எஸ்.ராமகிருஷ்ணனின் துணையெழுத்து - வருடும் வாசிப்பு அனுபவம்

மனிதர்களுக்கிடையே எத்தனையோ மன வேறுபாடுகளும் கோப தாபங்களும் இருப்பினும் நாம் அனைவரும் சமூக அமைப்பில் இணைந்து வாழும் உயிர்களே. சமீபத்தில் எல்லோராலும் பாராட்டப்படும் "மெய்யழகன்" திரைப்படம், நாம் ஒருவரை ஒருவர் நேசிப்பதன் அவசியத்தை மிக இயல்பாக சொல்கிறது. அருள் என்ற மனிதனுக்கு உறவுகள் மீதும் தன் சொந்த வீட்டின் மீதும் உள்ள பிடிப்பும், அந்த வீட்டை விட்டு ஒரு வழக்கின் காரணமாக வெளியேற்றப்பட்டதால் உண்டான வேதனையும், அவனை சக மனிதர்களிடம் இருந்தே விலக்கி வைக்கிறது. ஒரு திருமணத்துக்காக வேறு வழியின்றி பல வருடங்களுக்குப் பிறகு சொந்த ஊருக்கு செல்லும் அவனை பெயர் தெரியாத ஒரு உறவினன் அன்பே உருவாக ஆகர்ஷிக்கிறான். அந்த உறவினனின் அன்பு அருளை எப்படி மாற்றுகிறது என்பதே சற்றே நீளமாகச் செல்லும் இப்படத்தின் கதை. எனக்கு இந்தத் திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் "துணையெழுத்து" நூல்தான் நினைவுக்கு வந்தது. 

துணையெழுத்து கட்டுரைத் தொகுப்பின் மூலமாகத்தான் எனக்கு எஸ்.ராமகிருஷ்ணன் என்னும் எழுத்தாளர் அறிமுகம். அதற்கு முன்பாக அவரது எழுத்துக்களை படிக்கும் வாய்ப்பு ஏற்படவில்லை. மனதை வருடும் அவரது எழுத்து நடை என்னை மிகவும் வசீகரித்தது. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு கட்டுரை என்னும் வகையில் 51 கட்டுரைகளாக துணையெழுத்து பகுத்து எழுதப்பட்டு இருந்தது. ஒவ்வொரு கட்டுரையிலும், யாரேனும் ஒரு எளிய மனிதருடனான எழுத்தாளரின் சந்திப்பையும் அதன் மூலமாக அவர் அவதானித்துக்கொள்ளும் விஷயங்களையும் தனக்கே உரித்தான நடையில் எழுதி இருப்பார் எஸ்.ராமகிருஷ்ணன். 

அதில் ஒரு கட்டுரையில், ஒரு கூடை நிறைய வீட்டின் பூட்டப்பட்ட அறைகளின் சாவிகளோடு, ஒரு பெரிய வீட்டில் வாழும் ஒருவரின் அனுபவம் ஒருவிதமான வலியோடு சொல்லப்பட்டு இருக்கும். இந்தக் கட்டுரைதான் மெய்யழகன் படத்தை பார்த்துக்கொண்டு இருந்த நேரம் முழுவதும் என் மனதில் எதிரொலித்தபடி இருந்தது. மிகப்பெரிய வீட்டில் மிகவும் அந்தஸ்தாக வாழ்ந்த குடும்பம் அது. கல்யாணங்களைக்கூட வீட்டின் கூடத்திலேயே நடத்தி முடிக்கும் அளவுக்குப் பெரிய வீடு.  அதில் எக்கச்சக்கமான அறைகளும், எண்ணமுடியாத அளவில் ஜன்னல்களும் உண்டு. அந்த வீட்டில் தனிமையில் வாழும் ஒரு மனிதர், வீட்டின் மீது வழக்கு நடப்பதால் வீட்டின் அத்தனை அறைகளையும் பூட்டி அதன் சாவிகளை தனியாக ஒரு பொக்கிஷமென வைத்திருப்பார். அந்த வீட்டில் வைத்து அவரைப் பார்த்த தருணங்களை எழுத்தாளர் எழுதும்போது நம்மை அறியாமல் அந்த வீட்டோடு நமக்கு ஆழ்ந்த பிடிப்பு ஏற்பட்டுப்போகும். பிறிதொரு நாளில் அந்த மனிதரை நகரத்தில் சந்திப்பார் எஸ்.ரா. வீட்டின் மீது இருந்த வழக்கில் அவரது சகோதரி வெற்றி பெற்று விட்டதால் அவர் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார். "பலமான கட்டடமா? ராத்திரி முழுக்க புல்டோசர் வச்சி இடிச்சாங்க. மனசு முழுக்க அந்த இடிபாட்டுப் புழுதி நிறைஞ்சிருக்கு" என்று அவர் சொல்லும் இடத்தில் நம் மூச்சும் முட்டிப்போகும். இடிபட்ட வீட்டின் சாவிகள் கொண்ட கூடையை எடுத்து அவர் எஸ்.ரா வுக்குக் காட்டுவார். அதில் இருந்து பிடி நீண்ட ஒரு சாவியை எடுத்துக்கொள்ளும் எஸ்.ரா, அதைத் தன் அலுவல் அறையில் மாட்டி வைத்திருப்பதைக் குறிப்பிட்டு, இவ்வாறு கட்டுரையை முடிப்பார், "நான் எழுதும் இடத்துக்கு மேலே தான் அந்த சாவி தொங்குகிறது. ஆனால் அதை நிமிர்ந்து பார்க்க முடியாமல் மனம் கனக்கிறது". 

