பைசனும் பச்சைக்கிளியும் பின்னே நானும்

எப்போதுமே எனக்கு இயற்கையான சூழ்நிலை மிகவும் பிடிக்கும். ஆளரவமற்ற கடற்கரைகள், பசிய மரங்கள், சில் வண்டுகளின் சத்தம் கேட்கும் கானகம், பறவைகள், அருவிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் என நாங்கள் செல்லும் இடங்கள் பெரும்பாலும் இயற்கை சார்ந்தே இருக்கும். ஆனால் அந்த இடங்களின் வரலாறு தெரியும் அளவுக்கு, பறவைகள், மரங்கள், விலங்குகளின் பெயர்கள் எனக்குத் தெரியாது. தெரிந்து கொள்ளும் ஆர்வமும் பெரிய அளவில் முன்பெல்லாம் இருந்தது இல்லை. பார்த்து ரசித்துவிட்டு சும்மா இருந்தவள், மரங்கள், பறவைகள், விலங்குகள், பூச்சிகள், டைனாசர்கள் போன்றவற்றின் பெயர்களைத் தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானேன்- எங்களுக்குப் பிறந்த அருமை மகன் காரணமாக. 

எங்கள் மகன் பிறந்து இரண்டு வருடம் ஆனபின்னும் சரியாகப் பேசவில்லை. பேச்சு வரவில்லையோ என்று பயப்படும் அளவுக்கு அமைதியாகவே இருப்பான். அந்த சமயத்தில் ஒரு நாள் நாங்கள் ராமேஸ்வரம் போயிருந்தோம். அவனைத் தூக்கிக்கொண்டு கடற்கரை சாலையில் நடக்கும் போது, முதன் முறையாக அவன் திருவாய் மலர்ந்து --"காக்காங்" என்றான்.... கம்பத்தில் அமர்ந்திருந்த காக்கையைப் பார்த்து. அப்போதே எங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும், இவனைக் கூட்டிக்கொண்டு நாங்கள் 'காடு, வனம், யானை, பறவைகள்' என்று டோரா போல அலையப் போகிறோம் என்று. 

கொஞ்சம் வளர்ந்த பிறகு டைனாசர்கள் மேலும் அவன் கவனம் குவியத்தொடங்கியது. பேப்பரும் பென்சிலும் கிடைத்தால் விதவிதமான டைனாசர்களாக வரையத் தொடங்கினான். அவற்றுக்கு விதவிதமாக பெயர் சொல்வதுடன், அவற்றின் உணவுப் பழக்கம் குறித்தும் விவரமாக சொல்ல ஆரம்பித்தான். 'நீங்க சின்ன வயசில ஜுராசிக் பார்க் பார்த்ததில்லையா'? என்ற கேள்வி வேறு. நான் ஆறாம் வகுப்புப் படிக்கும்போது ஜுராசிக் பார்க் படம் வெளியானது. பள்ளியிலேயே எங்கள் அனைவரையும் அழைத்துப் போனார்கள். தமிழ் டப்பிங் அப்போது இல்லை. ஆங்கிலத்தில் கதாபாத்திரங்கள் பேசிய எதுவும் கிராமப் பள்ளியில் படித்த எங்களுக்குப் புரியவில்லை. பெரிது பெரிதாக இருந்த விலங்குகளின் உருவங்களைப் பார்த்ததும் நாங்கள் பிரமித்துப் போனது இப்போதும் நினைவில் நிற்கிறது. அவற்றுள் தாவர உண்ணிகள், மாமிச உண்ணிகள், பறக்கும் ஊர்வன (!) என பலவகை விலங்குகள் இருந்ததை அவதானிக்கும் அறிவு அப்போது இல்லை. நீளமான கழுத்தோடு ஒரு விலங்கைக் காட்டி "இது பிராக்கியோசரஸ் அம்மா. வெஜிடேரியன் இது" என்றும், குட்டிக் கால்களுடன் சற்றே பயங்கரமான ஒன்றை வரைந்து "இதுதான் டி ரெக்ஸ். இதுக்கு கையில் ரெண்டு விரல்தான் இருக்கும்" என்றும் உங்கள் மகன் நான்கு வயதில் உங்களிடம் சொல்லி விளையாடினால் உங்களுக்கு வாயடைத்துப் போகுமல்லவா? எனக்கும் அப்படித்தான் போனது. ஆனால் அது டிரெய்லர் தான் என்று அவன் எங்களுக்கு அடுத்தடுத்துக் காட்டிய முழு நீளப்படம் புரிய வைத்தது. 

