"காலா, உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன் என்றன்காலருகே வாடா, சற்றே உனை மிதிக்கிறேன்!"

பாரதியாரின் நினைவு நாள் இன்று. நம் பள்ளிக் காலங்களில்
மகாகவி பாரதியாரின் பாடல்களைப் பாடாதவர், கேளாதவர் தமிழ்நாட்டில் இருந்திருக்க முடியாது. தமிழை ஒரு பாடமாகப் படித்தவர் யாராயினும் நிச்சயமாக பாரதியார் பாடல்களைப் படித்து இருப்போம். இல்லாவிட்டாலும் திரைப்பாடல்களாக வந்த அவரது கவிதைகளையாவது கேட்டு ரசித்திருப்போம். எனக்கு பாரதியார் கவிதைகள் எப்போதுமே மிகவும் பிடிக்கும். கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சப்தம், அவரது விடுதலைப் பாடல்கள் என இப்போது கேட்டாலும் எனக்குள் பலவித உணர்வுகள் அலையாகப் பரவும். ஏழாவது மனிதன் படத்தில் வரும் பாரதியார் பாடல்கள்தான் மகாகவியுடனான என் முதல் நினைவு. அதிலும் "அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே" என்று என் குழந்தைப் பருவத்தில் கேட்டு மழலையில் பாடிய பாடல், எனக்கு விருப்பமானது. விவரம் தெரிந்த நாள் முதலாக தாலாட்டாக, சுதந்திரப் போராட்டத்தைப் புரிந்து கொள்ள, கண்ணனின் அழகில் மயங்கிட, பாஞ்சாலியின் பெருங்கோபத்தை உள் வாங்கிட, கும்மிப் பாட என அனைத்துக்கும் பாரதியார் பாட்டே துணை எனக்கு. 

கண்ணன் பாட்டின் அனைத்து கவிதைகளும் மிகவும் அழகானவை. குறிப்பாக "சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா பாடலை மென் குரலில் நான் என் குழந்தைகளை வயிற்றில் சுமந்த போது பாடிக்கொண்டே இருந்தேன். இப்போதும் ஆசை முகம் மறந்து போச்சே பாடலும், நின்னையே ரதியென்று பாடலும் எனக்கு மிகவும் பிடிக்கும். ஞானராஜசேகரன் அய்யா இயக்கிய "பாரதி" திரைப்படத்தில் வரும் பாம்பே ஜெயஸ்ரீயின் குரலில் இழையும் "நின்னைச் சரணடைந்தேன்" நான் அடிக்கடி கேட்கும் பாடல். மனம் கொந்தளிக்கும் தருணங்களில் எல்லாம் மனம் கேட்கும் பாடல் அது.  பாரதியாரின் வாழ்க்கை வரலாறு பற்றி நான் படித்த முதல் புத்தகம், நேரு பாலர் புத்தகாலயம் மூலம் நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்ட "பாரதி" புத்தகம் தான். ஒரு மகாகவியாக மட்டுமின்றி ஒரு மாமனிதராகவும் நம்மை வசீகரிக்கும் ஒரு ஆளுமை அவர். அவரைப் பற்றிய சின்னச்சின்ன தகவல்களையும் தேடிதேடி படித்த காலங்கள் உண்டு. பாரதி ஒரு பல்துறை வித்தகர். வ.வே.சு அய்யருக்கு முன்பாகவே சிறுகதை முயற்சியைத் தொடங்கியவர் என்று சொல்லப்படுவதுண்டு. அவர் ஒரு கவிஞர், சுதந்திர போராட்ட வீரர், பத்திரிக்கையாளர், கேலிச்சித்திரக்காரர், கட்டுரையாளர், வாழ்நாள் எல்லாம் சமூகத்தை கேள்வி கேட்டு, முரண்பட்டு வாழ்ந்தவர். பெண்கல்வியையும் பெண் சுதந்திரத்தையும் ஊக்குவித்தவர். அதனால் பல இன்னல்களையும் சந்தித்தவர். 

நெகிழ வைக்கும் பாரதியாரின் பாடல்கள் போலவே உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட வைக்கும் பாடல்களில் ஒன்று "தண்ணீர் விட்டு வளர்த்தோம். சர்வேசா இப்பயிரைக் கண்ணீரால் காத்தோம், கருகத் திருவுளமோ?" பாடல். இப்பாடலை கருப்பு வெள்ளைக் காட்சியமைப்பில் அந்தக் கால தூர்தர்ஷனில் பார்த்த போது என்னை அறியாமல் அழுத நினைவு வருகிறது. அவரது விடுதலைப் போராட்டப் பாடல்கள் அனைத்துமே நம்மை நம் வரலாற்றைத் திரும்பிப் பார்க்க செய்யும் காலக்கண்ணாடிகள். ரஷ்ய வரலாற்றையும், கொடுங்கோன்மையயும் சாடிய கவிதைகள் பாரதியாருடையவை.  கும்மியடி பாடலை பள்ளிகளில் ஆடிப்பார்க்காத எண்பதுகளின் குழந்தைகள் யார்?? நம் வாழ்வில் கலந்து விட்ட உன்னதமான பல கருத்துக்களின் ஊற்றாக இருந்தவர் பாரதி என்பது நிதர்சனம். 

