பொன்னியின் செல்வன்
ஐம்பதுகளில் இருந்து இப்போது வரை தமிழ் மக்களின் உள்ளம் கவர்ந்த புதினம் பொன்னியின் செல்வன். கல்கி அவர்களின் அற்புதமான நாவல். 1950 முதல் 1954 வரை கல்கி இதழில் தொடர்கதையாக வந்து இப்போது வரை தொடர்ந்து விற்பனையில் சாதனை படைத்துக்கொண்டு இருக்கும் இந்த புதினம், எனக்கு மிகவும் பிடிக்கும். கல்கியில் அது வெளியான காலகட்டத்தில், அந்த இதழ்களில் தொடர்கதை வெளிவந்த பக்கங்களை மட்டும் வெட்டி பைண்ட் செய்து வைத்திருந்தார் என் பெரிய அத்தை. அந்த காலத்தில் பொன்னியின் செல்வன் ரசிகர்கள் பலருக்கும் அந்த பழக்கம் இருந்து இருக்கிறது. விடுமுறைக்கு ஊருக்கு போயிருந்த ஒரு நாளின் மதியத்தில், மச்சு எனப்படும் பழைய பொருட்கள் போட்டு வைத்திருந்த மாடியறையில், புழுங்கிய பேப்பர் மணத்தோடு பொன்னியின் செல்வனைக் கண்டு எடுத்தேன். அப்போது எனக்கு ஒரு பன்னிரண்டு வயது இருக்கக்கூடும். புரட்டிப்பார்த்த அளவிலேயே அந்த காகிதங்களின் மணமும், மணியன் செல்வன் வரைந்திருந்த பச்சை நிறம் மேலோங்கிய அரசர் அரசியரின் ஓவியங்களும் சிறுமியான என்னை ஈர்த்திருக்கவேண்டும். புத்தகத்தை கையில் எடுத்துக்கொண்டு அந்த அறையின் மூலையிலேயே உட்கார்ந்து, ஆதி அந்தமில்லா கால வெள்ளத்தில் கல்கியோடு பயணிக்கத்தொடங்கினேன். தொடர்ந்து வந்த நாட்களில் ஐந்து பாகங்களையும் ஒரே மூச்சில் படித்து முடித்தது நினைவில் வருகிறது. என் இளமைக்கால நினைவுகளில் மிக முக்கிய பங்கு இந்த புனைவுக்கு உண்டு.
புனைவு என்று சொல்வதே இந்த நூலின் ரசிகர்களுக்கு எரிச்சலை ஊட்டக்கூடும். சோழர் குல வரலாற்றை தமிழ் மக்களுக்கு நெருக்கமாகவும் எளிமையாகவும் அறிமுகப்படுத்திய படைப்பு வேறேதேனும் இருக்கிறதா என்று எனக்குத்தெரியவில்லை. ஆனால் கதையின் தொடக்கத்தில் இருந்து இறுதி வரை வந்தியத்தேவனோடு நாமும் பயணிப்போம். வீராண ஏரியும், கடம்பூரும், இலங்கையும், தஞ்சையும் நம் கண் முன்னே விரியும்.வரலாறும் புனைவும் சரிவிகிதம் கலந்த நேர்த்தியான படைப்பு அது. குந்தவையை ரசிக்கும் அதே நேரம் நந்தினியின் நியாயத்தையும் அழகாகக் காட்டும் அவரது காட்சியமைப்புகள். ராஜராஜன் சோழ நாட்டின் பேரரசனாக விளங்கியதை நாம் எல்லோருமே அறிவோம். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த அனைவரும் அறிந்த ஒரு வரலாற்று நிகழ்வை திகிலோடும்,சதிகளோடும் கற்பனை கலந்து எழுதி, ஐந்தாவது பாகம் முடியும் வரை வாசகரை கதையோடு ஒன்றுபடச்செய்யும் திறன் படைத்தவை அவரது எழுத்துக்கள். உண்மையான வரலாற்றின் ஒற்றைச்சரடை எடுத்துக்கொண்டு ஊடுபாவாக அவரது கற்பனையைக் கலந்து மிக நுட்பமாக இந்தக் கதையை கல்கி பின்னி இருக்கிறார். கதையின் எந்த இடத்திலும் நிஜத்தையும் புனைவையும் பிரித்துப்பார்க்க வாசகனுக்குத் தோன்றாது என்பதோடு புனைவு தனியே துருத்திக்கொண்டும் தெரியாது.
