ராஜம் கிருஷ்ணன்: நூற்றாண்டில் நினைவு கூர்வோம்

ராஜம் கிருஷ்ணன் அவரது பெண்ணிய சிந்தனைகள் மற்றும் எழுத்துக்களால் அனைவருக்கும் நன்கு பரிச்சயமானவர். தமிழின் மிக முக்கியமான எழுத்தாளர். எனக்கு மிகவும் பிடித்த ஒரு எழுத்தாளர்.  உலகெங்கும் பல அலைகளாக பெண்ணிய அமைப்புகள் இயங்கி வந்தன. இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் ஜனநாயக மாதர் சங்கங்கள் மூலம் பெண்ணிய சிந்தனைகள் பரவின.  ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவராகவும் களப்போராளியாகவும் இருந்தவர் ராஜம் கிருஷ்ணன். ஒரு சித்தாந்தம் பல வடிவங்களில் மக்களைச் சென்று அடையும். களப்போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள், அமைப்பு சார்ந்த கலந்துரையாடல்கள், கள ஆய்வு இவற்றோடு, இலக்கியம் மூலமும் கதைகள் மூலமும் சித்தாந்தங்கள் உலகெங்கிலும் மிகத் தீவிரமாகப் பரவின. பெண்ணிய மற்றும் பொது உடைமை சிந்தனைகளை தன் எழுத்துக்கள் வழியாக சமூகத்தில் பரப்பியதில் ராஜம் கிருஷ்னன் அவர்களுக்கு பெரும் பங்கு உண்டு. தமிழில், 'வேருக்கு நீர்' புதினத்துக்காக  சாகித்ய அகாதெமி விருது பெற்ற முதல் பெண் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் தான். 1955 முதல் வழங்கப்பட்டு வரும் சாகித்ய அகாதமி விருதுகள் பெற்ற எழுத்தாளர்களில் நான்கு பேர் மட்டுமே பெண்கள் என்பது கூடுதல் தகவல். தனது என்பத்து ஒன்பதாம் வயதில் மறைந்த ராஜம் கிருஷ்ணன் மொத்தம் 80 படைப்புகளை எழுதி உள்ளார். 2009ல் இதுவரை இல்லாத வகையில் அவர் உயிருடன் இருக்கும்போதே அவரது படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்டன. 

பதினைந்து வயதிலேயே ராஜம் கிருஷ்ணனுக்கு திருமணம்  நடைபெற்று விட்டது. இரவில் வீட்டு வேலைகள் அனைத்தும் முடித்தபின்னர், மளிகை சாமான்கள் வாங்கும் காகிதத்தின் மறுபக்கம், ரசீதுகளின் வெற்று பின்பக்கம் ஆகியவற்றில் எழுதிதான் அவரது படைப்புகளை ஒரு காலகட்டம் வரை எழுதினார். அதன் பின்னர் களத்தில் இருக்கும் பிரச்சினைகள் குறித்து, தனது நாவல்களையும் ஆய்வுக்கட்டுரைகளையும் வெளியிடத் தொடங்கினார். 
எழுதும் கதை நடைபெறும் களத்திலேயே சென்று கள ஆய்வு மேற்கொண்டு நம்பகத்தன்மையுடன் தனது எழுத்துக்களை வெளியிடுவது அவரது தனிச்சிறப்பு. குழந்தைத் தொழிலாளர்கள், உப்பளத் தொழிலில் உள்ள பெண்கள்,  குழந்தைத் திருமணம் போன்ற முக்கியமான சமூகப் பிரச்சினைகளை, இவை குறித்த விழிப்புணர்வு சமுதாயத்தில் ஏற்படும் முன்னரே எழுதியவர் ராஜம் கிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் வாழ்ந்த காலத்தோடு ஒப்பிடுகையில் அவரது விழிப்புணர்வும் சமூக அவதானிப்பும் மிகவும் முற்போக்காக இருந்தது வியப்புக்குரிய விஷயம். அவர் 1979ல் தீப்பெட்டி தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட  குழந்தைத் தொழிலாளர்கள் குறித்து எழுதிய காலத்தில் அது குறித்த விழிப்புணர்வு சமூகத்தில் துளியும் இருக்கவில்லை. குழந்தைத் தொழிலாளர் (தடை மற்றும் ஒழுங்குமுறை) சட்டம் இயற்றப்பட்டதே 1986ல் தான் என்பதில் இருந்து அவரது தொலைநோக்குப் பார்வை வெளிப்படும்.  