பாரதியாருக்கும் எனக்குமான சுவையான இன்னொரு பிணைப்பு "பாஞ்சாலி சபதம்". எட்டாம் வகுப்பில் எங்களுக்குத் தமிழ்ப் பாடமாக அமைந்திருந்தது இந்த க(வி)தை. அப்போதெல்லாம் மனப்பாட செய்யுள் அல்லாத செய்யுள் பகுதிகளையும் மனப்பாடம் செய்யும் பழக்கம் எனக்கு இருந்தது. " தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும்" என்று அர்ஜுனன் உரைக்கும் வார்த்தைகளை வகுப்பில் பேசிப் பார்த்து மகிழ்வோம். 2004ம் வருடம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் முத்தமிழ் விழாவில், பாஞ்சாலி சபதத்தை ஒரு நாடகமாக மேடையேற்ற எண்ணினோம். நான் எழுதிய முதல் "ஸ்கிரிப்ட்" அதுதான். எட்டாம் வகுப்பில் ஆசை ஆசையாக மனப்பாடம் செய்த இந்த வசன கவிதையை ஒரு நாடகமாக சுருக்கமாகவும், கவிதையின் தமிழ்ச்சுவை மாறாமலும் எழுதிய அந்த தருணம் தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் அற்புதமானது. எங்கள் வகுப்பு நண்பர்களே அனைத்துப் பாத்திரங்களையும் ஏற்று நடிக்க, பல்கலைக்கழக ஆடிட்டோரியத்தில் அந்த நாடகத்தை நான் இயக்கி, நாங்கள் அரங்கேற்றியபோது அவ்வளவு பாராட்டு எங்களுக்குக் கிடைத்தது. அதன் விளைவாக மற்றொரு பெரிய கல்லூரி விழாவிலும் இரண்டாம் முறையாக நாங்கள் அந்த நாடகத்தை அரங்கேற்றினோம். மறக்க முடியாத நிகழ்வு அது. 

கோயில்பட்டி- எட்டயபுரம்  மாநில நெடுஞ்சாலைக்கான நில எடுப்புப் பணியில் நான் இருந்தபோது, பாரதி பிறந்த வீட்டையும், நினைவிடத்தையும் சென்று பார்த்தபோது அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. உணர்வுப்பூர்வமாகவும். 
நாம் வாழும் மண்ணில் வாழ்ந்த அந்த மாபெரும் சீர்திருத்தவாதியும், போராளியுமான பாரதியாரின் வரலாற்றை நினைவு கூற அவரது நினைவு நாள், பிறந்த நாள் நமக்குத் தேவைப்படுகிறது. ஆனால் இன்றைக்கு சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே "அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்;
 ஆல யம்பதி னாயிரம் நாட்டல்;
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்குஎழுத்தறி வித்தல்" என்று எழுதிய ஒரு முற்போக்கு சிந்தனையாளனை நாம் இன்னும் அதிகமாகவே நினைவில் கொள்ள வேண்டும். அவரது சமத்துவத்துக்கான கனவை கைக்கொள்ளவும் வேண்டும். அது அவருக்கான அஞ்சலி மட்டுமல்ல. நம் சமூகத்துக்கான நம் கடமையும் கூட. 

Comments

  1. ரமணனுக்கு எழுத்து எங்கிருந்து வந்தது என்று இப்போதுதான் தெரிகிறது ....
    பாரதியின் கரம்பிடித்து வளர்ந்து விதத்தை அழகாக வடித்து இருக்கிறீர்கள்...

    வாழ்த்துகள்

    ReplyDelete
  2. He was and is a legend... ahead of times. His works still remain treasure without losing the spark and tenacity to carry his visions for many many years. My favourites in his works go long... to be specific theertha karaiyinile, chinanchiru kiliye, kani nilam... gooes on...

    ReplyDelete
  3. Superb madam. 💐💐💐

    ReplyDelete
  4. அருமையானா கட்டுரை அம்மா. பாரதி எனக்கும் பிடித்த மனதுக்கு நெருக்கமான கவிஞர். அவரது பன்முக தண்மை தான் அவரின்மிக சிறப்பு. அவர் காலம் கடந்து சிந்தித்த மகான். இன்று இருந்திருக்க வேண்டியவன் கிட்டதிட்ட 100 வருடங்களுக்கு முன்பே இன்றய சமூகத்திற்கும் சேர்த்து எழுதிவிட்டு மாண்டுவிட்டான். ஆனால் அம்மையீர் கூறியது போல் நாம் இன்னும்அதிகமாக அவனை வாசிக்கவும் சுவாசிக்கவும் வேண்டும்.

    ReplyDelete
  5. பாரதிக்கான மிக அழகான அஞ்சலி .அவருடைய எழுத்தையும் அது தங்களுள் ஏற்படித்திய தாக்கத்தையும் கட்டுரை வழி கடத்திய விதம் மிக அருமை

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

எனக்குப் பிடித்த குமரி உணவுகள்

வாசந்தி- குரலற்றவர்களின் குரல்

'வெயிலோடு போய்' - ச.தமிழ்ச்செல்வன்