ஒரு மனிதன்,ஒரு வீடு, ஒரு உலகம்-- ஜெயகாந்தன்
தமிழ் இலக்கியத்தின் மறுக்க முடியாத, தவிர்க்க முடியாத ஒரு ஆளுமை ஜெயகாந்தன். இலக்கியத்தின் போக்கை வெகுவாக மாற்றியவை அவரது எழுத்துக்கள் என்றால் கொஞ்சமும் மிகையில்லை. அடித்தட்டு மக்களின் வாழ்க்கை முறையை மிக இயல்பாக எடுத்துக்கட்டிய அவர், அந்த காலகட்டத்தின் புரட்சிகரமான கருத்துகளுக்கு சொந்தக்காரர் என்பது நாம் அனைவரும் அறிந்தது. நம் வெளிநாட்டு மோகம் காரணமாக ஜெயகாந்தன் தென்னாட்டு மாப்பசான் என்று அழைக்கப்பட்டவர். ஆனால் தமிழைப் பொறுத்தவரை இலக்கியத்தை ஒரு புதிய பாதையில் அழைத்து சென்றவர்.
ஒப்பீட்டளவில் நான் கொஞ்சம் தாமதமாகவே ஜெயகாந்தனை படிக்கத் தொடங்கினேன் எனலாம். யுபிஎஸ்சி தேர்வுக்குத் தமிழை விருப்பப்பாடமாக எடுக்க எண்ணி முதல்நிலை தேர்வுகளுக்கு முன்னதாகவே தமிழுக்கான சிலபஸ்ஸில் இருக்ககூடிய நூல்களை வாங்கிப் படிக்கத் தொடங்கிய நேரம் அது. கண்ணன் பாட்டு, குறுந்தொகை, அகிலனின் சித்திரப்பாவை ஆகிய நூல்களுடன் ஜெயகாந்தன் எழுதிய குருபீடம் சிறுகதைத் தொகுப்பும் பாடத்திட்டத்தில் இருந்தது. குருபீடத்தின் சிறுகதைகள் தான் ஜெயகாந்தன் எழுத்துக்களுக்கான என் முதல் அறிமுகம். எந்த விஷயத்தையும் மொராலிட்டி என்று சமூகம் நினைக்கும் பொது சட்டகத்துக்குள் அடைத்துப் பார்க்காமல்,தனி மனிதனின் மனநிலையை விவரிக்கும் வகையிலான வித்தியாசமான கதைகள் அந்தத் தொகுப்பில் இருந்த அத்தனைக் கதைகளும். குருபீடம், புது செருப்பு கடிக்கும், ஒரு வீடு பூட்டிக்கிடக்கிறது, தவறுகள் குற்றங்கள் அல்ல உள்ளிட்ட சிறுகதைகள் குருபீடம் தொகுப்பில் அடக்கம். அதன் பிறகு இந்த நூற்றாண்டின் சிறந்த சிறுகதைகள் தொகுப்பில் படித்த யுகசந்தியும் எனக்குப் பிடித்தமானதொரு சிறுகதை. பெரும்பாலும் ஒரு பிரிவினர் பேசும் மொழியை ஒத்ததாகவே அந்த காலகட்டத்தில் படைக்கப்பட்ட மணிபிரவாள நடையுடன் இல்லாமல், சமூகத்தின் அடித்தட்டு மக்கள் பேசிப் புழங்கும் இயல்பான மொழியுடன் ஜெயகாந்தனின் பல சிறுகதைகள் இருந்தன.
சில நேரங்களில் சில மனிதர்கள், அக்னிப்பிரவேசம், கங்கா எங்கே போகிறாள் போன்ற கதைகளின் முற்போக்குத்தனமான களம் எந்த காலத்திலும் புதிதானது. சில நேரங்களில் சில மனிதர்கள் குறித்து ஏராளமான விமர்சனங்கள், பார்வைகள், கருத்துக்கள் உண்டு. பிரபுவுக்கும் கங்காவுக்குமான உறவில் இருக்கும் நெருக்கடிகளும், அபத்தங்களும் புரிந்து கொள்ள மிகவும் சிக்கலானவை. ஆனால் எனக்குப் பிடித்த ஜெயகாந்தனின் கதை "ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்". இந்த நாவலின் முன்னுரையில் ஜெயகாந்தன் சொல்வது போல " இந்தக் கதை வாழ்வின் ஒளி மிகுந்த பகுதிகளை மட்டுமே காட்டுகிறது. எளிமையும் அதே சமயம் உயர்வும் மிகுந்த மனிதப்பண்புகள் என்னை எப்போதும் வசீகரிக்கின்றன". இதுவே இந்த நாவலின் மிகச்சுருக்கமான உள்ளடக்கம்.