தொடர்ந்து பறவைகள், விலங்குகள், டைனாசர்கள் என்றே அவனது விருப்பங்கள் இருந்ததால், நாங்களும் அவனைக் கானகங்களுக்கு அழைத்துச் செல்லத் தொடங்கினோம். நான் சிறுவயதில் டாப் ஸ்லிப் உள்ளிட்ட வனங்களுக்கு போய் இருக்கிறேன். அங்கே காலில் சாக்ஸ் போடதுபோல அலையும் மாடுகளை 'பைசன்' என்று சொல்லியே பழக்கம். பேரிஜம் வனப்பகுதியில் 'பைசனை'க் கண்டவுடன் மகனின் அறிவை வளர்க்கும் நோக்கில் 'அங்கே பாரு கண்ணு பைசன்' என்று காண்பித்தேன். அம்மா என்றால் அன்பு, அப்பா என்றால்தான் அறிவு. புறநானூற்றில் இருந்து அப்படித்தான். "ஈன்று புறந்தருதல்" மட்டுமே தாயின் கடன். சான்றோனாக்குதல் தந்தைக்கு கடன். ஆனால் நான் அறிவியல் மாணவி என்பதால் விலங்குகள், பறவைகள் எல்லாம் என் டிபார்ட்மெண்ட் ஆகிவிட்டன. அதனால் தான் அவனுக்கு பைசனைக் காண்பித்தேன். நல்ல பிள்ளையாக அதைப் பார்த்து ரசிக்காமல், " அம்மா, பைசன் இந்தியாவிலேயே கிடையாது. இதுக்குப் பேரு இந்தியன் காவ்ர். காட்டு மாடு" என்று தொடங்கி அதன் புவியியல் குறித்து விவரித்து வழக்கம்போல சொற்பொழிவாற்றினான் மகன். அதன் பின் அந்த பயணத்தில் நான் எந்த விலங்கைப் பற்றியும் அவனிடம் சொல்லவில்லை. அவன்தான் எங்களுக்குச் சொல்லிக்கொண்டு இருந்தான். 

பொதுவாக எனக்கு கறுப்பாக இருப்பது காக்கா. வெள்ளையாக இருப்பது கொக்கு. மாறுபாடாக பச்சைக் கலரில் இருப்பது கிளி. இதுவே எனக்குப் பறவைகளை ரசிக்கப் போதுமானதாக இருந்தது. விதிவிலக்காக சிறு வயதில் இருந்தே மலைமொங்கான் எனப்படும் கிரேட்டர் ஹார்ன்பில் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அதிலும் மலபார் ஹார்ன்பில், கிரேட் ஹார்ன்பில் என்று வகைகள் இருப்பது எனக்கு அப்போது தெரியாது.  ஒரு கட்டத்தில் பறவை நோக்குதலில் மகனுக்கு மிகுந்த விருப்பம் ஏற்பட்டது. பறவை நோக்கும் குழுக்களுடன் சேர்ந்து மிக நுட்பமாக பறவைகளைப் பார்க்கத் தொடங்கினான். மறைந்த பறவையியலாளர் ராபர்ட் கிரப் அவர்கள்,  கோவை சதாசிவம் அய்யா, ஏட்ரி மதிவாணன் ஆகியோரின் வழிகாட்டுதலில் அவன் பறவை நோக்குதலில் மிகுந்த ஆர்வம் காட்டலானான்.  ஏற்கனவே எனக்கு நன்றாகத் தெரிந்த பைசனிலேயே மொக்கை வாங்கிவிட்ட எனக்கு அதற்கு மேல் எதிலும் மூக்கை நுழைக்க தைரியம் இருக்கவில்லை. ஆனால் பிள்ளைக்கு எங்கள் மூக்கை உடைக்கும் விருப்பம் மிகுதியாக இருந்திருக்க வேண்டும். அவன் பார்க்கும், புரிந்துகொள்ளும் அத்தனைப் பறவைகள் குறித்தும் எங்களுக்கு சொல்லிக் கொடுக்கத் தொடங்கினான். "இதுதான் ஹில் மைனா. இதுக்கு புருவம் வெள்ளையா இருக்காது. மைனாவுக்கு புருவம் வெள்ளையா இருக்கும் பாருங்க" என்பான். தூதூரமாகப் பறக்கும் பறவையின் கண்ணுக்கு மேல் புருவத்தைப் பார்க்க நான் ரொம்பவே கஷ்டப்பட்டேன். ஆனால் அவன் ஆர்வம் அதிகரிக்க அதிகரிக்க, நாங்களும் அதற்கு ஏற்ப கற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானோம். பைசன் போலவே, கிளியின் பெயரும் எனக்குத் தெரியவில்லை என்று ஒருநாள் மகன் எனக்கு உணர்த்தினான். 

