டோட்டோ சான்- ஜன்னலில் சின்னஞ்சிறுமி : டெட்சுகோ குரோயானாகி
என் பால்ய காலத்தை அழகாக்கிய புத்தகம் இது. ஒரு சிறிய கிராமத்தில் வளர்ந்து வந்த எனக்கு, உடல்நிலை காரணமாக ஐந்தாம் வகுப்பு வரை அடிக்கடி பள்ளிக்கு செல்ல முடியாத சூழல் இருந்து வந்தது. அடிக்கடி விடுப்பு எடுப்பதும் சில நேரங்களில் நீண்ட விடுப்பு எடுக்கவேண்டிய நிலையும் ஏதோ வகையில் சுற்றியுள்ளோர் மத்தியில் என் மதிப்பைக் குறைப்பதாக எனக்குத் தோன்றிக்கொண்டே இருக்கும். ஆனால் வீட்டில் எனக்கு புத்தகங்கள் வழியாக ஒரு பெரிய உலகம் விரிந்து கிடந்தது. பள்ளி செல்ல முடியாத சூழலில் என் சுய மதிப்பைக் காத்து வந்தவை புத்தகங்கள் என்றால் மிகையாகாது. கல்வி குறித்த என் எண்ணங்களை மாற்றியதிலும், நான் கொண்டிருந்த தாழ்வு மனப்பான்மையை நீக்கியதிலும் டோட்டோ சானுக்கு முக்கிய பங்கு உண்டு.
இரண்டாம் உலகப்போர் நடந்த காலகட்டத்தில் ஜப்பானில் செயல்பட்டு வந்த டோமோயி என்ற பள்ளியின் கதை இது. மிகுந்த துருதுருப்பு காரணமாக வகுப்பின் ஒழுங்கை குலைக்கிறாள் என்ற குற்றச்சாட்டோடு, தான் ஒன்றாம் வகுப்பு படித்த பள்ளியில் இருந்து வெளியேற்றப்படுகிறாள் டோட்டோ சான். எதையும் ஆராய்ந்து பார்க்க விரும்பிய, ஆர்வம்மிக்க அந்த சின்னஞ்சிறு மாணவியை இரு கை நீட்டி அரவணைத்து மேம்படுத்துவார்கள் டோமோயி என்ற பள்ளியும் அதன் தலைமையாசிரியர் கோபயாஷியும். கோபயாஷி வகுத்த கல்விமுறைகளும் டோட்டோ சான் டோமோயியில் பெற்ற அனுபவங்களுமே இந்தக் கதை. டோட்டோ சான் என்று அழைக்கப்படும் டெட்சுகோ குரோயோநாகி தன்னை உருவாக்கிய ஒரு உன்னதமான பள்ளி குறித்த அனுபவங்களை எழுதிய புத்தகமே “ஜன்னலில் சின்னஞ்சிறுமி”. ஒரு பள்ளியின் மாணவி, தன்னை வளர்த்த பள்ளிக்கு இதை விட அழகான பரிசினை ஒரு மாணவியால் தர முடியுமா என்பது சந்தேகமே. உலகெங்கும் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட நூல் இது. டோட்டோ சானுக்கு டோமோயி பள்ளியில் கிடைக்கும் அனுபவங்கள் மிக அழகானவை. சிறு வயதில் படிக்கத் தொடங்கியபோது கதையின் நடை என்னை அவ்வளவு வசீகரித்தது. புத்தகத்தை படித்த பால்ய நாட்களில் நானே டோட்டோ சானாக இருக்க விரும்பிய தருணங்கள் மிக அதிகம். இப்போதும் ஜன்னிலில் நிற்கும் சின்னஞ்சிறுமி அதே அளவுக்கு என்னை வசீகரிக்கவே செய்கிறாள்.
