நாஞ்சில் நாடன் சிறுகதைகள்
வட்டார வழக்கு என்று ஒரு விஷயம் தமிழ் பேச்சு மொழியில் இருக்கிறது என்று அறியும் முன்னரே, நான் படித்த சிறுகதை நாஞ்சில் நாடனுடையது. என் பத்தாம் வகுப்பில் தமிழ் பாடப்புத்தகத்தோடு சேர்த்து, முக்கியத் தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைகள் அடங்கிய சிறுகதைகொத்து துணைப்பாடம் எங்களுக்கு இருந்தது. அதில் இருந்த பல கதைகள் மிக அழகாகவும் மனதை வருடும் வகையிலும் எழுதப்பட்டு இருந்தன. ஆனால் ஐந்தில் நான்கு கதையில் வரும் எஸ்.கே.முத்துவும், அந்தக் கதைக் களமும் என் மனதில் இன்னும் பசுமையாக நினைவில் இருக்கிறது. சின்னஞ்சிறு கதையிலும் நாஞ்சில் நாட்டின் உணவுக்கலாச்சாரம், பேச்சு வழக்கு, உறவுகளின் முறைகள் ஆகியவற்றை இயல்பான (கொஞ்சம் புரிந்துகொள்ளக் கடினமான) வழக்கில் எழுதியிருப்பார் நாஞ்சில் நாடன். அந்தக் கதைக்குப் பிறகு, அவர் ஆனந்த விகடனில் எழுதிய "தீதும் நன்றும்" எனக்கு ரொம்பவும் பிடித்தது. அவரது படைப்புகளைத் தேடித்தேடி படிக்கத் தொடங்கினேன்.
தலைகீழ் விகிதங்கள், நள்ளென்று ஒலிக்கும் யாமம், எட்டுத்திக்கும் மதயானை, சூடிய பூ சூடற்க போன்ற நூல்களை பலமுறைப் படித்திருப்பேன். ஆனால், எனக்கு ரொம்பவும் பிடித்தது, நாஞ்சில் நாடன் சிறுகதைத் தொகுப்பு. இந்தக் கதைகள் அனைத்தும் குமரி மாவட்டத்தில் வாழ்பவர்களின் வாழ்வியல் குறித்தோ, அங்கிருந்து புலம் பெயர்ந்து வேறு மாநிலங்களில் வாழும்போது அவர்கள் எதிர்கொள்ளும் அனுபவங்கள் குறித்தோ அல்லது நாஞ்சில் நாடனுக்கேயான புனைவுலகின் பகடியாகவோ பாகுபட்டு இருப்பதாக எனக்குத் தோன்றும். அனைத்துக் கதைகளிலும் விரவி இருக்கும் உண்மை நம் மனதைத்தொடும். ரத்தமும் சதையுமான மனிதர்களுக்கிடையே அருவமாக எப்போதும் இருந்துவரும் ஆதிக்க மனோபாவத்தையும், ஏமாற்றும் குணத்தையும் வன்மத்தையும் தோலுறித்துக் காட்டும் கதைகள் இவை. அதோடு எளிய மனிதர்களின் இயல்பான மனித்தன்மையையும் ஊடுபாவாக இந்த சிறுகதைகளில் நாம் காணலாம்.
குமரி மாவட்டத்திலிருந்து மும்பைக்குச் (அப்போது பம்பாய்) சென்று பணிபுரியும் எஸ்.காத்தமுத்துவின் சொந்த ஊர் வருகை குறித்துப் பேசும் கதை ஐந்தில் நான்கு. இளம் வயதில் தானும் அவ்வாறு மும்பைக்குச் சென்று பணியாற்றியவர் என்பதால் அவ்வாறு புலம் பெயர்பவர்கள் எதிர்கொள்ளும் கலாச்சார சிக்கல்கள், தங்கும் இடம் மற்றும் உணவின் போதாமை, வெளியூரில் வேலை செய்பவர்கள் குறித்த ஊர்க்காரர்களின் எதிர்பார்ப்பு, அதனை ஈடு செய்ய வேண்டிய கட்டாயம் என பல அடுக்குகளில் இந்தக் கதையை நாஞ்சில் நாடன் எழுதி இருப்பார். 