கொஞ்சம் மாறுங்க பாஸ்

“ஏங்க நான் ரசம் வைக்கட்டுமா ?குழம்பு வைக்கட்டுமா?” 
நீ ஏதோ ஒன்னு வை. பேரு அப்புறம் வச்சுக்கலாம்” 

“என்ன பெரிய குணா குகைல மாட்டிக்கிட்ட சம்பவம்? கல்யாணம் பண்ணி மாட்டிக்கிட்டு இருக்கியா?” 

“ நம்ம காதலை உங்க வீட்டில ஏத்துக்குவாங்களா?
அத என் புருஷன் கிட்டதான் கேக்கணும்” 

“ ஏங்க நான் வரும்போது மட்டும் கண்ணாடி போட்டுக்கறீங்க?
தலைவலி வரும்போது கண்ணாடி போட சொல்லி டாக்டர் சொன்னாங்க” 

“மாமியார் மருமகளுக்கு ஊட்டி விட்டால் 1000 ரூபாய் பரிசு- செய்தி 
இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு??” 

இவை எல்லாம் தினமும் பல்வேறு நாளிதழ்களில் நாம் படிக்கும் நகைச்சுவைத் துணுக்குகள். இது உதாரணம் மட்டுமே. பெண்களின் உடல் அமைப்பை, காதலில் ஏமாற்றும் அவர்களின் துரோகத்தை, அவர்கள் செலவு செய்யும் விதத்தை, அவர்களின் சமையல் திறனை, குடும்ப வாழ்வில் அவர்கள் செலுத்தும் ஆதிக்கத்தை, அதனால் ஆண்கள் படும் துயரத்தை, நாத்தனார் மாமியார் உறவுகளின் அபத்தங்களைப் பல விதமாக பேசும் துணுக்குகள் தினமும் நம் கண்களில் பட்டு கருத்திலும் நிறைகின்றன. காலகாலமாக இந்த சமூகம் பெண்கள் மேல் கொண்டுள்ள எண்ணங்களை இவை பிரதிபலிக்கின்றன. நாம் யாரும் பெருமளவில் இத்தகைய எழுத்துக்களுக்கு எதிர்வினை ஆற்றுவதில்லை. ஆனால் சமூகத்தில் புரையோடிப்போய் இருக்கும் வன்மத்தின் வெளிப்பாடாகத்தான் நான் இவற்றைப்பார்க்கிறேன்
 
மாற்றுத்திறன் படைத்தவர்களை அவமதிப்பது போல நகைச்சுவை செய்வது தவறு என்று இப்போதெல்லாம் நாம் புரிந்துகொண்டு இருக்கிறோம். சொற்களில் கண்ணியத்துடன் இருக்க வேண்டும் என்ற அடிப்படை நாகரிகம் பெரும்பாலும் வந்துவிட்டதாகத் தோன்றுகிறது. அத்தகு நகைச்சுவைகள் திரைப்படங்களில் பெரிதும் குறைந்தும் விட்டன. அதையும் மீறி வரும் சில காட்சிகளை விமர்சனங்கள் சுட்டிக்காட்டவும் செய்கின்றன.ஆனால் இன்றும் பெண்களை அவமதித்து எழுதப்படும் அல்லது நிகழ்த்தப்படும் கீழ்த்தரமான நகைச்சுவைகள் தொடர்வே செய்கின்றன. பிரபலமாக பேசப்படும் ஒரு சமையல் நிகழ்ச்சியில், கோமாளிகளாக வருவோர் பெரும்பாலும் வரம்பு மீறிய சேட்டைகளில் ஈடுபட்டதும், பேசியதும் நமக்குள் எந்த எதிர்வினையையும் ஏற்படுத்தவில்லை. எதிர்க்க வேண்டியவற்றை நாம் எப்போது இயல்பாக எடுத்துக்கொள்ளத் தொடங்குகிறோமோ அப்போதே நம் வீழ்ச்சியும் தொடங்கி விடுகிறது. மேலே கண்ட ஜோக்குகளைப் பாருங்கள். அவற்றின் பால் மாறினால் அதற்கு ஏதேனும் அர்த்தம் வருகிறதா? கணவனை சமைக்கச்சொல்லும் மனைவி பற்றிய ஜோக்குகளை நாம் நிச்சயம் படித்திருப்போம். கணவனும் மனைவியும் வேலைக்குப்போகும் இந்த நாட்களில் வீட்டு வேலைகளை இருவரும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வலுத்து வரும் சூழலில், ஆண் சமைப்பதில் என்ன பிரச்சனை இருக்க முடியும்? அதோடு சமையல் ஒன்றும் பெண்கள் பிறப்போடு வந்த கவசம் இல்லயே? சுவையாக சமைக்காத பெண் என்பது எந்த வகையில் நகைப்புக்கோ இகழ்ச்சிக்கோ உரியது? 