மக்களை நெறிப்படுத்தவும் காந்திய சிந்தனைகளை பரப்பவும் தன் பேச்சாற்றலை பயன்படுத்த விரும்பும் பெண்ணான யமுனா, தன் அரசியல் பாதையில் காணும் போலித்தனங்களையும் அவள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளையும் வெளிப்படுத்தும் புதினம் வேருக்கு நீர். அவளது தெளிந்த நல்லறிவை விடவும், பெண் என்பதால் அவளுக்குக் கிடைக்கக்கூடிய 'கிளாமரை' முதலீடாக்கவே அவளைச் சுற்றி உள்ளவர்கள் முனைவதை மிக நுணுக்கமாக விவரித்து இருப்பார் ராஜம் கிருஷ்ணன். ஒரு கதை பல அடுக்குகளில் நம்முள் சிந்தனையைத் தூண்டி விடும். வேருக்கு நீர் படிக்கும் போது, உயர்ந்த சிந்தனைகளை, சமுதாயத்தின் மீதான அக்கறையைக் கூட தன் சுயநலத்துக்கு பயன்படுத்த விரும்பும் மனிதர்களை இந்தக் கதையில் நான் அவதானிக்கிறேன். "யுத்தத்தில் முதலில் மரணமடைவது சத்தியமும் உண்மையும்தான்" என்பது "வேருக்கு நீர்" புதினத்தில் வரும் ஒரு வரி. யுத்தம் என்பது நாடுகளுக்கு இடையே ஆனது மட்டுமல்ல. இனம், மொழி, பால், ஊர், தனக்கான முக்கியத்துவம் என்று மனிதர்கள் மனதில் கொள்ளும் ஆதிக்க மனோபாவமும் எளியவர்கள் மீதான யுத்தம்தான். அந்த யுத்தத்தில் முதலில் மரிப்பது உண்மையும் சத்தியமும்தான் என்பதையே நாவலில் வரும் இந்துநாத் என்னும் கதாபாத்திரம் வலியுறுத்துவதாக எனக்குத் தோன்றியது. ராஜம் கிருஷ்ணன் இந்த நாவலில் சொல்லும் கருத்துக்கள் எக்காலத்துக்கும் பொருந்தும் அளவில்தான் உள்ளன. எளிமையும் அஹிம்சையும் காந்திய கருத்தியலில் இன்றியமையாதவை. ஆனால் அவை கொஞ்சம் கொஞ்சமாக நீர்த்துப் போவதை மனம் வலிக்க பார்த்திருப்பாள் யமுனா. நம்மைப் போலவே.

