ரத்னகிரிக்குப் போவோம்-5
ரத்னகிரி பயணம் என் மனதுக்கு மிகவும் நெருக்கமான ஒன்று. மேற்கு கடற்கரையின் வசீகரமா, முதல் முறை தேர்தல் பணிக்காக அவ்வளவு தொலைவு சென்றதன் பிரமிப்பா, அந்த பரந்த வெளி என் மனதில் ஏற்படுத்திய பரவசமா என்று பிரித்தறிய முடியவில்லை. ஆனால், நான் இதுவரை மேற்கொண்டவைகளுள் மனதுக்கு நெருக்கமான ஒரு பயணம் இது. அன்பே சிவம் திரைப்படத்தில் வரும் "அடுத்த வினாடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சர்யங்கள் மகத்தானவை" என்ற வரிகள் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். எதிர்பாராமல் நேரும் பயணங்கள், சந்திக்கும் மனிதர்கள் நமக்குத் தரும் அனுபவங்கள் அற்புதமானவை. அந்த வகையில் இந்தப் பயணம் எனக்கு ஒரு முழுமையான உணர்வைத் தந்தது.
பெண்கள் தனியே பயணிப்பது அதிகரித்து வரும் இந்த காலகட்டத்தில், தனியே பயணிப்பதன் சிரமங்களும் இருக்கவே செய்கின்றன. நான் மதுரையில் இருந்து பெங்களூருக்குப் பறந்த நாளில் தான், பெண்கள் விரும்பினால், விமானங்களில் இன்னொரு பெண்ணுக்கு அருகில் உள்ள இருக்கையைத் தேர்ந்து பாதுகாப்பாக பயணிக்கலாம் என்னும் அறிவிப்பை இண்டிகோ விமானம் செய்தது. தெரியாத ஆணோடு இருக்கையை பகிர்ந்து கொள்வதில் இருக்கும் சிரமங்களை நீக்குவதற்கான அறிவிப்பு என்றும், பெண்களைத் தனிமைப்படுத்தும் அபாயம் இருக்ககூடிய அறிவிப்பு என்றும் இருவேறு கருத்துகள் சமூக வலைத்தளங்களில் காணப்பட்டன. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நான் படித்த நாட்களில், கல்லூரியின் கணினி மையத்தில் மாணவிகளை எத்தனை மணி வரை அனுமதிக்கலாம் என்பது குறித்த விவாதம் எழுந்தது. இருவத்து நான்கு மணி நேரமும் இயங்கக்கூடிய கணினி மையத்தில், மாணவர்கள் எப்போதும் எந்த நேரத்திலும் கல்வி நிமித்தம் செல்லலாம் என்றும் மாணவிகள் எட்டு மணிக்குள் விடுதிக்குத் திரும்பிச் சென்றுவிட வேண்டும் என்றும் சொல்லப்பட்டபோது, அப்போதைய துணை வேந்தர், சமீபத்தில் மறைந்த பொருளாதார அறிஞர் முனைவர். ராமசாமி அய்யா அவர்கள் சொன்னதை நான் நினைவு கூர்ந்தேன். "பெண்களுக்கும் ஆண்களுக்கும் சமமான பளு இருக்கும்போது, அவர்களுக்கான் ஆக்ஸசும் சமமாக இருக்க வேண்டும். யாரும் எப்போதும் எல்லா வசதிகளையும் பயன் படுத்தலாம். பெண்களின் பாதுகாப்பில் உங்களுக்கு பயம் இருந்தால், அந்தப் பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுங்கள். அதை விட்டுவிட்டு அவர்களுக்கான வாய்ப்புகளை மறுக்கக்கூடாது". இண்டிகோவின் அறிவிப்பு எனக்கு இதைத்தான் நினைவூட்டியது.
ஆனால் தனியே பயணிப்பதில் ஒரு அலாதியான இன்பம் இருக்கத்தான் செய்கிறது. ஓடிக்கொண்டே இருக்கும் வாழ்வில், நிதானமாக எதையும் சிந்தித்துப் பார்க்கவே நேரம் இல்லாமல் போகும் சமயத்தில், நீண்ட பயணங்களின் அமைதி நமக்குள்ளே நாம் உள்நோக்கி சிந்திக்க ஒரு வாய்ப்பைத் தருகிறது. மனதில் வீட்டைச் சுமந்துகொண்டே சென்றாலும், எதைக் குறித்த கவலையும் இன்றி பயணிப்பது ஒரு விடுதலைதான். வேலைக்காக பயணித்தபடியே இருந்தாலும், இது நிச்சயம் ஒரு வித்தியாசமான அனுபவமே. நினைத்த இடத்தில் சாலை ஓரம் வண்டியை நிறுத்தி, கோகம் சிரப் பருகியதும், கடற்கரைகளை ரசித்ததும் நல்ல ஆன்மத் திறப்பு எனக்கு.
