குழந்தைகளுக்கான நேஷனல் புக் டிரஸ்ட்டின் நூல்கள்.

ஒரு முப்பது வருடங்களுக்கு முன்னால், நேஷனல் புக் டிரஸ்ட் பதிப்பித்த பல்வேறு தலைப்புகளிலான புத்தகங்களுடன், நாம் உள்ளே ஏறிப்போய் பார்க்க முடிகிற வசதியோடு, நடமாடும் நூலகம் போல, ஒரு வேன்  அந்த சிறுநகர பேருந்து நிலையத்தில் நின்று இருக்கும். நான் சிறுமியாக இருந்த போது, ஏதாவது ஊருக்கு சென்று திரும்பி வந்தால், பேருந்து நிலையத்தில் இறங்கிய உடன் முதலில் செய்யும் காரியம், அங்கே நிற்கும் வேனில் ஏறிப்போய் சில புத்தகங்களை வாங்குவதுதான். அதன் பிறகே எங்கள் கிராமத்துக்கு செல்லும் பேருந்தில் ஏறி வீட்டுக்கு வருவோம். அந்த வயதில் அங்கே எங்களுக்காக காத்து நின்றது அந்த வேன் மட்டுமல்ல.....எங்கள் அறிவை விரிவு செய்ய பயன்பட்ட மிகப்பெரும் புதையல். அதை இன்றும் என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியும். நேஷனல் புக் டிரஸ்டின் "நேரு குழந்தைகள் புத்தகாலயம்" மூலம் கையடக்கமான வகையில் குழந்தைகளுக்கான  நூல்கள் ஏராளமாக அப்போது பிரசுரிக்கப்பட்டன.  மலிவு விலையில், குழந்தைகள் கையில் பிடிப்பதற்கான அளவில், எளிமையான மொழியில் பல்வேறு தலைப்புகளில் இருக்கும் இந்த நூல்கள், நான் படிக்கப் பழகிய நாட்களில் இருந்தே என் விருப்பத்துக்கு உரியவை. அனேகமாக இந்திய மொழிகள் அனைத்திலும் இந்த புத்தகங்கள் வெளியிடப்பட்டு இருக்கக்கூடும் என்று நினைக்கிறேன்.

காந்தி மகான், இந்திய நதிகள், பாரதி, அஞ்சல் தலைகளின் கதை, சாரணர் இயக்கம், உலகை மாற்றிய புதுப் புனைவுகள்,  இமயமலை, முன்னொரு காலத்தில், சிறுவன் தாகூர், நாடகம் போடுவோம் போன்ற தலைப்புகள் கொண்ட நூல்கள் என்னிடம் இருந்தன. இதில் சிறுவன் தாகூரும் பாரதியும் என் உள்ளம் கவர்ந்தவை. பெரிய தலைவர்கள் குறித்த தகவல் களஞ்சியமாக இல்லாமல், பலமும் பலவீனமும் நிறைந்த மனிதர்களின் கதை போல இயல்பாக எழுதப்பட்டதுதான் இந்த நூல்களின் வசீகரம் என்று தோன்றுகிது. தாகூரின் மாணவப் பருவத்திலிருந்தே அவருடைய வரலாறு தொடங்கும். தேசிய கீதம் எழுதிய, நோபல் பரிசு பெற்ற நாமறிந்த தலைவர் ரவீந்திரநாத் தாகூராய் இல்லாமல், கணக்கு வாத்தியாரைப் பிடிக்காத, இருட்டுக்கு பயப்படுகிற, இனிப்பு பூரியை விரும்பி உண்கிற சிறுவன் தாகூராக கதை தொடங்கும் போதே குழந்தைகளுக்கு அவரைப் பிடித்து விடும். தற்போது விசுவபாரதி பல்கலைக்கழகமாக இருக்கும் தாகூரின் இல்லத்தையும் அதில் அவர்கள் வாழ்ந்த அழகான வாழ்வையும் எளிதான நடையில் எடுத்துச் சொல்லி இருப்பார் கதையின் ஆசிரியர். மொழிபெயர்ப்பும் மிக இனிமையான மொழி பெயர்ப்பு. பொழுதுபோக்காக எண்ணிப் படித்த இந்த நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் எண்ணிலடங்கா தகவல்கள் பொதிந்து இருந்ததை அப்போது நான் அறியவில்லை. ஆனால் மைதிலி மொழியில் கவிதை எழுதக்கூடியவர் தாகூர், அவரது அக்கா மகன் சத்தியேந்திரநாதர் இந்தியாவின் முதல் ஐசிஎஸ் அதிகாரி, காந்தியடிகள் தாகூரை குருதேவ் என்று அழைப்பார் என்னும் அளவிற்கு ஆழமான  தகவல்களை, ஒரு கதை சொல்லியின் மெருகோடு  தந்திருப்பார்கள். இந்த தகவல்களை ஒரு குக்கிராமத்து சிறுமி,  புத்தகங்கள் மூலமன்றி வேறு எப்படி அறிந்து கொள்வது? பேச்சுப்போட்டிகளிலும் கட்டுரைப் போட்டிகளிலும் இவற்றை விவரித்து எழுதும்போதும் பேசும் போதும், ஏதோ ரொம்பவும் விவரம் அறிந்தவள் என்று என்னைப்பற்றி மற்றவர்கள் எண்ணிக்கொள்ளவும், எனக்கே தன்னம்பிக்கை வருவதற்கும் இந்தத் தகவல்கள் மிகவும் உதவியாக இருந்தது என்பதும் உண்மை. 