எனக்கு முதன்முதலில் ராஜம் கிருஷ்ணன் அறிமுகமானது என் எட்டாம் வகுப்பில். அவரது "மாறி மாறிப் பின்னும்" நாவல்தான் நான் படித்த முதல் நாவல். என் அம்மா வாங்கி வைத்திருந்த இந்த நூலை நான் எடுத்துப் படித்தேன். அந்த வயதுக்கு இந்தக் கதை கொஞ்சம் அதிகம்தான் என்று இப்போது தோன்றுகிறது. ஆனால் நான் கிடைப்பதை எல்லாம் படிப்பவள். எனவே மூன்றாம் வகுப்பில் நேஷனல் புக் டிரஸ்ட் நூல்கள், ஆறாம் வகுப்பில் பொன்னியின் செல்வன், எட்டாம் வகுப்பில் ராஜம் கிருஷ்ணன் என்று என் வாசிப்பு க்ராஃப் முன்னேறியது. ரேவு என அழைக்கப்படும் கதாநாயகி ரேவதி, இரவு உணவாக தக்காளிக் குழம்பும் வாழைக்காய் வதக்கலும் செய்து வைத்துக் கொண்டு தன் கணவனுக்காக காத்திருப்பதில் தொடங்கும் கதை, சமைக்கும் போதே ஊடுபாவாக அவள் கணவனின் கூடா ஒழுக்கம் பற்றிய விவரணைகளோடு நகரும்.  வயது வந்த இரண்டு மகன்களோடு அவளும் கணவனுமான குடும்பம் அது. பொருளாதார ரீதியில் கணவனைச் சார்ந்து வாழ வேண்டிய, சமயப் பெரியோரின் அறிவுரைக்கு உட்பட்டு வாழும் பிராமண பெண்ணாக ரேவு இருப்பாள். எந்த விஷயத்திலும் அவளை அடக்குபவனாகவும், சாதாரண பேச்சு வார்த்தைக்கு கூட 
வாய்ப்பற்ற தாம்பத்யமாக அவளுடைய வாழ்வு நகரும். கொஞ்சமும் அவளை அரவணைக்காத கணவன், அவனது தேவைகளுக்கு மட்டும் அவளைப் பயன்படுத்திக் கொள்வது, ரேவுவை பெரும் வேதனைக்கு உள்ளாக்கும். எட்டாம் வகுப்பில் நான் படித்த "மாறி மாறிப் பின்னும்" நாவலின் ரேவுவுக்கும், சமீபத்தில் படித்த மலர்வதியின் "அண்டியாபீசு" ஓமனாவுக்கும் தாம்பத்திய வாழ்வு அன்பும் அரவணைப்பும் அற்றது. புருஷ மிருகம் என்று ராஜம் கிருஷ்ணனும், அன்னியனாக ஆகிப்போனான் என்று மலர்வதியும் அங்கலாய்க்கும் வகையில் தான் பெண்களுக்கான பாலியல் சுதந்திரம் பெரும்பாலும் இருக்கிறது. இரண்டு நாவல்களுக்கும் கிட்டத்தட்ட ஐம்பதாண்டுகள் இடைவெளி உண்டு. வீட்டின் இறுக்கம் தெளிவதற்கான வழியின்றிப் போகும் ரேவுவுக்கு, கணவனின் கொடுமைகளும் அதிகரிக்க, ஒரு நாளில் வீட்டை விட்டு வெளியேற்றப் படுவாள் ரேவு. அடுத்த வீட்டில் வசிக்கும் பெண்கள் இயக்கத்தோடு தொடர்புடைய சுதாவின் உதவியோடு வீட்டை விட்டு வெளியேறி அடுத்தடுத்த பிரச்சனைகளைக் கடந்து ஒரு மலை கிராமத்தின் குழந்தைகளுக்கு சேவை செய்யப் போவாள் ரேவு. இந்த நாவலில் பெண்ணுரிமை சங்கங்கள், குடும்ப உறுப்பினர்கள், பெண்ணின் பொருளாதார சார்பு, வீட்டை நடத்துவதிலும் மூக்கை நுழைக்கும் சடங்குகள் குறித்து, இயல்பாகவும் முகத்தில் அறையும் விதத்திலும் எடுத்துச்சொல்லி இருப்பார் ராஜம் கிருஷ்ணன். நான் முதல் முதலில் படித்த ராஜம் கிருஷ்ணன் நாவல் என்பதோடு, நான் நிறைய முறை படித்த அவரது நாவலும் இதுதான். 

