ரத்னகிரிக்குப் போவோம் -2
அழகிய கடற்கரை மாவட்டம் ரத்னகிரி. இங்கே கொஞ்சம் சரித்திரமும் பூகோளமும் பார்ப்போம். மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள அழகிய மாவட்டம் ரத்னகிரி.
சாண்டில்யன் கதைகளில் இயற்கை குறித்த வர்ணனைகள் மிக மிக அழகாக இருக்கும். மேற்கு கடற்கரைப் பகுதிகளின் நடப்பதாக வந்த நாவல்களில் நான் படித்த நாவல் கடல் புறா. அதில் கடலை ஒட்டி உள்ள கோட்டைகளைப்பற்றி சாண்டில்யன் எழுதி இருப்பார். ரத்னகிரியைப் பார்த்ததும் எனக்கு அந்த நாவல் வருணனைகள் தான் நினைவில் எழுந்தன. மிகப் பரந்த பரப்பு. சிந்துதுர்க்- ரத்னகிரி இரண்டு மாவட்டங்களும் சேர்த்து ஒரே நாடாளுமன்ற தொகுதி. பரப்பளவில் இரண்டு மாவட்டங்களும் மிகவும் பெரியதாக இருக்கின்றன. ஆனால் மக்கள்தொகை அடிப்படையில் பத்து லட்சம் வாக்காளர்கள் மட்டுமே இருக்கின்றனர். பெரும்பாலும் ஆண்கள் வேலைக்காக மும்பை சென்றுவிடுவதாலும், கொஞ்சம் வசதி படைத்த குடும்பங்கள் கல்வி, வேலை போன்ற காரணங்களுக்காக நகரங்களுக்கு சென்று விடுவதாலும் மக்கள்தொகையும், மக்களின் அடர்த்தியும் குறைவாக இருப்பதாக வந்தனா சொன்னார்.11.5 சதவீதம் மட்டுமே நகர்ப்புறம். மற்றபடி கிராமங்கள் நிறைந்த மாவட்டங்கள் இவை இரண்டும். பாலின விகிதத்தில் பெண்களே அதிகமாக இருக்கிறார்கள். கோவாவுக்கு மேலே கொங்கன் கோஸ்டில் மால்வன் கடற்புறப் பகுதியில் சிந்துதுர்க் மாவட்டமும் அதற்கு மேலே வடக்கில் ரத்னகிரி மாவட்டமும் அமைந்துள்ளன. மேற்கில் அரபிக்கடலும் கிழக்கில் கோலாப்பூர் மாவட்டமும் அமைந்திருக்கிறது. வாக்கு எண்ணும் இடம் இருப்பது ரத்னகிரியில். எனவே சிந்துதுர்க் மாவட்டத்தின் தேர்தல் தொடர்புடைய அலுவலர்கள் அனைவரும் இரண்டு மூன்று நாட்கள் ரத்னகிரிக்கு வந்து தங்கி விடுகின்றனர்.
கடலை ஒட்டியே மிக உயர்ந்த பாறைகள் அல்லது மலைகள். அவற்றுள் பிறைச்சந்திரன் வடிவில் குடாக்களாக, மலைகளுக்கு முத்தாரம் சூட்டியதுபோல அலையடித்தபடி கிடக்கிறது அரபிக்கடல். அலைகள் பாறைகளில் மோதி நுரைத்துக்கொண்டு விழுவதை பார்த்துக்கொண்டே இருக்கலாம். நம் ஊரில் போல் கடற்கரை என்பது மணல்பாங்காக இல்லாமல் அலைகள் நேரே மலை அடிவாரப் பாறைகளில் மோதுவதுபோல இருப்பதால் ஒரு அபாயம் கலந்த பேரழகு இருக்கிறது. கன்னியாகுமரியின் முட்டம் கடற்கரை போலத்தான் இங்குள்ள கடல் பகுதிகள் உள்ளன. எனக்கு எப்போதுமே கடல் மிகவும் பிடிக்கும். கன்னியாகுமரியில் பணிசெய்த போது வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் கடற்கரைக்கு சென்று அலைகளைப் பார்த்தபடியே இருப்பேன். இறைமையின் முழுமையான பேருருவை கடல்முன் நிற்கும்போது நாம் உணரலாம். இயற்கை எத்தனை பெரியது? எவ்வளவு வலிமையானது? இயற்கைக்கு முன் நாம் அற்பமானவர்கள் என்பதை நிதர்சனமாக நமக்குக்காட்டி விடுகிறது கடல்.