'தூரம் தொலைவில்' வேலை பார்க்கும் முத்து, சொந்த ஊருக்கு வரும்போது, தான் வசதியாக வாழ்வதான பிம்பத்தைக் கட்டமைக்க விரும்புவான். அதிகாலை நேரம் நாகர்கோயில் பேருந்து நிலையத்தில், கூலிங் கிளாஸ் அணிந்தபடி விரைவுப் பேருந்தில் இருந்து இறங்கும் அவன் தோற்றம் பற்றிய வர்ணனைகளோடு துவங்கும் கதை. "சொந்த ஊரான ஈசாந்திமங்கலம் அங்கிருந்து நாலே மைல்தான். பத்து நிமிடத்துக்கு ஒரு முறை அந்த வழியாக பஸ்கள் உண்டு. ஆனால் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு பம்பாயில் இருந்து வருபவன் பஸ்ஸிலா போவது? அது கௌரவத்துக்கு இழுக்கு என்று அவனுக்குத் தோன்றியது". ஆகவே ஒரு லாட்ஜில் அறை எடுத்துத் தங்கி, பொழுது நன்றாக விடிந்த பிறகே ஊருக்கு செல்வான். ஊரில் தங்கி இருந்த நாட்களில் சீட்டைத் தள்ளி எடுத்து வந்த காசும், இரவல் வாங்கி வந்த பொருட்களும் எதேதோ வகையில் காலியாகிவிட, உடலும் மனமும் கனத்து மும்பைக்குத் திரும்புவான் முத்து. 'இந்தக் கடன்களை எல்லாம் கழிக்க இன்னும் எத்தனை நாட்கள், " தோ மசால் தோசா, ஊத்தப்பா ஏக் பிளேட், வடா சாம்பார் தீன்" என்று கூச்சலிட வேண்டும் என்று எண்ணுகையில் அவன் கண்கள் கலங்கிக் கசிந்தன' என்று கதை முடியும்போது முற்றிலும் வேறு விதமான தரிசனம் நமக்குக் கிடைக்கும்.
இந்த சிறுகதைக்குள் வரும் அயிலைக் கருவாடு புளிமுளம், திரைச்சி மீன் தீயல் எல்லாம் நாஞ்சில் மண்ணில் மட்டுமே காணக்கிடைக்கும் உணவு வகைகள். இந்த சிறுகதைத் தொகுப்பில் வரும் உணவு வகைகள் குறித்தே தனி கட்டுரை எழுதலாம். ஒரு விரிவான குமரி மாவட்ட சைவ உணவில் 21 வகை கூட்டான்கள், பச்சடி கிச்சடி வகைகள், எரிசேரி ,புளிசேரி உள்ளிட்ட வகைகள் இருக்கும். இவற்றோடு பிரதமனும் அவற்றை சாப்பிடும் விதமும் ரொம்பவே ரசனைக்குரியது. இவற்றை மிக அழகாக அவரது கதைகளில் எழுதி இருப்பார் நாஞ்சில் நாடன். விருந்து மட்டுமல்ல, "ஒடுக்கத்திய வெள்ளிகளில்" செய்யப்படும் பணியாரம், பழங்கஞ்சியும் பச்சை மிளகாயும், துணை அடுப்பில் எப்போதும் அணந்து நுரைத்துக் கொண்டிருக்கும் பழஞ்சித்தண்ணீர், ரசவடையும் தேயிலையும் என்று குமரியின் நாஞ்சில் வட்டாரத்தின் தனி மொழியும் தனி உணவும் குறித்த ஒரு ஆவணமாகவே அவரது கதைகள் திகழ்கின்றன. மண் சார்ந்த உணவு வகைகளை அறிவதில் தனிப்பட்ட முறையில் மிகுந்த ஆர்வம் கொண்ட எனக்கு அவரது கதைகளில் வரும் உணவு குறித்த விவரிப்புகள் மிகவும் பிடிக்கும். அவரது சமீபத்திய படைப்பான " நாஞ்சில் நாட்டு உணவுகள்"( காலச்சுவடு பதிப்பகம்) படித்த போது, ஒரு முழு நாஞ்சில் விருந்தை
சுவைப்பது போலவே இருக்கிறது. எந்த வரிசையில் உணவு உண்ண வேண்டும், எந்த உணவுக்கு எது தொடுகறி, பாரம்பரியமான நாஞ்சில் உணவுகள் எவை என்ற
நாவூற வைக்கும் விதத்தில் எழுதி இருக்கிறார். அங்கே வசித்த காலத்தில், நாஞ்சில் உணவுகளை பெரிதும் விரும்பி உண்ட எனக்கு இப்போதே அவியலும், மூன்று வகை பிரதமனும் சுவைக்கும் ஆசை பெருகுகிறது.
