சற்றே நீளும் வேலை நேரம்- ஒரு நீண்ட கட்டுரை
இந்த வருடம் தொடங்கியதில் இருந்து, மீள் வாசிப்பாகவும், புதிய நூல்களாகவும் நான்கு நூல்களைப் படித்து முடித்திருக்கிறேன். ஒரு குறிக்கோளாகச் செய்ததில்லை, ஆனால் தற்செயலாகவே இவை பணியிடத்தின் பிரச்சினைகள் குறித்துப் பேசும் நூல்களாக அமைந்தன. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலகட்டத்தில் பரவலாக எழுதப்பட்ட இந்த நூல்கள், கொஞ்ச நாட்களாகவே மனதில் கிளர்ந்து கொண்டிருக்கும் வேலை நேரம் குறித்த என் உணர்வுகளை எழுதத் தூண்டுகின்றன. 1970 ல் எழுதப்பட்ட அசோகமித்திரன் எழுதிய கிளாசிக் வரிசை நூலான 'கரைந்த நிழல்கள்', பின் எழுபதுகளில், ராஜம் கிருஷ்ணன் எழுதிய 'கூட்டுக் குஞ்சுகள்', மற்றும் 'கரிப்பு மணிகள்'. மலர்வதி எழுதி மிகச் சமீபத்தில் வெளிவந்த 'அண்டியாபீசு' ஆகியவையே அந்த நான்கு நூல்கள். வெவ்வேறு காலகட்டத்தில், வெவ்வேறு பணிச் சூழல்களைப் பற்றி எழுதப்பட்டு இருந்தாலும், இந்த நான்கு நூல்களும் பணியிடத்தின் சுரண்டல்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கடுமையான வேலைச்சூழலில் எதிர்கொள்ளும் நெருக்கடிகள், அடிப்படை உடல் உழைப்புத் தொழிலாளர்கள் சிக்கிக் கொள்ளும் வறுமையின் விஷச் சுழற்சி குறித்து மிக ஆழமாகப் பேசுகின்றன. காலந்தோறும் முதலாளி, தொழிலாளி என்னும் வர்க்கபேதம் தாண்டி உடல் உழைப்பைக் கோரும் தொழில்கள் எப்படி சமூக, பொருளாதார, மனித வளத்தை சீர்குலைக்கின்றன என்பதை இந்த நாவல்கள் நிறுவுகின்றன.
'கரைந்த நிழல்கள்' அசோகமித்திரனின் முக்கியமான நாவல்களின் ஒன்றாகக் கருதப்படுகிறது. உயர்வு நவிற்சி இல்லாமல், எல்லா பாத்திரங்களையும் அதன் இயல்போடு எடுத்துச்செல்லும் படைப்பு இது. சினிமாவை, நாயக நாயகி தாண்டி, ஒரு தொழிலாக, அதன் பல்வேறு அங்கங்களில் இயங்கும் தொழிலாளர்களை கதை மாந்தர்களாக்கி விரியும் கதையில், முகத்தில் அறையும் உண்மைகளை நாம் காணலாம். நாவலில் ஒரு தனிப்பட்ட கதை நாயகனோ நாயகியோ கிடையாது. சினிமா செட் போடும் மேஸ்திரி, ஷூட்டிங்குக்கு வண்டி ஓட்டி செல்லும் ஓட்டுநர், படபிடிப்பின் அத்தனை விஷயங்களையும் ஒருங்கிணைக்கும் மேனேஜர், துணை நடிகர்கள், நஷ்டத்தில் இருக்கும் தயாரிப்பாளர், உதவி இயக்குநராக முயலும் இளைஞன் என்று திரைத்துறையின் பல்வேறு அங்கங்களாக விளங்கும் மனிதர்களே பாத்திரங்கள். ஒவ்வொரு அத்தியாயமும் முன்னும் பின்னுமாக போய் வரும் போது, கதையே தன்னை நடத்திச் செல்வது போலத் தோன்றும். பணிப்பாதுகாப்பு இன்மை, படப்பிடிப்பு இல்லா நாட்களின் வறுமை, வேலைக்கேற்ற கூலி இல்லாமல் இருப்பது, வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே ஊசலாடும் வாழ்விலும், அவர்களுக்கிடையே காட்டப்படும் வலி மிகுந்த பாகுபாடு என்று உண்மையை சற்றும் சமரசமில்லாமல் வெளிப்படுத்திய நாவல் இது. மூன்று மணி நேரம் நாம் பார்க்கும் ஒரு கேளிக்கைக்குப் பின்னால் இருப்பவர்களின் வலி மிகுந்த இருப்பை நாம் யாருமே அறிவதில்லை. ஒரு சினிமா ஸ்டுடியோவை நம்பி இத்தனை பேரா என்று நம்மை வியக்க வைக்கும் கரைந்த நிழல்கள் நாவல். அசோகமித்திரனின் 'புலிக்கலைஞன்' சிறுகதை எனக்கு ரொம்பவும் பிடித்த ஒரு சிறுகதை. அதுவும் அழகழகான பிரம்மாண்டமான சினிமா உலகின் செட்டுகளுக்குப் பின்னால் துருத்தித் தெரியும் ஒழுங்கற்ற தன்மையை வலியுடன் வெளிப்படுத்தும் ஒரு சிறுகதைதான்.
