வாசந்தி- குரலற்றவர்களின் குரல்
மிக முக்கியமான பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான வாசந்தியைப் பற்றி நாம் அனைவரும் நன்கு அறிவோம். தமிழிலும் ஆங்கிலத்திலும் மிக ஆழமான கதைகளையும் கட்டுரைகளையும் வாசந்தி எழுதி இருக்கிறார். இந்தியா டுடேயின் தமிழ்ப்பதிப்புக்கு ஒன்பது வருடங்கள் ஆசிரியராகப் பணியாற்றி இருக்கிறார். பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து நிறைய ஆய்வு செய்து கட்டுரைகள் எழுதி இருக்கிறார். என்பத்து மூன்று வயதாகும் வாசந்தி, புகழ்பெற்ற ஓஸ்லோ பல்கலைக்கழகத்தில் மனித உரிமைகள் குறித்த பட்ட மேற்படிப்பை முடித்திருக்கிறார். பஞ்சாப் கலவரத்தைப் பின்னணியாக வைத்து அவர் எழுதிய 'மவுனப் புயல்', தேவதாசி முறை குறித்து எழுதிய 'விட்டு விடுதலையாகி' ( இந்த நாவலை அவர் எழுதியதன் பின்னணி மிகவும் முக்கியமானது), இலங்கைப் பிரச்சனை குறித்து எழுதிய 'நிற்க நிழல் வேண்டும்' போன்ற கதைகள் மிகவும் முக்கியமானவை. துணிச்சலான அரசியல் விமர்சகராகவும் வாசந்தி திகழ்கிறார். அவரது தமிழ்நாட்டு அரசியல் குறித்த 'cut outs, caste and cine stars', பரவலாக கவனம் ஈர்த்த கட்டுரைத் தொகுப்பு. கிட்டத்தட்ட எண்பது நாவல்களையும், பல கட்டுரைகளையும் எழுதியுள்ள வாசந்தியின் எழுத்துக்கள் மிகவும் நேர்மையானவை. அவரது எழுத்துக்கள் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளன.
வாசந்தியை நான் முதலில் எப்போது படிக்கத் தொடங்கினேன் என்று எனக்கு சரியாக நினைவில் இல்லை. விகடனில் தொடராக வெளி வந்த "வல்லினமே மெல்லினமே" தொடரை வாராவாரம் விடுதலின்றி படித்தது இப்போது நினைவில் வருகிறது. இந்தியா டுடேவின் ஆசிரியராக அவர் எழுதிய சில கட்டுரைகளை பள்ளிக் காலங்களில் படித்து அந்த எழுத்தின் தீர்க்கத்தைக் கண்டு வியந்திருக்கிறேன். ஒரு கட்டத்தில் வாசந்தியின் கதைகளையும் கட்டுரைகளையும் தேடித்தேடிப் படிக்கும் அளவில் அவரது எழுத்துக்களின் ரசிகையாக மாறினேன். அவரது பல நாவல்களை பத்துக்கும் மேற்பட்ட முறைகள் மீள் வாசிப்பு செய்து இருக்கிறேன். சில கதைகள், மறுபடி படிக்கவே முடியாத அளவு மனதில் ஆழமான காயத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியவை. எனக்கு மிகவும் பிடித்த, தனிப்பட்ட முறையில் நான் மிகவும் மதிக்கும் எழுத்தாளர்களில் ஒருவர் வாசந்தி.
மிக மிக சவாலான கட்டுரைகளையும் கதைகளையும் வாசந்தி எழுதி இருக்கிறார். அவர் எழுதிய அத்தனை நாவல்களையும் நான் படித்திருக்கிறேன். நாட்டின் பல பகுதிகளில் அவர் வசித்திருக்கிறார். தமிழில் பெரிய அளவில் எழுதப்படாத கிழக்கிந்திய பகுதிகளைப் பற்றியும் வாசந்தி எழுதி இருக்கிறார். பஞ்சாப் கலவரம், இலங்கைப் பிரச்சினை, மதக்கலவரம், பெண்சிசுக்கொலை, கருக்கொலைகள், தாமிரபரணி ஆற்றங்கரையில் நிகழ்ந்த மரணங்கள், பெங்களூரு மற்றும் கோவை குண்டுவெடிப்புகள், பெண்களுக்கேயான மனநலப் பிரச்சினைகள் என்று பலரும் புனைவாக எழுதாத விஷயங்களை அவர் மிகவும் ஆழமாகவும் நேர்மையாகவும் எழுதியிருக்கிறார். அவரது பத்திரிகைத் துறையின் நிபுணத்துவம் பெரிய அளவில் இந்த நாவல்களை எழுதுவதற்கு அவருக்கு உதவியாக இருந்திருக்க வேண்டும்.
