வசீகரிக்கும் திரைப்படங்கள்
அன்றாட வாழ்வின் நெருக்கடிகளுக்கு மத்தியில் நம் எல்லோருக்குமே ஒரு வடிகால் தேவைப்படும்போது, எளியதொரு விடையாகக் கிடைப்பது சினிமா. கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலமாக தமிழ்ச்சமூகத்தில் சினிமா ஒரு அங்கமாகவே இருந்து வந்துள்ளது. ஒரு ஊடகம் என்னும் வகையில், சினிமா மிகவும் வலிமையான ஊடகமாகவே கருதப்படுகிறது. வாசிப்பைப் போலவே, திரைப்படங்களுக்கும் பல ஜானர்கள் இருப்பது நமக்குத் தெரியும். நமக்கு பிடித்த வகையில், நம் ரசனைக்கு உரிய திரைப்படங்களை நாம் பார்க்கிறோம். வரலாற்றின் பாதையில், உலக அளவில் திரைப்படங்களின் வரலாறும் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. காலத்தின் கண்ணாடிகளாக இருக்கும் கலை இலக்கிய வடிவங்களில் சினிமாவும் ஆவணப்படங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பது உண்மை.
உலகில் பயன்பாட்டில் இருந்து வரும் அத்தனை மொழிகளிலும் திரைப்படங்கள், ஆவணப்படங்கள் எடுக்கப்படும் என்று நினைக்கிறேன். நாம் அனைவரும் சினிமா ரசிகர்கள்தான். ஒவ்வொரு நாட்டின் அல்லது மாநிலத்தின் மொழி, கலாச்சாரம், வாழ்வியல் குறித்த நேரடியான காட்சி ஆவணமாகவே சினிமாவை நான் பார்க்கிறேன். எனக்குப் பிடித்த சினிமா என்பது, எனக்குப் பிடித்த எழுத்துக்களைப் போலவே மிக விரிவான பட்டியலைக் கொண்டது. வெகுஜன என்று சொல்லப்படும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படங்களில் இருந்து, மிக முக்கியமான ஆவணமாக கருதப்படும் திரைப்படம் வரை என்று அனைத்தையும் காண்பது உண்டு. என்னைப் பொறுத்தவரை, ஒருவரின் மனதை எதிர்மறை எண்ணங்களுக்குள் தள்ளாத எந்த சினிமாவும் நல்ல சினிமாவே. இது என் தனிப்பட்ட கருத்து. அதீத வன்முறை, பால் ரீதியான வன்முறைக் காட்சிகள், திணிக்கப்பட்ட சோகம் தவிர்த்த திரைப்படங்கள் என் சாய்ஸ். காட்சியாக அதீத வன்முறையை என்னால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. பாலியல் அத்துமீறல் காட்சிகளும் அப்படித்தான். அப்படிப்பட்ட காட்சிகள் வரும்போது, படம் பார்த்தது போதும் என்று திரையரங்கை விட்டு எழுந்து வந்த நிகழ்வுகளும் உண்டு. அப்பட்டமான அத்தகு காட்சிகள் இல்லாத, இயல்பான வாழ்வைக் கடத்தும் படங்கள் எனக்குப் பிடித்தமானவை.
என் குழந்தைப் பருவத்தில், எங்கள் வீட்டு பக்கத்தில் இருந்த ட்யூரிங் டாக்கீஸில் "விநாயகனே வெவ்வினைகள் வேரறுக்க வல்லான்" என்று சீர்காழி உச்சக் குரலில் பாட ஆரம்பித்துவிட்டால், எல்லோரும் வேக நடையில் சினிமா கொட்டகைக்கு போகத் தொடங்குவார்கள். அடுத்தது சினிமா போடப்போறாங்க என்பதை அனைவருக்கும் அறிவிக்கும் அழைப்பு மணி அது. எனக்கு பத்து வயது ஆகும்வரை அந்த டாக்கீஸ் இருந்தது என்று நினைக்கிறேன். சேர் டிக்கெட் இரண்டு ரூபாய் என்று படம் பார்த்த தலை முறையின் கடைசி காலம் அது. மிகச்சிறிய வயதில், அந்த டாக்கீஸில் "சிப்பிக்குள் முத்து" படத்தின் "லாலி லாலி" பாடலை பார்த்த நினைவுதான் சினிமா குறித்த என் மனதில் இருக்கும் முதல் படிமம். அந்த கிராமக் கொட்டகையில் மிகச் சில படங்கள் மட்டுமே பார்த்திருக்கிறோம்.
