'வெயிலோடு போய்' - ச.தமிழ்ச்செல்வன்
இன்று பணி நிமித்தம் தூத்துக்குடி மாவட்ட கிராமப்புறங்களில் பயணித்துக் கொண்டு இருந்தேன். கிராமங்களின் ஊடாக பயணிக்கும் போது, அந்த மக்களிடம் இந்த காலகட்டத்திலும் எஞ்சி இருக்கும் எளிமையும், அறியாமையும், இந்த கொடும் வெயிலிலும் வெம்பரப்பில் ஆடு மேய்க்கும், விவசாயம் செய்யும் உழைப்பும் என்னை எப்போதுமே ஆச்சர்யத்திலும் சொல்ல முடியாத ஒரு மென் சோகத்திலும் ஆழ்த்தும். எள்ளுச் செடிகள் பூத்திருக்கும் காடுகளில் புலத்தணிக்கை செய்து கொண்டிருந்த போது 'மாவில்பட்டி - 4 கிமீ' என்ற பெயர்ப்பலகை கண்ணில் பட்டது. மாவில்பட்டி என்ற ஊரின் பெயர் உடனடியாக என்னை 'வெயிலோடு போய்' மாரியம்மாளின் கையில் பிணைத்துவிட்டது. மாவில்பட்டி, மாரியம்மாளுக்கு அவளுடைய அண்ணன் பார்த்து வைத்த மாப்பிள்ளையின் ஊர்.
நஞ்சை, புஞ்சை, புலப்படம், இந்த சட்டம் ,அந்த விதி என வேலை பார்த்தபடியே நேரம் போனாலும், மனதுக்குள் இந்தக் கட்டுரைக்கான சொற்கள் குமிழியிட்ட படி இருந்தன. இயக்குநர் சசியின் "பூ" திரைப்படம் மூலம் பலருக்கு ச.தமிழ்ச்செல்வன் எழுதிய "வெயிலோடு போய்" சிறுகதை பரிச்சயமாகி இருக்கும். நான் முதலில் சிறுகதையைத்தான் படித்தேன். கரிசல் இலக்கிய பிதாமகர் என்று போற்றப்படும் கி.ராஜநாராயணன் அவர்கள் தொகுத்த 'கரிசல் கதைகள்' சிறுகதைத் தொகுப்பில் முதல் கதையாக இருந்தது வெயிலோடு போய். எழுத்தாளர்கள் பூமணி, பா.செயபிரகாசம், ஜி.காசிராஜன், கு.அழகிரிசாமி,மேலாண்மை பொன்னுசாமி, சோ. தர்மன், கோணங்கி உள்ளிட்ட பலரின் கதைகள் அந்தத் தொகுப்பில் உண்டு. கரிசல் மண்ணின் சவால்களை, அந்த மக்களின் வாழ்க்கை, பண்பாடு ஆகியவற்றை எடுத்துக்காட்டும் அற்புதமான கதைகள். அந்தக் கதைகளை நான் படித்த காலகட்டத்தில், தென்மாவட்டங்களுக்கு நான் சென்றது கூட இல்லை. ஆனால் வெயிலும், வெடித்துக்கிடக்கும் வெம்பரப்பும், கடும் உழைப்பும், கொடும் ஜாதிய அடுக்குகளும் நேரில் பார்த்தது போல என் மனதில் பதிந்து போனது. பின்னாட்களில் தெற்கில் பணிபுரியத் தொடங்கிய போது, கோவில்பட்டியும் அதன் சுற்று வட்டாரமும், அந்தப் பகுதிக்கேயான மொழியும் என்னை 'தெக்கத்திக்காரியாக' உணர வைத்தன. கதைகளின் வழி நான் அறிந்திருந்த ஊர்கள், மனதளவிலும் எனக்கு நெருக்கமாகின.