மிகச்சமீபத்தில் ராபர்ட் சந்திரகுமார் எழுதிய மாஞ்சோலை தேயிலைத் தொழிலாளர் குறித்த ஆவணத் தொகுப்பான 'மாஞ்சோலை 1349/2 என்னும் நான்' என்னும் புத்தகத்தைப் படித்தேன். (விகடன் பிரசுரம்) ஒரு எஸ்டேட் வாசியாக இருந்து வழக்கறிஞர் ஆன எழுத்தளரின் அனுபவப் பகிர்வு அது. மாஞ்சோலையில் டீ எஸ்டேட்டுகள் தொடங்கப்பட்டதில் இருந்து இன்று வரையான நிகழ்வுகளை விரிவாக சொல்லும் ஒரு புத்தகம். இந்தப் புத்தகத்தைப் படித்ததில் இருந்தே, வாசந்தியின் "யுக சந்தி" என்னும் நாவலை மறுபடி படிக்கும் ஆவல் மேலோங்கியது. யுக சந்தி மில்லினியம் எனப்படும் இரண்டாயிரம் வருட இறுதியில் நிகழும் பல்வேறு விஷயங்களை இணைத்து எழுதப்பட்ட ஒரு நாவல். அந்தக் காலகட்டத்தில் நடந்த கார்கில் போர், மாஞ்சோலை போராட்டம், ஜாதிக்கலவரங்கள், கோவை குண்டு வெடிப்புகள் அனைத்தும் ஒவ்வொரு இழையாக இந்த நாவலில் விவரிக்கப்பட்டு இருக்கும். இந்த வகையில், எனக்கு வாசந்தியின் இன்னும் இரண்டு நாவல்களும் நினைவுக்கு வருகின்றன. "வேர்களைத் தேடி" மற்றும் "வல்லினமே மெல்லினமே". இந்த மூன்று நாவல்களும் வெவ்வேறு காலகட்டத்தில், வெவ்வேறு பின்புலங்களில் எழுதப்பட்டவை என்றாலும், இந்தக் கதைகள் வலியுறுத்தும் மையச்சரடு ஒன்றுதான்-- சாதி மதங்களைக் கடந்த மனிதநேயம்.
இந்தக் காலகட்டத்தில் முன் எப்போதையும் விட, சமத்துவம் குறித்துப் பேச வேண்டிய தேவை நம் அனைவருக்கும் இருக்கிறது. அதற்கான துணிவு இருக்கிறதா எனபது வேறு விசயம். ஆனால் சமூகத்தின் சம நிலையை பாதிப்பதாக ஒரு நிகழ்வு நடைபெறும் போதே அது குறித்து கள ஆய்வு செய்து, நேரடி குறிப்புகளோடு மனதை உலுக்கும் வண்ணம் ஒரு படைப்பை வெளியிடுவதற்கு மிகுந்த மன தைரியம் வேண்டும். அதைவிட அதிகமாக சமுகத்தின் மீதான நேசம் இருக்க வேண்டும். இவை இரண்டுமே அபரிமிதமாக வாசந்திக்கு இருக்கிறது என்றே எனக்குத் தோன்றுகிறது. இந்தக் கதைகள் மூன்றும், ஒரே நேரத்தில் நிகழும் பல நிகழ்வுகளைப் பல கதாபாத்திரங்கள் வழியாக சொல்லிக்கொண்டுபோய், அவற்றை ஒரே மைய இழையில் இணைக்கும் உத்தியில் எழுதப்பட்டவை. காவிரிப் பிரச்சனையில் இருந்து, இனக் கலவரம் வரை ஒரே காலகட்டத்தின் பல விரும்பத்தகாத நிகழ்வுகளை அவற்றுக்கான சரித்திர, பூகோள காரணங்களுடன் விளக்க முற்படுபவை. படிக்கும்போது நம் கவனத்தை முழுவதுமாகக் கோருபவை வாசந்தியின் எழுத்துகள்.
