ரத்னகிரிக்குப் போவோம்
பொதுவாகவே எனக்கு பயணம் மிகவும் பிடிக்கும். அதனாலேயே தொடர்ச்சியாக பயணிப்பது பெரும்பாலும் அயர்ச்சியை அளிப்பது இல்லை. புது இடங்களுக்கு செல்வது, அங்குள்ள மொழி, கலாசாரம், வரலாறு, புவிப்பரப்பின் மாறுபாடுகள், அதன் விளைவாக அந்த இடங்களில் வளரும் மரங்கள் தாவரங்கள், பறவைகள், வீடுகளின் அமைப்பு என்று வேடிக்கை பார்த்தபடியே செல்வதில் மிகுந்த விருப்பம். இந்த முறை தேர்தல் பணிக்காக மஹாராஷ்டிரா செல்லும் வாய்ப்பு கிடைத்த போது உற்சாகமாக இருந்தது. ஏனெனில், கன்னியாகுமரியில் பணிக்கு வந்த பிறகு தனிப்பட வடக்கே பயணிப்பது பெரும்பாலும் குறைந்து விட்டது. வடக்கே என்றால் மதுரைக்கு வடக்கே... கடவுளின் தேசம் அருகில் இருப்பதாலும், கன்னியாகுமரியே கடவுளின் தேசத்தின் நீட்சியாக இருப்பதாலும் இப்படி நேர்ந்திருக்கலாம். ஆகவே, இந்த பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்கி இருந்தேன்.
இரண்டாம் தேதி ரத்னகிரியில் தேர்தல் பணியில் இருக்க வேண்டும். முன் ஜாக்கிரதை முத்தண்ணியாக ஒன்றாம் தேதி காலையிலேயே பயணத்தை தொடங்க நினைத்து, மதுரை மூலம் பெங்களுரு , அங்கிருந்து கோவாவுக்கு விமானத்தில் சென்று, காரில் ரத்னகிரி செல்ல எண்ணியிருந்தேன். இரவில் நெடுநேரம் பயணம் செய்ய வேண்டாம் என்பதாலும், பகலில் பயணித்தால், மேற்கு கடற்கரை சாலையில் கேரளா தொடங்கி பம்பாய் வரை காரில் பயணிக்கும் என் நெடுநாள் கனவின் ஒரு பகுதி நிறைவேறும் என்பதாலும், இரவில் கோவாவுக்கு அருகில் உள்ள சிந்துதுர்க் மாவட்டத்தில் தங்கி விட்டு, அதிகாலை ரத்னகிரிக்கு செல்லலாம் என்று திட்டம். திட்டம் மட்டும்தான். பயணம் இத்தனை அட்வென்ச்சரசாக மாறும் என்று எந்த நொடியிலும் யாரும் எனக்கு சொல்லவில்லை.
மதுரையில் மதியம் 3 மணிக்கு விமானத்தைப்பிடிக்க 11 மணிக்கே திருநெல்வேலியில் கிளம்பினோம். எனக்கு 24 மணி வகையான நேரத்தை புரிந்து கொள்வது எப்போதுமே கடினம். இரவு 9 மணி என்றால் இயல்பாகப் புரியும். 21.00 பி எம் என்று இருந்தால், 21ல் 12ஐ கழித்து 9 மணி என்று புரிந்து கொளவது ஏனோ சிரமம். என் இரண்டாம் வகுப்பு கணக்கு டீச்சர் என்னை மன்னிக்க வேண்டும் . இதற்கு முன்னால் நேரக்குழப்பத்தால் ரயிலைத்தவற விட்ட சரித்திர நிகழ்வுகள் எனக்கு உண்டு. எனவே மறுபடி மு.முத்தண்ணியாக 11 மணிக்கே திருநெல்வேலியில் கிளம்பி விட்டோம். பயணம் இரவு முழுவதும் நீளப்போவதை அறியாமல்.
மதுரை விமான நிலையத்தில் சரியாக மதியம் 1.30 மணிக்கெல்லாம் இறக்கி விட்டுவிட்டார் ஓட்டுனர் தம்பி. கணவரிடம் கைகுலுக்கி கண்கலங்கி விடைபெற்று வேக வேகமாக செக் இன் செய்யப் போனேன். இதிலும் மு.மு யாக, முதல் நாளே வெப் செக் இன் செய்து விட்டதால், பெட்டியை மட்டும் எடை போட்டு அனுப்பினால் போதும் என்று போர்டிங் பாஸ் வாங்குமிடத்துக்குப் போனபோதுதான் முதல் ஜெர்க்.