ராஜம் கிருஷ்ணன் சர்வதேச குழந்தைகள் ஆண்டை முன்னிட்டு 1978ல் எழுதிய 'கூட்டுக் குஞ்சுகள்' நாவல் தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்கள் மற்றும் குழந்தைகள் குறித்த விரிவான ஒரு சமூக ஆவணம். அதிகாலையில் எழுந்து பேருந்துகளில் தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கும் பட்டாசு பேக்டரிகளுக்கும் அழைத்து செல்லப்படும் பிஞ்சுக் குழந்தைகள் அந்தி சாய்ந்த பின்னரே வீடுகளுக்குத் திரும்புகிறார்கள். கணநேரம் ஒளிர்ந்து மறையும் பட்டாசுகளுக்காக வருடம் முழுவதும் பல்வேறு உடல் நலக் கோளாறுகளுக்கு இடையே உழைக்கும் பட்டாசுத் தொழிலாளர்கள் பற்றிய விவரணைகள் நம் கண்களில் கண்ணீரை வரவழைக்கும். திடீர் வெடி விபத்துகள், அதன் காரணமான உயிரிழப்புகள் இன்று வரை தொடர்வது நாம் அறிந்ததே. உணவு இடைவேளை, சரியான வேலை நேரம் இல்லாமல், கங்காணிகளிடம் அடி வாங்கி, பாலியல் சுரண்டல்களுக்கு ஆளாகி, பெற்றோரின் பேராசைக்கும் பலியாகி, தங்கள் பால்யத்தை முற்றுலும் இழந்துவிடும் ஒரு தலைமுறையினர் பற்றிய நெஞ்சை உருக்கும் கதை இது. இறுதியாக விபத்தில் சிக்கி மாண்டுபோகும் சில குழந்தைகளின் பெற்றோர், கிடைக்கும் நஷ்ட ஈட்டைக் கொண்டு எவ்வாறு தங்கள் வாழ்வை முன்னேற்றிக் கொள்வது என்று திட்டமிடுவதாக நாவல் முடியும். மனதை கசக்கும் உண்மையை ஒவ்வொரு வரியிலும் நாம் உணர்வோம்.
'கரிப்பு மணிகள்' தூத்துக்குடி உப்பளத் தொழில் குறித்தும் 'உப்பு' என்னும் அத்தியாவசியமான உணவுப் பொருளைத் தயாரிக்க பல்லாயிரம் தொழிலாளர்கள் சுட்டெரிக்கும் வெயிலில் மிக சொற்பமான கூலிக்கு நாள் முழுவதும் வேலை பார்ப்பதைக் குறித்தும் பேசுகிறது. 1979ல் எழுதப்பட்ட கதையின் எச்சங்களை இன்னும் தூத்துக்குடி, நாகை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்ட உப்பளங்களில் நாம் காணலாம். மிக வெண்மையான, கண்களைக் கூசச்செய்யும் பரப்பின் பிரதிபலிப்பில் நீண்ட நாட்கள் பணிபுரியும் போது அவர்களின் பார்வை வெகுவாக பாதிக்கப்படுகிறது.இதே போன்ற சூழலை ஜவ்வரிசி தயாரிக்கும் தொழிலகங்களில் நான் பார்த்திருக்கிறேன். தொடர்ந்து உப்புத்தன்மை கொண்ட சேற்றில் நிற்கும்போது உப்பின் அரிப்புத்தன்மை கால்களில் புண்களை ஏற்படுத்துகிறது. கழிவறை வசதியும், குடிநீர் வசதியும் இல்லாத வேலைச்சூழலில் கடும் வெயிலில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சொற்பக் கூலியே வழங்கப்படுகிறது. இதுபோன்ற கட்டமைக்கப்படாத தொழில்களில் பணிக்கு வரும்போதே, அட்வான்ஸ் என்னும் கயிற்றால் தொழிலாளர்கள் பிணைக்கப்பட்டு, மீட்சிக்கு வழியின்றி மாட்டிக்கொள்வதை கரிப்பு மணிகளில் விவரித்து இருப்பார் ராஜம் கிருஷ்ணன். அட்வான்ஸ் என்பதை ஒரு பரிசாக ஒரு தொழிலாளி பார்ப்பதற்கும் ஒரு தூண்டிலாக முதலாளி பார்ப்பதற்குமான நுட்பமான பார்வை இந்த நாவலில் தெரியும்.