ஐம்பது கிலோமீட்டர்களுக்கு ஒருமுறை பூமிப்பரப்பு வேறுபட்டு ஜாலம் காட்டுகிறது. பரந்து விரிந்த பெரும்பரப்பு! கேரள வனம் போல மிகப் பசுமையாக மரங்கள் அடர்ந்து மலைப்பாங்காக இருக்கும் பரப்பு, கொஞ்ச நேரத்தில் சரளை மண் கொண்ட வரண்ட கானல் பரப்பென மாறுகிறது. கடற்புரம் நோக்கி சாலை திரும்பியதும் மேடும் பள்ளமுமாக, பசுமையும் வரண்ட நிலமுமாக நிலப்பரப்பு இருக்கிறது. மரங்களின் ஊடாக செல்லும் தார்ச்சாலை மலைகளில் இருப்பதுபோன்ற திருப்பங்களில் ஏறிச்செல்கிறது. திடீரென்று சாலைக்கு அருகே நூறு அடிக்குக்கீழே கடலும் அலைகளும் தெரிகின்றன. அப்படியே உயரத்தில் இருக்கும் போதே சமதரைக்கு இறங்குகிறோம். அழகான சதுப்பு நிலக்காடுகளும் கடலில் வந்து சேரும் பொழிகளும் தெரிகின்றன. மறுபடியும், மலையேற்றம், பள்ளத்தாக்கு, வரண்ட பாலை பரப்பு, பசுமை. சிந்துதுர்க் முதல் ரத்னகிரி வரையிலான மூன்று மணி நேர பயணத்தை நான் ரொம்பவும் ரசித்தேன். அகலம் குறைவான மணற்பாங்கான கடற்கரைகள் சில ரத்னகிரி மாவட்டக் கடற்புறம் முழுவதும் இருக்கின்றன. ஆனால் அரபிக்கடலின் ஆக்ரோஷமான அலைகளும், ஆழமான கடலும் குளிப்பதற்கு ஏற்றவை அல்ல என்று அதிகாரிகள் சொன்னார்கள். விவரிக்க முடியாத அழகோடு இருந்த இந்த புவிப்பரப்பு மனதை மயக்கியது.
மாவீரர் சிவாஜியின் ஆட்சியின் கீழ் ரத்னகிரி இருந்திருக்கிறது. கலங்கரை விளக்கை ஒட்டிய மலை உச்சியைச் சுற்றி செல்கிறது மிக உறுதியான உயரமான ரத்னதுர்க் கோட்டை. பாமணி அரசர்களால் கட்டப்பட்டு பின்னர் அகமது நகர் சுல்தான் ஆதில் ஷாவால் ஆளப்பட்டு, 1670 ஆம் ஆண்டு வீர சிவாஜியின் ஆளுகைக்குக் கீழ் வந்துள்ள கோட்டை இது. கடல் வழியாக யாரும் நகரை அணுக முடியாத வகையில் பாதுகாப்பு மாடங்களோடு உயரமாகவும் உறுதியாகவும் இந்தக்கோட்டை அமைந்துள்ளது. கிட்டத்தட்ட பதினோரு ஏக்கர் பரப்பைச் சுற்றிக் கட்டப்பட்டுள்ளது. கோட்டைக்கீழ் அலைகள் அரித்து அரித்து உருவான பெரிய குகை இருக்கிறது. அதற்குள் அலைகள் சென்று மீள்வதைப் பார்க்கும் போது பயம் கலந்த வியப்பு எழுகிறது.சிந்துதுர்க் மாவட்டத்திலும் கடலுக்குள் கட்டப்பட்ட ஒரு கோட்டையும் இருக்கிறது. கரையில் இருந்து சற்று தொலைவில் படகில் சென்று வருவது போல இருக்கும் இந்தக் கோட்டையும் விஜயதுர்க் கோட்டையும் மிக முக்கியமான கோட்டைகள் என்று சொல்லப்பட்டது. நேர நெருக்கடி காரணமாக ரத்னகிரியில் உள்ள ரத்னதுர்க் கோட்டைக்கு மட்டுமே சென்று வந்தோம்.