கரிசல் கதைகள் தொகுப்பின் மூலம்தான் மழைக்கஞ்சி எடுப்பது, மாடுகளின் மீதான சம்சாரிகளின் நேசம், மண் மீதான வெறி, மழை வருவதற்கு முன்பான அறிகுறிகள், கொடுப்பைக்கீரை, குளத்து மீன், கிராமத்துத் திருவிழாக்கள், அவற்றைச் சுற்றி இருக்கும் கொண்டாட்டம் தாண்டிய அரசியல் எனப் பலவற்றை அறிந்து கொண்டேன். உறவுகளுக்குள் பொருளாதார ரீதியில் பேதங்கள் என்றால், சமூகத்தில் உடைமையின் பெயராலான வர்க்க பேதம் என ஒரு சமூகத்தின் கண்ணாடியாகத் திகழ்பவை இந்தக் கதைகள். "அய்யாவுக்குப் போகதான் மத்தவங்களுக்கு " என்று ஒரு சிறுவன் போகிறபோக்கில் சொல்வதாக பா...அவம் கதையில் வரும். உண்மையை சமூகத்தின் மனதில் பதியும் வகையில் அழகாகச் சொல்லும் கதைகளில், ஒரு பெண்ணின் உள்ளார்ந்த காதலை மிக இயல்பாகச் சொல்லும் கதை 'வெயிலோடு போய்'.
மாரியம்மாள் அவளது அம்மா வழி மாமன் மகன் தங்கராசுவுக்குத்தான் என்பது போலவே வளர்கிறாள். தகப்பன் இறந்துபோகும் காரணத்தால் படிப்பை நிறுத்தி விட்டு வெக்கை உமிழும் பூமியில், தீப்பெட்டி ஒட்டும் வேலைக்குச் செல்கிறாள். வேலை மாற்றத்தால் வேறு ஊருக்கு தங்கராசு குடிபெயர்ந்து போனாலும், அவன் மீதான அன்பை நீரடிக் கூழாங்கல்லென சுமந்தபடி அலைகிறாள் மாரி. தங்கள் வசதிக்கு ஏற்றபடி தங்கராசுக்கு வேறு இடத்தில் பெண்பார்த்து தகவல் சொல்லும் தன் சகோதரன் மேல் மிகுந்த மனவருத்தம் கொண்டவர்களாக மாரியின் அம்மாவும் அண்ணனும் ஆகிவிட்ட போதும் மாரிக்கு தங்கராசு மீதிருக்கும் பாசம் மாறாது. மாவில்பட்டியில் மாப்பிள்ளை பார்த்து அவளைக் கட்டிக் கொடுத்த பின்னர் திருவிழாவுக்கு ஊருக்கு வரும் தன் மச்சான் தங்கராசுவையும் அவன் கட்டிக்கொண்ட அக்காவையும் பார்க்கும் ஆசையில் ஊருக்கு வருவாள் மாரி. அப்போது வெறுப்பு இழையோட தங்கராசுவின் மனைவி அவனிடம் பேசுவதைக் கேட்கும் மாரிக்கு தாளமுடியாத துக்கம் பொங்கி வரும். அன்று இரவு திருவிழாவுக்கு ஊர் வரும் கணவனிடமும் அம்மா அண்ணனிடமும் ஒன்றும் பேசாமல் இறுகி இருக்கும் அவளை கடிந்து கொள்வான் கணவன். அணை உடைத்தாற் போல் மாரி ஏங்கி ஏங்கி அழுவதோடு கதை நிறையும்.