'வேர்களைத் தேடி', டெல்லியில் வசிக்கும், விவாகரத்தான மைதிலி என்னும் பெண்ணைப் பற்றிய கதை. 90களின் முற்பகுதியில் நிலவிய அரசியல் பின்புலத்தில் நகரும் கதை, மைதிலியின் தனிப்பட்ட வாழ்வில் சமூகம் சுமத்தும் கலாச்சார பணபாட்டு சுமையையும், அதே நேரத்தில் அதை அவள் நம்பிக்கையோடும் சுய மரியாதையோடும் எதிர்கொள்வதைப் பேசும் கதை. இதனூடாக தலைமுறை தலைமுறையாக வேறு மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து போனாலும் எங்கும் பொருந்தாத வகையிலான அல்லாட்டத்தையும், அடையாளச் சிக்கல்களையும் ,கதை மாந்தர்களிடம் இவை ஏற்படுத்தும் மனப்போராட்டங்களையும் ஆழமாக எழுதியிருப்பார் வாசந்தி. இதன் நடுவே ஏற்படும் ஒரு அரசியல் நிகழ்வு, அத்தனை பேரின் வாழ்வையும் ஒரு தூசாக புரட்டிப்போடும் விதத்தை மனதை உலுக்கும் வண்ணம் படைத்திருப்பார்.
"யுக சந்தி" முற்றிலும் வேறுபட்ட நான்கு பெண் கதாபாத்திரங்கள் அவரவர் வாழ்வில் நிகழும் எதிர்பாராத சம்பவங்கள், அதை அவர்களுக்கே உரிய வகையில் அவர்கள் கையாள்வது குறித்த கதை.. அந்த காலகட்டத்தில் நிகழ்ந்த அரசியல் நிகழ்வுகளை ஊடுபாக்கி, அவை எப்படி ஒரு தனி மனிதனின் வாழ்வை உலுக்கிப் போடுகின்றன என்று மிகவும் உணர்வுபூர்வமாக சொல்லும் புனைவு இது. கதையின் பல இடங்கள் நம் மனதை கலக்கிவிடும். நாம் மனதளவில் கொண்டுள்ள அடையாளம் எப்படி வன்முறைக்கும் ஆதிக்கத்துக்கும் காரணமாகின்றது என்பதை முகத்தில் அறைந்து சொல்லும் கதை இது. இடையே காலகாலமாக ஆணாதிக்கத்தால் வீழ்த்தப்படும் பெண்மை குறித்தும் வாசந்தியின் விவரிப்பு இருக்கும். நடுநடுவே வரும் நாட்டுப்புற ஒப்பாரிப் பாடல்கள் நம்மை ஏதோ செய்யும். பெண்களுக்கு எதிராக குடும்ப அமைப்பில் இருக்கும் வெகு நுட்பமான வன்முறையை எடுத்துக்காட்டும் காட்சிப்படிமங்கள் நம் கடந்தகாலம் குறித்த மேம்பட்ட கற்பிதங்களைக் கேள்விக்குள்ளாக்குவதாக இருக்கும்.
'வல்லினமே மெல்லினமே' தற்காலத்துக்குப் பொருந்தக்கூடிய கதை. இதுவும் மூன்று வெவ்வேறு சரடுகளை இணைக்கும் கதைதான். தற்போதைய டெக்னாலஜி உலகத்தில் இளைஞர்கள் சந்திக்கும் சவால்கள், சாதிக்கத் துடிக்கும் தலைமுறையைக் கட்டிப்போடும் கண்ணுக்குத் தெரியாத தளைகள் என அழகாக விரியும் கதை இது. ஒரே நாவலில், இந்தியப் பிரிவினை, காவிரி பிரச்சனை, விவசாயிகள் தற்கொலை, அடையாளக் குழப்பம், போலி அரசியல் என்று பல தளங்களில் விரியும் கதை, மனிதநேயம் என்னும் ஒற்றைக் கண்ணியில் இணையும். நாட்டின் பல்வேறு பகுதிகளில், பல்வேறு சித்தாந்தங்களைப் பின்பற்றும் இளைஞர்கள், பணிக்காக பெங்களூருவில் இணைந்து வாழும்போது, அவர்கள் கொண்டிருக்கும் மனப் படிமத்தின் அபத்தங்களை புரிந்து கொண்டு, அன்பின் மீதும், சமத்துவத்தின் மீதும் நம்பிக்கை கொள்பவர்களாக மாறுவதே கதையின் அடி நாதம்.