சிறுவன் தாகூரில் எழுதப்பட்டு இருந்த கவித்துவமான வர்ணனைகள் இன்றளவும் எனக்கு மிகவும் விருப்பமானவை. "சாந்தி நிகேதனில் நான் தங்கியிருந்த ஒவ்வொரு காலைப் பொழுதும் தங்கக் கட்டமிட்டக் கடிதமென என்னை வந்ததடைந்தது" என்ற தாகூரின் நினைவுக்குறிப்பு அவற்றுள் ஒன்று. ரவிந்திரநாத் தாகூரின் குழந்தைப் பருவத்தில் தொடங்கும் நூல், அவரது இளமை, அவர் கண்ட துயரங்கள், கொஞ்சம் கொஞ்சமாக நாட்டின் விடுதலைக்கான போரில் அவர் பங்கு கொள்ள நேரிட்ட சம்பவங்கள், அவருக்கும் அவரது அண்ணி காதம்பரி தேவிக்குமான வாஞ்சை, அவரது பல்துறை வித்தகம் பற்றியெல்லாம் விவரித்து முடியும். கூடவே அந்தந்த காலகட்டங்களின் புகைப்படங்களும் நிகழ்வுகளைக் கண் முன் நிறுத்தும். ஒரு வரலாறு படித்த உணர்வே இல்லாமல், ஒரு தேசத்தலைவரின் வரலாற்றை அவரது நிஜமான பிம்பத்தை முன்னிறுத்தி சிறு பிள்ளைகள் மனதில் புகுத்திடும் அற்புதமான பணியை, நேரு குழந்தைகள் புத்தகாலயம் வெளியிட்ட புத்தகங்கள் செய்தன. 