மலர்வதியின் ' அண்டியாபீசு' கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக இருக்கும் முந்திரித் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் பெண்களின் வாழ்வை வேறு வேறு நிலைகளில் பேசும் நாவல். ஓமனா என்னும் முதன்மைக் கதாபாத்திரம் இருந்தாலும், அவளது அண்டியாபீசுகாரி என்னும் பின்புலம் கொடுக்கும் அவமதிப்பும் பெண் என்பதால் அவள் பணியிடத்தில் எதிர்கொள்ளும் நெருக்கடிகளுமே கதை. பெரிதும் வெளியே தெரியாத ஒரு தொழிலாகவே அண்டிப்பருப்பு என்னும் முந்திரிப் பருப்பு பதப்படுத்தும் தொழில் இருக்கிறது. கோவிட் நேரத்தில் புலம் பெயர் தொழிலாளர்களின் கணக்கெடுப்பில்தான் எத்தனை பேர் இந்த தொழிலில் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரிந்தது. மெக்காடு என்னும் மேஸ்திரியாக பணிபுரியும் பெண்கள், மேனேஜர் நிலையில் இருக்கும் ஆண்கள் , அடிப்படைப் பணியில் இருக்கும் பெண்கள் போன்ற தொழில்முறை படிநிலைகளை விவரிக்கிறது இந்த நாவல். மேலும் முந்திரிப் பருப்புகளை பழத்திலிருந்து பிரித்தல், அந்த அமிலத்தன்மை கையில் ஏற்படுத்தும் எரிச்சலும், சாயமும், பருப்புகளைத் தரம் பிரித்தல் என்று முந்திரி தொழில் குறித்த விரிவான பார்வையை, குமரியின் பிரத்யேக வட்டார வழக்கோடு நமக்கு எடுத்து சொல்லும் அண்டியாபீசு, இதுவரை நாம் அறிந்த ஒரு உணவுப் பொருளுக்குப் பின்னால் இருக்கும் அறியாத உண்மைகளை தெரியப்படுத்துகிறது. மலர்வதியின் 'தூப்புக்காரி'யும் துப்புரவு தொழிலாளர்களின் வாழ்வையும் வேதனையையும் மிக நெருக்கமாகப் பேசும் நாவல்தான்
இந்த நாவல்கள் நான்கும், நான்கு வேறுபட்ட தொழில்களை, வேறுபட்ட வட்டாரங்களை, மாறுபாடான கதை அமைப்புகளைக் கொண்டு இருந்தாலும், அனைத்தும் பேசும் பொருள் ஒன்றுதான். அமைப்பு சாரா தொழில்கள், அவை வேளாண்மை சார்ந்தோ, கேளிக்கை சார்ந்தோ, பதப்படுத்துதல் சார்ந்தோ எப்படி இருந்தாலும், அவற்றில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு இயல்பிலேயே சம வேலைக்கு சம ஊதியமோ, பணியிடத்தில் போதுமான பாதுகாப்போ, குறிப்பிட்ட வேலை நேரமோ இருப்பதில்லை என்பதை இந்தக் கதைகள் நிறுவுகின்றன. இவற்றோடு, சாகித்ய அகாடமி விருது பெற்ற படைப்புகளான கட்டுமான தொழிலாளர்களின் சங்கடங்களைப் பேசும் 'கல்மரம்' நாவலும், தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் நடக்கும் பிரச்சனைகள் குறித்து பேசும் செல்வராஜ் எழுதிய 'தோல்' நாவலும் என் நினைவுக்கு வருகின்றன.