இந்தக் கதைகளை ஒவ்வொரு முறை படிக்கும் போதும் ஒரு விதமான கனம் என் மனதை அழுத்தும். பல வரிகளை அடிக்கோடிட்டுப் படிக்கத் தோன்றும். கொஞ்ச நேரம் எதுவும் செய்யத் தோன்றாமல் ஸ்தம்பித்துப் போய் உட்கார்ந்திருப்பதும் உண்டு.
"வேர்களைத் தேடி" நாவலில், புற்றுநோய் பாதிப்பில் இருக்கும் நாயகி மைதிலியின் தோழியான ரோசலிண்ட், "நான் அன்னியம் இல்லைன்னு நீ நம்புறியா"என்று கேட்கும் இடம், "வல்லினமே மெல்லினமே"யில், உமர் என்னும் கதாபாத்திரம், " ஏன்னா என் பேர் உமர் அக்பர், என் ரிப்போர்டிங் பாரபட்சமா இருக்கலாம்" என்று சொல்லும் இடத்திலும், யுக சந்தியில் தாள் முடியாத வருத்தத்தில் வள்ளி சொல்லும், "எல்லாத்தையும் அலைக்கழிக்கறது ஒண்ணே ஒண்ணுதான். அடையாளச் சிக்கல்" என்று சொல்லும்போதும், சமூகத்தின் ஒரு கூறாக நமக்குள் வேதனையும் குற்ற உணர்ச்சியும் பொங்கும்.
சமத்துவமற்ற குடும்ப மற்றும் சமூகச் சூழலில் அவர்கள் எதிர்கொள்ள நேரிடும் அழுத்தங்கள், அவர்களின் மனப்போராட்டம், இவற்றைத் தாண்டியும் தாங்கள் சார்ந்திருக்கும் துறையில் எந்த ஒரு சலுகையையும் கோராதவர்களாக சுய மதிப்புமிக்கவை வாசந்தியின் பெண் கதாபாத்திரங்கள். யோசித்துப் பார்த்தால், அம்மணி, பொய்யில் பூத்த நிஜம், ஒரு சங்கமத்தைத் தேடி உள்ளிட்ட வாசந்தியின் அத்தனை கதைகளிலும் பெண் கதாபாத்திரங்கள் மிகவும் வலுவானவை. தர்க்க ரீதியிலும், உணர்வுத்தளத்திலும் மிகவும் மேம்பாட்டவர்களாகவே பெண் பாத்திரங்களை அவர் உருவாக்குகிறார். 'சந்தியா' என்னும் கதையில் நார்வேயில் படிக்கச் செல்லும் சந்தியா என்ற பெண்ணைப் பற்றிக் கதை சுழலும். அதற்கிடையிலும், நார்வே போன்ற நாட்டில் தனிமையில் விடப்படும் முதியவர்களின் இறுதிக்காலம், பனி பொழியும் மாதங்களில் தனிமை உருவாக்கும் தற்கொலை எண்ணங்கள் பற்றிய ஆழமான சமூகப் பார்வை வாசிப்பவருக்கு புதிய அவதானிப்பைத் தரும். எந்தக் கதையை எடுத்தாலும் அந்தக் கதை நகரும் நாட்டின் அல்லது மாநிலத்தின் உள் அரசியலை விரிவாகச் சொல்லும் அதே வேளையில், அந்த இடங்களின் பூகோள தன்மைகளையும் விரிவாக எழுதுவது வாசந்தியின் தனித்தன்மை. அஸ்ஸாமில் நடக்கும் கதையில், அந்த மாநிலத்தின் மரங்களை, வழிப்பாதைகளை, அங்குள்ள மக்களின் உடை மற்றும் உணவு பழக்கத்தை விவரித்து எழுதும்போது, காட்சி ஊடகத்தில் காண்பது போலவே, அந்த இடத்தை நாம் மனக்கண்ணில் காண்போம்.