இதே போலத்தான் பாரதி குறித்த நூலும். சிறுவன் பாரதியும் கணக்கோடு பிணக்கு கொண்ட நம்மை போன்ற சிறுவனாக அறிமுகம் ஆகும்போது மகாகவி நம் தோழராக மாறிப்போவார். அவரது மாணவப்பருவத்தில் கைவந்த கவிபுனையும் திறன், அவர் காசியில் வளர்ந்த காலங்கள்,  வறுமையான வாழ்க்கை நிலை, சுதந்திரப் போராட்டத்தில் அவரது ஈடுபாடு, புதுச்சேரியின் தலைமறைவு நாட்கள், அவர் நடத்தி வந்த இந்தியா பத்திரிக்கை என பல தகவல்கள் இலகுவாக நாம் அறிந்து கொள்வோம். பாரதி யானை மிதித்து இறந்தார் என்பதாக சில நாம் கட்டுரைகளில் படித்து இருப்போம். அது அப்படி இல்லை என்பதையும் ,பார்த்தசாரதி கோயில் யானை தள்ளி விட்டதில் பலகீனமடைந்த பாரதி, வயிற்றுபோக்கால்தான் இறந்தார் என்பதையும் இந்த நூல் மூலமே நான் அறிந்து கொண்டேன். கருத்துப் பிழையோடு வெளிவந்த ஒரு கட்டுரைக்கு என் ஆறாம் வகுப்பில் ஒரு மறுப்பும் எழுதிப் போட்டு இருக்கிறேன். இன்னொரு சுவையான தொடர்பும் எனக்கும் பாரதி நூலுக்கும் இருக்கிறது. நாங்கள் எழுதிய குரூப் 1 முதன்மைத் தேர்வில் பாரதி பற்றிய சிறு குறிப்பு எழுதும்படி ஒரு கேள்வி வந்தது. மற்ற பொதுவான தகவல்களோடு, பாரதியார் கேலிச்சித்திரம் வரைவதில் விற்பன்னர் என்றொரு தகவலையும் என் பதிலில் எழுதினேன். அந்த ஒரு விஷயத்தை நான் அறிந்தது சிறு வயதில் படித்த இந்த "பாரதி" புத்தகத்தில்தான் என்னும் உண்மை அந்த நேரத்தில் எனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளித்தது.

அதே போலத்தான் மற்ற புத்தகங்களும். சிந்து சமவெளி நாகரிக மக்கள் தங்கள் வணிகம் தொடர்பான சின்னங்களை மண்ணில் அச்சு வைத்து செய்து, அதனை சுட்டு பயன்படுத்துவார்கள், அசோகர் கால கல்வெட்டுகள், சாமானியர்கள் படிக்ககூடிய வகையில் பிராகிருத மொழியில் எழுதப்படும், கலிங்கப் போருக்குப் பிறகான அசோகரின் ஆட்சிமுறை, ஆரியர்கள் மாடு மேய்த்தலை முக்கியத் தொழிலாக செய்தனர், பணடைத் தமிழர்கள் ரோமானியர்களுடன் வாணிபத் தொடர்பு கொண்டிருந்தனர் போன்ற பல தகவல்களை "முன்னொரு காலத்தில்" புத்தகம் மூலம் என் சிறு வயதிலேயே அறிந்து கொள்ள முடிந்தது. 

முதல்முறை கல்லூரியில் அனைத்து இந்திய சுற்றுப்பயணத்துக்கு அழைத்து சென்றபோது, டெல்லியிலிருந்து சிம்லா செல்லும் வழியை ஏற்கனவே நன்கு அறிந்திருந்த பிரமை எனக்கு இருந்தது. கால்கா என்றொரு சிறு நகரமும்  இந்த இரு நகரங்களுக்கும் இடையில் இருப்பதை நினைவு கூர்ந்து, ஒரு பழைய தோழியை சந்திக்கும் ஆர்வத்துடன் அந்த ஊரைக் கடந்தேன்.  தமிழகத்தின் ஒரு கிராமத்து மாணவி எப்படி சிம்லாவுக்கும் டெல்லிக்கும் இடையிலான வழியை அறிந்திருக்க முடியும்??.       "சாரணர் இயக்கம்" என்னும் புத்தகத்தில் வரும் சிறுவர்கள் நவீனும், கபிலும் இதே ரயிலில் "ரோடோடென்ரான்" மலர்களைப் பார்த்தபடி பயணிப்பதை படித்த அனுபவமே இதற்குக் காரணம். சாரணர் இயக்கம் பற்றிய அறிமுகம், அதன் முக்கியத்துவம், இளைஞர்களிடையே தேசப்பற்றையும் வீரத்தையும் வளர்க்க வேண்டியதன் அவசியம், பேடன் பவுல் தொடங்கிய சாரணர் இயக்கத்தின் பல்வேறு பிரிவுகள், காட்டுத்தீ, அதை அணைக்கும் முறை, குறிப்பாக தீத்தடுப்பு உத்திகள் குறித்த நடைமுறைகள் இவற்றை நவீன் ,கபில் என்னும் இரு நண்பர்கள் மூலமாக கதை போல தந்திருப்பார்கள். சாரணர் இயக்கத்தில் சேர எனக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனாலும், கல்லூரியில் தேசிய சேவைத் திட்டத்தில் சேர்ந்து ஈடுபாட்டுடன் பணி செய்தது, இந்த நூலின் தாக்கத்தால்தான். 