சமீபத்தில் வேலை நேரம் குறித்த இந்தியாவின் பெரும் தொழில் அதிபர்களின் பேச்சு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. வாரம் 90 மணிநேரம் அல்லது 72 மணி நேரம் வேலை செய்தால் மட்டுமே நாடு முன்னேறும் என்ற ஒப்பற்ற கருத்து அது. சர்வதேச தொழிலாளர் அமைப்பு, ஒரு வாரத்துக்கு 48 மணி நேரம் உழைப்பதே வேலைத்தரத்தை உறுதி செய்யும் என்றும், தொழிலாளர்களின் உடல் மற்றும் மன நலனைக் காக்கும் என்றும் தெரிவிக்கிறது. இந்தியாவின் சராசரி வேலை நேரம் 49 மணி நேரமாகக் கணக்கிடப்பட்டு இருக்கிறது. இந்தியப் பொருளாதாரக் கணக்கெடுப்பின் படி, நம் நாட்டின் மொத்த work force 56.6 கோடிப் பேர். இவர்களில் 93 சதவீதம் பேர் அமைப்பு சாரா தொழில்களில் இருப்பதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவிக்கிறது. கோவிடுக்குப் பிறகு 15 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் 32.8% பேர் மொத்த work forceல் இருக்கின்றனர். இவர்களிலும் பெரும்பான்மையினர் வேளாண்மை உள்ளிட்ட அமைப்பு சாரா, உடல் உழைப்பைக் கோரும் தொழில்களில் ஈடுபட்டு இருக்கின்றனர். அமைப்பு சாரா தொழில்களின் நெருக்கடிகள் குறித்து அபர்ணா கார்த்திகேயனின் " அவர்களும் அரிசி உண்ணட்டும்" ( Let them eat rice, by PARI Foundation) ஆவணத்தின் மூலம் நாம் அறியலாம். உப்பளத்தின் தொழிலாளர்கள், விவசாயிகள், பாரம்பரிய தொழில்கள் செய்பவர்கள் எப்படி வேலை நேரம் என்ற ஒன்று இல்லாமலேயே வாழ வேண்டி இருக்கிறது என்று ரத்தமும் சதையுமாக உணர்த்தும் ஆவணத்தொடர் அது.
வாரத்துக்கு 48 மணி நேர வேலை என்பதே, என்னைப் பொறுத்தவரை எல்லோருக்கும் கிடைக்கக் கூடியதில்லை. அரசமைப்புச் சட்டப்படி அமையப் பெற்ற அரசு, அரசு சார்ந்த நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இந்த உரிமை அனைவருக்கும் கிடைக்கும். ஆனால் அமைப்பு சாரா தொழில்களில் இருக்கும் பெரும்பான்மை மக்கள் இன்னும் அடிப்படை வாழ்வை வாழவே 12 மணிநேரம் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் தான் இருக்கிறார்கள். நமக்கு இயல்பாகவே புனிதப்படுத்துதல் பிடிக்கும். பெண்களின் மீதான சுரண்டலை தியாகம் என்றும் மேன்மை என்றும் சொல்வதுபோல அதிக நேரம் உழைப்பதையும் புனிதப்படுத்தி விடுகிறோம். உண்மையில் அதிக நேரம் உழைப்பது நேரடியாக ஒருவரது வாழ்வின் தரத்தை உயர்த்தி விடும் என்றால், இன்று பெரிய பணக்காரர்களாக தொழிலாளர்கள் தான் இருக்க முடியும். ஆனால் நடப்பு அப்படி இல்லையே.