காலம்தோறும் பெண் என்னும் அவருடைய படைப்பு நம் சமூக வரலாற்றில் பெண்களின் நிலை பற்றி விரிவாக எடுத்துச் சொல்லும் ஒரு அற்புதமான ஆய்வுக் கட்டுரை எனலாம். மிக விரிவாக வரலாறு தொடங்கிய காலம் தொட்டு, பெண்களின் நிலை எவ்வாறு நீசமடைந்தது என்பதைத் தெளிவாக எடுத்துரைத்த ஆவணம் காலம்தோறும் பெண். இப்போது வரை தினமும் நாம் நம்மைச் சுற்றியும், நாளிதழ்களிலும் பார்க்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், குழந்தைத் திருமணம், வரதட்சணை கொடுமைகள், பெண் கருக்கொலை ஆகியவற்றின் வேர் எங்கிருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். "வால்காவிலிருந்து கங்கை வரை" நூலில் ராகுல் சாங்கிருத்தியாயன் சொல்வதுபோல, கற்காலத்தில் தாய் வழி சமூகமாக இருந்த நாம், கொஞ்சம் கொஞ்சமாக தந்தை வழி சமூகமாக மாறியது ஏன்?   வேத காலத்திலும், பின் வேத காலத்திலும் எப்படி பெண்ணின் நிலை கீழிறங்கத் தொடங்கியது, பெண்ணின் கற்புக்கும் தியாகத்துக்கும் எப்படி முன்னுரிமை தரப்பட்டு, ஒரு சமூகமாகவே நாம் எப்படி பெண்களை அடிமைப் படுத்தினோம் என்று பல்வேறு ஆய்வுகளையும், வேத கால மந்திரங்களையும், பிற்கால அறிஞர்களின் கருத்துக்களையும் வைத்து மிக அழகாக ராஜம் கிருஷ்ணன் நிறுவுகிறார். "பண்பாடு, கலாச்சாரம், சமய மரபுகள் என்றெல்லாம் இனம் புரியாத, தெளிவில்லாத பாசிக்குட்டையை இவளுக்கு உரித்தாக்கி, உயர் கல்வி, அறிவாற்றல், பல துறை ஆய்வுப் பயிற்சிகள், ஆன்மீக நெறியின் சாதனைகள் என்று விரிந்த எல்லைகளில் ஆணுக்குச் சாசனம் பண்ணிக் கொடுத்திருக்கும் முறையும், நெறிகளும் எப்போது, எப்படி, யாரால் ஏற்படுத்தப்பட்டன ?" என்று ராஜம் கிருஷ்ணன் எழுதுகிறார். இந்தக் கேள்விக்கான விடையாக விரிகிறது, "காலம்தோறும் பெண்" நூல். நம் சடங்குகள், கற்பு நெறிகள், பொதுமைப்படுத்தப்படுதல், குங்குமம் உள்ளிட்ட வெளிப்புற அடையாளங்களின் மூலக் காரணங்கள் என நம் முன் காலக்கண்ணாடியாக விரியும் ஒரு சமுதாயம் குறித்த மிக முக்கியமான ஆய்வு நூல் "காலம்தோறும் பெண்". சமூகக் கட்டமைப்பை புரிந்து கொள்ளவும், குற்றங்களின் வேர்களைப் புரிந்து கொள்ளவும் நாம் நிச்சயம் படிக்க வேண்டிய நூல் இது. 