"ஹே , அங்கே பாரு பாரட்" என்று பச்சைக்கிளியைக் காட்டி நான் சொன்ன ஒரு நாளில்,  'இல்லம்மா, அது பேரு ரோஸ் ரிங்ட் பேராகீட்' என்று சீரியசாக சொன்னான். எனக்குள் இருந்த சிங்கத்தைத் தட்டி எழுப்பி விட்டான் அன்று. வீறு கொண்ட அந்த சிங்கம், தினமும் பார்க்கும் பறவைகளை எல்லாம் தட்டுத் தடுமாறி நினைவில் கொள்ளத் தொடங்கியது. இவன் போதாதென்று மகனைப் பின்பற்றி மகளும் இதே வரிசையில் டைனாசர்,பறவைகள், பூச்சிகள் என்று கற்றுக்கொள்ளத் தொடங்கி விட்டாள். இந்தப் பிள்ளைகளுக்கு பெற்றோராக இருப்பதாலேயே எங்களுக்கும் எல்லாப் பறவைகளையும் தெரியும் என்றெண்ணி அவ்வப்போது எனக்கு அறிவுப்பாலை புகட்டுவார் சகோதரி பால்மதி வினோத். எனவே இவற்றை நான் தெரிந்துகொண்டே ஆகவேண்டிய கட்டாயமும் ஏற்பட்டு விட்டது. 

ஐபிஸ், ஸ்டில்ட், உட்பெக்கர், எக்ரெட் என்று ஒரு வார்த்தையில் முதலில் கற்றுக்கொள்ளத் தொடங்கினேன். எக்ரெட் எனப்படும் கொக்கில் கூட நான்கு வகைகள் உண்டு போல. பாம்புத்தாரா, கரண்டிவாயன், கூழைக்கடா(பெலிகன்), வர்ண நாரை (பெயிண்டட் ஸ்டார்க்) என்று அடுத்த கட்டமாக சில பறவைகளை கவனிக்கத் தொடங்கினேன். அது மிக அழகான பொழுதுபோக்காகவும் ஆகிப்போனது. இறக்கைகளை அடித்தபடி பறக்கும் பறவைகள், வானில் நிலைத்து நின்றபடி கிளைடிங் செய்யும் கழுகு இனங்கள், காடுகளில் மரங்களுக்கு இடையே புகுந்து பறந்து செல்லும் கானகப் பறவைகள், நீர் நிலைகளில் காணப்படும் நீர்ப் பறவைகள், கடல் பகுதிகளில் பறந்து செல்லும் பாலாஜிக் பறவைகள், இனப்பெருக்க காலத்தில் வலசை வரும் பறவைகள் என வகை வகையான பறவைகளையும் அவற்றின் வகைகளையும் புரிந்துகொள்வதே மிகுந்த ரசனைக்கு உரியதாக இருந்தது எனபது உண்மை. அதிலும் இனப்பெருக்க காலத்தில் பறவைகளுக்கு வரும் தனி நிறமும்  பார்ப்பதற்கு மிகுந்த வியப்பைத் தருகிறது.  