கோவிட் சமயத்தில்தான் நாட்டில் இத்தனை புலம்பெயர் தொழிலாளர்கள் இருக்கிறார்கள் என்றே நமக்குத் தெரிய வந்தது. நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு இடங்களில் உடல் உழைப்புத் தொழில் செய்ய வந்தவர்கள் அவர்கள். நான் பணி செய்த மாவட்டத்தில் இருந்து அவர்களை தங்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கும் பணியை நாங்கள் ஒருங்கிணைத்தோம். நோபல் பரிசு பெற்ற அறிஞர் அமர்த்தியா சென் அவர்களின் ஒரு ஆய்வுக் குறிப்பில், நாட்டின் பல்வேறு மாநிலங்களின் வளமும் வறுமையும் அந்த மாநிலங்களின் அமைவிடத்தைப் பொறுத்து இருப்பதை, மனித வள மேம்பாட்டு குறியீட்டை வைத்து விளக்கி இருப்பார். அந்த ஆய்வுக் குறிப்பின் அடிப்படையில் புலம்பெயர் தொழிலாளர்களின் மாநில வாரியான எண்ணிக்கை சரியாகப் பொருந்தி வந்தது. குடும்பம் குடும்பமாக ரயிலுக்கு வந்த புலம்பெயர் தொழிலாளர்கள் ஒரு சாக்கு மூட்டை நிறைய சாமான்களும் ஒரு காலி தண்ணீர் பிடிக்கும் கேனுமாக மட்டுமே வந்தனர். நிறைய பேரின் கால்களில் செருப்பு கூட இல்லை. அவர்கள் அனைவரும் குறைந்தபட்சம் எட்டு மணி நேர வேலையை கொஞ்சமும் இடைவெளி இன்றி கடும் உடல் உழைப்பை நிச்சயமாகக் கொடுத்தவர்கள். அவர்களின் உழைப்பு முதலாளிகளின் வாழ்வை முன்னேற்றும் அளவுக்கு அவர்களின் வாழ்வை வளப்படுத்துகிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதிகபட்சமாக தங்கள் சொந்த ஊரில் உள்ள கூரை வீட்டை ஓட்டு வீடாக அவர்கள் மாற்றக்கூடும். அதற்கு மேல் அடுத்த தலைமுறையை படிக்க வைக்கவோ, இந்த விஷ சுழலில் இருந்து மீட்கவோ இந்த கடும் உழைப்பு பயன்படவில்லை என்பதே உண்மை.
நாடு காலனியாதிக்கத்தில் இருந்த போது கூலிகளாக, அடிமைகளாக விற்கப்பட்ட, கடும் பயணத்தில் இறந்துபோன, குடும்பங்களில் இருந்து பிரிக்கப்பட்டு பல நாடுகளின் தேயிலைத் தோட்டங்களுக்கும் கரும்பு விவசாயத்துக்கும் விற்கப்பட்ட நம் முன்னோர்களின் ரத்தமும் கண்ணீருமான கதைகளை நாம் அறிவோம். "எரியும் பனிக்காடு" நாவல் மூலம் நம் மாநிலத்துக்கு உள்ளேயே அடிமைகளாக வேலை வாங்கப்பட்ட மக்களின் வாழ்வை நாம் அறிவோம் இல்லையா? மனித உரிமைகளை கொஞ்சமும் புரிந்து கொள்ளாத கால கட்டத்தில் இருந்து, நாகரிக சமுகத்தில், பல்வேறு அமைப்புகள் முன்னெடுப்பில், பல போராட்ட வரலாறுகளுக்குப் விளைவாகவே தொழிற்சாலைகள் சட்டம் 1948, குறைந்தபட்ச ஊதியச் சட்டம் 1948, சம ஊதியச் சட்டம் 1976, குழந்தைத் தொழிலாளர் ( தடை மற்றும் ஒழுங்குமுறைச) சட்டம் 1986, கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்புச்சட்டம் 1976 முதலிய சட்டங்கள் நம் நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளன. இவற்றைக் கண்காணிக்க பல்வேறு துறைகளும் அதிகாரிகளும் இருக்கின்றனர். இந்தப் பின்னணியில், குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டுமே வேலை பார்ப்பதும், தன் தனிப்பட்ட வாழ்வை குடும்பத்துடன் மகிழ்வுடன் செலவழிப்பது குறித்த குற்ற உணர்வை பணியாளருக்கு ஏற்படுத்துவதன் மூலம், அவரைச் சுரண்டும் வழியே இது போன்ற அதிக நேரம் உழைப்பதை புனிதப்படுத்தும் கருத்தாக்கங்கள்.