ஜப்பானின் ஒரு சிறு நகரத்தில் ஒரு காலை வேளையில் தன் அம்மாவோடு இரயிலில் பயணம் செய்து புதிய பள்ளியில் சேர்வதற்காக டோட்டோ சான் செல்வதிலிருந்து கதை தொடங்கும். அடி பெருத்த ஒரு உயர்ந்த மரத்தின் தண்டில் பொறிக்கப்பட்ட பள்ளியின் பெயரை “டோமோயி ஹாகுன்” என்று படித்துவிட்டு, குதித்தபடியே டோட்டோசான் சொல்வாள், “ அம்மா இந்த பெயர்ப்பலகை வளந்துகிட்டே இருக்கும்”. சிறு குழந்தையின் குதூகலத்தோடு நாமும் டோமோயிக்குள் நுழைவோம். அங்கே அடுத்த ஆச்சர்யம் காத்திருக்கும். ரயில் பெட்டியில் வகுப்புகள் நடக்கும். ஆம்! பள்ளி மைதானத்தில் நிறுத்திவைக்கபட்ட கைவிடப்பட்ட ரயில் பெட்டிகளில் தான் பள்ளியின் தினசரி வகுப்புகள் நடக்கும். புத்தகத்தை வாசிக்கும் நமக்கும், மைதானத்தில் நின்று கொண்டு இருக்கும் ரயிலில் பயணித்தபடியே நம் பள்ளி நாட்களைக் கடத்தும் விருப்பம் வெள்ளமெனப் பெருகும். நான் இந்த கதையை படித்த காலத்தில், டோமோயி போன்ற வசீகரம் மிக்க மாற்றுப் பள்ளிகளை எவ்வாறு உருவாக்குவது என்ற கற்பனையில் அடிக்கடி ஆழ்ந்து போவது உண்டு.
கோபயாஷியை டோட்டோ சான் சந்தித்துப் பேசும் அந்த முதல் தருணம் உன்னதமானது. ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் தன் பள்ளியில் சேர வரும் ஒன்றாம் வகுப்பு மாணவியை தனக்கு அருகே அமர வைத்து, “உனக்கு தோன்றுவதை எல்லாம் பேசு” என்று சொல்வது எவ்வளவு அழகானது? அவர் அப்படி சொன்ன பின், டோட்டோ சான் பேசத்தொடங்குவாள். காலை ஒன்பது மணிக்கு தொடங்கும் அவள் ,மதிய உணவு வேளை வரும் வரை முழு மூன்று மணி நேரங்கள் பேசிக்கொண்டே இருப்பாள். அவ்வளவு விஷயங்களைத் தன்னால் பேச முடிவதைக் குறித்து அவளுக்கு குழந்தைத்தனமான பெருமிதம் ஏற்படும். நாங்கள் எங்கள் மகனை சேர்க்கப்போன ஒரு பள்ளியில் அவர் சொல்வதற்கு முன்னதாகத் தன் எதிரே அமர்ந்துவிட்டான் என்று எங்கள் முன்னாலேயே அவனைத் திட்டி அழ வைத்த தலைமை ஆசிரியரை நான் கண்டிருக்கிறேன். அப்போது அவன் ஒன்றாம் வகுப்பில்தான் இருந்தான். அங்கே நாங்கள் அவனை சேர்க்கவில்லை என்பது வேறு விஷயம். “அமரச்சொல்லுதலில்” உள்ள அரசியலுக்கும் சமத்துவத்துக்கும் பெரிய தொடர்பு இருக்கிறது என்பது இன்னொரு தனிக்கதை.
பெரியவர்கள் எப்போதும் நாம் பேசுவதை குழந்தைகள் கேட்பதையே விரும்புகிறோம். ஆனால் குழந்தைகள் பேசும்போது அவர்களின் கள்ளமில்லா உலகில் நாம் கற்றுக்கொள்ள எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. அ.வெண்ணிலாவின் ஒரு கவிதை போல, வண்ணத்துப்பூச்சிகளாக சிறகடிக்கும் குழந்தைகளை மீண்டும் கூட்டுப்புழுக்களாக மாற்றும் வகையிலேயே நம் பள்ளிகள் இருக்கின்றன. இந்த பின்னனியில் மூன்று மணி நேரங்கள் ஒரு சிறுமியை சுவாரஸ்யமாக பேசவிட்டுக் கேட்ட அந்த தலைமையாசிரியர் எத்தனை அற்புதமானவர்?
நாம் இப்போதுதான் பரவலாக அனைவரையும் உள்ளடக்கிய கல்வி (inclusive education) பற்றி பேசுகிறோம். மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள்,அவர்களின் தேவைகள் இன்னமும் பூர்த்தி செய்யப்பட வேண்டி உள்ள நிலையில், டோமோயியில்,கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு முன்னரே மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளோடு டோமோயி பள்ளி இருந்தது. யசுயாகி சான் என்னும் மாற்றுத்திறன் மாணவனுக்கும் டோட்டோ சானுக்கும் மிக அழகான ஸ்நேகம் இருக்கும். எல்லோருடனும் அன்பாகவும், பணிவாகவும் பழக வேண்டும் என்று யாரும் சொல்லாமலேயே டோமோயி பிள்ளைகள் அறிவார்கள். அவர்களின் பள்ளிச்சூழல் அவ்வாறு இருந்தது. குழந்தைகள் அவர்கள் போக்கில் விளையாடி மகிழ வேண்டும் என்றால் அவர்களின் உடை குறித்த கவலை அவர்களுக்கு இருக்கக்கூடாது. எனவே அவர்களுக்கு பழைய ஆடைகளை அணிவித்து அனுப்ப கோபயாஷி சொல்கிறார். அவர் குழந்தைகளின் அக உலகை எத்தனை ஆழமாக புரிந்து கொண்டிருக்கிறார் என்பதற்கு எளிய சாட்சி இந்த விதி.