ஒன்றாம் வகுப்பு படிக்கும் போது திருச்சியில் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்த பொழுது அங்கே தங்கி இருந்த மூன்றுஅடுத்தடுத்து எல்லோருமாக தினமும் சினிமா போனோம். மூன்று திரையரங்குகள் அடுத்தடுத்து ஒரே காம்பவுண்டுக்குள் இருந்த மேரிஸ் தியேட்டர் பெரிய வியப்பை அப்போது ஏற்படுத்தியது. குழந்தைகளோடு ரஜினி நடித்திருந்த "ராஜா சின்ன ரோஜா" படமும், அதில் வந்த அனிமேசன் பாடல் காட்சிகளும் பார்த்து ஆச்சர்யப்பட்டு பேசிக்கொண்டே இருந்தது இப்போதும் நினைவில் வருகிறது. என் கிராமத்துக்கு அருகில் இருந்த சற்றே பெரிய கிராமத்தில் இரண்டு தியேட்டர்கள் இருந்தன. விஜயசாந்தி நடித்த "போலீஸ் லாக்கப்" படத்தை நானும் என் தோழியும் மட்டுமாக ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது போய் பார்த்தோம். அதுவரை ஹீரோக்களின் சண்டைக்காட்சிகளை மட்டுமே பார்த்திருந்த எனக்கு, ஒரு பெண் கலைஞர் பாய்ந்து பாய்ந்து சண்டை போடுவதை பார்க்க ரொம்பவும் பிடித்தது. அப்புறமாக வீடியோ கேசட் லைப்ரரியில் வாடகைக்கு எடுத்து, அந்தப் படத்தை பல முறை பார்த்தோம்.
அப்போதெல்லாம் ஞாயிறு மாலை தூர்தர்ஷனில் பார்க்கும் படங்கள் மட்டும்தான். வீட்டில் விசிஆர் எனப்பட்ட டெக் இருந்ததால், அவ்வப்போது அருகில் இருந்த சற்றே பெரிய கிராமத்துக்கு பஸ்ஸில் போய் கேசட் எடுத்து வந்து பார்ப்பது மிகப்பெரிய பொழுதுபோக்கு. ஒரு கேசட் வாடகை பதினாறு ரூபாய் என்று நினைவு. வீட்டில் எல்லோருக்குமே படம் பார்க்க பிடிக்கும் என்பதால், மாதம் ஒருமுறை மாவட்ட தலைநகருக்கு நால்வருமாக பைக்கில் போய் படம் பார்த்து வருவோம். அப்போதெல்லாம் எந்தப்படம் வருகிறதோ அதுதான். குழந்தைகள் உடன் இருக்கும் போது இதைப் பார்க்கலாமா என்றெல்லாம் யாரும் யோசித்ததாகத் தெரியவில்லை. முதன் முதலில் ஓனிடா டிவி வாங்கி, பக்திமயமாக பார்த்த சரஸ்வதி சபதம் முதல் அம்மாவோடு மேட்னி ஷோ பார்த்த தேவர் மகன், நாட்டமை, குடும்பமாக போர் அடித்தால் செகண்ட் ஷோ போய்ப் பார்த்த பெரியண்ணா, வாலி போன்ற படங்கள், தேவி தியேட்டரில் பார்த்தால் நன்றாக இருக்கும் என்று அடுத்தடுத்து இரவுக்காட்சிகள் பார்த்த அலைபாயுதே, கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் , பனிரெண்டாம் வகுப்பு பரிட்சைகள் முடிந்ததும், அனைவரும் திடீரென்று முடிவுசெய்து சேலத்தில் போய் பார்த்த "மின்னலே", கல்லூரியில் முதல் முறையாக வகுப்பை கட் அடித்துவிட்டு பார்த்த 12பி ( நாங்கள் போய் சேர்வதற்குள் முதல் இருவது நிமிடங்கள் கடந்துவிட்டதால் என்ன நடக்கிறது என்றே புரியாமல் மொக்கை வாங்கி பார்த்தது தனிக்கதை), திருமணத்துக்குப் பிறகு முதன்முதலாகப் பார்த்த " கனா கண்டேன்" என மிக பசுமையான மனப்பதிவுகளை திரைப்படங்கள் எனக்கு ஏற்படுத்தி உள்ளன.