சாலை வழி பயணிப்பதில் இருக்கும் மகிழ்வும் நிறைவும் அலாதியானது. அதிலும் இந்தியா போன்ற பரந்த தேசத்தில், பல்வேறு மொழிகளும், கலாச்சாரமும் நிலவும் இடத்தில், பயணங்கள் நம் மனதை விசாலமாக்க உதவுகின்றன. இந்தியா முழுவதும் சாலை வழியாக பயணித்தால், எத்தனை பரந்துபட்ட வரலாற்றையும், கலாச்சாரத்தையும் நாம் கொண்டு இருக்கிறோம் என்ற பெருமிதமே ஏற்படுகிறது. எல்லா வகையான வாழ்க்கை முறைக்கும் இங்கே இடம் இருக்கிறது. உல்லாச புரியாக நினைக்கப்படும் கோவாவுக்கும், முக்கிய நகரமான மும்பைக்கும் இடையேயான நிலப்பரப்பில் சாலை வழி பயணித்தபோது எனக்கு புதியதொரு தரிசனம் கிடைத்தது. வேலை நிமித்தம் ஏற்படும் இடப்பெயர்வுகளும் அதன் விளைவான குடும்ப அமைப்பின் மாற்றங்களும் சமூக ரீதியில் பல்வேறு ஆய்வுகளுக்கு வழிவகுக்கும் விஷயங்கள். ஒவ்வொரு மாநிலத்துக்கும், அந்த மாநில மக்களின் கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்துக்குப் பாடுபட்ட தலைவர்கள் காலம் கடந்தும் மதிக்கப்படுகிறார்கள். அவர்களின் தொலைநோக்குப் பார்வையே, அந்த மாநிலத்தின் சமூக மேம்பாட்டைத் தீர்மானிக்கிறது என்றால் மிகையில்லை.
ரத்னகிரி பற்றிய என் கேள்விகளுக்கெல்லாம் பொறுமையாக பதில் சொல்லி வந்தார் வந்தனா. என் பயணம் இனிதாக அமைய அவர் மிக முக்கியமான காரணம். துணை ஆட்சியர் நிலை அலுவலரான அவர், பணி நிமித்தம் ரத்னகிரியில் வசிக்கிறார். அவரது குடும்பமும் பிள்ளைகளும் அகமது நகரில் இருக்கிறார்கள். தன்னால் முடிந்தவரை அந்தப் பகுதியைப் பற்றி எனக்குத் தெளிவாக எடுத்துரைத்தார். என் உணவு விருப்பத்தை புரிந்துகொண்டு ஒரு நல்ல தோழியாக ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்து தந்தார். அவருடன் பணி செய்த சாகரும் நாகேஷும் தேர்தல் தொடர்பான அறிக்கைகளை தேர்தல் ஆணையத்துக்கு சரியான நேரத்தில் அனுப்புவதற்கு மிகவும் உதவியாக இருந்தார்கள். பாதுகாப்புக்கென இருந்த பிரஷாந்த், சரிவான மலைப்பகுதிகளில் ஏறத் தடுமாறிய என்னைக் கைப்பிடித்து அழைத்துப்போனார். உணவுத் தேவைகளை மிக நன்றாக பார்த்துக்கொண்டார் பிரமோத். ஓட்டுநர் பிரதிமேஷ் இரவு நேரங்களிலும் மிக லாவகமாக வாகனத்தைக் கையாண்டார். மொத்தத்தில் மிகவும் அமைதியாக உணர்ந்தேன். விருந்தினர் போற்றுவது நம் கலாச்சாரத்தின் ஒரு கூறு போலும். எந்த புது இடத்துக்குப் போனாலும் அங்கே நமக்கு புதியதொரு உறவும் நட்பும் கிடைக்கவே செய்கிறது. வாழ்க்கைப் பயணத்தை அழகாக்கின்றன பயணங்கள்.
ரத்தைனகிரிக்கு நீங்கள் சென்ற பொறுப்பான அலுவலக பணியையும் சிறப்பாக முடித்து அதனூடே இத்தனை அனுபவங்களையும் ரசித்து அதை எங்களுக்கும் கொண்டு வந்து சேர்த்தது உங்களுடனே நாங்கள் பயணித்த அனுபவத்தை அளித்தது மேடம். ரத்தினகிரி கட்டுரைகள் அனைத்தும் 👌
ReplyDelete