கதையின் பேரழகே அதன் இயல்புத் தன்மைதான். மாரியின் காதலை இயல்பாகவே கடத்திப் போவார் ச. தமிழ்ச்செல்வன். புனிதப்படுத்தும் எந்த உணர்வையும் அவலப்படுத்துவதும் நம் வழக்கம் தான் இல்லையா? இதில் மாரியின் காதல் மிக மிக இயல்பாக மலரும். "மச்சானைப் பத்தின ஒவ்வொரு சேதியையும் சேர்த்துச் சேர்த்து மனசுக்குள்ளே பூட்டி வச்சிக்கிட்டா. வருஷம் ஓடினாலும் பஞ்சம் வந்தாலும் அய்யா செத்துப் போயி வயித்துப் பாட்டுக்கே கஷ்டம் வந்தாலும் அவனைப் பத்தின நினைப்பு மட்டும் மாறவே இல்லை. அதனாலேதான் தங்கராசு அவளுக்கில்லை என்று ஆன பிறகும்கூட அவளால் அண்ணனையும் ஆத்தாளையும் போலத் துப்புரவாக வெறுத்துவிட முடியவில்லை" என்னும் வரிகளில் மாரியின் மனதில் தங்கராசுவின் மீதான காதல் நிலத்தடி ஈரமாக கசிந்து கிடப்பது நமக்குப் புரியும். அந்த நேசம் அவனின் நன்மையை நாடுவதாகவும், அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று விரும்புவதாகவும் மட்டுமே இருக்கிறது." எங்கிட்டு இருந்தாலும் நல்லாருக்கட்டும்" என்றே எண்ணும் மனசு அவளுக்கு.
இன்றும் மெய்யழகன் படத்தில் "உன்னையே கட்டி இருக்கலாம்" என்று சொல்லும் அரவிந்த் சாமியின் அத்தை மகளை நாம் சிலாகிக்கிறோம். ஏன் ஹீரோவான காதலனை திருமணம் செய்யாவிட்டால் அந்தப் பெண் கஷ்டப்பட்டே ஆகவேண்டிய கட்டாயம் என்ன? மாரியுடைய கணவன் மாரியின் மீது மிகுந்த அன்போடு இருப்பதை நாம் கதை வழி அறிகிறோம். "அவ ஊரு இந்தா மூணு மைலுக்குள்ளே இருக்குங்கிறதுக்காக ஒன்ரவாட்டம் ஊருக்குப் போனா எப்படி? அவ போறதப் பத்திகூட ஒண்ணுமில்ல. போற வட்டமெல்லாம் கடையிலேருந்து பருப்பு, வெல்லம் அது இதுன்னு தூக்கிட்டு வேற போயிர்றா. இந்தச் சின்ன ஊர்லே யேவாரம் ஓடுறதே பெரிய பாடா இருக்கு. இப்ப கோயில் கொடைக்குப் போணுமின்னு நிக்கா என்று வயிறு எரிந்தான். ஆனாலும், ஒரேடியாக அவளிடம் முகத்தை முறிச்சுப் பேச அவனுக்கு முடியாது. அப்பிடி இப்பிடியென்று ரெண்டு புலப்பம் புலம்பி அனுப்பி வைப்பான்." அவளிடம் முகத்தை முறித்துப் பேச முடியாதவன், அவள் அழுவதைக் கண்டு சமாதானம் செய்தபடி இருப்பான். "பூ" திரைப்படத்தில், நடிகர் இனிகோ அந்தப் பாத்திரத்தை மிக அழகாகக் கையாண்டிருப்பார்.