அம்மாவோடு போகும் மேட்னி ஷோக்கள், மிகவும் இனிமையானவை. பெரும்பாலும் தேர்த் திருவிழா சமயங்களில் யாரேனும் பக்கத்து வீட்டு அத்தையை கூட்டாக சேர்த்துக்கொண்டு, காலையில் கிளம்புவோம். தேர்க்கடைகளை சுற்றி வந்து, எப்போதும் நமக்குத் தேவையே படாத, சின்ன எண்ணெய்க் கிண்ணம், குட்டித்தட்டுகள், அலுமினிய விளையாட்டுப் பாத்திரங்கள், கிளிப் போன்ற ஐட்டங்களை, 'இதெல்லாம் கிடைக்கவே கிடைக்காது தெரியுமா?" என்று வருடா வருடம் அம்மா வாங்குவார். அதேபோல் கிடைக்கவே கிடைக்காத அரிய பொருள்களை வாங்கிக்கொண்டு, அவ்வப்போது கிடைக்கும் கொடுக்கப்புளி, விளாம்பழம், மசாலா பொரி ஆகிய தின்பண்டங்களையும் வாங்கிக் கொள்வோம். அதற்குள் மதியம் ஆகியிருக்கும். ஆரிய பவன் ஹோட்டலில் போய் தோசை சாப்பிட்டுவிட்டு சினிமாவுக்குப் போவோம். அதென்னவோ மதியம் அந்த ஹோட்ட்லில் சோறு சாப்பிட்ட நினைவே எனக்கு இல்லை. எப்போதுமே தோசைதான். அம்மாவுக்கு ரவா தோசை. அப்புறம் சினிமாவுக்குப் போய் விட்டு மாலையில் வீடு திரும்புதல் ஒரு வைபவம் போல நடக்கும். இதே சேலம் போனால் மறக்காமல் ஹென்ரி அண்ட் ஊள்ஸ் என்னும் பழம்பெருமை வாய்ந்த பேக்கரியில் ரோல் கேக் வாங்கித் தருவார் அம்மா. ஒருமுறை விளாம்பழத்தை தின்பண்டமாக வாங்கிக் கொண்டு 'நாட்டாமை' சினிமா பார்க்கப் போனோம். மிகக் கடினமான விளாம்பழத்தின் ஓட்டை உடைத்து, உள்ளிருக்கும் மென்மையான சதையில் சர்க்கரை போட்டு சாப்பிடுவது வழக்கம். நாட்டாமையில் 'ஓ ஓ ஓ ஓ ஓ' என்று டைட்டில் சாங் தொடங்கி 'பசுபதி உட்றா போவட்டும்' என்று சரத்குமார் குதிரை வண்டி ஓட்டி, கடைசியில், 'நியாயத்தை கொன்னுட்டீங்களேடா ' என்று மனோரமா அழுது படம் முடியும் வரை விளாம்பழத்தை உடைக்க முடியவில்லை. தின்பண்டம் சாப்பிடாத சினிமா நினைவு அது. நாய் பெற்ற தெங்கம்பழமென நாங்கள் பெற்ற விளாம்பழம்.
