறித்து சுஜாதா எழுதிய அத்தனை குறிப்புகளுமே நெகிழ வைப்பவை. கற்றதும் பெற்றதும் தொடரில் அவர் எழுதும் தொழில்நுட்ப அப்டேட்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தும். கணிப்பொறியில் எழுதத் தொடங்கிய முதல் எழுத்தாளர் அநேகமாக அவராகத்தான் இருக்கும். தமிழ் யூனிகோட் கணி மொழியைப் பற்றி ரொம்பவும் முன்னாலேயே சுஜாதா எழுதி விட்டார். தன் காலத்தைத் தாண்டி ஒரு லாஜிக்கோடு யோசித்த எழுத்தாளர் அவர். பருவநிலை மாறுதல் குறித்து தமிழில் முதலில் எழுதியவரும் அவராகவே இருக்ககூடும். இமயமலைக்கு சென்றது பற்றிய பயணக்கட்டுரை ஒன்றில் இதைப் பற்றி விவரித்திருப்பார் சுஜாதா.
மதம், கடவுள் பற்றியெல்லாம் அவருக்கு மாறுபட்ட கருத்துகள் இருப்பதை அவரது எழுத்துக்கள் காட்டும். அறிவியலால் அங்கீகரிக்கப்படாத எதையும் அவர் ஊக்குவித்து எழுதியதில்லை. கணேஷ் வசந்திடம் ஒரு கதையில் சொல்வார், 'நீ சொர்க்கத்தை நம்புவியா, ஐன்ஸ்டீனை நம்புவியா'?. ஆழ்வார்கள் பாசுரத்தை மிக எளிதாக அறிமுகம் செய்த அவர், தனக்கான கொள்கைகளை மிக அழகாக வரையறுத்து இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. அவருடைய மத்யமர், தூண்டில் கதைகள் போன்றவை மிகவும் புதிய முயற்சிகள். சுஜாதாவின் கதா நாயகர்கள் பெரும்பாலும் நேர்மையானவர்கள். தவறு செய்ய விரும்பாதவர்கள். வாய்ப்பு கிடைக்கும் போதும் தன் நிலை வழுவாமல் இருப்பதை கவுரவம் என்று நம்புபவர்கள். சிறுகதைகளில் பெண்களின் நுட்பமான உணர்வுகளை மிக அழகாக கடத்துவதை நாம் உணரமுடியும். அவரது நாவல்களில் பெண்களைப் பற்றிய வர்ணனைகளில் எனக்கு மாற்றுக் கருத்துகள் உண்டு. ஆனால் சிறுகதைகள் மிகத் துல்லியமானவை. பெண்களின் துயரங்களை உள்ளார்ந்த வலியுடன் நோக்குபவை.
வெளிநாட்டுக்குச் செல்லும் இளைஞர்கள் குறித்து அவர் எழுதிய ஒரு கட்டுரை பரவலாக கவனம் பெற்றது. அவர் மறைந்த பின்னர் தான் சில திரைப்படங்களில் அவரின் இன்றியமையாமை எப்படி இருந்திருக்கும் என்று உணர முடிகிறது. புதிய எழுத்தாளர்களை 'கற்றதும் பெற்றதும்'ல் அவர் அறிமுகப்படுத்துவார். அதன் மூலம் வாசிப்பின் பல கதவுகள் திறக்கும். அவ்வப்போது கணையாழியின் கடைசிப் பக்கங்களையும் நான் படித்திருக்கிறேன். அவரைபோல் மிக எளிதாகவும் ஆழமாகவும் எல்லா துறைகளைப் பற்றியும் அனைவருக்கும் புரியும் வண்ணம் எழுதும் எழுத்தாளர் வேறு யார் இருக்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை. அவரது மறைவு, அவரைப் பார்த்தே இராத ஆனால் எழுத்தின் மூலம் அவரோடு தொடர்பு கொண்டிருந்த எல்லோரையும் பெரும் வேதனைக்கு உள்ளாக்கியது உண்மை. இப்போதும் அவரது பிறந்த நாளுக்காக இந்தக் கட்டுரையைக் காலையில் இருந்து எழுதி வருகிறேன். ஒரு குறிப்பு எடுக்க ஒரு கதையைப் படிக்கப் போனால் தொடர்ந்து படித்துக்கொண்டே இருக்கத் தோன்றுகிறது. அப்படியான ஈர்ப்பு சுஜாதாவின் எழுத்துக்களுக்கு மட்டுமே உண்டு.
மனிதர்கள் மேல் அவருக்குள்ள ஆழ்ந்த நேசம் அவரது எழுத்துக்களில் எப்போதும் வெளிப்படும். மஹாபலி சிறுகதையின் கடைசி வரிகள் இவ்வாறு இருக்கும்,
" நம் இளைஞர்களை நம் கடற்கரையில் நாமே சுட்டுப் பலிவாங்கும் படியாக எங்கே, எந்தக் கட்டத்தில் இந்த நாட்டில் பெரியவர்கள் தப்பு செய்துவிட்டோம்? நன்றாகத்தானே ஆரம்பித்தோம்! எங்கே தப்பு செய்தோம்? எங்கே... எங்கே..?"
"அந்த கேள்வியெல்லாம் கேட்கறதில்லை நாங்கள்..." என்றார் அதிகாரி." ஒரு பரிதவிப்பு இதில் தெரிகிறதில்லையா?
"மானுடர்களாகிய நாம் எத்தனை சிறியவர்கள், அற்பமானவர்கள்" என்கிறார் சுஜாதா. அது எவ்வளவு உண்மை? இந்த உணர்வை தன் வாசகர்களுக்கும் சுஜாதா தந்து சென்றிருக்கிறார் என்றே நான் நம்புகிறேன்.
நினைத்துப்பார்க்க முடியாத தளங்களில் இயங்கிய சுஜாதாவின் எழுத்துக்களைப் பற்றி எழுதுவதற்கு ஒரு கட்டுரை போதாது. ஆனால், அவரது படைப்புகளை தொடர்ந்து வாசிப்பதன் மூலம் அவரிடம் இருந்து நிறைய பெற்றுக்கொள்ள முடியும். அவர் காலத்துக்குப் பிறகும்.
Comments
Post a Comment