காட்சிகளை எழுதும் விதத்தில், மிகச்சில சொற்களைக்கொண்டே அந்த இடத்தின் அழகை விவரித்து நாமும் ஒரு பார்வையாளராக உணர வைப்பது பொன்னியின் செல்வனின் சிறப்பாக நான் நினைக்கிறேன். பாதாளச் சிறையில் சேந்தன் அமுதனோடு நாமும் இருப்போம். நிலவறைக்குள் மந்தாகினியோடு சோமன் சாம்பவனை அச்சுறுத்துவோம். ஆழ்வார்க்கடியானோடு திருபுறம்பியத்தில் ஒற்றாடுவோம். குடந்தை ஜோதிடரிடம் குந்தவையோடு நாமும் ஜோதிடம் கேட்போம். பூங்குழலியோடு படகு வலிப்போம். பழுவேட்டரையர் கர்ஜிக்கும் குரலை அனுபவிப்போம். கந்தன் மாறன்,பார்த்திபேந்திர பல்லவன், ஆதித்த கரிகாலன் இவர்களோடு தண்டகாரண்யத்தில் வேட்டைக்குச் செல்வோம். நந்தினியின் பார்வையில் பயம் கொள்வோம். பொன்னியின் செல்வரோடு சேந்தன் அமுதனுக்கு முடிசூட்டுவோம். அப்படியொரு அழகிய அனுபவம்தான் பொன்னியின் செல்வன்.
தஞ்சை பெரிய கோவிலுக்கும் கும்பகோணத்தை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் எப்போது சென்றாலும், பொன்னியின் செல்வன் குறித்த உரையாடல் ஏதோ ஒரு வகையில் எஙகளுக்குள் வந்துவிடும். அப்படி தஞ்சைக்கு சென்று, பெரிய கோயிலின் அழகையும் வரலாற்றையும் பேசிக்கொண்டு வந்த ஒரு நாளில், பேச்சில் ஈர்க்கப்பட்ட நான்காம் வகுப்பில் இருந்த என் மகனும் பொன்னியின் செல்வன் படிக்க விரும்பினான். நான் படித்த அதே வேகத்துடன் அவனும் ஒரே மூச்சில் இந்த நாவலை படித்து முடித்ததைக் கண்டு பேராச்சர்யம் ஏற்பட்டது. எப்படி எழுபது வருடங்களாக ஒரு நாவல் மக்கள் மனதில் அதே ஆர்வத்தைத் தூண்டிவிட முடியும்? இப்போதும், மனம் இலகுவாக உணரும் நாட்களில் இந்த புத்தகத்தை மனம் நாடுவதுண்டு. பலரும் குழுக்களாக வந்தியத்தேவன் பயணித்த பாதையில் பயணித்து வருவதையும், பொன்னியின் செல்வன் நாடகங்கள் பல இடங்களில் நிகழ்த்துக்கலையாக நடத்தப்படுவதையும் நாம் பார்க்கிறோம். சமீபத்தில் பெரிய எதிர்பார்ப்புடன் பொன்னியின் செல்வன் திரைப்படமும் வெளியானது. ஆனால் நாவல் வாசகனின் மனதுக்குள் உருவாக்கிய பிரம்மாண்டமான பிம்பத்தை இவற்றால் நெருங்க முடியவில்லை என்பதே உண்மை.