இந்திய நதிகள் புத்தகத்தை படித்தபின்னர், கங்கையைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் மிகவும் இருந்தது. ரிஷிகேசில் ஆர்ப்பரித்து ஓடிய கங்கை நதியின் பேரோசைக்கிடையில் அந்தப் புத்தகத்தின் வரிகள் என் நினைவில் ஓடின . சக்கரத்தின் பயன்பாடு மனிதகுலத்தின் முன்னேற்றத்துக்கு எப்படி வழி வகுத்தது, தந்தி, தொலைபேசி ஆகியவற்றின் கண்டுபிடிப்பும் அதன் மூலம் நிகழ்ந்த சமூக முன்னேற்றங்களும் "உலகை மாற்றிய புதுப் புனைவுகள்" மூலமே எனக்குத் தெரிய வந்தன. பின்னாட்களில் போட்டித்தேர்வுகளுக்கு  தயார் செய்யும்போது, இந்த பொது அறிவு அடிப்படை எனக்கு பெரிதும் உதவியது என்பதை நான் எப்போதும் நன்றியுடன் நினைவு கூர்கிறேன். “அஞ்சல் தலைகளின் கதை” பிரதியும் மிக முக்கியமான ஒன்று. கதை போல அஞ்சல் தலைகளின் வரலாற்றை விரிவாகச் சொல்லும் நூல் இது. முன்பெல்லாம் அஞ்சல் தலை சேகரிப்பது ஒரு முக்கியமான பொழுதுபோக்காக இருந்தது. ஆகவே, அஞ்சல் தலை சேகரிப்பு பற்றியும் இந்த நூலில் விளக்கப்பட்டு இருக்கும். இப்போதும் அஞ்சல் தலை சேகரிப்போருக்காக அஞ்சலகங்களில் சிறப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன என்பது கூடுதல் தகவல்.

நாம் பார்க்காத இடங்களைப் பார்க்கும், புரிந்து கொள்ளும் உன்னத அனுபவத்தை புத்தகங்கள் நமக்குத் தருகின்றன. இப்போது உள்ள தகவல் தொழில் நுட்ப முன்னேற்றத்தில் இந்த இடங்கள் குறித்த காணொலிகள் ஆயிரம் நமக்கு ஒரு விரல் சொடுக்கில் கிடைக்கலாம். ஆனால் படிக்கும் சொற்களை நம் மனதுக்கு ஏற்றபடி கற்பனை செய்வதன் சுகம் வார்த்தைகளில் அடங்காது. அதுவும் பால்ய காலங்களில் நமக்குக் கிடைக்கும் அருமையான தோழர்கள் நல்ல புத்தகங்கள்தான். நம் சிந்தனையை செம்மைப்படுத்தவும், நம்மைச் சுற்றியுள்ள உலகை, அதன் பல்வேறு பரிமாணங்களை உற்று நோக்கும் பண்பை நூல்களே நமக்கு வழங்குகின்றன என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை. இப்பொழுது புத்தகங்களை வாங்குவதும் அதே விரல் சொடுக்கில் செய்யக்கூடிய விஷயம்தான். நேஷனல் புக் டிரஸ்டின் வலைப்பக்கத்தில் குழந்தைகளுக்கான இதே புத்தகங்கள் எல்லா மொழிகளிலும் கிடைக்கின்றன. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பாடப்புத்தகங்களைத் தாண்டிய தரமான நூல்களை நம் பிள்ளைகள் படிக்க வகை செய்வது நம் கடமை என்றே எனக்கு தோன்றுகிறது. உங்களுக்கும் அப்படித்தானே?


Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த குமரி உணவுகள்

வாசந்தி- குரலற்றவர்களின் குரல்

'வெயிலோடு போய்' - ச.தமிழ்ச்செல்வன்