ரமணிசந்திரனும் மென் காதல் கதைகளும்



இலக்கியம் படிக்கும் அனைவரும் அதை பல ஜானர்களில் வகைப்படுத்தி படிக்கிறோம். ஆழமான கதைகள், கல்ட் வகை எழுத்து, பின் நவீனத்துவ பாணி எழுத்துக்களை படிப்பவர்களை தீவிர வாசிப்பாளர் என்று கருதுகிறோம். மாறாக லைட் ரீடிங் வகை கதைகளின் மேல் நாம் இலக்கிய வெளிச்சம் பாய்ச்சுவதில்லை. அவை குறித்த ஆய்வுகளையோ விமர்சனக்கட்டுரைகளையோ யாரும் எழுதி நான் படித்ததில்லை. நான் கண்ணில் படும் அனைத்தையும் படிக்கும் பழக்கம் உள்ளவள். மனம் போன வகையில் கட்டுரைகள், கதைகள், கவிதைகள் என எனக்குத் தோன்றுவதை அவ்வப்போதைய மனநிலைப்படி படிப்பது வழக்கம். கல்லூரி செல்லும் முன்னரே சுஜாதா, பாலகுமாரன், கி.ராஜநாராயணன், ராஜம் கிருஷ்ணன், ராஜேஷ்குமார் என பலரின் படைப்புகளை வாசித்து இருக்கிறேன். சுஜாதாவின் அபுனைவுகளும், அறிவியல் எழுத்துக்களும் ரொம்பவும் பிடிக்கும். ஆனந்த விகடனை வாரந்தோறும் வாங்குவோம் என்பதால், அதில் வரும் கட்டுரைகள்,கதைகள், என்று பரவலான வாசிக்கும் பழக்கம் இருந்தது. ஆனால் ரமணிசந்திரனை நான் முதலில் படித்தது என் கல்லூரிக் காலங்களில்தான்.
என் சீனியர் அக்கா ஒருவரைப் பார்க்க அவரது அறைக்கு சென்றபோது ரமணிசந்திரன் நாவல் ஒன்றைப் பார்த்தேன். புத்தகத்தைப் பார்த்தவுடன் வழக்கமான படிக்கும் ஆசை மேலிட, அவரிடமிருந்து அதைப் எடுத்துக்கொண்டு என் அறைக்கு வந்து படிக்கத்தொடங்கினேன். எட்டாம் வகுப்பில் இருக்கும்போதே ராஜம் கிருஷ்ணனின் இடதுசாரி நாவல்களுக்கு பழகி இருந்த எனக்கு இந்த நாவலின் போக்கு முதலில் வித்தியாசமாக இருந்தது. அதுவும் நாயகனின் தவறுகளை நியாயப்படுத்தும் விதமாக ஒரு முன்கதை சுருக்கம், அவனோடு இருக்கும் நாட்களில் நாயகி படும் துன்பம், பிறகு அவனிடமிருந்து பிரிந்து,சூழல் காரணமாக மீண்டும் அவனை சந்தித்து, அப்போது மனம் திருந்திய அவனை ஏற்றுகொள்ளும் கதைக்களம். எல்லா முன்னணி நாயகர்களின் சாதாரண சினிமாக் கதைதான் இது. ஆனால் அதில் ஒரு விஷயம் என்னை ஈர்த்தது என்றே சொல்ல வேண்டும். அந்தப் பெண்ணின் தன்மானமும், தவறு இழைத்தவன் முன் நிமிர்ந்து நிற்கும் பாங்கும்,  தன்னை உயர்த்திக்கொள்ள நாயகிக்கு இருக்கும் உத்வேகமும், பின்னாளில் நாயகன் திரும்பி வந்தாலும், அவன் மனம் திருந்தி, தவறுக்கு வருந்தி மன்னிப்பு கேட்கும் வரை தளராமல் நிற்கும் தன்னம்பிக்கையும் ஆண் மைய சினிமாவில் இருந்து இந்த நாவலை நிச்சயம் வேறுபடுத்திக் காட்டின. கொஞ்சம் கொஞ்சமாய் அவர் எழுதிய நாவல்களைப் படிக்க ஆரம்பித்தேன். பொதுவான சில சட்டகங்களுக்குள் அவரது அத்தனை கதைகளையும் பொருத்திவிடலாம். ஆனால் அத்தனையிலும் பெண் கதாபாத்திரங்கள் வலிமையுடன் உருவாக்கப்பட்டு இருக்கும்.