கூடுதல் வேலை நேரம் என்பதோடு, அந்த பெரும் தொழில் அதிபர் சொல்லும் இன்னொரு கூற்று, மனைவி முகத்தை எவ்வளவு நேரம் பார்ப்பீர்கள் என்பது. பெண்ணிய உரிமை தொடர்பான செயல்பாடுகள் நான்கு அலைகளாக உலகெங்கும் இருந்தது என்பது நம் அனைவருக்கும் தெரியும். இதில் முதல் அலையில் பெண்கள் அமைப்புகள் வாக்குரிமைக்காக போராடினர். இரண்டாம் அலையில் பல்வேறுபட்ட நோக்கங்கள் இருப்பினும் "சம வேலைக்கு சம ஊதியம்" என்பதே முதன்மை நோக்கமாக இருந்தது. அந்தப் போராட்டத்தின் அடிப்படையில் தான் பல நாடுகளில் சம வேலைக்கு சம ஊதியம் குறித்த சட்டங்கள் இயற்றப்பட்டன. இதில் பெருமைப்படத்தக்க விஷயமாக, இந்திய அரசமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட போதே, நம் தலைவர்கள், ஆர்டிகிள் 16ல், 'மாநிலத்தின் கீழ் உள்ள எந்த ஒரு அலுவலகத்திற்கும் வேலைவாய்ப்பு அல்லது நியமனம் தொடர்பான விஷயங்களில் அனைத்து குடிமக்களுக்கும் சம வாய்ப்பு இருக்க வேண்டும்' என்றும் 'எந்தவொரு குடிமகனும், மதம், இனம், சாதி, பாலினம், வம்சாவளி, பிறந்த இடம், வசிப்பிடம் அல்லது அவற்றில் ஏதேனும் ஒன்றைக் கொண்டு மட்டுமே, மாநிலத்தின் கீழ் உள்ள எந்தவொரு வேலை அல்லது அலுவலகத்திற்கும் தகுதியற்றவராகவோ அல்லது பாகுபாடு காட்டவோ கூடாது' என்றும் உறுதிப்படுத்தி இந்த அரசமைப்பை நமக்குக் கையளித்து இருக்கின்றனர். இன்னும் பெண்களுக்கான வேலைவாய்ப்பில் நிறைய தூரம் நாம் செல்ல வேண்டி இருந்தாலும் காலனியத்தில் இருந்து சுதந்திரம் பெற்ற நாடு என்னும் அளவில் இந்த கருத்தாக்கங்கள் குறித்து நாம் நிச்சயம் பெருமைப்படவே வேண்டும்.
இந்தியாவில் பெண்களின் வேலைத்திறன் பயன்பாடு (female Labour utilisation in India, 2023) என்னும் ஆவணம், 44.5 சதவிதம் பெண்கள் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதற்காக தாங்கள் பார்த்து வரும் வேலையில் இருந்து நீங்குகிறார்கள் என்று சொல்கிறது. இன்னும் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளவும், வீட்டை நிர்வகிக்கவும், ஒரு வேலையை விட வேண்டி இருக்கிறது என்றால், வீட்டின் வேலைகளும் குழந்தை வளர்ப்பும் அத்தனை உடல் உழைப்பைக் கோருபவை.
என் அம்மா தினமும் காலையில் 6 மணிக்கு எழுந்துவிடும் பழக்கம் உள்ளவர். நாங்கள் சிறியவர்களாக இருந்த காலத்தில் இருந்து அப்படித்தான். பொதுப்பணித்துறையில் இளநிலை பொறியாளராக இருந்தவர், எங்களை கவனித்துக்கொள்ள வேண்டிய நெருக்கடி ஏற்பட்டபோது தன் வேலையை ராஜினாமா செய்து விட்டு முழு நேர இல்லத்தரசி ஆனார். இல்லத்துக்கு அரசி என்பது மிக மிக படோடோபமான பெயர். காலை தொடங்கி இரவு வரை சங்கிலித் தொடராக இழுக்கும் வீட்டு வேலைகளைத் தொடர்ந்து செய்து வந்தார். இப்போதும் நாற்பது வருடங்கள் கழிந்தும் அதே சக்கரச் சுழற்சிதான். ஆனால் இந்த உழைப்பு நேரடியாக மனித நாட்கள் என்னும் அளவில் கணக்கிடப்படுவதில்லை. அதனால்தான், ஒரு இல்லத்தரசியை "நீங்கள் என்ன செய்கிறீர்கள்" என்று கேட்டால், "சும்மாத்தாங்க இருக்கேன்" என்ற பதிலைச் சொல்ல வேண்டி இருக்கிறது