அங்கே அனைவருமே வீர சிவாஜியைக் குறிப்பிடும் போது சிவாஜி மகராஜ் என்று மிகுந்த மரியாதையோடு அழைக்கிறார்கள். திலகர் பிறந்ததும் ரத்னகிரியில் தான். வந்தனா, சாகர், நாகேஷ் மூவரும் பயணம் முழுவதும் நிறைய பேசியபடியே வந்தார்கள். சிவாஜி மகராஜ், அம்பேத்கர், கண்பதி ஆகியோர் மராட்டியத்தின் பொதுவான சின்னங்கள் என்று வந்தனா சொன்னபோது நம் தேசத்தின் பல்வேறுபட்ட மனநிலைகள் ஆச்சரியமுட்டின.
பர்மாவின் கடைசி அரசரான திம்பாய் என்பவரை பிரிட்டிஷ் அரசாங்கம் அவர் சாகும்வரை வீட்டுச்சிறையில் அடைத்து வைத்திருந்த மாளிகை, திம்போய் பாலஸ் என்னும் பெயரில் தொல்பொருள் துறையின் கட்டிப்பாட்டில் இருக்கிறது. தன்னை சிறை வைக்க வேண்டிய வீட்டை திம்பாய் அரசரையே பிரிட்டிஷ் அரசாங்கம் வடிவமைக்கச் சொன்னதால், அவரே பார்த்துப்பார்த்து வடிவமைத்த மாளிகையாம் இது. எனவே பெருமளவில் பர்மியக் கட்டிடக்கலையை பறைசாற்றும் விதமாகவே இது கட்டப்பட்டுள்ளது. 1910 முதல், மன்னரும் அரசியும் அவர்கள் உயிர் வாழ்ந்த காலம் வரை இந்த மாளிகையில் இருந்திருக்கிறார்கள். கட்டுமானம் என்று பார்த்தால், இந்த மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான கட்டிடங்கள் “ச்சீரா” எனப்படும் செங்கல் கொண்டு கட்டப்படுகின்றன. இளஞ்சிவப்பு நிறத்தில் இங்கே கிடைக்கும் சரளை மண்ணைக் காய வைத்து அறுத்து எடுப்பார்களாம். அதிக மழை பொழிவு பகுதிகளில் மழை நீரில் ஊறி விடாமல் இருக்கும் இந்த செங்கல்கள், உறுதியான கட்டிடங்கள் கட்ட பயன்படுகின்றன என்றார் வந்தனா.வீட்டின் முன் உள்ள முற்றம் போன்ற திறந்த வெளி “படுவி” என்று அழைக்கப்படுகிறது. இங்கே உள்ள திறந்த முற்றம் போலவோ, திண்ணை போலவோ இந்த அமைப்பை நினைத்துப் பார்க்கலாம். வீட்டின் மூத்தவர்கள் அமர்ந்து கதை பேசும் இடமாம் இது. அதிக மழை பொழியும் இடம் என்பதால், வீடுகளை சுற்றிலும் மரங்கள் காணப்படுகின்றன.
எல்லா வீடுகளுமே ச்சீரா செங்கல் கொண்டே கட்டப்பட்டு பெரும்பாலும் பூசாமல் விடப்படுகின்றன. அதனால் பார்ப்பதற்கு மெலிதான இளஞ்சிவப்பு நிறத்தில் ஒரு வித வசீகரத்தோடு இந்த கட்டுமானங்கள் திகழ்கின்றன. மக்களின் வீடுகள் மட்டுமல்ல, திம்பாய் மாளிகையும், ரத்னதுர்க் கோட்டையும் கூட ச்சீரா செங்கலால் கட்டப்படுபவைதான் என்றால் அவற்றின் நீடித்த உறுதியான பயன்பாட்டை நம்மால் அறிய முடியும். கடற்கரையில் இருக்கும் குடைவரை கோவில் கணபதிபூலே. அதுவும் ச்சீரா கொண்டே கட்டப்பட்டு இருக்கிறது. மலையடிவாரத்தில் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள கோயில் அமைப்பில் சிறியது. ஆனால் நம் ஊர் திருச்செந்தூர் கோயிலை நினைவு படுத்துகிறது. கடற்கரையில் ஒட்டகங்கள் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு வட்டம் அடிக்கின்றன.