தான் வாழும் வீட்டோடும் நிலத்தோடும் மனிதர்களுக்கு இருக்கும் பிடிப்பு அலாதியானது. உயிரோடு நம்முடன் வாழும் மனிதர்களை விடவும், உயிரற்ற இந்த விஷயங்கள் மீதான  நம் ஆர்வம் எனக்கு எப்போதுமே ஆச்சர்யமாக இருக்கும். ஒற்றுமையாக இருக்கும் சகோதர சகோதரிகளுக்குள், ரத்த பந்தம் கொண்ட உறவுகளுக்குள், ஒரு சொத்து குறித்த பிரச்சனை தலைமுறைகள் தாண்டிய விரோதத்தை உண்டுபண்ணும் அளவுக்கு வீர்யம் மிகுந்ததாக இருக்கிறது. இத்தகு மனப்போக்குகள் குறித்து மானிடவியல் ஆய்வாளர்கள் விவரித்து சொல்லக்கூடும். மனிதர்களின் இந்த முரண்பாடுகளைப் பற்றி துணையெழுத்தில் மிக ஆழமாக சொல்லியிருப்பார் எஸ்.ரா. 

முதலில் பிரசுரமான தன் கதையைக் கண்டதும் வீட்டிலிருந்து கிளம்பி ஒரு இலக்கியக் கூட்டத்தில் சந்தித்த வாசகர் வீட்டுக்கு உரிமையோடு சென்றதும், அங்கு அவமதிப்பை சந்தித்து, மனம் தாங்காமல் பயணித்ததும் பற்றி அவர் எழுதும்போது, ஏன் நம் மனங்களை நாம் எப்போதும் மூடியே வைத்திருக்கிறோம் என்று தோன்றும். அதைக் குறித்து இப்படி எழுதத் தோன்றுகிறது எஸ்.ராவுக்கு.  "ஒருவேளை அவமதிப்பின் வடுக்கள் உடலில் வெளிப்படையாகத் தெரிய துவங்கினால், யாவரும் உடல் முழுவதும் வடுக்களோடுதான் இருப்பார்கள் என்று சுயசமாதானம் செய்து கொண்டேன்". 
கீழக்குயில்குடி குகை ஓவியங்கள், தோல்பாவையில் துயிலும் மயில் ராவணன், கிருஷ்ணபுரத்து குறவன் சிலை, ஹளபேடுவின் விஷகன்னிகா, சிரவணபெலகொலாவின் மஹாவீரர், கரிச்சான் குஞ்சுவின் பசித்த மானுடம் நூல் எனப் பல சுவாரஸ்யமான விஷயங்களை நான் முதல் முதலில் துணையெழுத்தில் தான் படித்தேன். புனைவெழுத்தின் கற்பனை உலகில் சஞ்சரித்தபடி இருந்த என்னை அபுனைவை நோக்கி மடைமாற்றிய நூல் இது. தன் வாசகர்களுடனான் எதிர்பாராத இனிய சந்திப்புகள், பணமேயில்லாமல் மேற்கொண்ட பயணங்கள், வேலையற்றவராக இருந்த காலங்களின் பகல்பொழுது, நகரமயமாக்கலால் கிராமத்திலிருந்து நகரத்துக்கு வந்து ரயிலில் ஊசி விற்ற கிட்ணாசாரி, பார்வையில்லாத தன் தாய்க்கு , அவரது ஆசையை நிறைவேற்ற கங்கையைக் காட்ட வந்த மகன், வாழ்நாள் முழுவதும் தான் சென்ற இடங்களில் எல்லாம் நூல்களை மட்டுமே வாங்கி சேர்த்த மனிதர் என்று கட்டுரைத் தொகுப்பு முழுவதும் பலரின் வாழ்வை விளக்கியிருப்பார் எஸ்.ரா. எளிய மனிதர்களின் தனிப்பட்ட விருப்பங்களையும்  வீர்யமிக்க பகைமையையும் வலியையும் நேசத்தையும் இயல்பான பண்பையும் நன்றி உணர்வையும், உதவும் மனப்போக்கையும் ஆற்றுழுக்காக விவரிக்கும் அற்புதமான புத்தகம் இது. "கடற்பாசியைப்போல, நன்றி எப்போதும் ஈரமிக்கதாகவும் நிசப்தமாகத் தன் இருப்பை காட்டிக்கொள்வதுமாகவே இருக்கிறது. மன்னிப்பும், நன்றியும் தான் மனிதனின் மாபெரும் கண்டுபிடிப்புகள் என்றுகூடத் தோன்றுகிறது" என எஸ்.ராமகிருஷ்ணன் சொல்வதுபோல மன்னிப்பும் நன்றியும் தான் இத்தனை மனச்சிக்கல்களுக்கு இடையே மானுடத்தை வாழவும் வைக்கிறது. 