எனக்குப் பிடித்த ராஜம் கிருஷ்ணனின் இன்னொரு நூல், 'கரிப்பு மணிகள்'. தூத்துக்குடியின் உப்பளத் தொழிலாளர்களின் வாழ்வை ரத்தமும் சதையுமாகப் பேசும் புதினம் இது. இந்த நாவலை எழுதுவதற்காக தூத்துக்குடியின் உப்பளங்களில் களப்பணி செய்தவர் ராஜம் கிருஷ்ணன். இங்குள்ள பெண் தொழிலாளர்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள், உழைப்புச் சுரணடல், கூலியில் ஏற்றத்தாழ்வுகள், அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில், கால்களைக் கரிக்கும், கண்களைப் பொசுக்கும் சூழலில் வேலை பார்ப்பது என்று உப்பளத்தின் அத்தனை நெருக்கடிகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டிய நூல் இது. தொழிற்சங்கங்களின் தலையீட்டால் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகக் கதை முடியும். மகசேசே விருது பெற்ற பத்திரிக்கையாளர், திரு.ப்பி. சாய்நாத் நடத்தும் கிராமப்புற இந்தியாவின் மக்கள் காப்பகம் (People's Archives of Rural India) 2022ல் தூத்துக்குடி உப்பளங்கள் குறித்த ஒரு ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டுள்ளது. அபர்ணா கார்த்திகேயன் தன் கள ஆய்வின் அடிப்படையில் " தூத்துக்குடி உப்பளங்களின் ராணி" ( The Rani of Tuticorin salt pans) என்னும் தலைப்பில் எழுதிய அந்த  ஆய்வுக்கட்டுரையில் உப்பளங்கள் குறித்த தற்போதைய நிலையினை எழுதி இருக்கிறார். இன்றைய நிலைக்கேற்ப சம்பளம் உயர்ந்திருந்தாலும், கழிவறை உள்ளிட்ட விஷயங்கள் இன்னும் கரிப்பு மணிகளின் காலத்திலேயேதான் இருக்கின்றது என்பது முகத்தில் அறையும் உண்மை. அப்பட்டமான உண்மைகளை நாம் அறிந்துகொள்ளவும், அவற்றுக்கான உபாயங்களைத் தேடவும் வைக்கும் நேர்மையான எழுத்துக்கள் ராஜம் கிருஷ்ணனுடையவை. 

 மேம்போக்காகப் பார்த்தால், பெண்கள் பெரிய அளவில் முன்னேறி விட்டதாகத் தோன்றினாலும், நமக்குக் கிடைக்கும் தகவல்கள் அப்படி இல்லை. உலக சுகாதார நிறுவனத்தின் 19/செப் 2022  அறிக்கைப்படி, 0-17 வயது வரையிலான வயதில் உள்ள ஐந்தில் ஒரு பெண்குழந்தை பாலியல் ரீதியான வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறாள். 2020 தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கையின் படி 30சதவீதத்துக்கும் அதிகமான பெண்கள் குடும்ப வன்முறையால் பாதிக்கப்படுகின்றனர். இன்றைய நிலையே இப்படி என்றால், ராஜம் கிருஷ்ணன் " காலம்தோறும் பெண்" அல்லது "மாறி மாறிப் பின்னும்" எழுதிய காலகட்டத்தில் "புருஷன் னா அடிக்கத்தான் செய்வான்" என்ற கருத்தே பொதுவானதாக இருந்திருக்கக் கூடும். அத்தகைய காலகட்டத்தில் அந்தக் காலத்தைத் தாண்டி சிந்தித்தவர்களே சமூகத்தின் தலைவர்கள் ஆனார்கள். சாவித்திரி பாய் பூலேவைப் போல,  பெரியாரைப் போல, அம்பேத்கரைப் போல, ராஜம் கிருஷ்ணனைப் போல. இது ராஜம் கிருஷ்ணனுக்கு நூற்றாண்டு. இந்த நூற்றாண்டிலும் பொருந்தக்கூடிய கருத்துக்களை உள்ளடக்கிய அவரது எழுத்துக்களை இந்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய கடமை நமக்கு உள்ளது. சமத்துவத்தை நோக்கி செல்லும் பாதையில், அந்தப் பாதை போட்டவர்களை நாம் நினைவு கூரத்தான் வேண்டும் இல்லையா? 

Comments

  1. இயல்பான நடை... உங்கள் எழுத்து புதின ஆசிரியர்களையும்.... உங்கள் பேச்சு நட்சத்திர பேச்சாளர்கள் ஐயமும் ஓரம்கட்டி விடுகிறது.

    ReplyDelete
    Replies
    1. I got lot of informations from your article. Super

      Delete

Post a Comment

Popular posts from this blog

எனக்குப் பிடித்த குமரி உணவுகள்

வாசந்தி- குரலற்றவர்களின் குரல்

'வெயிலோடு போய்' - ச.தமிழ்ச்செல்வன்