எண்பதுகளிலேயே, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண் அந்த விபத்துக்குப் பின் எப்படி வலிமை மிக்கவளாக உருமாறுகிறாள் என்று “என் உயிரே கண்ணம்மா” கதையில் அழகாக பின்னியிருப்பார் ரமணிசந்திரன். ஜெயகாந்தனின் அக்னி பிரவேசம் கதைக்கு இணையாக சொல்லக்கூடிய கதை இது. தனக்கு நேர்ந்த விபத்துக்குப் பின்னர் கதையின் நாயகி பாரதி, ஒரு கிராமத்தில், தாயுமானவர் என்னும் பெரியவரின் அரவணைப்பில் அவரது கடையில் வேலை செய்து வருவாள். அதோடு அவர் நடத்தி வரும் ஆதரவற்ற குழந்தைகளுக்கான ஆசிரமத்தையும் பராமரித்து வருவாள். போர்க்கலைகள் கற்று அதை தேவை ஏற்படின் பிரயோகிக்கவும் செய்வாள். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையுமாக இருப்பவளை அவளது முன் கதை அறியாமல், கிராமத்தில் தொழிற்சாலை அமைக்க வரும் இளைஞன் மதுசூதனன் விரும்பி மணக்கக் கேட்பான். முதலில் மறுப்பவள், அவன் மீது தனக்கும் அன்பு இருப்பதை உணர்ந்து அவனை மணக்க ஒரு நிபந்தனையுடன் ஒப்புக்கொள்வாள். அவனும் அதனை ஏற்று அவளை மணம் புரிந்து அவளை தோழி போல பாவித்து வாழ்ந்து வருவார்கள். தன் நிபந்தனையின் மூலமாக முழுமையான திருமண வாழ்வை அவனுக்கு தான் மறுப்பதை உணரும் பாரதி ஒரு சூழலில் தன் கடந்த காலத்தை அவனிடம் சொல்வாள். இந்தக் குற்றத்தை இழைத்தவன் தன் தூரத்து உறவினன் என்று புரிந்து கொள்ளும் மது, குற்றவாளியின் நிலை அறிந்து வருவதற்காக செல்வான். குற்றவாளிகள் அனைவருமே மோசமான முடிவை சந்தித்து விட்டதை தெரிந்து கொள்ளும் அவன் குற்றம் செய்தவனின் தந்தையை அழைத்து வந்து பாரதியிடம் மன்னிப்பு கேட்க வைப்பான். அதன்பின் தன் கணவன் தன்னை விலக்கிவிடப்போகிறான் என்ற தவிப்பில் இருக்கும் பாரதியிடன் அவன் சொல்வான், “காக்கை உன் தலையில் எச்சமிட்டுவிட்டால் உன் தலையை வெட்டிக்கொள்வாயா என்ன?”. கூட்டுப்பாலியல் வன்முறையை இத்தனை எளிதாக புறம் தள்ளி விடுவது உயர்ந்த விஷயம் இல்லையா? இப்போது வரை வன்கொடுமைகளை பெண்ணின் கற்போடு இணைத்துப் பார்க்கக்கூடாது என்று நாம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய நிலை இருக்கையில், இது ஒரு ஆரோக்கியமான மாற்று சிந்தனை இல்லையா? மறுமணம் செய்து கொள்ளும் சினிமா நாயகியும் கன்னியாகவே இருக்க வேண்டும் என்ற சினிமா கிளிஷேவுக்கும் இந்த நாவலுக்கும் எவ்வளவு தூரம்?
என் கல்லூரிக் காலங்களில் இந்த மென் காதல் கதைகளைப் படிப்பவர்களை “மில்ஸ் அண்ட் பூன்ஸ் கோஷ்டியா” என்று அறிவு ஜீவிக் கதைகள் படிப்பவர்கள் கிண்டல் செய்வது உண்டு. இதுவும் மேட்டிமை மனோபாவம்தான். அவரவர்க்கு இலகுவாகத் தோன்றும் கதைகளை அவரவர் ரசனைக்கு ஏற்ப படிக்கின்றனர். வாசிப்பவரின் மனதை கசடாக்காத, வக்கிரமற்ற, இதுபோன்ற பிரச்சினை இல்லாத கதைகளைப் படிப்பதில் தவறேதும் இல்லை என்பது என் கருத்து. சிவசங்கரி, வாஸந்தியின் படைப்புகளைப்போல ரமணிசந்திரனுக்கும் மில்ஸ் அண்ட் பூன்ஸுக்கும் ஆண் வாசகர்கள் இருக்கிறார்களா என்று தெரியவில்லை. அதனாலேயே இவற்றைப்படிப்பது பெரும்பாலானவர்களுக்கு ரசனைக்குறைவாக  தோன்றுமோ என்னவோ?  