வாசந்தியின் எழுத்துக்களில் இன்னொரு முக்கியமான தன்மை, அவரது நேர்மை. ஒரு பிரச்சனையில் தொடர்புடைய எல்லா தரப்புகளின் பார்வையையும் மிக ஆழமாக உள்வாங்கி நேரடியான மொழியில் நமக்குப் புரிய வைப்பது அவரது தனித்தன்மை. உரையாடல்களின் வழியாக பாத்திரங்களின் மனக்குமுறலை வெளிப்படுத்துவது மட்டுமின்றி, அவராகவே கதைக்குள் பேசும் உத்தி படிக்கும்போது வெகு சுவாரஸ்யமாக இருக்கும். நம்மை கதையை விட்டு வெளியே செல்ல விடாத தன்மை வாசந்தியின் எழுத்துக்களுக்கு உண்டு. தேவதாசிகளின் வாழ்வைப் பேசும் 'விட்டு விடுதலையாகி', பெண் சிசுக்கொலை குறித்து எழுதப்பட்ட 'கடை பொம்மைகள்', 'கடைசி வரை', கிழக்கு இந்தியாவின் தீராத பிரச்சனைகளை எடுத்துக்காட்டும் 'மூங்கில் பூக்கள்', மனநலம் பாதிக்கப்பட்டோர் குறித்த 'கதவில்லாத வீடு' இலங்கைப் பிரச்சனை குறித்த 'நிற்க நிழல் வேண்டும்' போன்ற கதைகள் நாம் அறியாத பரிணாமங்களை முகத்தில் அறியும் நேர்மையோடு வெளிப்படுத்தும். டெல்லி வாழ் தமிழர்களின் குழப்பங்கள், வர்க்க பேதங்கள் பற்றிப் பேசும் 'எல்லைகளின் விளிம்பில்', 'ஒரு சங்கமத்தைத் தேடி' ஆகிய நாவல்கள் தனி மனிதர்களின் எண்ணக் கொந்தளிப்பை உளவியல் ரீதியாக விவரிப்பவை. இது தவிர, 'சிறை' என்னும் நாவல் தவறுதலாக சிறையில் மாட்டிக்கொள்ளும் பத்திரிக்கையாளர் ஒருவரைப் பற்றிய கதை. ஒருவர் அனுபவித்திருக்கக்கூடிய வேதனையை விவரிக்கும் விதத்தில் கனத்துப்போகும் நம் மனம்.
வாசந்தியின் சிறுகதைகள், பயணக்கட்டுரைகள், அரசியல் புத்தகங்கள், மறைந்த இரு பெரும் தமிழ்நாடு முதல்வர்கள் பற்றிய வரலாற்று நூல் என அவரது படைப்புகள் அனைத்துமே என்னைப் பொறுத்தவரை மிகவும் முக்கியமானவை. பெரும்பாலும் குரலற்றவர்களின் குரலாக வாசந்தியின் எழுத்துக்கள் இருப்பதாக எனக்குத் தோன்றும். யாரும் பெரிய அளவில் பேசாத விஷயங்களை, தனி மனிதனின் வக்கிரங்களை ,நம் அடையாளச் சிக்கல்களை மிக விரிவாக அவரின் படைப்புகள் அலசுகின்றன. மானுடத்தின் மேன்மையை, நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டியதன் அவசியத்தை, மனித குலத்தின் குறிக்கோளை அவரது படைப்புகள் அழுத்தமாக வலியுறுத்துகின்றன. ' வேர்களைத்தேடி ' நாவலில், நாணா சொல்வான், "மனுஷத்தன்மையைத் தான் நாம தேடறோம். அதுதான் நம்ம வேர்.வேற எதுவும் இல்ல. அது பொறி மாதிரி எங்கேயாவது இருந்தாலும் போதும் மைதிலி. சமூகத்தை அழியவிடாமல் பாதுகாக்கும். நாம நம்பிக்கை இழக்கக்கூடாது. அது ரொம்ப முக்கியம்" . உணமைதானே? மனுஷத்தன்மை என்ற ஒற்றை தத்துவம் மற்ற எதையும் விட உயர்ந்ததுதான் இல்லையா??
இந்தியா டுடே தமிழ் இதலில் அவர் எழுதிய கட்டுரைகள் அரசியல், சமூகம், உரிமை என அனைத்தும் வெளிப்படுத்தும் ஒருமித்த குரலாய் இருக்கும். ஊடகத் துறை வளர்ச்சி பெறாத சமயத்தில் அவர் எழுதியதிலெல்லாம் அசாத்தியமானது. இன்றும் அவர் எழுதிய தலையங்க வாசகங்கள் நினைவில் உள்ளன. ஆளுமைப் பொருந்தியவர். அவரும் அவர் எழுத்தும் எளிமையானது. தங்களுடைய இந்தப் பதிவு மீண்டும் ஒருமுறை அவருடைய படைப்புகளை அசைபோட வைத்தன.
ReplyDelete