ரத்னகிரிக்குப் போவோம் -4
நான் பேச நினைப்பதெல்லாம்
பள்ளியில் நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது, அந்த கிராமப் பள்ளியின் தலைமை ஆசிரியை எப்படியோ இந்தியில் பண்டிட் பட்டம் பெற்றவராகப் போய் விட்டதால், நாங்கள் கட்டாயமாக இந்தி படிக்கவேண்டிய நிலைக்கு ஆளானோம். பிராத்மிக், மத்தியமா, ராஷ்டிரபாஷா என்று வரிசையாக இருக்கும் எட்டு பரீட்சைகளில், ஐந்தாம் வகுப்பு வருவதற்குள் அனைவரும் குறைந்தது இரண்டிலாவது தேர்ச்சி பெற்று விடுவது வழக்கம். என் உடல்நிலை காரணமாக நான்காம் வகுப்பு வரை நான் சரியாக பள்ளிக்குச் செல்லவில்லை. எனவே ஐந்தாம் வகுப்பில்தான் பள்ளியின் சட்டதிட்டத்துக்குக் கட்டுப்பட்டு பிராத்மிக் தேர்வு எழுதத் தயாரானேன்.
ஆரம்பத்தில் இந்தி எழுத்துக்களைக் கற்றுக்கொண்ட ஆர்வத்தில், "அச்சமில்லை அச்சமில்லை" பாடலை இந்தியிலேயே எழுதிக்கொண்டுபோய்-- மொழி பெயர்த்து அல்ல...அப்படியே இந்தியில் எழுதி-- காட்டிய அதிகபிரசங்கித்தனம் நினைவில் இருக்கிறது. என்னுடன் படித்த அனைவரும் இரண்டாம், மூன்றாம் வரிசைத் தேர்வுகளைத் தாண்டிப்போய்விட, ஏனோ நான் பிராத்மிக்கோடு இந்திப் படிப்பை முடித்துக்கொண்டேன். எனவே மிக மெதுவாக எழுத்துக்கூட்டி இந்தி படிக்கத் தெரியுமே தவிர, பேசுவது எனக்கு சிரமம். எப்படியோ சில பல பயிற்சிகளுக்காக வட இந்தியா செல்ல நேர்ந்த வாய்ப்புகளால், மற்றவர்கள் இந்தியில் பேசுவதை ஓரளவு புரிந்து கொள்ள முடியும்.
இயல்பிலேயே எனக்கு பிற மொழிச் சொற்களை புரிந்து கொள்வதிலும், ஒசைகளை அவதானிப்பதிலும் ஒரு ஆர்வம் உண்டு. வட்டார வழக்குகளைக் களமாகக் கொண்டு எழுதபடும் படைப்புகளை மிகவும் விரும்பிப் படிப்பேன். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஒரே பொருள் எப்படி வேறு வேறு சொற்களில் அல்லது வழக்கில் அழைக்கப்படுகிறது என்பது எப்போதுமே சுவாரஸ்யமான விஷயம். தென்மாவட்டங்களில் பணிமாறுதல் கிடைத்தபோது, இந்த வட்டார வழக்கு படிக்கும் பழக்கம் மற்றவர்களோடு பேசிப் பழகுவதில் பெரிய அளவில் எனக்கு உதவியாக இருந்தது. அதிலும் கன்னியாகுமரி மாவட்டத்தின் செறிவான மொழி வழக்குகள், என் ரசனைக்கு உரியதாக இருந்தன. கன்னியாகுமரியின் மேற்குப்பகுதியில் உள்ள மக்கள் மலையாளம் கலந்து பேசுவதாலும், மலையாளத் திரைப்படங்கள் பார்க்கத் தொடங்கியதாலும், மலையாளத்தில் ஆர்வம் வந்து எழுத்துகளைக் கற்கத் தொடங்கினேன். எழுத்துக்கூட்டி படிக்கவும், சில எளிதான மலையாள சொற்றொடர்களை யோசித்துப் பேசவும் பழகினேன். தென் மாநிலங்களில் பயணம் செய்யும்போது, அடிப்படையான கேள்வி பதில்களை அந்தந்த மொழிகளில் கேட்கும் அளவு அடிப்படை புரிதல் எல்லோருக்கும் வேண்டும் என்று எப்போதும் தோன்றும். இந்த பின் புலம் கொண்ட எனக்கு, ரத்னகிரி பயணத்தில் முழுவதுமாக இந்தியிலேயே பேசிவிட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.
என் பழைய இந்தி நோட்டுகள், ரெபிடெக்ஸ் இந்தி புத்தகம் மூலமும் மொபைலில் சில ஆப்கள் முலமும் தினம் சில சொற்களைப் பேசிப் பழக முயன்றேன். அடிப்படை இந்தியை தூசிதட்டி படித்து முடித்த உடன், சிறு சொற்றொடர்களை வினைச்சொற்களைப் பயன்படுத்தி முக்காலத்துக்கும் சொல்லிப் பழகினேன். பயணத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன் வரை, மகளின் இந்திப் புத்தகத்தை வைத்துக் கொண்டு அவளுக்கு சொல்லிக்கொடுக்கும் பாவனையில் நானும் கொஞ்சம் படிக்க முயன்றேன். சரி தோராயமாக அங்கே சமாளித்து விடலாம் என்றும் நம்பினேன். ஆனால் நடந்த கதை வேறு.