துணையெழுத்தால் கவரப்பட்டு,  வரிசையாக எஸ்.ராவின் கதாவிலாசம், தேசாந்திரி முதலிய நூல்களை பெரிதும் ரசித்துப் படித்தேன். தமிழக அரசின் விருது பெற்ற "நெடுங்குருதி" நாவலும் என் விருப்பத்துக்குரிய ஒன்று. வேம்பலை என்னும் புனைவுலக கிராமத்தில் நடக்கும் கதை அது. வெஞ்சினமும்,வீரமும் கொண்ட மக்களின் வாழ்வில், களவின் பங்கை விவரித்தபடி செல்லும் கதை மழை, வெயில், பனி என்று மூன்று காலங்களில் நடப்பது போல நகரும். அதில் ஆசிரியர் லயோனல் என்பவர், தன் மாணவனான திருமாலைப் பார்த்து " எதுவுமே தற்செயலானதில்லை. இன்று நீயும் நானும் இந்த நட்சத்திரங்களைப் பார்த்த படி பேசிக்கொண்டு இருக்கும் இந்தத் தருணம் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒன்று. அதை எப்போது நீ புரிந்து கொள்கிறாயோ அப்போதுதான் இந்தத் தருணத்தின் அர்த்தம் புரியும்" என்ற  சொல்லும் வரிகள் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானவை. மனதை மயிலிறகால் வருடும் ஆறுதல் தருபவை. "ஏழு தலை நகரம்" எஸ்.ராமகிருஷ்ணனின் குறிப்பிடத்தக்க நாவல்களில் ஒன்று. அவரின் சிறுகதைத் தொகுப்பும் எனக்கு மிகவும் பிடித்ததொரு புத்தகம். உபபாண்டவம் இந்த பழம்பெரும் நாட்டில் பல காலமாக சொல்லபட்டு வரும் மகாபாரதத்தின் முற்றிலும்  வேறான ஒரு அனுபவம். எனது இந்தியா ,மறைக்கப்பட்ட இந்தியா இரண்டும் வரலாற்று ரீதியில் மிக முக்கியமான புத்தகங்கள். 
அதன் பிறகு தேடித்தேடி எத்தனை புத்தகங்களைப் படித்தாலும் துணையெழுத்து என் மனதில் ஏற்படுத்திய மாற்றம் அதி அற்புதமானது. கால அளவில் மிகச்சிறியதான நம் வாழ்வில் அன்பும் பகிர்தலும் மட்டுமே நிதர்சனம் என்பதை இந்தப் புத்தகம் நமக்கு உணர்த்தும்.

"உலகெங்கும் யாரோ, ஏதோ ஒரு இடத்தில், ரகசியமாக, சந்தோஷமாக, வடிகாலாக, அன்பின் பரிசாக, காதலின் நினைவாக, போராட்டத்தின் துணையாக, தனிமையின் நண்பனாக, ஞானத்தின் திறவுகோலாக, அறிவின் உச்சமாக, ஒரு புத்தகத்தைக் கையில் வைத்துப் புரட்டுகிறார்கள். உலகின் மீது வெளிச்சம் பரவுவது போன்ற மாயமது. புத்தகத்தைத் திறக்கும் போது இருந்த மனிதன் அதை முடிக்கும் போது மாறிவிடுகிறான். என்னவாக மாறினான், என்ன கிடைத்தது என்று அவனால் துல்லியமாகச் சொல்லமுடியாது. ஆனால் அந்த மாற்றம் புதுவகை ஆனந்தம். புது வகை நம்பிக்கை, புதிய திறப்பு என்றே சொல்வேன்" தேசாந்திரியில் எஸ்.ராமகிருஷ்ணன் சொல்வது முற்றிலும் உண்மைதான் இல்லையா?

Comments

Post a Comment

Popular posts from this blog

எனக்குப் பிடித்த குமரி உணவுகள்

வாசந்தி- குரலற்றவர்களின் குரல்

'வெயிலோடு போய்' - ச.தமிழ்ச்செல்வன்