ஒரு திரைப்படத்தை நினைவு கூறும் போதே,யாரோடு போனோம், அப்போது என்ன சுவையாக நடந்தது என்னும் நிகழ்வுகளும் மனதில் இன்னொரு திரைப்படம் போலவே ஓடுகிறது. ஒரு கட்டத்தில் தேர்ந்தெடுத்து படங்கள் பார்க்கத் தொடங்கினோம். கன்னியாகுமரிக்கு சென்ற பிறகு, கோவிட் காலமும் வர, ஓடிடியில் திரைப்படங்கள் பார்ப்பது ஒரு சுவையாக மாறி விட்டது. குழந்தைகள் அனிமேஷன் படங்களில் தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக ஹாரி பாட்டர், பிபிசியின் ஆவணப்படங்கள் என்று பார்க்கத் தொடங்க, எங்களுக்கும் அவற்றில் ஒரு சுவை உண்டாகத் தொடங்கியது. நிறைய மலையாளப் படங்கள், முக்கியமான இந்தியத் திரைப்படங்கள் என்று இந்த லிஸ்ட் நீளத்தொடங்கியது. திரைப்படம் பார்ப்பதும், அதைக்குறித்த விவாதங்களும் என ஒரு நல்ல பேமிலி டைம் கிடைக்க அதை நாங்கள் அனைவரும் ரசிக்கவே செய்கிறோம். ராஜா சின்ன ரோஜா, திருவிளையாடலில், காதலிக்க நேரமில்லை தொடங்கி, கான்கிளேவ், சில்ரன் ஆப் ஹெவன், ஜெய்பீம், சூட்சுமதர்ஷினி, தப்பட் என்று எல்லைகளைக் கடந்து சினிமா பார்க்கிறோம் இப்போது.
இதற்கிடையில் அவ்வப்போது மனதை பாதிக்கும் படங்கள் குறித்து எழுத வேண்டும் என்ற உந்துதல் எழ, இப்போது அதையும் செய்து பார்க்கப்போகிறேன். எஸ். ராமகிருஷ்ணன் வலைப்பக்கத்தில் கொடுத்துள்ள முக்கியமான நூறு உலக சினிமாக்கள், இந்தியாவின் பல மொழிகளிலும் எடுக்கப்பட்ட கல்ட் வகைப் படங்கள், அஜயன் பாலா, சுகா, சுஜாதா போன்ற எழுத்தாளர்கள் அவர்கள் பதிவுகளில் பரிந்துரைத்த சினிமாக்கள் என முக்கியமான திரைப்படங்கள் குறித்த ஏராளமான பதிவுகளில், என் ரசனைக்குப் பொருந்தி வருகிற திரைப்படங்கள் குறித்த எழுதப்போகிறேன். எந்த முன்முடிவும் இல்லாமல் பயணிக்கப் போகும் இந்த வரிசைக் கட்டுரைகள் எனக்குத் தனிப்பட்ட முறையில் ஒரு சாளரத்தைத் திறக்கின்றன. இந்த சாளரத்தின் வழி திசைகளின்றி பறக்கப் போகிறேன், மனதுக்குப் பிடித்ததை செய்யும் நிறைவுக்காகவே.
மனசுக்குப் பிடித்த நகர்வுகளை நினைவுகூர்ந்து எழுதுகையில், மனசுக்குப் பிடித்த அந்த நாட்கள் வந்து ஒட்டிக்கொண்டு நம்மை இளமையாக்கும். அந்த வசீகர எழுத்துக்கள் படிப்போரையும் அவர்தம் நாட்களுக்கு உள் இழுத்துச் செல்வதுதான் அழகிய எழுத்தின் பேரழகு. உங்களின் எழுத்து அப்படியான ஒன்று. வாசிக்கும் போது என் கையிலும் கொடுக்காப்புளி! வாழ்த்துக்கள்
ReplyDelete