கோவாவில் இறங்கிய பின் பொதுவாக, எல்லோரும் சாப்பிட்டாகி விட்டதா என்ற எளிய கேள்வியைக் கேட்க நினைத்த போதே, எதிர்காலம் 'பளிச்'சென்று தெரிந்துவிட்டது. மனதில் "சாப்பிட்டு விட்டீர்களா" என்று தமிழில் சொற்களை அமைத்துக்கொண்டு, இந்தியில் "ஆப் கானா காத்தே ஹை?" என்று மொழிபெயர்த்துக் கொண்டு, தயாராகி தைரியமாக அதைச் சொல்ல வாயை திறந்தால்.....அந்தோ பரிதாபம், "ஊனு கழிச்சோ" என்று சொல்ல வந்து விட்டது. அப்படியே அந்த வார்த்தைகளை அடக்கி மென்று முழுங்கியபின், வேறு வழியின்றி நான் வெளியே சொன்னது என்னவோ "டிட் யூ ஹாவ் டின்னர்" தான். "இதற்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்து இருக்கலாமே குமாரு" என்னும் வகைக்கு எரிச்சல் வந்தது எனக்கு. இந்தியில் பேச முயன்றபோதெல்லாம், தமிழில் நினைத்து, மொழிபெயர்த்து ,பேசும்போது அது மலையாளமாகவோ ஆங்கிலமாகவோ வெளிபட்டது எனக்கு வினோதமாக இருந்தது. அதற்குப் பிறகு இன்னொரு பெரும் டுவிஸ்ட். வந்தனாவும் அவருடன் வந்தவர்களும் தஙகளுக்குள் பேசிக்கொண்ட மொழி எனக்குப் புரியவில்லை. நமக்கு இந்தி கொஞ்சமாவது புரியுமே. இது கேட்பதற்கு ரொம்பவும் வேறு மாதிரி இருக்கிறதே என்று அப்போதே யோசித்தேன்.
இரண்டாம் நாள் ரத்னகிரியை அடைந்ததும் தேர்தல் தொடர்பான அலுவலர்கள், நான் பார்க்கவேண்டிய பாராளுமன்ற தொகுதி குறித்த விவரணை அடங்கிய கோப்பைத் தந்தார்கள். பாதி ஆங்கிலத்திலும் கொஞ்சம் இந்தியிலுமாக எழுதி இருந்தது. மீண்டும் என் ஆர்வக்கோளாறு தலைதூக்க, மொழிபெயர்த்துத் தருவதாக அவர்கள் சொன்னதை மறுத்து (நான் அஞ்சாவது படிக்கும்போது பிராத்மிக் படிச்சவங்க) தன்னம்பிக்கையோடு மெதுவாக எழுத்துக் கூட்டி படிக்கத் தொடங்கினேன். எல்லா எழுத்துக்களும் இந்தியின் "பாராகடி" என்று சொல்லப்படும் எழுத்துக்கள்தான்.ஆனால் ஒரு வார்த்தைக்குக் கூட அர்த்தம் புரியவில்லை. மீண்டும் எனக்கு குழப்பம் வந்தது. நாம் தயார் செய்ததெல்லாம் வீண்தானா கோப்ப்ப்பாபால் என்ற வேதனை நெஞ்சில் எழ ஆரம்பித்தது. பிறகு கூகிள் மொழிபெயர்ப்பில் ஒரு சொல்லை போட்டு அர்த்தம் பார்த்த போதுதான் அந்த சொற்கள் மராட்டி மொழிச் சொற்கள் என்று புரிந்தது. சந்தேகத்தை தெளிவுபடுத்திக் கொள்ள நமக்கு வந்தனாவை விட்டால் யார் இருக்கிறார்கள்? அவரிடம் கேட்டபோதுதான் கதை புரிந்தது.
