காய்ந்த தோசையும் தீய்ந்த பூரியும் –தியாகமென்னும் கற்பிதம்
ஒரு பெண்கள் கல்லூரியில் நடந்த மகளிர் தின விழாவில் கலந்து கொண்டேன். நகரின் பிரபலமான,பெரிய கல்லூரி அது. மாணவிகளும் தற்கால நாகரிகத்தின் பிரதிநிதிகள்தான். எனக்கு முன்பாக அரசியல் விழிப்புணர்வு, பொருளாதார சுதந்திரம் முதலிய தலைப்புகளில் அமர்வுகள் நடந்திருந்தன. என் முறை வரும்போது, பார்வையாளர்களை உரைக்குள் கொண்டுவர அவர்களிடம் பேசத்தொடங்கினேன். சில சொற்களை நான் சொல்வேன். அது பற்றி அவர்கள் மனதில் தோன்றும் ஒற்றைச்சொல் கருத்தை அவர்கள் சொல்ல வேண்டும்.ஆண்,பெண், காதல், கணவன்,திருநங்கை என்பதாக சொற்கள் நீண்டன. ஆண் என்ற சொல்லுக்கு வீரம், தைரியம், என்று பதில் கிடைத்தது. பெண் என்றால் அழகு,மென்மை என்று சொன்னார்கள். “அம்மா” என்ற சொல்லுக்கு, அனைவரும் ஒரே குரலில் “அன்பு” என்று கூவினர். அதற்கு பாதிக்கும் மேற்பட்டோர் சொன்ன வார்த்தை “தியாகம்”. இங்கிருந்து என் உரையைக் கொண்டு செல்ல விரும்பினேன். இப்போது இது தொடர்பான ஒரு கேள்விக்கு வரவேண்டும். “உங்கள் வீட்டில் சமைப்பவர் யார்” வெகு சிலர் தவிர பெரும்பாலான மாணவிகள் “ அம்மா” என்று சப்தமிட்டனர். “எல்லாரும் சேர்ந்துதானே சாப்பிடுவீங்க? அட்லீஸ்ட் ராத்திரி சாப்பாடு ??” ஒரு சிறிய அசௌகரியமான மவுனம். “இல்ல ..அம்மாதான் கடைசியா சாப்பிடுவாங்க”. “சரி…சமைக்கும்போது, ஒரு தோசை கருகிடும், ஒரு பூரி உப்பி வராது. அதெல்லாம் யார் சாப்பிடுவாங்க??” இந்த முறை அரங்கில் இருந்த பேராசிரியைகளும் சேர்ந்து சொன்னார்கள் “நாங்கதான், அம்மாதான்” … இந்த இடம் தான் நாம் கவனம் செலுத்த வேண்டிய இடம்.
நம் அம்மாக்கள் செய்த பல தியாகங்கள் தான் நம்மை இன்று உயரப் பரக்க வைத்திருக்கின்றன. அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் அம்மா என்னும் ஜீவனின் தியாகத்துக்குப் பழகிய பின் நாம் அதை அம்மாவின் பெருந்தன்மையாகப் பார்ப்பதில்லை. நம் பிறப்புரிமையாகப் பார்க்கிறோம். நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமர்த்தியா சென்னின், ‘ பெண்களுக்கு எதிரான ஏழு பாகுபாடுகள்’ என்னும் ஆய்வுக்கட்டுரையில், உணவு மேசை பாகுபாடு என்பதைக்குறித்து சொல்லி இருக்கிறார். பிறப்பிலேயே பெண்களுக்கு ஏற்படும் முதல் பாகுபாடு அவளது உணவின் மூலம் அவளது வீட்டிலேயே காட்டப்படுகிறது. வீட்டில் ஆண் குழந்தையும் பெண் குழந்தையும் இருந்தால்,முதலில் ஆணுக்கே உணவு பரிமாறப்படுகிறது. பெண் குழந்தை உணவு சமைக்கும் அல்லது பரிமாறும் வேலையை செய்யுமாறு பணிக்கப்படுகிறாள். சமீபத்தில், தோசையை முன்வைத்து நடந்த நீயா நானா நிகழ்ச்சியில் மகன் 22 தோசை