விமானம் 3.20க்கு பதிலாக 3.45க்கு புறப்படும் என்று சொன்னார்கள். என் கணக்கு வராத மூளை 15 நிமிடம் தானே என்று எண்ணிக்கொண்டு மலர்ந்த புன்னகையுடனேயே அப்போதும் இருந்தது. பெங்களுரில் இருந்து கோவா விமானம் 5.55 க்கு புறப்பட இருந்தது. இரண்டு விமானங்களுக்கும் இடையில் 1 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருப்பு நேரம் இருந்ததால், அப்போது எனக்கு எதுவும் தோன்றவில்லை. 15 நிமிட தாமதத்துக்குப் பின்னர், விமானம் 3.45க்கு மதுரையில் இருந்து பறக்க ஆரம்பித்தது. அப்புறம் ரொம்ப நேரத்துக்கு பறப்பதை நிறுத்தவே இல்லை என்பதுதான் பிரச்சனை.
பயணம் தொடங்கியதில் இருந்தே காற்றுப் பொட்டலங்களில் சிக்குண்டு ஒரு மாதிரி மேடு பள்ளமான ரோட்டில் பயணிப்பது போலவே ஒரு உணர்வு இருந்துகொண்டே இருந்தது. நானும் கொண்டுபோன புத்தகத்தை படித்தபடி இந்த ஜிவ்வென்ற உணர்வை அவ்வப்போது வயிற்றில் வாங்கிய படி உட்கார்ந்திருந்தேன். 4.30 ஆனதும், இரண்டாம் ஜெர்க். காப்டன் தன் பொறுப்பான குரலில் "பாட் வெதர்" காரணமாக பெங்களூருவில் விமானத்தை இறக்கத் தாமதமாகும் என்றும், பயணிகள் பொறுத்திருக்கவும் என்றும் அறிவித்தார். 4.50க்கு தரையிறங்க வேண்டிய விமானம். முதலில் 10 நிமிடம் தாமதம் என்று சொல்லப்பட்டது. அப்படியே நேரம் கழிய, 5.10 க்கு மேல் விமானம் வானத்தில் சுற்றியபடியே இருந்ததை அறிந்தேன். மேற்கில் இருக்கும் சூரியன் முதலில் இடது ஜன்னல் ஓரத்தில் தெரிந்தது. கொஞச நேரம் கழித்து வலது புற ஜன்னல் அருகே. இதேபோல் மூன்று முறை ஆனபிறகுதான் வானத்தில் வட்டமிடுவது என்றால் என்ன என்று புரிந்தது. 5.40 மணிக்கு தரை இறங்கும் நிலை மெதுவாக வந்தது. என் புன்னகை மறைந்து மெலிதான பதட்டத்துக்குப்போனேன்.
விமானம் ரொம்ப நேரம் விவேக் சொல்வதுபோல ஜெமினி பாலத்தில் இறங்குவது போன்ற நிலையிலேயே இருந்ததால், சீட் பெல்டை அகற்றி உதவிக்கு வர ஹோஸ்டஸால் முடியவில்லை. விமானம் நின்று விட்டாலும் இறங்கித் தள்ள முடியாது என்று ஒரு மொக்கை ஜோக் மனதில் ஓடியது. ஒரு வழியாக தரை இறங்கிய பின்னர் கைபேசியை ஆன் செய்தால், முதல் அழைப்பு நான் கோவா செல்லும் விமானத்தின் கடைசி அழைப்பு. அப்போது தான் நான் சீட் பெல்ட்டைக் கழட்டிக்கொண்டு இருந்தேன். அனைவரும் வந்துவிட்டதால், அந்த விமானம் புறப்படப்போகிறது என்றும் அடுத்த விமானத்தில் நான் வர விமான நிலையத்தில் உதவிக்கு இருப்பார்கள் என்றும் சொல்லிவிட்டார் அந்தப் பெண். நானும் சரி இதற்கு பதட்டப்பட்டு ஆவது ஒன்றுமில்லை. இறங்கிப்பார்த்துக் கொள்வோம் என்று ஒரு பெருமூச்சு விட்டேன். அப்போதைக்குத் தான். இறங்கும் முன்னர் இந்த விமானத்தின் உதவியாளர் இணைப்பு விமானங்கள் குறித்து நுழைவாயிலில் காத்திருப்பார்கள், கவலைப்படாதீர்கள் என்று சொல்லி அனுப்பினார். அவர்தான் நான் இணைப்பு விமானத்தை பிடிக்க வேண்டிய அவசரத்தை சொன்ன போது, எல்லா விமானங்களும் தாமதமாகவே கிளம்புகின்றன,எனவே பயம் வேண்டாம் என்றும் தேற்றியவர். ஆனால் அதே பாட் வெதரில் மதுரை விமானம் தரை இறங்க முடியாமல் சூரியனைச்சுற்றி வந்த போது, நான் போக வேண்டிய கோவா விமானம் மட்டும் வினாடி பிசகாமல் எப்படித்தான் கிளம்பியதோ?