வெள்ளையாக இருக்கும் பறவைக்கு "பிராமனி" என்றும், ஆழ்ந்த நிறத்தில் இருக்கும் பறவையை ஒரு சாதியின் பெயரிலும் அழைக்கும் வழக்கம், பெயரிடுவதில் உள்ள அரசியலை புரிய வைத்தது. ஆந்தைக்கும் கூகைக்குமான வேறுபாடுகள், அவற்றைச் சுற்றி இருக்கும் சமூகம் சார்ந்த மூட நம்பிக்கைகள் குறித்தும் என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. ஒரு பறவையின் பெயரை ஆங்கிலத்தில் மட்டுமல்லாது வட்டார மொழியிலும் அறிந்திருக்க வேண்டும் என்பது தியோடர் பாஸ்கரன் அய்யா சொன்ன அறிவுரை. ஆகவே அதையும் பின்பற்றி இரு மொழிகளிலும் பறவைகளின் பெயர்களை சொல்வார்கள் பிள்ளைகள். 

அதிகமாக பயணிக்கும் என் வேலை காரணமாக, பல்வேறு நிலப்பகுதிகளில் வாழும் பறவைகளை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது எனக்கு. மகனோடான பழக்கத்தில், பார்த்துப் பழகிய பறவைகளின் பெயர்களை எளிதாகச் சொல்லவும் பழகி விட்டேன். ஆள்காட்டி, வாலாட்டி, தேன் சிட்டுகள், உழவாரன் குருவிகள், (ஸ்விப்ட்) போன்ற குட்டிப் பறவைகள், பெரிய இறக்கை அளவைக் கொண்ட கழுகு வகைகள் என ஓரளவு பெயர் சொல்லக் கற்றுகொண்டேன்.   தெரியாத பறவைகளின் பெயர்களை அவனிடம் கேட்டு தெரிந்து கொள்வேன். வெளியே செல்லும்போது என்னிடம் பிள்ளைகள் பறவைகளின் பெயர்களைக் கேட்பதும், நான் சரியாகச் சொல்லிவிட்டால், உடனே என்னைப் பாராட்டுவதும் எங்களுக்கு ஒரு சுவாரஸ்யமான விளையாட்டு. 

தவளைவாயன் எனப்படும் சிலோன் ப்ராக்மவுத் என்ற பறவையைப் பார்க்க அதன் வாழிடத்துக்கு பயணம் போயிருக்கிறோம். அதேபோல சிலந்தி ஒன்றைப் பார்க்க இரவில் போன கானகப் பயணமும் மறக்க இயலாது.  ஓக்கியில் வழி தவறிய சினரஸ் வல்ச்சர் என்னும் பாறுக்கழுகு வகையை அதன் பிறப்பிடத்துக்கு மாவட்ட வன அலுவலர் தம்பி இளையராஜா அனுப்பி வைத்த கதையை ஒரு தனிக் கட்டுரையாகவே எழுதலாம். 

வலசைப் பறவைகளில், knob billed duck எனப்படும் செண்டு வாத்து இனம் இறக்கை அடித்தபடி பறப்பதைப் பார்க்க எனக்கு மிகவும் பிடிக்கும். அன்றில் எனப்படும் ஐபிஸ் கூட்டமாக வயல் வெளிகளில் நடப்பது மிகவும் அழகாக இருக்கும். அதிலும் செந்தலை அன்றில் (ரெட் நேப்ப்ட் ஐபிஸ்) எனப்படும் அன்றில் பறவை பார்ப்பதற்கு மிகவும் அழகு. செங்கால் நாராய் என்று சங்க இலக்கியத்தில் சொல்லப்படும் நாரை பனங்கிழங்கைப் பிளந்தது போன்ற அலகை உடையதாக இருக்கும். சத்திமுத்திப் புலவரின் காலத்தில் இருப்பது போலத் தோன்றும் இந்தப் பறவையைப் பார்க்கும் போது. சிரிப்பான் (லாபிங் திரஷ்) எனப்படும் பறவைகள் காடுகளின் பாடகர்கள் என்றே சொல்லலாம். ஒரு கோர்வையாக ஒன்றன்பின் ஒன்றாக அவை பாடுவதைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம். அவற்றில் கன்னியாகுமரியின் அசம்பு காடுகளில் வாழும் அசம்பு திரஷ்கள் இந்தக் காட்டில் மட்டுமே எண்டெமிக்காக வாழ்பவை. 