சாப்பிடுவான், அதை மகள் செய்து தருவதில் தவறென்ன இருக்கிறது என்று பேசிய தாயை நாம் பார்த்தோம். தோசை சுடுவதில் பெண்களுக்கு உள்ள வேலைப்பளுவையும், அந்த குறிப்பிட்ட உணவு வகை எப்படி பெண்ணை அடுப்போடு கட்டிப்போடுகிறது என்பதை இந்நிகழ்வு விவாதித்தது. குடும்பமாக உணவு அருந்துவதை நம் உணவுப்பழக்கம் தடை செய்கிறது. சூடான தோசை என்றால், ஒருவர் செய்யச் செய்ய மற்றவர் சாப்பிட வேண்டும். சாதம் ,குழம்பு போல இலை போட்டு உணவருந்த வேண்டும் என்றால் யாரேனும் பரிமாற வேண்டும். சில சமயங்களில் பார்த்துப் பார்த்து செய்த உணவு வகைகள் கடைசியாக ஒருவர் சாப்பிட வருவதற்குள் காலியாகிவிடும்.அதையும் நம் கைப்பக்குவத்துக்கான பரிசாக எண்ண நாம் பழக்கப்படுத்தப்பட்டு இருக்கிறோம். தனக்கென உணவை முன்பே எடுத்து வைத்துக்கொள்வது ஒரு வீடு என்னும் அளவில் சுயநலமாகவே பெரும்பாலும் பார்க்கப்படும். இந்த நிலையில் சுடும் தோசைகளில் ஒன்று காய்ந்துவிட்டாலோ, பூரியில் ஒன்று தீய்ந்துவிட்டாலோ அதைக் குழந்தைகளுக்கோ கணவனுக்கோ தராமல் தனியே எடுத்து வைத்து, அனைவரும் சாப்பிட்டபின், அடுப்பு மேடை அருகேயே நின்று, மிச்ச சட்னியை வழித்துப்போட்டுக்கொண்டு தான் சாப்பிடும் தாயை நாம் அனைவருக் பார்த்திருக்கிறோம் தானே? அந்தக்காட்சியை நாம் என்றாவது பொருட்படுத்தி இருக்கிறோமா? இதில் ஆண்களோ அடுத்தவர்களோ செய்வதற்கு ஒன்றுமில்லை. முதலில் தியாக சிலுவை சுமக்க விரும்புவதை நாம் நிறுத்த வேண்டும்.
பெண்கள் நமக்குள்ளாகவே போட்டுக்கொள்ளும் வேலிகளில் இதுவும் ஒன்று. பிள்ளைகளை விட்டுவிட்டு ஒரு ஐஸ்கிரீம் சாப்பிடுவதற்குகூட நமக்கு குற்ற உணர்ச்சி ஏற்படுகிறது. இது பொருளாதார பிரச்சினை நிச்சயமாக அல்ல. நாம் எப்படி நடந்து கொண்டால், நம் குடும்பம் நம்மை சுற்றியே சுழலும் என்று நம்மை அறியாமலேயே நாம் போடும் கணக்கு. அதிலிருந்து நாமேதான் வெளியே வர வேண்டும்.
பெண்களுக்கேயான ஊட்டச்சத்துக் குறைபாடுகள் பற்றி நாம் இப்போதுதான் பேசத்தொடங்கி இருக்கிறோம். ரத்தசோகை, எடை கூடியிருத்தல், கால்சியம் குறைபாடு, ஹார்மோன் பிரச்சனைகள், வயது காரணமாக ஏற்படும் மூட்டுவலி போன்ற பல உடல் நிலை பாதிப்புகளுக்குத் தவறான உணவுப்பழக்கங்களும் காரணம். தனியே உண்பதால் உணவு வீணாகக்கூடாது என்று அதிகமாக உண்பது, கருகிய சரியான பக்குவத்தில் இல்லாத உணவை உண்பது என்று நம் உடலை நாமே பாழ்படுத்திக்கொள்கிறோம். இதை எல்லாம் குடும்பத்துக்காகத்தானே செய்கிறோம் என்று நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம். உண்மையில் குடும்பத்தின் மீதான அக்கறை என்பது நம் உடல்நிலையை பாதுகாத்துக்கொள்வதில் தான் இருக்கிறது.