ரமணிசந்திரனின் சில கதைகளைத் தவிர பெரும்பாலானவைகளில் விரசமான காட்சிகள் வராது. காதல் காட்சிகளும் பூடகமாக இருக்குமே தவிர முகம் சுழிக்க வைக்கும் விதத்தில் இருக்காது. கதையில் வரும் நாயகனும் நாயகியும் அழகாக இருப்பார்கள் என்பதை நாம் குறிப்பாலேயே அறிவோம். அங்கம் அங்கமாக வர்ணிக்கும் அனாகரிகம் இருக்காது. குடும்ப வாழ்வில் ஆண், பெண் இருவருமே விட்டுக்கொடுக்க வேண்டும், ஒரு குடும்பத்தில் இருவரும் சமமானவர்களே என்ற கருத்து எல்லா குடும்பக் கதைகளிலும் வந்துவிடும். காதலியாக இருந்தாலும் நாயகியின் தன்மானத்துக்கு தனி மதிப்பு எப்போதும் இருக்க வேண்டும் என்பதை ரமணிசந்திரன் தன் கதைகளில் வலியுறுத்தவே செய்கிறார். அழகு பற்றி சொல்லும் போது தன் கண்ணுக்கு அழகாக தெரிதல் என்னும் (பியூட்டி லைஸ் இன் த ஐஸ் ஆப் த பிஹோல்டர்) விதத்தில் கதையோட்டம் இருக்குமே தவிர நிறத்தைக் கொண்டோ,குறிப்பிட்ட உடல் அளவில் இருப்பதுதான் அழகு போன்ற வரையறைகளோ எந்தக் கதையிலும் வராது. 
“வெண்ணிலவு சுடுவதென்ன” என்னும் கதையும் பாதிப்பிலிருந்து வலிமையுடன் மீளும் ஒரு பெண்ணின் கதைதான். மிக இளம் வயதில் பாதிக்கப்பட்ட ஒரு பெண் தன்னைத் தானே தன்மானத்துடன் வளர்த்துக் கொண்டு ,தன் மகளையும் மிக நல்ல பண்புகளுடன் வளர்ப்பாள். கதை நாயகர்களின் பெயர்கள், கதை நடக்கும் இடம் குறித்த வர்ணனைகள் அனைத்தும் ரமணி சந்திரன் கதைகளில் நேர்த்தியாக  இருக்கும். அவர்கள் சார்ந்த தொழில் பின்னணியும் விரிவாக குறிப்பிடப்படும். பெண்களும் தொழிலில் பங்கு பெறுவது உயர்வான விஷயமாக காட்டப்படும் அதே நேரத்தில், விவரம் அறியாமல் பெண்கள் இருப்பதை இடித்துரைப்பதாகவும் கதைகள் அமையும். பெப்பர் ஸ்பிரே பற்றியும் பெண்கள் தற்காப்பு கலைகள் அறித்திருக்க வேண்டும் என்றம்  வேறு யாரும் எழுதி  நான் படிக்கவில்லை இதுவரை. அவரின் பெரும்பாலான கதைகளில் பெண் பாத்திரங்கள் ஏதேனும் தொழில் செய்வதான பின்னணி காணப்படுகிறது. குறைந்தது 250 கதைகளை ரமணிசந்திரன் எழுதியிருக்கிறார். ஆனால் அந்த அளவு அவர் அங்கீகரிக்கப்படாத காரணம் எனக்கு புரியவில்லை. 
சில கதைகளில் காணப்படும் தரக்குறைவான வசனங்கள், பெண்ணுக்குப் பெண்ணே எதிராய் அமையும் நிலை போன்ற குறைகளைத் தவிர்த்து, நான் படித்த அளவில், நல்ல வாசிப்பனுபவத்தைத் தரும் கதைகள் நிச்சயம் ரமணி சந்திரன் எழுத்தில் உண்டு. அவரது சம காலத்து குடும்பக்கதை எழுத்தாளர்கள்  பலரின் கதைகளையும் நான் படித்திருக்கிறேன். அவற்றிற்கு கொஞ்சமும் குறைவில்லாத கதைக்களம் ரமணிசந்திரன் உடையது. "வல்லினமே மெல்லினமே" நாவலில் வாஸந்தி ஒரு இளம் தலைமுறை கதாபாத்திரம் மில்ஸ் அண்ட் பூன்ஸ் நாவல் படிக்கும் பெண்ணிடம்  சொல்வதுபோல எழுதி இருப்பார், “எங்க அம்மா படிச்சாங்க இதை. இதுக்கு மார்க்கெட் போகவே போகாதுன்னு தோணுது. சிக்கலில்லாத ரொமான்ஸ் கதைகள் எப்பவுமே மனசுக்கு சில்லுனு இருக்கு” ; “மத்திய வர்க்க பெண்களுக்கு இது ஒரு போதை”. இருக்கலாம். சுய வாழ்வின் இறுக்கங்களில் இருந்து தப்பிக்க இந்த நாவல்கள் வடிகால்களாக இருப்பது உண்மைதான். மனதைக் கலக்காக இலகுவான நாவல்கள் படிப்பதும் இலகுவான ஒரு பொழுதுபோக்கு தானே!

Comments

Post a Comment

Popular posts from this blog

எனக்குப் பிடித்த குமரி உணவுகள்

மனதை உறுத்தும் மோகமுள் - தி ஜானகிராமன்

வாசந்தி- குரலற்றவர்களின் குரல்