என் மனதில் மலரும் வலைப்பூ
எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு பொழுதுபோக்கு என்றால் அது புத்தகம் வாசிப்பதுதான். எப்போது நேரம் கிடைத்தாலும், மனம் உடனே நாடுவது நூல்களைத்தான். சிறு வயதில் இருந்தே கவிதைகள் எழுதுவதும் உண்டு. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் படித்த காலத்தில், அங்கே அவ்வப்போது நடக்கும் முத்தமிழ் விழா, கவியரங்கம் ஆகியவற்றில் என் பங்களிப்பு நிச்சயமாக இருந்தது. என் ஒட்டுமொத்த ஆளுமையை உருவாக்கியதில் அந்த காலகட்டத்துக்கு மிக முக்கிய பங்கு உண்டு. ஆனால் அதன் பிறகு போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி, வேலை, குடும்பம் என்று வந்த பிறகு எழுதுவது குறைந்து போனது. கல்லூரி காலத்தில் கவிதை எழுத்தாதவர்கள் குறைவு இல்லையா? ஆகவே என் எழுத்தின் தரத்தில் எனக்குமே நம்பிக்கை குறைந்து போயிருந்தது. என்ன எழுதினாலும், அதை எனக்கு மட்டுமான அந்தரங்கமாகவே நான் நினைப்பதுண்டு. ஆகவே பெரும்பாலும் நான் எழுதுவதை என்னைத்தவிர யாரும் படித்ததில்லை. மிகச்சில சமயங்களில், எனக்கே திருப்தி ஏற்பட்டு, என் மிகச்சிறிய வட்டத்துக்கும், நெருங்கிய நண்பர்களுக்கும் மட்டும் எழுதும் கட்டுரைகளையோ கவிதைகளையோ பகிர்வது வழக்கம். அனைவரும் நன்றாக இருப்பதாக சொன்னாலும், வெளியே பகிர்வதற்கான தரத்தை, நானும் என் எழுத்தும் இன்னும் அடையவில்லை என்னும் ஒரு சுய சந்தேகம் இருந்துகொண்டே தான் இருந்தது. இப்போதும் இருக்கிறது. இருப்பினும், ஒரு புத்தகத்தையே தன் பதினாலாம் வயதில் வெளியிட்டுவிட்ட என் மகனின் ஊக்குவிப்பிலும், என் கவிதைகளை (அவை கவிதைகளா என்பது இப்போதும் சந்தேகமே) வெகு காலமாக படித்து வரும் என் கணவரின் தூண்டுதலாலும், எப்போதும் நான் எழுதுவதைப் பாராட்டி, தொடர்ந்து எழுதும்படி எனக்கு பெப் டாக் கொடுக்கும் என் தோழமைகளின் வார்த்தைகளை ஏற்றும், இன்று எனக்கான ஒரு வலைப்பூவை நான் பூத்துக்கொள்கிறேன்.
எந்தக் குறிப்பிட்ட திசையிலும் இல்லாமல், மனதுக்குப் படுவதை அவ்வப்போது எழுதி வைப்பது என் வழக்கம். கோவிடுக்கு பிறகான கால்கட்டத்தில் கையாலாகாத ஒரு பரிதவிப்பு மனதில் ஏற்பட்டது. அப்போது மனதில் தோன்றுவதை வகைப்படுத்தி எழுதிப்பார்க்க தோழர் சொன்னதன் பேரில், தலைப்புகளுக்கு உட்பட்ட கட்டுரைகளை எழுதத் தொடங்கி இருக்கிறேன். சிறுகதை வடிவம் இன்னும் எனக்குக் கைவரப்பெறவில்லை. பயணம், பெண்ணியம், நான் ரசிக்கும் புத்தகங்கள் என்பதாக, என் இப்போதைய எழுத்துக்கள் இருக்கின்றன. அவற்றை அவ்வப்பொழுது இங்கே பகிர நினைக்கிறேன்.
அவ்வப்போது உங்களுடைய பேச்சைக் கேட்டு ரசிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. அப்போதெல்லாம் நான் நினைத்ததுண்டு இவ்வளவு அழகாக கோர்வையாக எதார்த்தமாக பேசுகிறார்களே ஆனால் ஒவ்வொரு கருத்தும் ஆழமாக இருக்கிறது, மட்டுமல்ல ஒவ்வொரு பேச்சின் வடிவமும் ஆய்வு கட்டுரையின் தெளிவு மாதிரி இருப்பதை உணர்ந்து இருக்கிறேன். ஆனால் இப்போதுதான் புரிகிறது உங்களுக்குள் ஏற்கனவே ஒரு எழுத்தாளர் இருந்திருக்கிறார் என்பதை வாழ்த்துக்கள் எதார்த்தமான மொழியில் எழுத்தாளர் எட்டிப் பார்த்திருக்கிறார் வரவேற்கிறோம். வாழ்த்துக்கள்!
ReplyDeleteஉங்கள் எழுத்துக்கள் எப்போது மிக இயல்பாகவும் தெளிவாகவும் கருத்துகளை எடுத்துரைக்கும். உங்கள் சிறுகதைகள் உங்கள் அனுபவங்களை பிரதிபலிப்பதாக மட்டுமல்லாது அதனால் ஏற்படும் சமூக தாக்கங்களையும் அது குறித்து நம்முள் ஏற்பட வேண்டிய மாற்றத்தையும் மனதில் விதைப்பதாக இருக்கும். எழுத்தாளனுக்கே உரிய மீட்டெடுத்தலும் அதனை வாசகனுக்கு கடத்தும் பண்பும் உங்களுக்கு இயம்பிலேயே உள்ளது.கட்டுரையோ கவிதையோ சிறுகதையோ காத்திரமான படைப்புகளை இந்த இலக்கிய உலகிற்கு நீங்கள் வழங்குவீர்கள் .வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteVaalthukkal 💐
ReplyDeleteநல்ல முயற்சி, வாழ்த்துக்கள்
DeleteMadam ! I'm always your fan. Keep inspiring
ReplyDeleteExpecting short stories from you madam.
ReplyDeleteநல்முயற்சி. வாழ்த்துகள் அம்மா.
ReplyDelete