அவர்கள் தங்களுக்குள் சாதாரணமாக பேசிக்கொள்ளும் மொழி மராட்டி தான்.(நாம் மராத்தி என்று தமிழ்ப்படுத்துகிறோம். ஆனால் அவர்கள் மராட்டி என்றுதான் உச்சரிக்கிறார்கள்). அங்கே எல்லோருக்கும் இந்தி தெரியும் என்றாலும் தங்களுக்குள் பேசிக்கொள்வது தாய் மொழியில் தானாம். அதேபோல் எழுத்துக்கள் இந்தி எழுத்துக்கள் என்றாலும் மராட்டி என்னும் தனி மொழியின் சொற்களும் அர்த்தங்களும் வேறு என்றார். அங்கும் இங்கு போலவே வட்டாரப் பேச்சு வழக்கு உண்டு போலும். கடற்கரையை ஒட்டிய மேற்குப் பகுதிகளில் கொங்கனியும் தெலுங்கும் கலந்து பேசும் முறை வேறு மாதிரி இருக்கும் என்ற வந்தனா அஹமது நகர் பகுதியைச் சேர்ந்தவர். அவர் பேசும் வழக்கு வேறு மாதிரி இருக்கும் என்றும், கடற்புற மொழி கொஞ்சம் கடினமானது என்றும் சொன்னார். பிற மாநில எல்லையை ஒட்டி வரும் மாவட்டங்களில் அந்த மொழியும் கலந்தே பேசப்படுகிறது. அனைவரும் அவர்களுக்குள் மராட்டியில் பேசினாலும் நம்முடன் ஆங்கிலத்திலோ, இந்தியிலோ பேசுகிறார்கள். வந்தனாவிடம் “நான் தப்பாக பேசினால் திருத்துங்கள் .நான் முடிந்தவரை இந்தியில் பேசப் பழகுகிறேன்” என்று சொன்னேன். அன்பான புன்னகையோடு அவரும் அதை ஏற்றுக்கொண்டார். அதிசயம் என்னவென்றால் ஒரு கட்டத்துக்குப் பிறகு ஆங்கிலம், மராத்தி,இந்தி என்று அவர் எப்படிப் பேசினாலும் அதை நானும், நான் எப்படி உளறினாலும் அதை அவரும் புரிந்து கொள்வதில் எந்தக் குழப்பமும் ஏற்படவில்லை. நன்றாக புரிந்துகொள்ள முடிந்தது. மனதளவில் சகோதரத்துவம் இருந்தால், மொழி ஒரு தடையில்லை என்பதை மனதார உணர்ந்தேன்.
அதேபோல கூட்டங்கள் கலந்தாய்வுகளில், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் மராட்டியில்தான் பேசுகிறார்கள். உள்ளூர்க்காரர்கள் பேசும் ஓசை நயம் சற்று புரிந்து கொள்ள கடினமாக இருக்கும் வேளையில் வேற்று மொழி பேசுபவர்கள் மராட்டி பேசும்போது சற்று எளிதாக இருக்கிறது. கேட்கக் கேட்க பேசும் விஷயத்தைப் பொறுத்து கொஞ்சம் கொஞ்சமாக என்னால் மொழியை கிரகித்துக் கொள்ள முடிந்தது. நாமும் வடக்கு என்றாலே இந்தி என்று நினைத்து விட்டோமே, ஒவ்வொரு மாநிலமும், ஒவ்வொரு பிரதேசமும் ஒரு மொழி பேசும் பரந்த தேசமல்லவா இது? என்ற எண்ணம் மனதில் தோன்றியபடி இருந்தது. என்னால் முடிந்தவரை அவர்கள் பேசுவதைக் கேட்கவும், அந்த மொழியின் ஓசையை கேட்டு ரசிக்கவும் முயன்றேன். இந்த அனுபவமும் மிக அழகானது.
இந்தப் பன்மொழித் தன்மை இந்தியா என்னும் பரந்த நாட்டின் பன்முகத்தன்மையின் நேரடியான தரிசனமாக எனக்குத் தோன்றியது. ஒவ்வொரு இனக்குழுவும் தமக்கென்று கொண்டிருக்கும் அடையாளத்தின் வெளிப்பாடு அல்லவா இது?
முப்பது கோடி முகமுடையாள்
உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள்
இவள் செப்பு மொழிபதி னெட்டுடையாள்
எனில் சிந்தனை ஒன்றுடையாள்''
என்பதன் முழு அர்த்தமும் புரிந்தது.
நான் அங்கே சந்தித்த ஒரு அலுவலர், என்னைக் கண்டதும் உங்களுக்கு கன்னடம் தெரியுமா என்று கேட்டார். தெற்கிலிருந்து வருகிறேன் என்றதும் கர்நாடக மாநிலம் என்று நினைத்தார் போல. “நான் தமிழ்நாட்டில் இருந்து வருகிறேன். தமிழ் பேசுவேன்” எனச் சொல்லி விட்டு, இங்கு கன்னடமும் பேசுவார்களா என்று கேட்டேன். அவர் மிகுந்த கனிவோடும் பெருமிதத்தோடும், " நான் கன்னடம்தான் பேசுவேன்" என்றார். ஆழ்ந்த தாய்மொழிவுணர்வும், நம் மண் மேல் நாம் கொண்ட பற்றும் மற்ற அனைத்தையும் விட மேலானது. ஆனால் எனக்கு இன்னொன்றும் தோன்றியது. அவர் என்னைக் கன்னடம் தெரியுமா என்று கேட்டார் அல்லவா? அடுத்து கன்னடம் கற்றுக் கொள்ளவா?
Comments
Post a Comment