கதையின் மையக் கதாபாத்திரமாக வரும் ஹென்றியின் இயல்பும், கதையின் போக்கும் வசீகரமானவை. ஒரு பிரதேசத்துக்கு தொடர்பே இல்லாத தோற்றத்துடன் கதைக்குள் நுழையும் ஹென்றி, வனத்துக்குள் அலையும் காற்றைப்போல சுதந்திரமானவன். எதைப்பற்றிய முன்முடிவும் இல்லாமல் அனைவரையும் அணுகும் வழமை உள்ளவன். அவனை எடுத்து வளர்த்த இணையரின் குணங்களை நன்கு புரிந்துகொண்டவன். அவனது வளர்ப்புத்தந்தை இறந்த பிறகு அவரது சொந்த ஊருக்குச் செல்லும் ஹென்றியை அந்த ஊரும், ஊர் மக்களும் இயல்பாக ஏற்கும் விதமே கதை. மனிதர்கள் அனைவரிடமும் இருக்கும் அடிப்படை நல்லியல்பை ஜெயகாந்தனின் பல கதைகள் எடுத்துக்காட்டுவதை நாம் கவனித்திருப்போம். புதுச்செருப்பு கடிக்கும் சிறுகதை அப்படியான ஒன்று. அதைபோலவே இந்த நாவலிலும் ஹென்றி மட்டுமல்லாது, கிருஷ்ணராஜபுரம் கிராமத்தில் வாழும் அனைவருமே பரந்த உள்ளமும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் உள்ளவர்களாக இருப்பதை கதையின் போக்கிலேயே நாம் புரிந்து கொள்வோம். இந்துவான ஹென்றியின் வளர்ப்புத்தந்தையும் ஆங்கிலோ இந்தியனான ஹென்றியின் வளர்ப்புத்தாயும், சூழ்நிலை காரணமாக வாழ்வில் இணைபவர்கள். அவர்கள் இருவரின் கலாச்சார கூறுகளையும் பிணைப்பவனாக இருந்தாலும், ஹென்றி அடையாளம் அற்றவனாகவே இருக்கிறான். அதுவே அவனது அடையாளம். தன் தாய் தந்தை மறைவுக்குப் பிறகு, தந்தை சபாபதிப்பிள்ளையின் விருப்பத்துக்கு ஏற்ப கிருஷ்ணராஜபுரம் வரும் அவன், அந்த ஊரின் கலாசாரத்தில் இருந்து முற்றாக வேறுபட்டாலும், அதனை ரசிக்கவே செய்கிறான். அவனுடைய நண்பனாக அறிமுகமாகும் தேவராஜன், ஹென்றியின் வெள்ளை மனத்தை முழுமையாக ஏற்கிறான்.
ஊரைவிட்டுப்போன தன் அண்ணன் சபாபதிப்பிள்ளையின் சொத்தை அனுபவித்து வரும் துரைக்கண்ணு, ஹென்றியின் வருகையை வரவேற்பது மிக இயல்பாகவும் அழகாகவும் இருக்கும்.
சொத்து குறித்த பஞ்சாயத்து நடக்கும்போது, துரைக்கண்ணுவும் ஹென்றியும் அதை ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கும் பாங்கை மிக இயல்பாக சொல்லி இருப்பார் ஜெயகாந்தன்.
சொத்து என்பதை மன வேற்றுமைக்கான கூறாகவே பார்த்துவரும் நமக்கு, இந்த இயல்புகள் ஆச்சர்யத்தையும், ஆறுதலையும் ஒருங்கே அளிக்கும்.
"மகனே" என மிகுந்த வாத்சல்யத்தோடு ஹென்றியை அழைக்கும் சபாபதிப்பிள்ளை தன் இளமைக்கால கதைகளையும் தான் வாழ்ந்த ஊரையும் பற்றி தொடர்ச்சியாக சொல்லிக்கொண்டே இருப்பார். தான் பார்த்தறியாத ஊரைத் தன் தந்தையின் கண்களால் ஹென்றி முழுவதுமாக அறிந்திருப்பான். கதையில் அவர்கள் இருவரும் பேசிக்கொள்ளும் இடங்கள் அனைத்துமே எனக்கு மிகவும் பிடித்தமானவை. நான் திரும்பத் திரும்பப் படித்தவை. மயிலிறகைப்போல் நம் மனம் வருடும் உரையாடல்கள் அவை.
தன் தந்தையின் ஊரிலேயே அவர் வாழ்ந்த வீட்டை பழுதுபார்த்து கட்டிக் கொண்டு வாழ ஹென்றி விரும்புவான். "என்னை பப்பாவோட மகனா அக்செப்ட் பண்ணிக்கிட்டீங்கன்னா போதுங்க. பப்பா வாழ்ந்த ஊரில் வாழ்ந்தாகூட எனக்குப் போதுங்க" என்று நினைப்பதே ஹென்றியின் மனப்போக்கு. வெகு நாட்களாக பூட்டிக்கிடக்கும் சபாபதிப்பிள்ளையின் வீட்டை அவனுக்குக் கட்டிக்கொடுக்க ஊர்கூடி உதவி செய்யும்.இந்த பின்னணியில் மனம் பிறழ்ந்த ஒரு பெண்ணும் வந்து போவாள். பெயரற்ற அந்தப் பெண்ணை ஒரு தேவதையென உருவகப்படுத்தியது போல நமக்குத் தோன்றும்.