சரி அடுத்த வழியைப்பார்ப்போம் என்று விமானத்தில் இருந்து வெளிவந்தால், அப்படி ஒரு மழை. ஒரு வழியாக நுழைவு வாயிலில் நம்மை விடும் பஸ்ஸில் ஏறி விமான நிலையத்தில் இறங்கினால், நான் பயணிக்க வேண்டிய விமான நிறுவனத்தின் அலுவலர்கள் யாருமே கண்ணுக்கு எட்டிய வரை இல்லை. நானும் வேக வேகமாக நடந்து மறுபுறம் சென்று அலைந்து அப்புறம் காவலர்கள் வழிகாட்ட சம்மந்தப்பட்ட அலுவலரை சந்தித்தேன். அன்பே சிவம் படத்தில் போல, இதேமாதிரி மற்ற விமானங்களைத் தவற விட்ட பயணிகளுக்கு தங்குமிடம் பற்றி சொல்லிக்கொண்டு இருந்தார் ஜாக்சன் எனப்பட்ட அந்த அலுவலர். எனக்கு இரவே கோவா செல்ல வேண்டிய அவசியத்தை வேக வேகமாக சொல்லிவிட்டு, அவரைப்பார்த்தால், நிதானமாக சொன்னார். " நாளை காலை ஆறு மணிக்குத் தான் கோவாவுக்கு அடுத்த விமானம். வேறு வழியில்லை." எனக்கு கண்ணில் பூச்சி பறக்க ஆரம்பித்துவிட்டது. ஏனெனில் காலை பத்து மணிக்குள் குறிப்பிட்ட பணியிடத்தில் நான் இருக்க வேண்டும். கோவாவில் இருந்து ரத்னகிரிக்கு சாலை வழியாக செல்ல 5 மணி நேரம் ஆகும். மேலும் என்னை அழைத்துபோக ரத்னகிரி மாவட்டத்தில் இருந்தும் அலுவலர்கள் கோவாவில் வந்து காத்திருந்தார்கள். ஆகவே நான் இரவே சென்று விடுவதுதான் நல்லது. ரொம்ப நேரம் வாதாடிய பிறகு, "என்னுடைய ரிஸ்க்கில் இரவு 8.20 விமானத்தில் ஒரு டிக்கெட் தருகிறேன் சரியா" என்று ஒரு மர்மப்பார்வையோடு கேட்டார் ஜாக்சன். எனக்கு ரிஸ்க் எல்லாம் எனக்கு ரஸ்க் மாதிரி. குடுங்க போறேன் என்று சொல்லி விட்டேன். அதன் பிறகுதான் இவர் ரிஸ்க் என்று ஏன் சொல்கிறார் என்று சந்தேகம் வந்தது. போர்டிங் பாஸ் அடித்துக் கையில் கொடுத்து விட்டு மறுபடி அதே மர்மப் புன்னகையோடு " என்னோட ரிஸ்க் ல தரேன் மேடம்.எதாவது பிரச்சினைன்னா ரூமுக்கு போய்டுங்க" என்றார். இந்த முறை கேட்டேன்.டிக்கெட் கொடுத்த பின்னர் என்னங்க ரிஸ்க்? அவர் யோசித்த படியே சொன்னார். "இது முழுவதும் இருக்கைகள் பதிவு செய்யப்பட்டு விட்ட விமானம். ஆகவே இடம் இல்லாமலும் போகலாம்." எனக்கு உண்மையில் புரியவில்லை. விமானத்தில் எக்ஸ்டிரா டிக்கெட் போட்டு புட்போர்ட் அடிக்க விடுவார்களா என்ன? சரி வருவது வரட்டும். இப்போதைக்கு கையில் 8.20 விமானத்துக்கு வழி கிடைத்த மகிழ்ச்சியில் ,எனக்காக கோவாவில் காத்திருந்தவர்களிடம் 8.20க்கு கிளம்புகிறேன். 9.30க்கு வந்து விடுவேன் என்றேன். இங்கும் தாமதம் நேரப்போவது தெரியாமல்.