ஒருமுறை வீட்டில் யாருக்கு என்ன உணவு பிடிக்கும் என்று பேசிக்கொண்டு இருக்கையில் ஒரு உண்மையைக் கண்டுபிடித்தோம். எல்லோருக்குமே அவர்களின் சிறு வயதில் உண்ட உணவுகளின் மேல் தனித்த ஒரு காதல் இருக்கிறது. அவை தரும் நாஸ்டால்ஜியா மிகுந்த சந்தொஷத்தை அளிக்கிறது. ஆண்கள் எப்போதும் "எங்க அம்மா சமையல் போல வருமா" என்று பேசுவதைக்கேட்டு இருக்கிறோம். ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் பெண்கள் யாரேனும் அம்மா சமையல் குறித்து சிலாகிக்க முடிகிறதா? நம் பிள்ளைகள் தங்கள் அம்மா சமையலை உயர்வாகப்பேச என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யத்தொடங்கி விடுகிறோம். வீட்டு வேலைகளுக்கு ஆள் வைத்துக்கொள்ளும் குடும்பங்களில் கூட சமையலை வீட்டுப்பெண்கள் தான் செய்ய வேண்டும் என்ற எழுதப்படாத விதி இருக்கிறது. இதற்குள் சாதி ரீதியிலான காரணங்களும் இருக்கலாம். ஆனால் பெரும்பான்மை சமையல் வேலை என்பது பகிர்ந்துகொள்ளப்படாத விஷயமாகவே இருக்கிறது. இதற்கும் வீட்டில் செய்த உணவையும், அம்மா சமையலையும் ரொமாண்டிசைஸ் செய்யும் பழக்கம். இது மேன்மேலும் பெண்களை சமையல் அறைக்குள் பிணைக்கும் செயலாகவே தோன்றுகிறது. சமையல் என்பது ஒரு வேலை என்பதைத்தாண்டி அதனை உறவுகளோடும் உணர்வுகளோடும் பிணைத்துப்பார்ப்பதனால் ஏற்படும் விளைவு இது.
ச.தமிழ்செல்வன் அவரது ‘ஆண்கள் சமைத்தல் அதனினும் இனிது' என்னும் நூலில் குறிப்பிடுவதுபோல, “ஆண்கள் பற்றவைத்தாலும் அடுப்பு பற்றும்.அரிசி வேகும்”.முந்தைய காலத்தைக்காட்டிலும் இப்போதைய ஆண்கள் வீட்டு வேலைகளை பெண்களோடு பகிர்ந்து கொள்வது வரவேற்கத்தக்க மாற்றம். அதிலும் என்ன வேலை செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்பதற்கான மனத்தடைகள் இருபாலருக்கும் இருக்கவே செய்கின்றன. இந்த மனத்தடைகள் உடைபட வேண்டும்.
அம்மாவை தியாகத்தோடு இணைப்பதை விட்டுவிட்டு அம்மா என்பவளை ஒரு விருப்பு வெறுப்பு உள்ள தனி மனுஷியாக பார்க்க வேண்டும். காய்ந்த தோசையும் தீய்ந்த பூரியும் சாப்பிடுவதை தியாகமாக நினைப்பதை,சேமிப்பாக நினைப்பதை பெண்கள் முதலில் தவிர்க்க வேண்டும். நன்றாக சாப்பிடுவோம், உணவு மேஜையில் சமத்துவம் பேணுவோம்!
Well written. As a woman who is highly health conscious, it's a wake up call for me. I feel guilty when I eat something which my kids like. Now I realise that it's not required. Thank you so much for the enlightening message.
ReplyDelete