தமிழகத்தைப் பொறுத்தவரை அரசு வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கப்படுவதன் மூலம் அரசில் பெண்களின் பங்களிப்பு உறுதி செய்யப்படுகிறது. ஆனால் இந்த நிலை எல்லா இடங்களிலும் மாநிலங்களிலும் ஒரே மாதிரி இல்லை. அந்தந்த மாநிலங்களின் கலாச்சாரத்துக்கு ஏற்பவே அங்கு வாழும் பெண்களின் வேலை வாய்ப்புகளும் அமையும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு வீட்டையும் வேலையையும் திறம்பட செய்வது மிகப்பெரிய சவால். சம வேலை செய்ய சம ஊதியம் பெறும்போது, வேலையில் எந்த சுணக்கமும் ஏற்கத்தக்கதல்ல. அதிகரிக்கப்பட்ட வேலை நேரங்கள், ஏற்கனவே பெண்களுக்கு இருக்கும் சுமைகளை அதிகரிப்பதாகவே அமையும். " வீட்டை பாக்க முடியாத வேலை எதற்கு" என்ற மன நெருக்கடியும் சமூக நெருக்கடியும் மீண்டும் பெண்களை வீட்டுக்குள் தள்ளும் நிலையில் முடியக்கூடும். பார்ச்சூன் இந்தியாவின் ஆய்வின் படி 500 பெரிய நிறுவனங்களில் 1.4 சதவித பெண்கள் மட்டுமே தலைமைப் பொறுப்புகளில் இருக்கிறார்கள். மத்திய நிலை வேலைகளில் பெண்கள் பங்களிப்பு அதிகரித்தாலும், கீ மானஜிரியல் பொசிசன் எனப்படும் முடிவெடுக்கும் நிலைகளில் பெண்கள் இன்னும் நிறைய தூரத்தை அடையவேண்டி இருக்கிறது. வேலை நேரங்கள், வேலை இடங்களில் பாலினச் சமத்துவம், அதற்கேற்ற வசதிகள் என வேலை நேரம் தாண்டியும் "இன்குளூசிவ்" சமூகத்தை அமைக்க நம் நாட்டின் கொள்கைகள் வகுக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
உழைப்புச் சுரண்டல் என்பது பொதுவாக நீலக் காலர் என்னும் உடல் உழைப்புத் தொழிலில் மட்டுமே இருப்பாதாக நாம் அவதானிக்கிறோம். ஆனால் தற்போது தகவல் தொழில்நுட்பம், வங்கிகள் உள்ளிட்ட துறைகளிலும் அதிக ஊதியம் என்னும் பெயரில் அதிக நேரம் ஊழியர்களை வேலைச்சூழலில் தள்ளும் நிலை இருக்கவே செய்கிறது. சரியான வேலை நேரம் இல்லாதிருத்தல், கடுமையான மதிப்பீடுகள், வேலை நேரம் தாண்டியும் வாட்ஸ் அப் தொடர்புகள் மூலம் வேலைக்கான நிர்ப்பந்தத்தை உருவாக்குதல், அடைவதற்கு அசாத்தியமான இலக்குகள் போன்றவற்றைக் காண முடிகிறது. மத்திய வர்க்க மக்கள் பணியாற்றும் பெரும்பாலான துறைகளில், வேலை அழுத்தம் காரணமாக அடிக்கடி நிறுவனம் மாறுபவர்களை நாம் கண்டு வந்துள்ளோம். ஸ்திரமற்ற வேலைச்சூழலும் அது ஏற்படுத்தும் அழுத்தமும் அதிகமான மனஉளைச்சலை ஆண் பெண் இரு பாலருக்கும் ஏற்படுத்துவதைக் கண்கூடாகக் காணமுடிகிறது.
தொற்று நோய்களை ஓரளவுக்குக் கையாளக் கற்றுக் கொண்ட நமக்கு முன்னேயுள்ள பெரிய சவால் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், கான்சர் முதலான தொற்றா நோய்கள். இந்த நோய்கள் தற்சமயம் அதிகரிக்க வாழ்வியல் மாற்றங்களோடு மன அழுத்தமும் காரணம் என்று கருதப்படுகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வின் படி, தொற்றா நோய்களால் ஏற்படும் மரணங்களில் 73%, மத்திய மற்றும் குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் ஏற்படுகின்றன. இத்தகு நாடுகளின் மகிழ்ச்சிக் குறியீடு மற்றும் மனித வள மேம்பாட்டுக் குறியீடு ஆகியவையும் பின்தங்கியே இருக்கின்றன. இவற்றைக் கையாள தமிழ்நாடு போன்ற நலநோக்கோடு உள்ள அரசுகள் பல்வேறு நலத்திட்டங்களை உருவாக்குகின்றன. தனி மனித வருமானம் என்பதோடு தனி மனித உரிமைகளும் பாதுகாக்கப்பட்டால் மட்டுமே ஒரு தேசத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி ஆரோக்கியமானதாக இருக்கும்.