இது வெகு சமீபத்தில் ஒரு நாளிதழில் வெளியான துணுக்கு. 
“பொண்டாட்டி நம்ம கூட சண்டை போட்டுக்கிட்டு ரெண்டு மூணு நாள் பேசாம இருப்பா பாருங்க! சொர்க்கம் சார்!!”
கல்யாணம் ஆகும்வரை, பெண்கள் பின்னால் காதல் என்று அலைவதும் ,திருமணம் ஆனதும் அது ஒரு கொடுமையான சமூக அமைப்பு என்னும் விதத்தில் பகடி செய்வதும் ரொம்பவும் முரண்பாடாக உள்ளது. இன்றைய காலகட்டம் முன்னெப்போதையும் விட உறவுச்சிக்கல்கள் மிக அதிகமாக உருவாகும் காலமாக உள்ளது.
காதலும் கல்யாணமும் உண்மையில் பெண்களுக்கு நிறைய அழுத்தங்களை ஏற்படுத்துகிற விஷயங்கள். இன்றைக்கும் யுனிசெப் ஆய்வின்படி 27 சதவீத பெண்கள் பதினெட்டு வயதை அடையும் முன்பே திருமணத்தில் தள்ளப்படுகின்றனர். குற்ற ஆவணக்காப்பக அறிக்கையின் படி 30 சதவீத பெண்கள் குடும்ப வன்முறையால் பாதிக்கப்படுகிறார்கள். இன்னும் கூட நடுத்தர நகரங்களில்கூட இரண்டு பெண்கள் ஒன்றாக டீக்கடையிலோ, ஓட்டல்களிலோ உணவு அருந்துவதை நாம் காண்பது அரிது. எப்போதும் வீட்டை ஒரு நத்தையென சுமந்து செல்ல வேண்டிய கட்டாயம் பெண்களுக்கு இருக்கிறது. நிலைமை இவ்வாறு இருக்க சற்றும் பொறுப்பற்ற விதத்தில் மனைவி வீட்டில் அளவற்ற அதிகாரம் செலுத்துவதாகவும் கல்யாண வாழ்க்கை அழுத்தம் தருவதாகவும் சப்பாத்திக்கட்டையால் கணவனை மனைவி அடிப்பதுபோலவும் காலம்காலமாக வெளிவரும் கேலிச்சித்திரங்கள் விஷமத்தனமானதாகத் தோன்றுகிறது.

நான் சிறு பிள்ளையாக இருக்கும்போது இருந்ததை விட பல விதங்களில் உலகம் முன்னேறியதாக இருந்தாலும் இது போன்ற விஷயங்கள் துளியும் மாறாமல் இருப்பது வேதனையைத் தருகிறது. நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது என்ன சாராம்சத்தில் இந்த ஜோக்குகள் வந்தனவோ அதே போலத்தான் இப்போதும் வருகின்றன. சில சம்யங்களில் இன்னும் மோசமாகவும். இன்னும் சீசனை பொறுத்து, தீபாவளி என்றால் மைசூர்பாகு உடைத்தல், மாமனார் வீட்டு சீர்,மோதிரம், பொங்கல் என்றால் ஒரே பொங்கலை ப்ரிட்ஜில் வைத்து ஒரு வாரம் பரிமாறுதல், புடவைக்கடை,நகைக்கடை காமடிகள்……இன்னமும் சம்பாதிப்பது ஆண் மட்டுமே என்றும் பெண் அவளைச்சார்ந்து இருப்பவள் என்றும் இருக்கும் மன நிலை குறைந்தது இது போன்ற ஜோக்குகளை எழுதுபவர்களிடமும், பிரசுரிப்பவர்களிடமும் இதுக்கிறது. பண்டிகை நேரங்களில் பெண்கள் உடைகள் வாங்குவதும் அதற்கு கணவர்கள் காத்திருப்பது போன்ற கேலிச்சித்திரங்கள் காலாவதி ஆனவை என்று யாருக்கும் இன்னும் தோன்றவில்லை போலும்.என் அம்மா காலத்தில் கூட தங்களுக்கான உடைகளை அவர்களேதான் தேர்ந்து கொள்வார்கள். இதன் உள்ளர்த்தங்கள் இரண்டு. 1. பெண்கள் தேர்ந்தெடுக்க வெகுநேரம் செலவு செய்வார்கள். 2. ஆண்கள் இதற்கெல்லாம் அப்பாற்பட்டவர்கள். இவை இரண்டுமே மாற்றப்பட வேண்டிய ஸ்டீரியோடைப்புகள். இதெல்லாம் தனிப்பட்ட குணங்கள். இவற்றை பாலின ரீதியாக பொதுமைப்படுத்தல் தவறு. இத்தகு நகைச்சுவைகள் பத்திரிக்கைகளில் பிரதான இடங்களைப்பிடிப்பது நமது புரிந்து கொள்ளும் திறனை கேள்விக்கு உட்படுத்துகிறது. 