நாவல் ஐம்பதுகளில் எழுதப்பட்டதாக இருந்தாலும், காலத்தை கடந்து நிற்கும் பல கருத்துக்கள் கதை மாந்தர்கள் வழியே வெளிப்படுவது ஆச்சர்யம் அளிக்கக்கூடியது. புத்த பிக்ஷுக்கள் இலங்கை அரசியலில் வகித்த அங்கம் குறித்த விமர்சனம் அப்படியானது. அதே போல அரசர்களின் மாண்பையும் வீரத்தையும் மட்டுமே மிகைப்படுத்தி சொல்லாமல், சாமானிய மக்களின் வாழ்வையும் நாட்டின் அரசியலோடு இணைத்தே இந்தக் கதை நிறுவப்பட்டு இருப்பது ஆச்சர்யத்தை அளிக்கும். ஆள்வதற்கு நாடே இல்லாத ஒரு வீரனான வந்தியத்தேவனின் பார்வையில் கதை விரிவதும் அரசர்களின் இயல்புகளின் கோணல்களை அவன் விமர்சிப்பதும் ஒரு எடுத்துக்காட்டு. படகோட்டும் பெண், பூ விற்கும் பையன், வைத்தியர் மகன், பணிப்பெண்கள் என அரசர்களின் ஆடம்பரத்தோடு ஒப்பிட முடியாதவர்களும் கதையில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
அக்கால சிற்றரசர் மரபுகளும், அவர்கள் நினைத்தால் எப்படி ஸ்திரமாக இருக்கும் ஒரு அரசாங்கத்தில் குழப்பத்தை உண்டு பண்ண முடியும் என்பதையும் இந்த நாவலில் நாம் நுட்பமாகப் பார்க்க முடியும். அரசுகள் எப்போதுமே நிலையற்றவை. குடிமக்கள்தான் ஒரு அரசுக்கு முக்கியம்; குடிமக்களின் அன்பை பெற்றவர் தான் நல்லமுறையில் அரசாள முடியும்; அதுதான் அரசியலின் அடிப்படை பாடம் என்று செம்பியன் மாதேவி மதுராந்தகனிடம் சொல்வதாக ஒரு இடம் வரும். இந்த கதை எழுதப்பட்ட காலத்தோடு இந்த கருத்தை இணைத்துப்பார்த்தால் கல்கியின் எண்ணப்போக்கை புரிந்துகொள்ள முடியும். அதே போல போர்களுக்கு வழங்கப்படும் நிதி வணிகர்களிடமும் நாட்டு மக்களின் வரியில் இருந்தும் எவ்வாறு பெறபட்டது, அரசியலில் வணிகர்களின் பங்கு என்ன என்பதையும் கதையின் ஊடாகவே நாம் புரிந்து கொள்ளலாம். சோழர்கால நாட்டுப்புற கலை வடிவங்களையும் இந்த நாவல் அழகாக காட்சிப்படுத்துகிறது. தேவராட்டம், போர்க்களக்காட்சிகளை நாடகமாக நடிப்பது, தெருக்கூத்தாக நடக்கும் ராமாயணம், இலங்கையின் பெரஹரா திருவிழா நடக்கும் விதம், மகிந்த அரசனின் வரலாறு என அக்கால கட்டத்தின் பண்பாடுகளையும் நாவல் படிக்கும்போதே நாம் தெரிந்து கொள்ளலாம். அதோடு பல்வேறு மத மரபுகளுக்கு இடையேயான ஆதிக்க சர்ச்சைகளும் கதைக்கு உள்ளாகவே ஒரு முக்கிய பங்கு வகிப்பதை பார்க்க முடியும். அரசியலில் பெண்களின் பங்கையும் அது ஆண்களின் மனதில் ஏற்படுத்தும் அருவருப்பையும் பாதிப்புகளையுமே அழகாகச் சொல்லி இருப்பார் கல்கி. இந்த மனப்போக்குகள் எல்லா காலத்துக்கும் பொருந்தக்கூடியவையே. கதையின் மையப்புள்ளியைத்தாண்டி, இதுபோன்ற பல பொருண்மைகள் பற்றியும் இந்த நாவல் பேசுகிறது.
பொன்னியின் செல்வன் மீது நிறைய விமர்சனங்களும் வைக்கப்படுவது உண்டு. தீர்க்கமான பல ஆய்வுகளுக்கும் இந்த நாவல் உட்படுத்தபட்டு இருக்கிறது. ஆனால் ஒரு வாசகரின் மனதில், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, ஒரு குறிப்பிட்ட காலத்தின் நிகழ்வுகளை வாசிப்பவர் தன் மனக்கண்ணில் காணக்கூடிய பிம்பத்தை உருவாக்கியதில் கல்கியின் பொன்னியின் செல்வன் பெரு வெற்றி பெற்று காலத்தைக் கடந்து நிற்கிறது என்பதை நாம் நிச்சயம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
இது வரலாற்று புதினம்!
ReplyDeleteஉண்மையான வரலாற்றில் ஆழ்வார்கடியானும் ந்ந்தினியும் இருந்ததாக தெரியவில்லை. இந்த கற்பனை கதா பாத்திர படைப்புகள் மூலம் தான்க ல்கி நம்மை கட்டி போட்டுவிட்டார் .
தங்கள் கருத்தாய்வு அருமை
ReplyDelete