கணவனை இழந்த தேவராஜனின் சகோதரி அக்கம்மாவும், பெண் குழந்தையைப் பெற்றதால் கணவன் வீட்டால் புறக்கணிக்கப்படும் ஊர் மணியக்காரர் கிளியாம்பாளும் தங்களுக்குள் ஒரு நிதானமான புரிதலையும் நட்பையும் கைக்கொள்வார்கள். அந்த நட்புக்கூட்டுக்குள் ஆதரவின்றி நிற்கும் பெண்ணும் இணைந்து கொள்வாள்.உடைகளின்றி தன்போக்கில் திரியும் அவள், தானாகவே ஹென்றியிடம் பயமின்றி வருவாள். அவளை சிறு குழந்தை போல "பேபி" என்று அழைத்து ஹென்றி பேசுவது அத்தனை இதமாக இருக்கும். அவள் மேல் காதலோ விருப்பமோ இல்லாமல் ஒரு குழந்தையை, அதன் அறியாமையை ரசிப்பதுபோலவே ஹென்றி ரசிப்பான். துரைக்கண்ணுவின் கண்களுக்கும் அவள் ஒரு தேவதை போலவே தென்படுவாள். "கைகூப்பி கும்பிடனும் போல இருந்துச்சு. மனசுக்குள்ளேயே கும்புட்டுக்கிட்டேன்" என்னும் துரைக்கண்ணுவின் வார்த்தைகள் அவரின் மனத்தூய்மையை வெளிப்படுத்தும்.
உரையாடல்கள் அனைத்துமே மிகவும் அழகாகவும் மனதிற்கு வெம்மையான நிறைவைத் தரும் வகையிலும் இருக்கும். ஜெயகாந்தனுக்கே உரிய இயல்பும் இனிமையுமான உரையாடல்கள். "மனுஷனைப் பத்தியோ, கடவுளைப் பத்தியோ முன் கூட்டியே தீர்மானம் ஒண்ணுமில்லாமல் - திறந்த மனசோட பார்த்தா எல்லா மனுஷன்லேயும் கடவுளைப் பார்க்கலாம்" சபாபதிப்பிள்ளையும் ஹென்றியும் பேசிக்கொள்ளும் இடத்தில் இப்படி ஒரு சொற்றொடர் வரும். இதைவிட ஒரு அப்பா ஒரு மகனுக்கு இறைமையின் மையப்புள்ளியை போதித்து விட முடியுமா? "சாமிக்கும் மதத்துக்கும் என்னா சம்பந்தம்" என்று தன் மனைவியிடம் சபாபதிப்பிள்ளை கேட்கும் இடம்
கடவுளைப்பற்றியும், வாழ்வின் நிதர்சனங்கள் குறித்தும், மனிதர்களின் இயல்பு குறித்தும் மிக ஆழமான புரிதலை நமக்குள் உருவாக்கும்.
ஒருநாள் தான் புகைத்த சிகரெட்டின் அனுபவம் அடுத்த நாள் இல்லை என்று தேவராஜன் கூறும்போது,
"ஒரு அனுபவம் இன்னொரு அனுபவத்திற்குத் தடையாகிப் போகும்" என்று துரைக்கண்ணு சொல்லுவார். ஒருவரின் வாழ்க்கையில் நடக்கும் அனுபவங்களைக்கொண்டே நாம் வருங்காலத்தை கற்பனை செய்கிறோம். மாறாக வாழ்வை ஒவ்வொரு நொடியும் புதிதானதாக எடுத்துக்கொண்டால், ஒவ்வொரு அனுபவமும் மகத்தானதே.
"எப்பவும் சந்தோஷமாக இருக்கணும்னா நாம்ப மனசாலே சின்னக் குழந்தையாயிருக்கணும்னு தெரியுது. சின்னப் பசங்களா இருந்தப்போ ஒவ்வொரு சின்னச் சின்ன விஷயமும் எவ்வளவு ஆச்சரியமா இருந்திச்சு?" ஹென்றி தன் மனதை எப்போதும் சந்தோஷமாக வைத்துக்கொள்ளவே விரும்புவான். ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் வியந்தும் ரசித்தும் பார்ப்பான்.
நம் ஒவ்வொருவருக்குள்ளும் நல்ல மனிதருக்கான கூறுகள் பரவித்தான் இருக்கின்றன. தீவிரமான தவறுகளை செய்வதும் நாம்தான். உலகெங்கும் அன்பை விதைப்பதும் நாம்தான். அன்பை விதைப்பதை மட்டுமே மானுடத்தின் ஒற்றைக் குறிக்கோளாக இந்த நாவல் நிர்மாணிக்கிறது. அது மிக எளிமையானதும் கூட. அழகான விசயங்கள் அனைத்தும் எளிமையானவையே அல்லவா?
All beautiful things are really simple, well said 👍👍
ReplyDeleteஎழுத்தாளர் ஜெயகாந்தனையும் அவர் எழுத்துகளையும் தேடி படிக்கத்தூண்டும் விதத்தில் அமைந்த மிக அழகான கட்டுரை.
ReplyDeleteMind of a child is the best one can have . What Henry says might be right. Thank you for such an elegant write up.
ReplyDelete