பள்ளிக்காலம் முழுவதும், வரையறுக்கப்பட்ட ஒரு பாடத்திட்டத்தின்கீழ் நாம் படிக்க வேண்டி இருக்கிறது. கணக்கோ,மொழியோ, அறிவியலோ புரியாத, படிக்க இயலாத பிள்ளைகள் இருக்கக்கூடும். அவர்களை பள்ளிக்கு ஈர்க்கக்கூடிய விஷயங்கள் பெரிய அளவில் நம் கல்வித்திட்டத்தில் இல்லை. கற்பிக்கப்படும் கல்வி புரியாமலோ, பொருளாதாரம் காரணமாகவோ படிக்கமுடியாத பிள்ளைகள் இடை நிற்பது நம் சமூக அமைப்பில் மிகப்பெரும் பிரச்சினை. குழந்தை தொழிலாளர், குழந்தை திருமணம், சிறார் குற்றங்கள் போன்ற சமூகப்பின்னடைவுகளைத் தடுக்க பள்ளி என்னும் ஸ்தாபனத்தில் குழந்தைகளை நிலைநிறுத்தி வைத்தல் மிகவும் அவசியம். அந்த முன்னெடுப்பை ஒரு நூற்றாண்டுக்கு முன்பே கோபயாஷி செய்திருக்கிறார். டோமோயியில் வரையறுக்கப்பட்ட வகுப்புகள் கிடையாது. மாணவர்களுக்கு அந்த நாளுக்கான பாட அட்டவணை ஒரு நாளின் தொடக்கத்தில் தரப்பட்டுவிடும்.அவர்களுக்கு பிடித்த பாடத்தில் இருந்து அவர்களே படிக்கத்தொடங்கலாம். மாணவர்கள் எந்தப்படிப்பை விரும்புகிறார்கள், எதை தள்ளிப்போடுகிறார்கள் என்பது ஆசிரியருக்கு எளிதில் புரிந்துவிடும். தினமும் மதியத்துக்கு மேல் வயல் வெளியினூடாக பிள்ளைகளை அழைத்து செல்லும் ஆசிரியர்கள் அவர்களுக்கு, பூக்கள்,மரங்கள், இயற்கை என்னும் அனைத்தையும் இயல்பாக சொல்லித்தருவார்கள். “ அவர்கள் சும்மா நடந்து போனதாக நினைத்த இந்த நடை பயணம்தான் உண்மையில் அவர்கள் நிறைய கற்றுக்கொண்ட நேரம்” என்று டெட்சுகோ எழுதுவார். உண்மைதானே? பாடப்புத்தகங்களைக் காட்டிலும் நாம் அதிகமாக கற்றுக்கொள்வது வெளியுலகில் இருந்துதானே?
தற்போதைய கல்வி முறையின் சவால்களை நாம் அனைவரும் அறிவோம். மதிப்பெண்கள் வாங்கும் மெஷின்களாகவே நம் பிள்ளைகள் இருக்கின்றனர். எவ்வளவு மதிப்பெண் எடுத்தாலும் போதவில்லை. எண்பது சதமெல்லாம் எதற்கும் உதவாது. அனைவருமே 99 சதம் எடுக்கவேண்டும் என்ற கட்டாயம். ஒரு படிப்பு படித்து அதன் பின்னர் வேலை கிடைத்து வாழ்வில் செட்டில் ஆவது என்பதுதான் ஆகப்பெரிய லட்சியமாகக்கொள்ள வேண்டி இருக்கிறது. இதற்காகவே சம்பாதிக்கவும் செலவழிக்கவும் வேண்டி இருக்கிறது. பன்னிரெண்டு வருடங்கள் படித்த பள்ளிப்படிப்பு போதாது என்று நுழைவுத்தேர்வுகள் மூலமாகவே விரும்பிய படிப்பில் சேர முடிகிறது. அதுவும் இப்போதைய கல்விச்சூழலில் மருத்துவப்படிப்பு எளிய மாணவர்களுக்கு எட்டாக்கனியாக இருப்பதை காணமுடிகிறது. பொதுத்தேர்வில் எத்தனை மதிப்பெண் பெற்றாலும் தான் படிக்காத கல்வித்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும் நுழைவுத்தேர்வுக்காக தயார் செய்யும் அழுத்தம் ஒருபக்கம், அதற்கான செலவு மறுபக்கம் என்று வர்க்கங்களுக்கு இடையேயான இடைவெளியை இந்த தேர்வு முறைகள் அதிகரிக்கின்றன. மாணவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிப்பதற்கு பதிலாக அவர்களின் நம்பிக்கையை ஆட்டம் காண வைக்கும் தற்போதைய நடைமுறைக்கு எதிராக, பிள்ளைகள் பயமற்றும் தன்னம்பிக்கையோடும் எந்த தடையையும் நம்பிக்கையோடு எதிர்கொண்டு வாழ பல்வேறு பயிற்சிகளை கோபயாஷி டோமோயி மாணவர்களுக்கு வழங்கினார்.