அழகான வடிவங்களில் பறக்கும் தகைவில்லான் (ஸ்வாலோ) என்னும் பறவையை சமீபத்தில் மதுரையில் பார்த்தோம். சின்னஞ்சிறு பறவைகள் கூட்டமாக ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் பறப்பதை பார்த்துக்கொண்டே இருக்கலாம். கடலின் அலையோடு பறக்கும் ஆலாக்கள், மீன்கொத்திகள் என பறவை நோக்குதல் மிக இனிமையான பொழுதுபோக்காகவே இருக்கிறது. ராமேஸ்வரத்தில் கடற்கரை ஓரமாக ஒரு கூட்டமாக கடற்காகங்களைப் (சீகல்)  பார்த்த நேரம் மறக்க முடியாதது. ஆல்பர்ட் ஹிட்ச்காக் இயக்கிய பேர்ட்ஸ் திரைப்படம் அபத்தமாக நினைவில் வந்தது. ஒரு முறையேனும் கூட்டில் இருக்கும் கிரேட்டர் ஹார்ன்பில்களை பார்த்துவிட வேண்டும் என்பது என் ஆசை. நீளமான வாலோடு பறக்கும் ஈப்பிடிப்பான் (பிளை கேச்சர்) பறவைகள் பறக்கும் லாவகம் அலாதியானது. 

எண்ணிலடங்கா பறவையினங்களும் உயிரினங்களும் எப்போதும் நம்மைச் சுற்றி வாழ்கின்றன. அவற்றை பற்றி எத்தனையோ கதைகளை நாம் கேட்டு இருப்போம். உயிர்க்கோளத்தில் நாம் அனைவரும் கண்ணுக்குத் தெரியாத கண்ணிகளால் இணைக்கப்பட்டு இருக்கிறோம். நம் குறுகிய வட்டத்துக்கு வெளியே வந்து பார்த்தால், இதன் அழகையும், அவசியத்தையும் நம்மால் உணர முடியும். "காக்கை குருவி எங்கள் சாதி" என்று பாரதி பாடியது இந்தக் கருத்தினை அடிப்படையாகக் கொண்டே இருந்திருக்க முடியும். ஒவ்வொரு நிலப்பரப்பிலும் காணப்படும் பறவைகள் வெவ்வேறானவை. அவற்றின் வாழ்வியலும் அப்படித்தான். அவையும் நம்மைப் போல்தான் அல்லது நாமும் அவற்றைப் போல்தான். உயிர்களிடத்தில் அன்பு காட்டிட முதல் படி அவற்றை நாம் அவதானிப்பதே. நம்மைச் சுற்றியுள்ள உலகத்தை அவதானிப்போம். நேசிப்போம் உயிர்கள் அனைத்தையும்.

Comments

  1. Hahaha, so funny read about your experience as wild amma..keep exploring wild family 🥰

    ReplyDelete
  2. கானுயிர் புத்தகங்களில் இருக்கும் ஒரு சிக்கல், வல்லுநர்களுக்கு மட்டுமே புரியும் வகையில் எழுதப்படுவது. ஆனால் சாமானியர்களையும் கவர்கிற வகையில் ரசனையுடன் எழுதப்படுவது தான் அனைத்து நிலை மக்களுக்கும் விழிப்புணர்வு சென்றடைய வழிவகுக்கும். இதோ அப்படி ஒரு எழுத்தாளர் உருவாக்கத்தில்...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

எனக்குப் பிடித்த குமரி உணவுகள்

வாசந்தி- குரலற்றவர்களின் குரல்

'வெயிலோடு போய்' - ச.தமிழ்ச்செல்வன்