வரம்பு மீறிய,முறை தவறிய காதல், குடும்பங்களின், சமூகத்தின் சம நிலையை சிதைக்கக்கூடியவை என்பதில் மாற்றுக்கருத்துகள் இல்லை. ஆனால், இவை நடப்பதற்கு முக்கிய காரணமே பெண்கள்தான் என்று முத்திரை குத்தி பெண்களின் ஒழுக்கம் குறித்த பகடியை இந்த கீழ்த்தரமான எழுத்துகள் சமூகத்தில் நிரப்புகின்றன. இப்போதைய வாட்ஸ் அப், சோஷியல் மீடியா உலகில், இந்த விஷ விதைகள் பரவுவது மிகவும் எளிது. 
இன்னும் மெத்தப் படித்த மேதாவிகளும் பட்டிமன்ற பேச்சாளர்களும் கூட தங்கள் பேச்சுகளில், “ எங்க வீட்டு அம்மா” என்று தொடங்கி தன் மனைவியைப் பார்த்து தான் நடுங்குவதை நகைச்சுவையோடு விவரிக்க அதை கேட்கும் தாய்க்குலங்களும் விழுந்து விழுந்து சிரிப்பதை பார்க்கும்போது அவர்களின் அறியாமையை நினைத்து வேதனையாக இருக்கிறது. “காலம்தோறும் பெண்” நூலின், ராஜம் கிருஷ்ணன் எழுதி இருப்பார். “ ஒரு பாசிக்குட்டையை உருவாக்கி அதுவே உலகம், அதுவே உத்தமம் என்று பெண்ணை இருக்க வைத்து அதற்குள்ளாக உழல்வதே மதிப்பு என்று நம்ப வைக்கிறது இந்த சமூகம்” என்று. எவ்வளவு சத்தியமான வார்த்தைகள் இவை. 
பெண்களைக் கவர்ச்சிப்பொருளாக மலினப்படுத்துவதை எதிர்க்கும் அளவுக்கு இந்த பகடிகளை நாம் பொருட்படுத்தவில்லை. ஆனால், இவையும் கண்டிக்கத்தக்கவையே. 

“ஏங்க உங்களுக்கு ராணின்னு ஒரு மனைவி இருக்காங்களா? நீஙக சொல்லவே இல்ல?
இல்லயே உன்னை ராணி மாதிரி வச்சு காப்பாத்துவேன்னு அப்போவே சொன்னேனே”
இரு தார மணம் நம் சட்டப்படிக் குற்றம்.கொஞ்சமும் குற்ற உணர்ச்சியை வெளிப்படுத்தாத இந்த பகடி சொல்ல வருவது என்ன? மேலோட்டமாகப் பார்த்தால் இதெல்லாம் பெரிய விஷயமா என்று தோன்றலாம். ஆனால் பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள் மற்றும் குற்றங்களைப்போக்க நிறைய போராட்டங்களுக்குப் பிறகு கொண்டுவரப்பட்ட சட்டங்களை போகிறபோக்கில் கிண்டல் செய்வதும் அந்த செயல் குறித்த குற்ற உணர்ச்சி எதுவும் இல்லாமல் அதை சாதூர்யமாக மறைப்பதும் நீண்டகால சமூகத்தின் மனோபாவத்தை துருப்பிடிக்க வைக்கும் முயற்சிகள். இவை யாரோ ஒருவரின் முகநூல் பக்கத்திலோ, வாட்ஸ் அப் ஸ்டேட்டசிலோ இருந்தால் பிரச்சனை இல்லை. பலர் படிக்கும் பத்திரிகையில், பல பேர் பார்க்கும் பட்டிமன்ற நிகழ்வுகளில், பிரபலமாக இருப்போரின் சமூக வலைத்தளங்களின் எந்த எதிர்ப்பும், தயக்கமுமின்றி பதிவு செய்யப்படும்போது, அதற்கு எதிர்வினை ஆற்றுவது நம் கடமை ஆகிறது. 
 
ஒவ்வொன்றாக பார்த்து, சரி செய்யக்கேட்டு, போராடித்தான் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளி, திருநங்கை போன்ற புதிய சொற்கள் எத்தனையோ அவமானங்களில் இருந்து அவர்களைக் காக்கின்றன. சொற்களுக்கு மிகப்பெரிய சக்தி இருக்கிறது
 அர்த்தமற்ற, விஷமத்தனமான சொல் பயன்பாடு யாரோ ஒருவரின் மனதை புண்படுத்தலாம், யாரோ ஒருவரின் மனதுக்குள் விஷமேற்றலாம், யாரோ ஒருவரை அவமதிக்கத் தூண்டலாம். எனவே “கொஞ்சம் மாறுங்க பாஸ்”!! 

Comments

  1. Love your blog Mam, Your writing is engaging, inspiring, and relatable. You cover diverse topics with clarity and passion. Keep sharing dear Mam

    ReplyDelete
  2. அருமை 👌

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

எனக்குப் பிடித்த குமரி உணவுகள்

வாசந்தி- குரலற்றவர்களின் குரல்

'வெயிலோடு போய்' - ச.தமிழ்ச்செல்வன்