பெங்களுரு விமான நிலையம் பெரியதாக இருந்தது. எனக்கு கொடுக்கபட்ட கேட் எண் ஒரு மூலையில் இருந்தது. அங்கே போய் அப்பாடா என்று உட்கார்ந்து கொள்ளலாம் என்று நீள நடந்து போனால்,அது இந்தூர் விமானங்கள் செல்லும் கேட். சரி எனக்கான கேட் எது என்றால் அதை மாற்றிவிட்டார்களாம். நான் இதுவரை நடந்து வந்த பாதையின் அடுத்தக் கடைசியில் இப்போது கோவா விமானத்துக்கான கேட். அடக்கடவுளே! இதற்கு முடிவே இல்லையா? மீண்டும் அடுத்த மூலைக்கு நடந்து ஒரு முறைக்கு இரு முறை அதுதான் நான் காத்திருக்க வேண்டிய இடம் என்பதை உறுதி செய்து கொண்டு உட்கார்ந்து கொண்டேன். அப்போது மணி 7.30. காலை 11.00 மணிக்குத் தொடங்கிய பயணம் என்பதால் கொஞ்சம் ஆயாசமாக இருந்தது. அப்போது இன்னொரு சந்தேகமும் வந்தது. என் பெட்டி சரியாக வந்து சேருமா என்று. அதனை மறுபடியும் சென்று உறுதிப்படுத்திக்கொண்டு அப்பாடா என அமர்ந்தேன். 8.20 க்கு சரியாக போர்டிங் தொடங்கி அனைத்து பயணிகளும் விமானத்தில் ஏறிவிட்டோம்.வெளியே மழை குறையத்தொடங்க மெதுவாக கிளம்பப் போகிறோம் என்று பார்த்தால்,இங்கும் தாமதம் என்னை விடவில்லை. ஙே என்றால் என்ன என்று உணர்ந்தேன். 8.20க்கு பறக்கத் தொடங்க வேண்டியது, 10.00 மணிக்குத்தான் மெதுவாக ரன்வேயில் ஓட ஆரம்பித்தது. பறக்கத்தொடங்கிய கொஞ்ச நேரம் வானில் மின்னல் மின்னியபடி இருந்தது. பறந்தபடியே மேகங்களுக்கிடையே பளீரிட்ட மின்னல் வெளிச்சம் உண்மையிலேயே பேரழகாக இருந்தது. புயல் நாளில் கடலில் ஓடம் விட்ட பொன்னியின் செல்வன் பூங்குழலியும் அந்த புயல் நாள் காட்சிகளும் கண்ணில் வந்து போயின. இயற்கையின் பேரழகை தரிசித்தபோது நாம் ரொம்பவும் துச்சம் என்றே தோன்றியது.
பறக்கத்தொடங்கிய பின் இந்த அலுமினியப் பறவை தாமதிக்கவில்லை. ஒரு வழியாக கோவா வந்து அடைந்தபோது நேரம் சரியாக இரவு 11.30. பின்னணியில் கோவாவின் பிரத்யேக போர்த்துகீசிய இசை ஒலித்துக்கொண்டு இருந்தது. சுற்றுலா வந்தவர்கள் ஆசையாக எல்லா இடங்களிலும் புகைப்படம் எடுத்தபடி மகிழ்ந்திருந்தனர். கன்வேயர் பெல்ட்டில் என் பெட்டியை எடுத்துக்கொண்டு வேகமாக வெளியே வந்தேன். என்னை அழைத்துபோக வந்த வந்தனாவின் குழுவினர் பூங்கொத்து கொடுத்து போட்டோ எடுத்துக்கொண்ட பின் நாங்கள் காரில் சிந்துதுர்க் புறப்பட்டோம். இதற்கு மேல் தாமதம் ஏதுமின்றி 12.30 மணிக்கு சிந்துதுர்க் சென்று சேர்ந்த பிறகு தான் மறுபடி பெருமூச்சு விட்டேன். அன்று காலையில் நான் கிளம்பும்போது திரிபுராவிற்கு தேர்தல் பணிக்குச் செல்ல இருந்த தோழியை "ஏழு கடல் தாண்டி போகிறது போல" என்று கேலி செய்தேன். அவர் சரியாக 8 மணிக்கெல்லாம் திரிபுரா போய்விட்டாராம். பக்கத்தில் இருக்கும் கோவாவுக்கு நான் ஒரு முழுப்பகல் பயணித்து இருக்கிறேன். பெங்களுருவில் வெகு கன மழை என்று மறுநாள் தெரிந்தது. சூழல் மாற்றத்தின் விளைவுகள் அதீத வெப்பமாகவும் திடீர் கனமழையாகவும் நம்மை எச்சரிக்கின்றன. நாம் புரிந்து கொண்டோமா என்றுதான் தெரியவில்லை!!
அழகான பயணக் கட்டுரை . இவ்வளவு சிரமங்களையும் நீங்கள் கடந்த விதம் அருமை. மேடம் எதிர்பாராத சூழலையும் நீங்கள் கையாண்ட விதமும் சிறப்பு.
ReplyDeleteSo thrilling and interesting. Now i understand who is Mr Ramana s guruji. Awaiting to read more Kavignare
ReplyDeleteஎன் பேவரைட் சுஜாதா நாவல் மாதிரி இருந்தது உங்கள் திர்ல்லிங் பயண அனுபவம் மேடம்.
ReplyDelete