நம் தேசத்தின் கட்டமைப்பில் நிச்சயம் நம் அனைவருக்கும் பங்கும் பொறுப்பும் இருக்கிறது. அடிப்படைப் பணிகளில் தொடங்கி உணவு உற்பத்தி, தொழில் வளம், நாட்டின் விளிம்பு நிலை மக்களுக்கான ஆதரவு தொடங்கி, விண்வெளி ஆராய்ச்சி வரை நம் நாட்டின் குடிமக்களின் உழைப்பும், தலைவர்களின் தொலைநோக்குத் திட்டங்களும் வகை செய்கின்றன. உடல் உழைப்பை நம்பி இருக்கும் அமைப்பு சாரா தொழிலாளர்களின் முன்னேற்றத்துக்கும் சேர்த்துதான் அரசாங்கத்தின் கொள்கைகள் இருக்கின்றன. அவற்றை நீர்த்துப் போக செய்யாமல் நாட்டின் வளத்தைப் பெருக்குவதுதான் சரியான வழிமுறையாக இருக்க முடியும்.
விடுமுறை தினங்கள் குடும்பத்துக்கு மிகவும் தேவையானவை. நான் சிறு வயதில் படித்த ஒரு சிறுகதை எனக்கு நினைவில் வருகிறது. என் எண்ணத்தின் போக்கையே மாற்றிய கதை அது. ஒரு மனிதர், தன் வாழ்நாள் முழுவதும், செல்வம் சேர்க்கவும், தொழிலில் வெற்றி பெறவும் ஓடிக்கொண்டே இருப்பார். தன் மனைவிக்காகவோ, பிள்ளைககுக்காகவோ கொஞ்சமும் நேரம் செலவழிக்காமல் தொழிலில் வெற்றி பெறுவதை மட்டுமே போதையாகக் கொண்டு இருப்பார். அவர் வயதாகி, ஒரு கட்டத்தில் வேலையில் இருந்து ஓய்வு பெற்று வீட்டில் இருப்பார். அந்த நாளில் அவரது மனைவி மதிய உணவுக்காக வெகு நேரம் பல வகைகளை சமைத்தபடி இருப்பார். உணவு அருந்தும் மேஜை முழுவதும் உணவு வகைகள் நிரம்பிக் கிடக்கும். எரிச்சலுறும் அவர், " சாப்பிட சமைக்கிறியா இல்ல உனக்கு என்ன எல்லாம் சமைக்கத் தெரியும்னு காட்ட சமைக்கிறியா?" என்று கோபமாகக் கேட்பார். அதற்கு அவர் மனைவி நிதானமாக " அப்போ வாழ்க்கை எதுக்கு? வாழ்றதுக்கா?ஜெயிக்கறதுக்கா?" என்று கேட்பதாகக் கதை முடியும். எல்லோருக்கும் அவரவர் வாழ்க்கை வாழ்வதற்கும் தான். அதை உழைப்பில் மட்டுமே கரைத்துவிட முடியாது. எனவே, எல்லோரும் வாழ்வதற்கான சமத்துவமான சமூகத்தை உருவாக்குவது மிகவும் முக்கியம். மனிதகுலத்தை மகத்துவப் படுத்துவது சமத்துவம் தானே?
உழைப்பு, பணியிடச்சூழல், வேலைநேரம் பற்றியதாக தொடங்கி உழைப்புச் சந்தையில் பெண்களின் நிலை, பணித்தளங்களில் நிலவும் பாகுபாடு, ஒடுக்குமுறை, முதலாளிகளின் பேராசை, சமத்துவமாக வாழ்வதற்கான வேட்கை என விரிகிறது இக்கட்டுரை. ரேவதியின் பரந்த நுட்பமான புத்தகப்படிப்பும் , சமூக நடப்புகளை உன்னிப்பாக கவனித்துஉள்வாங்கும் திறனும் ஏராளமான தரவுகளின் ஊடே வெளிப்படுகிறது.
ReplyDeleteஎடுத்துக்கொண்ட தலைப்பில் தனது எண்ண ஓட்டங்களையும் கருத்துக்களையும் தனது அனுபவங்களோடும் தான் ரசித்த நூல்களின் விவரிப்போடும் மனதுக்கு நெருக்கமான உரையாடலாக விவரிக்கும் பாங்கு என்னை மிகவும் கவர்கிறது. எனது மனமார்ந்த பாராட்டுகள் தங்களுக்கு… By VMS.
ReplyDelete