இடலாக்குடி ராசா 'பரதேசி' திரைப்படத்தின் வார்ப்பு மூலமாக நமக்கு அறிமுகமான உருவம். சுசீந்திரத்திலும் தேரூரிலும் நிகழும் கதையான "தலைகீழ் விகிதங்களை" த்தான் 'சொல்ல மறந்த கதை'யாக நாம் திரையில் பார்த்தோம். நாவலில் கமழும் ஒரு அற்புத நறுமணத்தை அந்த நாவலைப் படித்தால் மட்டுமே நம்மால் உணர முடியும். "கிழிசல்" எனக்கு மிகவும் பிடித்த இன்னொரு சிறுகதை. திருப்தியாக உணவருந்திவிட்டு, கடைக்காரரை ஏமாற்றி விட்டு வரும் அப்பாவை அவருடைய மகனான ஒரு எளிய சிறுவன் மதிப்பிடும் இடம், நம் பிறழ்வுகளை செவிட்டில் அறைந்தது போல கேள்வி கேட்பதாக அமையும். 'எல்லோரும் இந்நாட்டு மன்னர்' சிறுகதையின் அரசியல் பகடி முற்றிலும் வேறானது.
பசியும், பசிக்கும்போது உணவு கிடைக்காத வேதனையும் மறுகலும் பல கதைகளில் காணக்கிடைக்கும். விலக்கும் விதியும், விரதம், இருள்கள் நிழல்கள் அல்ல ,இடலாக்குடி ராசா போன்ற கதைகளில் இந்த மறுகலை நம்மால் உணர முடியும். எதேதோ காரணங்களுக்காக பந்தியில் இருந்து எழுப்பிவிடப்பட்டு இருப்போம் இல்லையா நாமும் ? அந்த நேர அவமானத்தை எந்த வார்த்தையில் உணர்த்தவோ வெளிப்படுத்தவோ முடியும்? இந்தக் கதைகளில் அந்த வேதனையை நம்மால் உணர முடியும்.
நாஞ்சில் நாடனின் சிறுகதை மாந்தர்கள் அனைவரும் மிக எளிய மனிதர்களே. இட்லி விற்று மகனை வளர்த்த தாய், பின்னாட்களில் அடையும் வேதனைமிக்க இறுதிக்காலம் நம் மனதைக் கரைக்கும். தங்களுக்குக் குழந்தை இல்லாததால் இரண்டாம் திருமணம் செய்ய முனையும் பெற்றோரை மறுதலிக்க நாம் நினைத்துப் பார்க்காத முடிவை எடுக்கும் மகனை வெளிப்படுத்தும் முரண்டு சிறுகதை, கஷ்டப்பட்டு பிடித்த விலாங்கு மீனை அதிகாரத்தைக் காட்டி கவர்ந்து போகும் காவல் தலைவர், மருத்துவமனையில் உடன் இருந்த நோயாளியின் உடல் நிலை குறித்து கவலைப்படும் "வந்தான் ,வருவான், வாராநின்றான்", சாதி இல்லை என்று சொல்லிக்கொண்டே, மருமக்கள் வழி வரும் வரனை தட்டிக்கழிக்கும் குடும்பத்தலைவர் என மனித மனத்தின் உன்னதத்தையும் வக்கிரத்தையும் வெளிப்படுத்தும் கதைகள் இவை அனைத்தும். இவர்களெல்லாம் நாஞ்சில் நாடனின் கதாபாத்திரங்கள் என்றால் கும்பமுனி நாஞ்சில் நாடனே எனலாம். பகடியின் உச்சகட்டம் கும்பமுனி பாத்திர வார்ப்பு.
ஒரு கதையோ, நாவலோ ஒரு சம்பவத்தை மட்டும் குறிப்பிடுவதல்ல. அந்தக் கதை நிகழும் இடம், அந்த மக்கள் சார்ந்த சொல்லாடல்கள், அங்குள்ள சாதிய பாகுபாடுகள், பாலியல் கூறுகள், அவர்களின் வரலாறு, அந்த நிலத்தின் உணவு, திருவிழாக்கள், சிறு தெய்வங்கள் என்று காலத்தின் கண்ணாடியாக விளங்குபவை. அந்த வகையில், நாஞ்சில் நாட்டின் கலாச்சாரத்தை சமரசம் எதுவுமின்றி பிரதிபலிப்பவை நாஞ்சில் நாடனின் எழுத்துக்கள். "அவரவர் வாசலை காற்றுப் புகாமல் நெருக்கி அடைத்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறது சனங்கள். மனங்களைக் கூடக் கொஞ்சம் கொஞ்சமாக அடைத்துக் கொண்டு விடுவார்கள்" என்று எட்டு திக்கும் மதயானையில் நாஞ்சில் நாடன் எழுதுகிறார். அடைத்துக் கொண்ட மனங்களைத் திறக்கும் சாவி இலக்கியமும் தானே?
Nice writing style
ReplyDelete🌹🌹🌹nice mam
ReplyDelete