ரத்னகிரி மாம்பழங்கள் மிகவும் புகழ்பெற்றவை. முந்திரியும் மாம்பழமும் இங்கே விளையும் முக்கிய பயிர்கள். நான் பயணித்த இடங்களில் நிறைய மாந்தோப்பையும் முந்திரித்தோப்பையும் காண முடிந்தது. சாலையோரங்களில் முந்திரியும் மாம்பழங்களும் விற்கப்படுன்றன. நல்ல ருசி என்பதையும் கட்டாயம் சொல்ல வேண்டும் இல்லையா ? பெரிய அளவில் ஆடு மாடுகள் மேய்த்தலைக் காண முடியவில்லை. இங்கே பரந்த நிலப்பரப்புகளில் மேய்ச்சல் நடப்பதை கண்டு பழகிய எனக்கு,இத்தனை பரந்த வெளியில் எந்த வித முக்கிய வேளாண் செயல்பாடும் இல்லாமல் இருப்பது வித்தியாசமாக இருந்தது. ஜூன் ஒன்றாம் தேதி மேற்கு கடற்கரையில் மீன்பிடித் தடைக்காலம் தொடங்குவதால், படகுகள் அனைத்தும் துறைகளில் நங்கூரமிடப்பட்டு இருந்ததைக் காண முடிந்தது. கோக்கம் எனப்படும் மங்குஸ்தான் வகை பழங்கள் உணவில் பெரிய அளவில் பயன்படுத்தப்படுகின்றன. இங்கே கிராமங்கள் சாலைகளுக்கு உள்ளடங்கி இருக்கின்றன. எல்லா ஊர்களிலும் ஆரம்ப சுகாதார நிலையமும், பள்ளிக்கூடங்களும் இருக்கின்றன. சாலைகள் கிராமங்களை இணைத்துப் போடப்படுகின்றன. பொதுப்போக்குவரத்துக்கு சிவப்பு நிறப் பேருந்துகள் இருக்கின்றன. பொதுவாக நிதானமான மக்கள், நிதானமான வேகத்திலேயே இயல்பு வாழ்க்கை நகர்கிறது.
மிகக்குறைந்த அளவிலேயே குற்றங்கள் நடக்கும் என்றும் மக்கள் எப்போதும் அமைதியாகவே இருக்க விரும்புவார்கள் என்றும் பேசிக்கொண்டு இருக்கும்போது மாவட்ட அதிகாரிகள் சொன்னார்கள். அடிப்படையில் அங்குள்ள மக்கள் இருக்கும் வசதிகளை கொண்டே எளிமையாக வாழ்பவர்களாக இருக்கின்றனர்.அழகான நிலப்பரப்பில், இருப்பதைக்கொண்டு சுயசார்போடு வாழ்கின்ற மக்கள் என்பது நினைத்துப்பார்க்க ரொம்பவும் அழகாக இருக்கிறது தானே?
புகைப்படங்களை தேவை இல்லை எனும் அளவில் கண் முன்னே ஒரு மிகத் தீர்ந்த ஒளிப்பதிவாளனை போல் கண் கொண்ட காட்சியை எல்லாம் வார்த்தைகளில் விவரித்தமைக்கு நன்றிகள் பல
ReplyDeleteவளமையையும் செழுமையையும் கலந்த ஒரு பாதையில் நீங்கள் பயணித்ததை விவரிக்கையில் பின் இருக்கையில் நாங்களும் அமர்ந்து வருவது போன்றே ஊர் உணர்வு. வாழ்த்துக்கள்
எழுத்துகள் தொடரட்டும்.