கதையை படிக்கும்போது பல இடங்களில் நாம் வியப்பின் உச்சிக்கு செல்வோம். பள்ளியின் நீச்சல் குளத்தில் சிறு குழந்தைகள் ஆடைகளின்றி குளிக்க விரும்பினால் குளிக்கலாம் என்னும் வாய்ப்பு அதில் ஒன்று. பாலின ரீதியான ஒருவர் மேல் ஒருவருக்கு ஏற்படும் தேவையற்ற ஆர்வம் குறைந்து, சக மாணவன் அல்லது மாணவியின் உடல்கூறு இயல்பானது என்ற எண்ணம் குழந்தைகளுக்கு வரும்.மேலும் இளம்பிள்ளை வாதம் போன்ற நோய்மைகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தங்கள் உடல் குறித்த தாழ்வு மனப்பான்மை போய்விடும் என்ற பார்வையயோடு கோபயாஷி இருந்திருக்கிறார். டோமோயியின் ஒவ்வொரு நாளும் குழந்தைகளுக்கு மிகுந்த குதூகலத்தையும் சுதந்திர சிந்தையையும் அனைவர் மேலும் அன்பு செலுத்தும் மாண்பையும் உருவாக்கியதை டெட்சுகோ பகிரும்போது அப்படி ஒரு பள்ளியில் நாம் படித்திருக்க மாட்டோமா என்ற ஏக்கம் நிச்சயம் வரும்.
தொல்லை தந்த மாணவி என்று ஒரு பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்ட டோட்டோ சான், ஒரே ஆண்டில் டோமோயியின் மதிப்புமிக்க மாணவியாக உருமாறி இருப்பாள். அதற்காக கோபயாஷி எந்த பயிற்சியையும் தந்து அவளை உருமாற்றி இருக்க மாட்டார். அவளை அவளாகவே இருக்க அனுமதிக்கும் ஒரு சூழலை வழங்குவதன் மூலம், டோட்டோ சானை பட்டை தீட்டி விடுவார். அப்படி ஒரு ஆசிரியர் நமக்கு கிடைக்க மாட்டாரா என்ற ஆதங்கம் எனக்கு எப்போதுமே உண்டு. டோட்டோ சானைப்பார்க்கும் போதெல்லாம் நீ ஒரு நல்ல பெண் என்று கோபயாஷி சொல்லியபடி இருப்பார். அவளும் அதை நம்பி இயல்பை இழக்காமலேயே ஒரு நல்ல பெண்ணாக ஜொலிப்பாள். அந்த தொடக்கப்பள்ளியில் படித்த மாணவர்கள் அனைவருமே ஜப்பானின் முக்கியமான பணிகளை பின்னாட்களில் மேற்கொண்டு வெற்றி அடைந்ததாக டெட்சுகோ ஆவணப்படுத்துகிறார்.
கலீல் ஜிப்ரான் சொன்னதுபோல, “உங்கள் குழந்தைகள் உங்களுடையவர்கள் அல்லர்.
அவர்கள் உங்களுடன் இருந்தாலும் அவர்கள் உங்களுக்கு சொந்தமானவர்கள் அல்ல”
மாற்றுக்கல்வி முறையையும், குழந்தைகளின் அக உலகையும் அறிந்து கொள்ள விரும்புபவர்கள் நிச்சயம் படிக்க வேண்டிய புத்தகம் இது.
நீங்கள்தான் எனக்கு அனுப்பி வைத்தீர்கள்
ReplyDeleteமிக்க நன்றி
Nicee mam
ReplyDeleteசூப்பர்மா ரொம்ப அழகான கதை ரொம்ப நல்லா இருக்கு
ReplyDeleteIt is a very impactful book ma'am, and your writing has brought out the essence very beautifully.
ReplyDelete