சிறுவயதிலேயே கம்மாத் தண்ணியில் குளித்தால் சொறி சிரங்கு வரும், கஞ்சி குடித்தால் வகுறு வைத்து மாமனுக்குப் பிடிக்காது என்று மாமனுக்காகவே இருக்கும் மாரிக்கு, அவன் மனைவி அவனிடம் கோபமாகப் பேசும்போது ஒருவித ஏமாற்றமும் வேதனையும் தோன்றுவதை மிக அழகாகக் காட்சிப்படுத்தி இருப்பார் எழுத்தாளர். "எல்லாத்துக்கும் மேலே அந்த வார்த்தைகளது வெறுப்பின் ஆழம், தாங்க முடியாத வேதனையைத் தந்தது. ராத்திரி ஊரோடு கோயில் வாசலில் பொங்கல் வைக்கப் போயிருந்தபோது இவ மட்டும் படுத்தே கிடந்தாள். ஒவ்வொன்றாக சிறுவயதில் அவனோடு பழகினது… அய்யாவைப் பத்தி… ஆத்தாளைப் பத்தி… அண்ணனைப் பத்தி… எல்லோரும் படுகிற பாட்டைப் பத்தி… அந்த அக்காளைப் பத்தி நினைக்கக்கூட பெருந்துன்பமாயிருந்தது. குமுறிக்கொண்டு வந்தது மனசு" கரிசல் காட்டின் வாழ்வில் எத்தனையோ பாடுகள் பட்டாலும் வெறுப்பின் ஆழம் மிகவும் தீர்க்கமானதாக அந்த எளிய மனதுக்குத் தோன்றுகிறது. ஏனென்றால் மாரிக்கு யாருடனும் சமர் இல்லை.அவளைக் கல்யாணம் கட்டாவிட்டாலும் தங்கராசு அவள் பிரியத்துக்குரிய மச்சான் தான். "இத்தனைக்குப் பிறகும், கோவில் கொடைக்கு மச்சான் வந்திருக்காகன்னு தெரிஞ்சதும் உடனே பாக்கணுமின்னு ஓடியாந்துட்டா. அவுக எப்படி இருக்காக? அந்த அக்கா எப்படி இருக்காக? மச்சானும் அந்த அக்காளும் நல்லா பிரியமா இருக்காகளான்னு பாக்கணும் அவளுக்கு" மாரியின் எளிய மனதின் அழகான எண்ணம் இது. ஒருவேளை நம் அனைவரின் அடிப்படைப் பண்புமே இதுவாகக் கூட இருக்கக்கூடும், நமக்கு நாமே போட்டுக்கொள்ளும் திரைகளைத் தாண்டி விட்டால்.
இந்தக் கதை முழுவதும் ஒரு எளிமையான பெண்ணின் இயல்பான மன ஓட்டத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியும். கரிசல் மண்ணின் பஞ்சத்தில் மாரியின் அப்பா இறந்து போவதையும், பஞ்சம் எப்படி மாரியைக் குழந்தைத் தொழிலாளி ஆக்குகிறது என்பதையும், வறுமையின் கூரிய கரங்கள் உறவுகளை எப்படி விலக்கி வைக்கிறது என்பதையும் கதையின் ஓட்டத்தினூடே நாம் அறியலாம். ஆனால் எந்த உணர்வுமே மிகைப்படுத்தப் படாமல் அதன் போக்கில் கையாளப்பட்டிருக்கும் அற்புதமான சிறுகதை இது. மாரிக்கு இருக்கும் அழகான உள்ளார்ந்த நேசம் தான் இன்றைய தேவை. உணமையில் சுமக்க முடியாக பெரிய பாரம் மற்றவர் மேல் நமக்குள்ள குரோதமும் வெறுப்பும் தான் என்று தோன்றுகிறது. அந்த பாரத்தை இறக்கி வைத்தால் மனம் மிக லேசாவதை உணரலாம். உலகத்தை உயிர்ப்பிப்பவை நேசத்தின் மென் கரங்கள் மட்டுமே அல்லவா?
" வெயிலோடு போய் " தொகுப்பின் அட்டை கருப்பு வெள்ளை படத்துடன் முதல் பதிப்பில் இருந்தது .
ReplyDeleteஅந்தக் காட்சிப்படிமம் விவரணையில் கொண்டு வரப்பட்டுள்ளது.
மறுவாசிப்புக்கு தூண்டியுள்ளது.
உயிர்ப்புடன் அறிமுகம்.
தங்கள் எழுத்து நடை இந்த நூலை இந்த கதையை உடன் படிக்கத் தூண்டுகிறது. நன்றி மேடம்.🙏 By VMS
ReplyDelete